இன்று!

இன்று மட்டுமே நம் வசம் உள்ளது.
நாளை என்பது நடைபெறலாம்…
நடவாமலும் போகலாம்..!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

சிறுவயதில் க்ரிக்கெட் விளையாடிய அனுபவம் பற்றி..!

மதுரை எஸ்.எஸ்.காலனியில், பார்த்தசாரதி தெரு மற்றும் சத்சங்கம் பிள்ளையார் கோயில் உள்ள வீதிகளில் (தெருப்பெயர் நினைவில்லை – சத்சங்கம் வீதி/சாலை என்றே கூட இருக்கலாம்), எண்ணற்ற நாட்கள், மண்டையைப் பிளக்கும் வெயிலில், சில பால்ய சினேகிதர்கள் சேர்ந்து, திரிந்து க்ரிக்கெட் (மட்டுமல்ல) விளையாடியிருக்கிறோம்.

பெரும்பாலும் ரப்பர் பந்து; சிறுபாலும் டென்னிஸ் பந்துதான். பேட் யாரோ வைத்திருந்தார்கள். ஸ்டம்ப் ஏதேனும் குச்சிகள்தான் – மண் குவித்து, அல்லது இரண்டு செங்கல் வைத்து நிற்க வைப்போம். நேரம் போவதே தெரியாமல், அயராமல், தீவிரமாக ஆடுவோம். அக்கேஷனல் வாகனங்கள் (பெரும்பாலும் சைக்கிள், சில ச்சேட்டக் ஸ்கூட்டர்கள்) எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும்!

Quoraவில் இப்பதிவு ~ https://qr.ae/pGQ17K

சத்சங்கம் வீதியிலேயே இருந்த பாலசந்தர் வீட்டில் (மாடி வீடு – அப்பா வங்கி ஊழியரோ!) தாகசாந்திக்கு தண்ணீர் குடித்திருக்கிறோம். குருமூர்த்திதான் ஜிகிரி தோஸ்த். சீதாராமன், சேச்சா, வாசன் போன்றோர் அவ்வப்போது வந்து போவார்கள். சத்யா, பத்து (பத்மநாபன்), அவனுடைய தம்பி ஸ்ரீபதி போன்ற பிற நண்பர்கள் தெரு விளையாட்டுக்கெல்லாம் வந்ததாக நினைவில்லை. விஜி, ஆண்டாள், பத்மினி, ஆர்த்தி போன்ற மகளிர் அணியினர் எங்களோடு விளையாட மாட்டார்கள்.

எல்லோரும் ‘ஸ்ரீ வித்யாலயம்‘ ஸ்டூடண்ட்ஸ் (அதற்கு முன்பு கொஞ்ச காலம் ‘பால குருகுலம்‘ பள்ளியிலும் படித்தேன்). ஹெச்.எம். ரங்கநாயகி மிஸ் மிடுக்காக இருப்பார். பின்னாளில் சூக்ஷ்மபுரீஸ்வரன் ஜீ – சமஸ்கிருத ஆசிரியர் – ஹெச்.எம் ஆனார் என்று கேள்வி. பள்ளி இன்னமும் எங்களது பால்ய கால நினைவுகளைப் பாதுகாத்தபடி, அதே இடத்தில் இருக்கின்றது.

எஸ்.எஸ்.காலனியிலேயே, வேறொரு பகுதியில் (பிராமண கல்யாண மஹால் அருகில் என்று ஞாபகம்) வசித்த ஹரி, நாராயணன் போன்றோர், எங்கள் ஏரியாவில் விளையாட வந்ததில்லை. அவர்களது பேட்டையில் விளையாடுவார்களோ என்னவோ. அவர்களது உறவினரான விஜயலக்ஷ்மி என்கிற விஜியை (கிளாஸ்மேட்களில் மிக வசீகரமானவள் – என் முதல் கன்றுக்குட்டி காதலாக இருக்கலாமோ என்னவோ… ரொம்ப சின்ன பையன்ணே அப்பல்லாம் 😂) பார்க்கிற ஆர்வத்தில், அந்த ஏரியாவுக்குள் ஒருசில முறை போய் வந்திருக்கிறேன். நாராயணன் வீட்டில் இருந்த ரோஜா செடி இன்னமும் ஃபிரஷ்ஷாக நினைவிருக்கிறது.

பிராமண கல்யாண மஹாலில்தான் பின்னர் என் திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்கள் யாரும் அங்கிருந்ததாகத் தெரியவில்லை. மண்டபம் தற்போது சிறப்பாக உருமாறி விட்டாலும் (பார்க்க படம்), ஏரியா பெரிதாக மாறவில்லை. இரண்டு தெருக்களுக்கு இடையில் ஒரு மிகக் குறுகலான சந்தில் இருந்த பிரபல பிள்ளையார் கோயிலும், அதை அடைவதற்கான – இரு தெருக்களையும் இணைக்கும் – சின்ன இரும்புக் கதவும் இன்னமும் இருக்கின்றன. வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிவிட்ட மகிழ்வில், சரித்திரப் புகழ்பெற்ற (அட, எங்க வாழ்க்கை சரித்திரம்ணே/க்கா!) திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் உள்ளே போய் பார்க்கலாமா என்றபோது, தற்போதைய மேனேஜர் 0.5% ஆர்வம் கூட இல்லாமல், போனால் போகிறதென்று அனுமதித்தார்!

மதுரையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்து (சித்திரை திருவிழாவின் போது, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அணை திறந்து விடுவதால் ஓடும் சுமாரான பிரவாகம் தவிர்த்து, வைகையில் பெரும்பாலும் கோவண அகலத்துக்குத்தான் தண்ணீர் ஓடும் என்பதால், ஊருக்குள் வெள்ளம் வந்தது பேரதிசயம் – பல பூமர்களுக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கும்) எஸ்.எஸ்.காலனியிலெல்லாம் வெள்ளம் வந்தபோது, அரை டிராயர் நனையும் அளவிற்கு இருந்த வெள்ள நீரில், தண்ணீர் பாம்புகளுடன் சேர்ந்து (யாரோ பெரியவர் எங்கள் அருகில் வெள்ள நீரில் நீந்திய பாம்பைக் காட்டி, ‘தண்ணிப் பாம்புதான் தம்பிகளா.. கடிக்காது.. தைரியமா போங்க’ என்று ஊக்கமளித்தார்) இந்த நண்பர்கள் குழு, அட்வென்ச்சர் வாக்கெல்லாம் போயிருக்கிறோம்.

பார்த்தசாரதி தெருவிலிருந்து வீடு மாறி (அந்த வீடும், அது இருக்கும் சந்தும், ஆச்சரியகரமாக இன்னமும் அப்படியே காலம் உறைந்து போன மாதிரி இருக்கின்றன – பார்க்க பு.ப), சுப்பிரமணிய பிள்ளை வீதி (இந்த வீடு இடித்துக் கட்டப்பட்டு விட்டது என்றாலும், அருகிலுள்ள ஸ்டோர், அஃதாவது தற்கால ‘ரோ ஹௌஸ்,’ இன்னமும் அப்படியே இருக்கிறது – இங்குதான் ஷண்முகம் மிஸ் என்கிற பிரபல ஹிந்தி டீச்சர் அப்போது வசித்தார்), சத்சங்கம் பின்னாலுள்ள ஜவஹர் வீதி (இங்கு எதிரில் இருந்த ஸ்டோர் வீடுகளில் ஒன்றில் ஆண்டாள் என்கிற நண்பி வசித்தாள்… காம்ப்பவுண்ட் சுவரில் ஏறி நடக்கும் வித்தியாசமான பெண்… அங்கு வசித்தபோது ஒருமுறை பெரிய புயல் வந்ததுஇரு வீடுகளும் இன்னமும் மாறாமல் இருப்பது (பார்க்க பு.ப) காலத்தால் அழியாத மதுரையின் எண்ணற்ற ஆச்சரியங்களில் ஒன்று) போன்ற இடங்களில் வசித்த காலத்தில், விளையாட்டு பற்றிய ஞாபகங்கள் ஏனோ மழுப்பப் பட்டுவிட்டன.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்கு திண்டுக்கல் சென்று, லெஜண்டரி எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் (இங்குதான் எனது தமிழ் பேச்சு, எழுத்து போட்டிகள் பங்கேற்பிற்கும், பொதுவாகவே புதியன அறியும் தாகத்திற்கும் விதை போடப்பட்டது – நன்றி தமிழ் ஐயா பெரியசாமி மற்றும் ஹிஸ்டரி ஆசிரியர் அல்ஃபோன்ஸ்), 7-ஸ்டோன்ஸ், கோ-கோ, கபடி என்று வேறு விளையாட்டுகள். கபடியில் ஜித்தனான எனக்கு, பள்ளி நண்பர்கள் இட்ட பெயர் ‘ஊசி பாசி.’

அங்கு வருடந்தோறும் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி மிகப் பிரபலம். மதுரா கோட்ஸ், தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் அணிகள், ஐ.பி.எல் காலத்திற்கு முந்தைய சூப்பர் ஸ்டார்ஸ் டீம்கள். வார இறுதி விடுமுறை நாட்களில், சைக்கிளில் தனியே பள்ளிக்குச் சென்று, கூடைப்பந்து போட்டிகளை ரசித்திருக்கிறேன்.

அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தபோது, அஃபீஷியலாக மாவட்ட அளவிலான தடகள போட்டி செலக்ஷனில், அப்போதைய சேம்பியனான குமரனை விட 100 மீட்டர் ஓட்டத்தில் வேகமாக ஓடித் தேர்வானேன். அதை வீட்டில் சென்று சொல்லி மகிழ்வதற்கு முன்பே, ப்பீ.ட்டீ மாஸ்டர் லாங் ஜம்ப் டிரையலுக்கு போக வைக்க, எந்தவிதமான பிரிப்பரேஷனோ, வழிகாட்டுதலோ இல்லாமல் ஓடி, தாவி, லேண்டிங் ஆகும்போது எடக்குமுடக்காக ஏதோ தவறாகி, இடது கால் முட்டி பெயர்ந்து விட்டது. அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, கட்டுப் போட்டு, வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

ரிப்பேரான (ஆக்கப்பட்ட!) காலை சரி செய்ய, மதுரையில் ஒன்று, திண்டுக்கல்லில் ஒன்று என்று இரண்டு மேஜர் சர்ஜரி. ரெக்கவரிக்கு சில மாதங்கள் ஆனதால், பத்தாம் வகுப்பை டிஸ்கன்ட்டினியூ பண்ணி, அடுத்த வருடம் தொடர வேண்டியதாகி விட்டது (இச்சமயத்தில் ஓவியம் மற்றும் கவிதை எழுதும் திறன் பாலிஷ் போடப்பட்டது; சில மாதங்கள் இறை நம்பிக்கை இழந்துமிருந்தேன்!). அத்தோடு, இப்பிறவியில் என்னுடைய சர்வதேச (அட் லீஸ்ட் தேசிய!) சாத்தியங்கள் இருந்த விளையாட்டு அத்தியாயம் முடிந்து போக, நீரஜ் சோப்ரா 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் வெற்றி வாகை சூடும் வரை, தடகள ஒலிம்பிக் தங்கத்திற்காக பாரதம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது, எவ்விதத்திலும் என்னுடைய தவறில்லை என்று பாரதவாசிகளுக்கு இவ்விடம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்!

பத்தாம் வகுப்பை மட்டும் ராமநாதபுரத்தில் (சையது அம்மாள் மேநிலைப் பள்ளியும், அதன் ஆசிரியர்களும் வந்தனத்திற்குரியவர்கள் – இடைவிடாமல், புதிய மாணவனான என்னை ஊக்குவித்து, மாநில ரேங்க் வாங்க வைத்து அசத்தினார்கள்) படித்து விட்டு, அதன்பின்னர் மறுபடி மதுரைக்கு வந்து, நேரு நகர் வாசியாகியானபின், அடியேன் படிப்பு, எழுத்து, பிழைப்பு என்று தடம் மாறி விட்டேன்.

மேனிலைப்பள்ளி படிப்பு முடித்த டிவிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில (+ வகுப்பு) ஆசிரியரான கிரிஜா மிஸ்ஸும் (படத்திலுள்ளவர்), தமிழ் ஆசிரியை கமலம் அம்மாவும் (இவர் தீபம் நா பார்த்தசாரதியின் கேள்வி-பதில் தொகுப்பெல்லாம் வெளியிட்டிருக்கிறார்; என்னைத் தமிழில் தொடர்ந்து எழுதத் தூண்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்) என்னுடைய இரு மொழி ஆர்வத்தையும் ஊக்குவித்து வளர்த்த பெரியோர்கள். அக்காலத்தில் விளையாட்டெல்லாம், எப்போதாவது வீட்டு மாடியிலோ, வாசலிலோ, என் தம்பிகளுடன் ஆடிய பேட்மிண்ட்டன் மட்டும்தான்.

மெப்கோவில் பொறியியல் பட்டப் படிப்பின்போது, ஒரே ஒரு முறை, ஹாஸ்டல் நண்பர்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடியதாக ஞாபகம். ப்பேஸ் பௌளரான நான் அதிவேகமாகப் பந்து வீசி, முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க, பேட்ஸ்மேன் ‘ஏ, நான் இன்னும் ரெடியே ஆகலை.. அதுக்குள்ள பால் போட்டா எப்படி.!‘ என்று அழுகுணி ஆட்டம் ஆட, எனக்கு வந்த கடுப்பில், அதற்குப் பின்னர் நான் க்ரிக்கெட் ஆடியதாக நினைவில்லை!

எனது மற்றும் எனக்கு அடுத்த தலைமுறையினரில், பாரதத்தின் அதிபிரபல அன்அஃபீஷியல் தேசிய விளையாட்டான க்ரிக்கெட் பிடிக்காதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. ’83 உலகக் கோப்பை பற்றி செய்தித் தாள்களில் படித்தும், ரேடியோவில் கேட்டும்தான் தெரியும். அப்போது தொலைக்காட்சியெல்லாம் கிடையாது. தோனி என்கிற ‘கேப்டன் கூல்‘ தலைமையில், இந்த நூற்றாண்டில் மறுபடியும் உலகக் கோப்பையை வென்றபோது, தொலைக்காட்சியை ஆஃப் செய்ததே இல்லை. பெருமிதத்தில் ச்செஸ்ட் சில அங்குலங்கள் எக்ஸ்டிராவாக விரிந்தது. டெண்டுல்கரை தோளில் தூக்கிக் கொண்டு இளம் வீரர்கள் மைதானத்தில் ஊர்வலம் வந்தபோது, கண்ணில் நீர் வழிந்தது சத்தியம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் அடியேன் சிஎஸ்கே மற்றும் தோனியின் டை ஹார்ட் ஃபேன். சிங்கம் உறுமும் மஞ்சள் டீ சர்ட் அணிந்து, பிள்ளையுடன் சேப்பாக்கம் போய் ச்சியர் பண்ணியிருக்கிறேன். அமெரிக்க கிளையண்ட்டுகளைக் கூட்டிச் சென்று, ‘திஸ் கேம் இஸ் பேஸ்பால்’ஸ் கிராண்ட்பா,‘ என்று கதைவிட்டு அசத்தியிருக்கிறேன்.

‘எம்எஸ்டி’ என்பதை மரியாதைக்குரிய இனிஷியலாகவும், ‘தோனி.. தோனி.. தோனி..’ என்பதை கிட்டத்தட்ட மந்திர உச்சாடனம் அளவிற்கும் மாற்றிய, மஹேந்த்ர சிங் தோனிதான் பாரதத்தின் தற்கால மித்தாலஜிக்கல் ஹீரோ ஈக்குவலண்ட். பல தசாப்தங்களாக ஸ்ட்ரிக்ட் ஹிந்தி எதிர்ப்பு டயட்டில் உள்ள மற(ர!)த்தமிழர்களை, ‘விசில் போடு’ம் விசிறிகளாக மாற்றிக்காட்டிய இந்திக்காரர் இந்த இந்திரஜால தல. 

இணையற்ற விளையாட்டுத் திறன், இயல்பான தலைமைப் பதவி வகிக்கும் லாவகம், அன்பிலீவபிள் கெரியர் டிராஜக்ட்டரி எல்லாம் தாண்டி, மகத்தான ஒரு மனிதனாக, ‘தல போல வருமா!’ என்று எண்ணற்றோரை வியக்க வைக்கும் இந்த ஜென் மாஸ்டர் போன்ற சாதனையாளரின் வழிகாட்டியாக ஏதேனும் ஹிமாலயன் யோகி இருந்தால் ஆச்சரியமில்லை!

எனிவே, கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளைக் கூட அடியேன் பார்ப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இண்டியா மற்றும் கூகிள் நியூஸில் அவ்வப்போது மற்ற செய்திகளோடு சேர்த்து, க்ரிக்கெட் நியூஸ் படிப்பதோடு சரி. மூன்று முறை சென்னை மாரத்தானில், என்னுடைய குருநாதரின் கிராமிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம், 10 கிமீ போட்டியில் பங்கேற்றிருக்கிறேன் (வேக நடைதான் – நம்மால்தான் ஓட முடியாதே!). வெறுமனே பங்கேற்றதற்கே மெடல் கொடுத்து ஊக்குவித்தார்கள்!

எஸ்.எஸ்.காலனி க்ரிக்கெட் நண்பர்களில் பத்துவும், அவனது தம்பி ஸ்ரீபதியும், இளவயதிலேயே காலமாகி விட்டனர் என்று கேள்விப்பட்டு, வருந்தினேன். சீதாராமன் அந்த ஏரியாவிலேயே டைலர் கடை வைத்திருந்தார்; இப்போது எங்கிருக்கிறாரோ! சத்யா கிடார் வாசித்துக் கொண்டு ஏதோ மியூசிக் ட்ரூப்பில் இருந்ததாகக் கேள்வி.

விஎம்எஸ் வாசன் பிரபல கேட்டரர் ஆகிவிட்டார் என்றார்கள். சமீபத்தில் எங்கள் குடும்ப விழா ஒன்றிற்கு அவர்தான் சாப்பாடு சப்ளை என்று தெரிந்து, ரொம்ப ஆர்வமாக சத்சங்கத்தில் காத்திருந்து, அவனை(ரை!) சந்தித்தேன். தமிழ்ப் படங்களில் வரும் லாங் லாஸ்ட் நண்பர்கள் சீன் மாதிரி இல்லாமல், ஓரிரு நிமிடங்கள் சுருக்கமாகப் பேசிவிட்டு, படக்கென்று காணாமல் போய்விட்டார். மஸ்ட் பீ எ பிஸி பிசினஸ்மேன். ஹ்ம்ம்ம்… என் நீண்ட வெண்தாடியைப் பார்த்து இன்ட்டிமிடேட் ஆகி ‘எதற்கு வம்பு’ என்று கழன்று கொண்டாரா, இல்லை இது முற்றிலும் வேறு வாசனா என்று இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

பாலசந்தர், குருமூர்த்தி, நாராயணன், ஹரி, விஜி, ஆண்டாள் போன்ற எஞ்சிய நண்பர்கள் என்ன ஆனார்கள், எங்கு உள்ளார்கள் என்று தெரியாது. யாரேனும் கோராவில் இருந்தால், இவ்விடையைப் படித்தால், கமெண்ட் போட்டால், ‘ஏ, எப்டி இருக்க மாப்ள/ம்மா.. இப்ப என்ன பண்ணிட்டிருக்க..‘ என்று நட்பு தூசி தட்டப்படலாம்!

எபிலாக்: என்னுடைய ஸ்போர்ட்ஸ் கேரியர் ‘கால்’குறையாக நின்றுபோனதாலோ என்னவோ, என்னுடைய பிள்ளையை ஒரு ஸ்போர்ட்ஸ்பெர்ஸனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மிஸ்டர் & மிசஸ் ஸ்வாமி இருவருமாக இணைந்து அதை சாதித்தே விட்டோம். அவர் உண்மையாகவே ஒரு சர்வதேச விளையாட்டு வீரர். ஆனால், அது பற்றி வேறு ஒரு தருணத்தில்…

கு: மதுரை ஸ்பெஷல், பால்ய கால மலரும் நினைவுகளை, வாசக அன்புள்ளங்களுடன் பகிர வாய்ப்பளித்த வினாவிற்கு நன்றி.🙏  ச்சாவ்!👋🏼

பி.கு: என்னுடைய இல்லத்தரசி, அவருடைய பள்ளிக்கால தோழர்/ழிகளுடன் இன்னமும் தொடர்பிலிருக்கிறார். மதுரை டிவிஎஸ் சுந்தரம் மேனிலைப்பள்ளி மாணாக்கர்களான அவர்கள் அனைவரும், தினசரி வாட்ஸாப் அளவலாவல்கள், பிறந்த/திருமண நாள் வாழ்த்துக்கள், வருடாந்திர கெட் டுகெதர் (கரோனா காலத்திற்கு முன் வரை), வீடுகளுக்கு விஸிட் அடித்து சந்தித்தல், பிள்ளைகளின் திருமண விழாக்களில் பங்கெடுத்தல் என்று, தங்களது குழந்தை/இளமைப்பருவ நினைவுகளின் தணல் அணைந்து விடாதவாறு பாதுகாத்து வருகிறார்கள். பேச்செல்லாம் இன்னமும் ‘வாடா.. போடி..’ ரகம் (ஒரு சிலருக்கு ஏற்கனவே பேரக் குழந்தைகள்!).

அடியேன் இதற்கு நேர் எதிர். என்னுடைய எழுத்தை (வாட்ஸாப் பகிர்வு வழியே) வாசிக்கும் ஓரிரு கல்லூரி நண்பர்கள் தவிர்த்து, வேறு எவருடனும் தொடர்பு ஏதுமில்லை. பள்ளி/கல்லூரி வாட்ஸாப் க்ரூப்பிலோ, வேறு எந்த சமூக ஊடகக் குழுக்களிலோ நானில்லை. அதுபற்றிய வருத்தமும் ஏதுமில்லை. டிஃபரண்ட் ஃபோக்ஸ்.. டிஃபரண்ட் ஸ்ட்ரோக்ஸ்.. என்கிற மாதிரி, ஹோமோ சேப்பியன்கள் என்ற உயிரினத்தில்தான் எத்தனை வகை ஆச்சரியங்கள்! 🤓

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

உங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாக கருதப்படும் ஒரு நபர் யார்?

உங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாக கருதப்படும் ஒரு நபர் யார்?

Quoraவிடை ~ https://qr.ae/pGqkVA

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இவ்வினாவிற்கு விடையளித்திருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும். இடையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தால் எனது முன்மாதிரியாக தற்போது வேறொருவர் இடம்பிடித்து விட்டார். அதுபற்றிய பதிவே இது…

இவ்வுலகிற்கு நாம் செய்யக்கூடிய சேவை என்ன?‘ என்ற வினா நம்மில் பலருள் எப்போதாவது எழுந்திருக்கலாம். ஏனெனில், உலகிலுள்ள பலவற்றை + பலரைத் தயக்கமின்றிப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு, நம்மால் இயன்ற வகையில் பிறருக்கு ஏதேனும் உதவி / சேவை புரிகிறோமா என்பது கேள்விக்குறிதான்! அக்கேள்விக்குறியை, ஆச்சரியக் குறியாக மாற்றிய ஒருவர்தான் தற்போது எனது முன்மாதிரி.

எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர். மிகவும் நெருங்கிய உறவினர். பீ.ப்பி.ஓ/கே.ப்பி.ஓ வகை நிறுவனங்களில், கிரேவ் யார்டு ஷிஃப்ட் எனப்படும் இரவு நேரப் பணியில் பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்தார். அவரது நிறுவனங்கள், உடன் பணி புரிந்தோர், பணியின் தன்மை, பதவி, வருமானம் போன்றவை பற்றிய தகவல்கள் அனேகருக்குத் தெரியாது.

உற்சாகமாக, தான் செய்யும் பணி எதுவானாலும், அதை ஆர்வத்துடன் செய்த இளைஞர். பணி நேரம், மற்றும் அதன்காரணமாக இயல்பிற்கு மாறாகவே எப்போதும் இருந்த உணவு, உறக்க நேர மாற்றம் போன்றவை பற்றி அவர் ஒருபோதும் புலம்பியதில்லை. அனாவசியமாக அதிகம் பேசாத இன்ட்ரவர்ட் ரகம். அரிதாக வரும் அவரது வாட்ஸாப் மெஸேஜ்கள் கூட ஷார்ட் & ஷார்ப் ரகம்தான்.

தனிப்பட்ட முறையில், தன்னார்வத்துடன் அடிக்கடி ரத்த தானம் செய்திருக்கிறார். குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும்  உதவிகளைத் தானே வலிய வந்து செய்வார். தனக்கு இன்ன உதவி வேண்டுமென்று கேட்டதில்லை. கடும் உழைப்பாளி. குடும்பத்திலுள்ள குழந்தைகள் மீது மிகவும் பிரியமுள்ளவர். பெரியவர்களிடம் மரியாதை கொண்டவர். மனத்தில் தோன்றுவதை நேரடியாக, அச்சமின்றித் தெரிவிப்பவர். தோற்றத்தில் பல மாறுதல்களைப் பரிசோதனை முயற்சியாகச் செய்துபார்த்த – ‘வாழு, வாழ விடு’ டாட்டூ உட்பட – ஸ்டைல் மற்றும் ஃபேஷன் கான்ஷியஸான ஆசாமி.

உணவுப்பழக்கங்களில் ஆரோக்கியமான, சத்தான உணவுகளையே உட்கொள்வார். ஜங்க் ஃபுட் உண்ணுவதெல்லாம் அறவே இல்லை. உடல் நலத்தைக் கெடுக்கும் பழக்கங்கள் இல்லாதவர். எதிர்பாராத உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது,  தேவையான மருத்துவ உதவியைப் பெற்றுத் தேறியவர். கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர். முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்வார். ஹெல்மெட் அணிந்துதான் ஸ்கூட்டர் ஓட்டுவார்.

அவரது ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதற்கான  வெளிப்படையான  அடையாளங்கள் ஏதுமில்லாத அவர், சமீபத்தில் எவ்விதமான முன்னறிவிப்புமின்றி, ஓரிரவு ரயில் பயணத்தின்போது, திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். முந்தைய இரவு ‘ரயிலில் ஏறிவிட்டேன்,’ என்று வாட்ஸாப்பில் பகிர்ந்திருந்தார். அதுதான் என்னுடன் அவரது இறுதி கம்யூனிகேஷன் – இப்பிறவியில். அதிகாலையில் அலைபேசியில் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தபோது திகைத்து விட்டேன்.

ரயில்வே காவலர்கள் அவரது பூவுடலை ரயிலில் இருந்து பாதிப் பயணத்திலேயே இறக்கி, காவல்துறையிடம் ஒப்படைக்க, ரயில் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர்தான் அவரது உடலைக் குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைத்தனர். முதல் நாள் இரவு ரயிலில் ‘இவர் இன்னார்’ என்ற ஆசாமியாக ஏறியவர், மறுநாள் ஆம்புலன்ஸில் ரயில் ஏறிய ஊருக்கே திரும்ப வந்து, அன்றிரவே எரியூட்டப்பட்டு, அஸ்தியாகி, நதியின் ஓட்டத்தில் கரைந்து, மறைந்தே போய்விட்டார் – லிட்டரலி & ஃபிஸிக்கலி!

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ‘இது 37 வயது இளைஞரின் இதயம் போலவே இல்லையே… உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவரா..!‘ என்று வினவியபோது எங்களுக்கு ஏதும் புரியவில்லை. ஏனெனில் சில தினங்களுக்கு முன்னர் பீ.ப்பி பரிசோதனை செய்தபோது கூட ரத்த அழுத்தம் இயல்பாகவே இருந்தது. அதே மருத்துவர் ‘எக்கோ டெஸ்ட் எடுத்தீர்களா எப்போதாவது?‘ என்றபோது, ‘எதற்காக அவருக்குப் போய் அந்த டெஸ்டை எடுத்திருக்க வேண்டும்?‘ என்ற கேள்வியே எழுந்தது. அவருக்கு இதயக்கோளாறு இருப்பதற்கான புற அடையாளங்கள் எதுவுமே, அவருடன் உறவாடிய, நெருங்கிப் பழகிய யாருக்கும் தெரியவில்லை. ஆகையால், முன்னெச்சரிக்கையாகப் இதயநோய் தொடர்பான பரிசோதனை எதுவும் செய்திருக்க வாய்ப்புமில்லை.

அன்னாரது இறுதிச் சடங்கின்போது வந்து குவிந்த, அவருடன் பணிபுரிந்தோரில் பலரும் அவரை ‘மென்ட்டர்’ என்று குறிப்பிட்டு நினைவு கூர்ந்தபோதுதான், தன் குடும்பத்தில் உதவியதுபோலவே, பணியிடத்திலும் பலருக்கு உதவி புரிந்திருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. மறைந்த பிரபலஸ்தர்களுக்கு சார்த்துவது போல மிகப்பெரிய ரோஜா மலர் மாலையை வாங்கி வந்து சார்த்தினர் சிலர். உறவினரைப் போல அவருக்கு வாய்க்கரிசி கூட இட்டனர் சிலர். அவரது உடல் மின்-மயானத்தில் தகனமாகும் வரை உடனிருந்து விட்டுத்தான் சென்றனர் அவர்களில் பலரும். அன்று மாலை வந்திருந்த உறவினர்களை விட, உடன் பணிபுரிந்த நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகக் கூட இருக்கலாம்!

மறைந்த அவரது வயது 37. பிரம்மச்சாரி – இதுவரையில். திருமண வாழ்வை அவர் அனுபவிக்கவில்லையே என்பதுதான் அவரது பெற்றோரின் மிகப்பெரிய மனக்கவலை. ஐந்து சகோதரர்களில் மிக இளைய கடைக்குட்டி சிங்கம் அவர்தான். அடியேன்தான் ஐவருள் மூத்தவன். சில மாதங்களுக்கு முன்னர்தான் சிவலோக பிராப்தி அடைந்த என் தாயாரின் மறைவை திடமாக எதிர்கொண்ட நான், எனது இளைய சகோதரனின் திடீர் மரணத்தைக் கையாள இயலாமல் சில தினங்கள் தவித்தேன்; ஏற்றுக் கொள்ள முடியாமல் துடித்தேன் என்பதே உண்மை. 

எனக்கும் அவருக்கும் பிறப்பில் 14 ஆண்டுகள் இடைவெளி. சில வருடங்கள் எனது இல்லத்திலேயே தங்கி, பட்ட மேற்படிப்பு படித்ததால், எனக்கும் எனது இல்லத்தரசிக்கும் அவர் மூத்த பிள்ளையைப் போன்றவர். எஞ்சியுள்ள நான்கு சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் சகிதம், அவரது 13 நாள் ஈமக்கிரியைகள் செவ்வனே நிறைவடைந்த பின்னரும், ‘ஏன்.. ஏன்.. ஏன்..?‘ என்ற பல கேள்விகளுக்கு எங்களிடம் விடையேதுமில்லை. லாஜிக்கலான விடை ஏதும் இனி கிடைக்கப்போவதுமில்லை என்றே தோன்றுகிறது. இப்பிறவியில் அவர் எனது உடன்பிறந்த சகோதரனாக வாழ்ந்ததற்கு ‘முற்றும்’ போட்டாகி விட்டது. அந்த ஃபுல்ஸ்டாப்பை கமாவாகவோ, ஸெமிகோலனாகவோ மற்றும் வல்லமை நமக்கேது!    

தற்போது எங்களிடம், குறிப்பாக அவருடன் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த, அளவளாவிய, விளையாடிய, சண்டையிட்ட, திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்ட, பண்டிகைகளில் பங்கேற்ற, பிற ஊர்களுக்கு உடன் பயணம் செய்த, ஜோக்கடித்து சிரித்த, அந்தாக்ஷரி பாட்டுப் பாடிய, கூட்டாஞ்சோறு போல இல்லத்தின் மொட்டை மாடிகளில் கூடி உண்ட, பணிக்காலத்தில் பரஸ்பரம் இல்லங்களில் தங்கிய… இத்யாதி… இத்யாதிகளைச் சேர்ந்து செய்த உடன்பிறந்தோர், தந்தையார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம், வெறும் நினைவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

மனம் அவரைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ந்து அசைபோடும். மளுக்கென்று சிலநேரம் கண்ணீர் சிந்த வைக்கும். சிறு புன்னகையை சில கணங்கள் மலரச் செய்யும். இம்மாதிரி ஒரு பதிவை எழுதத் தூண்டும். ஏதேனும் புகைப்படத்தை வாட்ஸாப்பில் பகிர வைக்கும். ஒருவாறாக தினசரி பிழைத்தலில் மறுபடியும் மூழ்கி உழலத் துவங்கியபின், மாதாந்திர சடங்குகளின் போது மட்டும் நினைவுபடுத்தி, பின்னர் அதையும் மெல்ல மழுப்பி, மறக்கடித்து, வருடாந்திர பிறந்த நாள், நினைவு தினம் / திதியின்போது மட்டும் அவரை நினைவுகூறும். அனேகமாக மரணம் எனும் அனுபவத்தை சந்தித்த ஒவ்வொரு குடும்பத்திலும் இதே கதைதான் எனலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மரணம் மற்றும் மறைந்தவர்களின் நினைவு தொடர்பான மற்றொரு வினாவிற்கான விடை – விருப்பமுள்ளோருக்காக மறுபகிர்வு…https://qr.ae/pGSSSE

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்னிக்கு செத்தா, நாளைக்கு பால்‘ என்பது போன்ற வசனங்களைக் கேள்விப்பட்டிருந்தாலும், மரணம் பற்றிய தெளிவு குருவருளால் கிட்டியிருந்தாலும், இந்த மாதிரி மரணமானது அபத்தமாகத்தான் தோன்றுகிறது. எனது இளைய சகோதரன் என்பது உட்பட, பல சமூக அடையாளங்களுடன் இவ்வுலகில் சில தினங்கள் முன்புவரை வாழ்ந்த இளைஞர், தற்போது இருப்பது புகைப்படங்களிலும், நினைவுகளை அசைபோடும் எங்களது மனதிலும் மட்டுமே.

வாழ்க்கை என்பது அநித்யம் (நிரந்தரமானதல்ல) என்பதற்கும், மரணம் தவிர்க்கமுடியாத நிதர்சனம் என்பதற்கும் அவரது விளக்கமற்ற + விளங்கிக்கொள்ளவியலாத மறைவே, என்னைப் பொறுத்த அளவில் நேரடியான, அனுபவபூர்வமான உதாரணமாக அமைந்து விட்டது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்,” என்பார் வள்ளுவர்.

இதில் தொழில் என்பதற்கு லிட்டரல் / நேரடி அர்த்தம் எடுத்துக் கொள்ளாமல், அதை செயல் [அ} கர்மம் என்று நோக்குவோமானால், ஒருவர் தன்னுடைய செயல்களை, அஃதாவது கர்மத்தை எவ்விதம் செய்தார் என்பதே அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது; சிறப்புடையவராக்குகிறது என்று அர்த்தம் தரும் அக்குறள்.

எனது இளைய சகோதரர், செலிபிரிட்டி / இன்ஃபுளூயன்ஸர் ரக பிரபலஸ்தர் இல்லை என்பதால், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நாங்கள் வெளியிட்ட இரங்கல் அறிவிப்பு தவிர்த்து, அவரது மறைவு குறித்த ஊடக அறிவிப்புகளோ, வைரல் தகவல்களோ, இரங்கல் தெரிவிக்கும் பொது நிகழ்ச்சிகளோ ஏதுமில்லை. எனினும், அவரது செயல்களால் ஏதோ ஒரு வகையில் அன்பாகத் தொடப்பட்ட / பயனடைந்தவர்களுக்கு, அவர் எப்போதுமே நிச்சயமாக ஒரு செலிபிரிட்டி / இன்ஃபுளூயன்ஸர்தான் என்பதில் ஐயமில்லை.

காலத்தாற் செய்த உதவி சிறிதெனினும்

ஞாலத்தின் மானப் பெரிது,” என்றும் வள்ளுவரே குறிப்பிடுகின்றார்.

எனது இளைய சகோதரர், பலருக்கும் செய்த உதவிகள், உரிய காலத்தில், பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் செய்யப்பட்டுள்ளன என்று, அவரது மறைவிற்குப் பிறகே பலரிடமிருந்து நாங்கள் அறிகின்றோம். யாரோ ஒரு ரேண்டம் மருத்துவர் அவரது இரங்கல் அறிவிப்பை செய்தித்தாளில் பார்த்துவிட்டுக் கூப்பிட்டு, அவரைப் பற்றி உயர்வாகப் பேசுகையில்தான், எவ்விதமான விளம்பரமும் இன்றி அவர் செய்த ரத்த தான சேவை பற்றி அறிந்து ஆச்சரியப்பட முடிகிறது. அறிந்தோ, அறியாமலோ அவர் தன்னுடைய செயல் புரியும் தன்மையில் ஒரு கர்மயோகியைப் போல வாழ்ந்திருக்கிறார் என்பது, ஆன்மீகப் பாதையில் உயிர்மெய் அறியும் பயணத்திலுள்ள அடியேனுக்குக் கூட ஆச்சரியமான புரிதலாகத்தான் உள்ளது.

இப்பிறவியில் அனுபவிக்குமாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிராரப்த கர்மாவை, தன்னுடைய கருணை மற்றும் சேவை மூலமாக 37 ஆண்டுகளுக்குள்ளேயே அவர் கரைத்துத் தீர்த்து விட்டதால், இனி இவ்வுடலில் சிக்கியிருக்க வேண்டிய தேவையில்லாமற் போய், விரைவாகவே விடைபெற்றுச் சென்று விட்டார் அப்புண்ணியவான்,’ என்று விஷய ஞானமுள்ள ஒருவர் அளித்த விளக்கம் பொருத்தமாகவே தோன்றுகிறது.

அவ்வாறின்றி, ‘இன்று எவனுக்கு உலை வைக்கலாம்… யாரைக் கடுப்படித்து ரசிக்கலாம்… சொத்தைச் சுருட்ட என்ன மாய்மாலம் பண்ணலாம்… எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதை எங்கு, எவருக்குச் செய்யலாம்…‘ என்றெல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டாற்போல, ‘அட தண்டக் கர்மாந்திரமே..’ என்று தலையில் அடித்துக் கொள்ளும் வகையில் செயல்களைப் புரியும் அற்ப மாந்தர்கள், இழிசெயல் புரிந்து தம் கர்மவினையின் சுமையை மேலும் அதிகரித்துக் கொள்வதை, இப்பிறவியில் உணராது இறுமாந்து எக்காளமிட்டுத் திரிந்தாலும், இனிவரும் பிறவிகளில் அதன் பயனை அனுபவித்தே தீருவர் என்பது திண்ணம். ‘அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்,‘ என்ற நம் மூதாதையர் கூற்று பொய்யன்று!

அவரது தாயார் மீது கொண்டிருந்த மாளாப் பிரியத்தின் காரணமாக, அவரை நீண்ட காலம் பிரிந்திருக்க இயலாமல் அவருடன் பித்ரு லோகப் பயணத்தில் உடனிருக்கும் வகையில், அவரிடமே போய்ச் சேர்ந்து விட்டார்,’ என்றார் மற்றொருவர்.

ஒருவகையில், இவையெல்லாமே நம்மைத் தேற்றிக் கொள்ள, நாமே கூறிக் கொள்ளும் எளிய சமாதானங்கள்தான். மற்றொரு வகையில், ‘போனவர் என்னவோ போய்விட்டார்; இருப்பவர் இனியும் பிழைத்திருக்க வேண்டுமே,’ என்றவாறு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் உயிரினமான மனிதர்கள், மெல்லத் தத்தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, இவ்வகை சமாதானங்களும் ஓரளவிற்கு உதவுகின்றன என்பதும் நடைமுறை உண்மைதான்.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது…” என்று மானிடப் பிறவியின் பெருமையைப் பற்றிப் பாடுகிறார் ஒளவையார். இவ்வாறு அரிய பிறவியை எக்காரணத்தாலோ பெற்ற மனிதர்கள், தங்களுடைய திறன், திறமை போன்றவற்றைப் பயன்படுத்திப் பிற உயிர்களுக்கு – மனிதர் மட்டுமின்றி – பல விதங்களில் உதவி புரிய முடியும். அது போன்ற பயனுள்ள செயல்களைப் புரியும் பொருட்டே நமக்கு எதைப் பற்றியும் பல கோணங்களில் சிந்திக்கும், சிந்தித்து முடிவெடுக்கும், முடிவெடுத்துச் செயல்படும் வண்ணம் அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.

ஆயின், தம் திறனைப் பிற உயிர்களுடைய நன்மைக்காக முறையாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகில் மிகக்குறைவே. அதற்கு நேர்மாறாக, பிறருக்குத் தங்களது எண்ணம், சொல், செயல்கள் மூலம் எவ்வகையிலாவது துன்பம் விளைவிப்போரின் எண்ணிக்கைதான் உலகில் அதிகம். ஆறறிவு உள்ளதாக ஓயாமல் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மனிதர்கள், அதைவிடக் குறைவான அறிவுள்ள உயிரினங்களைக் காட்டிலும் முட்டாள்தனமாகவே செயல்புரிந்து, வாழ்ந்து, மறைவது என்பது காஸ்மிக் ஜோக் ரக மெகா அபத்தம்!

ஜகத்குரு ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர், சுவாமி விவேகானந்தர், மஹாகவி சுப்பிரமணிய பாரதி, ஸ்ரீனிவாச ராமானுஜன் ஆகியோரைப் போன்று, தங்களுடைய முப்பதுகளுக்குள்ளேயே செயற்கரிய செயல்களைப் புரிந்து, எண்ணற்ற உயிர்களுக்குப் பல வகையில் உதவிய, வழிகாட்டிய பெருந்தகைகளின் வரிசையில் இடம்பெறத் தகுதி உடையவரா என் இளைய சகோதரர் என்பதை நானறியேன். எனினும், அவர்களைப் போன்றே தன்னலம் கருதாது, எண்ணற்றோருக்கு, அவர் பிரதிபலன் எதிர்பாராமல் உதவிகள் பல புரிந்துள்ளதை நிச்சயம் அனுபவபூர்வமாக அறிவேன்.

உயிருடன் இருந்தபோது அவரை எப்போதுமே ‘கிட் பிரதர்’ எனப்படும் குழந்தைச் சகோதரனாகவே பார்த்துப் பழகிய எனக்கே, பலர் அவரது உதவிகரமான செயல்களை நன்றியுடன் நினைவு கூறுமளவு அவர் வாழ்ந்த விதம் பிரமிப்பகத்தான் உள்ளது. ‘ஆஹா, இது முன்னரே தெரிந்திருந்தால், இவருடன் ஆன்மீகம் பற்றிப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாமேமெய்தேடும் பயணத்தில் கைகோர்த்துக் கொண்டு இருவரும் பயணித்திருக்கலாமே..!’ என்று இப்போது தோன்றுகிறது. இப்பிறவியில் இனி அது சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்.

நாம் உயிருடன் இருக்கும்வரை, நமது உடல்+மனம் கலவை சீராகச் செயல்படும் வரையில்,

நம்முடைய  செயல்களின் மூலம் பிற உயிர்களுக்கு எவ்வகையிலாவது உதவியாக இருக்க முடியும் + வேண்டும்‘ என்பதையும், அவ்வாறு

செய்யும் உதவிகளுக்கு – விளம்பரம் / புகழ்ச்சி / விருது உட்பட – பிரதிபலன் ஏதும் எதிர்பார்க்காமல் ஓசையின்றி உதவ வேண்டும்‘ என்பதையும்,

மறைந்த என்னுடைய இளைய சகோதரர், ஒரு ‘கர்ம யோகி‘யைப் போல்  வாழ்ந்த விதத்தின் மூலம் கற்றுக்கொடுத்ததன் காரணமாக, அவரும் எனது உபகுருமார்களில் ஒருவராகவே உயர்ந்து விட்டார் என்றால் மிகையில்லை.

செயற்கரிய செய்வர் பெரியோர் சிறியோர்

செயற்கரிய செய்கலா தார்,” என்று வள்ளுவர் கூறிவிட்டதால்,

சேவை என்றதுமே அது தேசம் சுதந்திரம் பெறுவதற்கு முன் நின்று வழிகாட்டிய மகாத்மா காந்தியைப் போலவோ, உலகத்தோர் தொன்மையான பாரத கலாச்சாரத்தின் பெருமையை அறிந்து மதிப்போடு நோக்க வைத்த சுவாமி விவேகானந்தரைப் போலவோ, இயற்கை விவசாயத்தின் பெருமையை உணர்ந்து மக்கள் அதைப் பின்பற்றும் வகையில் மாற்றம் ஏற்படுத்திய நம்மாழ்வார் ஐயாவைப் போலவோ, வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட குரியன் போலவோ, பசுமைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சுவாமிநாதன் போலவோ, லார்ஜர் தேன் லைஃப் ரக சேவையாகத்தான் எல்லோருடைய செயல்களும் இருக்க வேண்டுமென்பதில்லை.

  • அப்பார்ட்மெண்ட் சன்ஷேடுகளில் ஒளிந்து வசிக்கும் பறவைகளுக்கு ஏதேனும் தானியங்களை உண்ணக் கொடுப்பது  கூட சேவைதான்…
  • வாக்கிங் போகும்போது வாலாட்டும் தெரு நாய்களுக்கு உணவும், நீரும் அளிப்பதும் சேவைதான்…
  • தெருவோரத்தில் நாதியற்று ஒடுங்கும் மனிதர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் அளிப்பதும் சேவைதான்…
  • செல்வம் வளம் இல்லாததால் அடிப்படைக் கல்வியைக் கூடப் பெற இயலாமல் தவிக்கும் குழந்தைகள், கல்வி கற்க பணமோ, பொருளோ அளிப்பதும் சேவைதான்…
  • பார்வைத்திறன் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத உதவுவதும் சேவைதான்…
  • நம்முடைய அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காகப் பணியாற்றும் டிரைவர், பாதுகாவலர், பணியாட்கள் போன்றோரின் அத்தியாவசிய தேவைகளுக்கு உதவி புரிவதும் சேவைதான்…
  • முகம் தெரியாத யாரோ ஒரு நோயாளிக்கு என்றோ உயிர்காக்கப் பயன்படும் என்று அவ்வப்போது ரத்த தானம் செய்வதும் சேவைதான்…
  • ஒருவேளை பூஜை கூட நடைபெறாத திருக்கோயிலுக்கு, மலர்கள், பூஜைப் பொருட்கள், நிதி போன்றவற்றை வழங்கி, அதன்மூலம் நித்ய பூஜை ஒருமுறையேனும் நிகழ ஏற்பாடு செய்வதும் நிச்சயமாக உன்னதமான சேவைதான்…
  • முதியோர் இல்லங்களுக்குச் சென்று ஒரு சில முதியவர்களுடனாவது, அவர்கள் விரும்புவனவற்றைப் பற்றி சில மணி நேரம் அளவளாவி விட்டு வருவது கூட சேவைதான்…
  • அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அவர்கள் கெரியரில் உயர வழிகாட்டுவதும் கூட சேவைதான்…
  • எப்போது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும், இல்லத்தில் உள்ளோரிடம் சள்ளென்று எரிந்து விழாமல், சற்றே கனிவாகப் பேசுவதும், ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்ற பிடிவாதத்தை ஓரங்கட்டிவிட்டு, மற்றவர் சொல்வதைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்பதும் கூட சேவைதான்…
  • இவ்வளவு ஏன்… தான் கற்ற அறிவையும், பெற்ற அனுபவத்தையும், கோரா போன்ற சமூக ஊடகங்களில், கரம் மசாலா ஏதும் சேர்க்காமல், ‘உள்ளது உள்ளபடி’ பகிர்வதன் மூலம், ஒரு சிலருக்கேனும் அறிவொளி வழங்குவது கூட நிச்சயம் தரமான, பயனுள்ள சேவைதான்..!

ஆகவே, ‘தன்னலம் கருதாமல், பிரதிபலன் எதிர்பாராமல், பிற உயிர்களுக்குச் செய்யும் உதவி’ ஏதுவாகிலும், அதுவே மனிதராகப் பிறவியெடுத்த எல்லோருக்கும் சாத்தியமான சேவை என்பது வெள்ளிடை மலை. எனவே, அம்மாதிரியான சேவை எதையேனும் செய்ய ஆரம்பிக்கலாமே – இன்று முதலாகவே… எல்லோருமே… இறுதி வரையிலும்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எபிலாக்:

பிரிவோம்.. சந்திப்போம் (hopefully, again.. somewhere.. somehow..) 37 வயதில் மறைந்துவிட்ட, மாறாத அன்பிற்குரிய என் இளைய சகோதரருக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கற்பா.Homage to my youngest brother, who passed away recently at the age of 37.

https://bit.ly/3y4eqF6

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பலன் எதிர்பார்க்காத சேவையெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும்ணே… ஆனா அதெல்லாம் செய்யுறதுக்கு பிராக்ட்டிக்கலா சான்ஸே இல்லைன்னேன்‘ என்போர், பிறருக்குக் குறைந்தபட்சம் – எண்ணம், செயல் இரண்டின் மூலமாகவும் – உபத்திரவம் ஏதும் அளிக்காமலாவது இருக்க முயற்சிக்கலாம். அது உலகிற்குச் செய்யும் சேவை ஆகாவிட்டாலும், தனக்குத் தானே – கர்மவினை மற்றும் அதன் பயன் சார்ந்த – செல்ஃப் ஆப்பு வைத்துக் கொள்ளாத, சுய சேவையாகவாவது இருக்கும்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பிரிவோம்… சந்திப்போம்…

பிரிவோம்… சந்திப்போம்…
(hopefully, again.. somewhere.. somehow..)

(37 வயதில் மறைந்த, அன்பிற்குரிய இளைய சகோதரன் பாஸ்கருக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கற்பா)

பதினான்கு வருடங்கள் பின்வந்தாய் அன்னைவழி
பதினாறும் பெற்றிங்கு வாழாது போய்விட்டாய்
அதிகாலைப் பனிபோலக் காணாது நீபோக
விதிதானோ என்றெண்ணும் வெறுமையதை என்சொல்ல!

கல்லூரிக் காலத்தில் உடனிருந்தாய் சிலகாலம்
எல்லோரும் முதற்பிள்ளை இவன்தானோ என்றெண்ண
கற்றதையும் பெற்றதையும் மற்றதையும் கைவிட்டு
முற்றுமென நீசொல்லித் தரும்பாடம் புரியவில்லை!

பெற்றவளின் இல்லமதில் விளக்கேற்ற இடம்பெயர்ந்தாய்
பெற்றவனின் தேவைகளென் பொறுப்பாகு மினியென்றாய்
உற்றவருன் னிளந்தோளில் ஏற்றிவைத்த பாரமது
குற்றமென அறிந்திடுமுன் ஏன்சென்றாய் இளையோனே!

சாடவில்லை ‘போங்கடா பொங்கச் சோறுகளா’ என்றெம்மை
ஓடவில்லை எத்தனையோ வேலைப்பளு ஏறிடினும்
காரியங்கள் செய்யவந்தோம் நீயிருப்பாய் எனநம்பி
யாரினிமேல் காத்திருப்பார் மூத்தவரின் வருகைக்கு!

எங்கு சென்றாய்.. ஏன் போனாய்.. இவ்வயதில்.. இவ்விதமாய்..
தொங்கிடுமே கேள்விபல எவர்தருவார் விடையினிமேல்
பங்குவேண்டிப் பலவிதமாய் பாதகங்கள் செய்யாமல்
தங்கிநீசெய் தவம்போன்ற சேவையினி எவர்செய்வார்!

போனவுயிர் வாராது பலநாளாய் நன்கறிவேன்
போய்வருதல் கருமவினை காரணமாய் என்றறிவேன்
முங்கியுளே முத்தெனவே அறிந்திடுமெய் யதுதாண்டி
பொங்கிவரும் துக்கத்தை என்செய்வேன் பாலகனே!

பலகாலம் நாமிருந்தோம் தன்வழியில் தனியாளாய்
சிலகாலம் முன்னேதான் சேர்ந்தோம்நாம் மறுபடியும்
தாயவள்போய் தான்கண்ட பித்ருலோக மகிமைசொல்ல
நீயுமங்கு போனாயோ ஆறுமாதம் ஆவதற்குள்!

கொஞ்சியவள் பெற்றுநம்மை வளர்த்துலகில் ஆளாக்க
துஞ்சிடுநாள் சேர்ந்தவளின் கருமங்கள் செய்திட்டோம்
எஞ்சியநாள் அப்பனுடன் ஐவருமாய் வாழாமல்
மிஞ்சியவர் ஏங்கியழ ஏன்போனாய் நீதனியே!

ஐவிரலும் ஒன்றல்ல என்றறிவேன் நாம்தனிதான்
ஐவிரலுள் ஒன்றில்லை அதுகரமா முடமாசொல்
பொன்போன்ற புண்ணியனுன் அருமையைமுன் னறியாமல்
என்செய்வேன் கட்டைவிரல் இல்லாத கரம்வைத்து!

நம்அன்னை போய்விட்டாள் சுமைநீங்கி சுமங்கலியாய்
கொம்பற்ற கொடிபோலத் தந்தையுந்தான் தவித்தாரோ
கொடிகாத்த குமாரன்போல் தாங்கிட்டாய் நீயவரை
கொடிசேவற் குமரன்தான் கூப்பிட்டுக் கொண்டானோ!

பணியிடத்தில் பலபேரின் உளம்தொட்ட கனிவென்ன
தனிவழியே போய்வாழ்ந்து உயர்ந்திட்ட அழகென்ன
பணிவுடனே பலருடனும் பழகியவுன் திறமென்ன
இனியிங்கே நீயில்லை கொடும்விதியின் அறமென்ன!

எதைத்தாங்கும் உன்னிதயம் என்றெண்ணி வியந்தேனே
எதையெல்லாம் உள்வைத்துப் பூட்டினாயோ அறியேனே
நின்றதுவுன் நல்லிதயம் ரயில்பயணம் அதன்நடுவே
சென்றெங்கு நான்கேட்பேன் காரணத்தைக் காலனிடம்!

பலமாதம் வீரபாகு போலவேநீ பாசமுடன்
விலகாது உடனிருந்தாய் காவலுக்கெம் அப்பனுடன்
தம்பியுளான் படைக்கஞ்சேன் என்றிருந்தேன் தைரியமாய்
தம்பிநீயோ போய்விட்டாய் தனியேநான் என்செய்வேன்!

தோல்போர்த்த உடல்சட்டை மாற்றுவதே மறுபிறவி
போல்தருவேன் எத்தனையோ விளக்கங்கள் மரணம்பற்றி
உன்மரணம் ஒன்றுமட்டும் உலுக்குமடா வேர்வரையில்
என்றைக்கோ ஒருநாளில் என்கட்டை வேகும்வரை!

போய்வருதல் நம்கரும வினைசுமையைக் குறைத்திடவே
சேவையதில் தனைமறந்து எரித்திட்டாய் பிராரப்தம்
போய்விட்டாய் இனிவருவாய் என்றெங்கு அறியேன்யான்
பிரிவோம்நாம் சந்திப்போம் பிறிதொருநாள் அறியாமல்!

பகலவனாய் ஒளிதந்தாய் உன்பணியால் நாள்தோறும்
அகமதிலே அகலொளியாய் காத்திடுவேன் உன்நினைவு
பகலிரவாய்ப் போயிற்றே பாஸ்கர்நீ போனபின்னே
செகமதிலே இனிவருமோ உன்போலே ஒருதம்பி.

வருவர்பலர் போவர்பலர் வந்ததுஏன் அறியாமல்
சிறுவனிவன் என்றிருந்தேன் சிறியவனாய் ஆக்கிவிட்டாய்
ஞானம்பெறக் காத்திருக்கும் காலமதில் மோனம்வர
வானொளியாய்க் காட்டிடடா மெய்யறியும் வழியதனை!

போய்வருவாய் வான்வழியே தாயுடனே சிலகாலம்
போய்வருவாய் எஞ்சியுள்ள கருமத்தின் சுமைநீங்க
போய்வருவாய் விடைதந்தேன் நிறைவோடு உனைவாழ்த்தி
போய்வருவாய் விடையேறும் உமைபாகன் தலம்நோக்கி!

~ஸ்வாமி | @PrakashSwamy

பிறர் செய்கிறார்களே என்று எண்ணி எந்தெந்த தொழிலை நாம் தொடங்குவது கூடாது!

தி ஆரக்கிள் ஆஃப் ஒமாஹா‘ என்று மிகுந்த மரியாதையுடன் நிதித்துறை ஆசாமிகள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகத்தார் ஆகியோரால் அழைக்கப்படும் வாரன் பஃபெட், உலகத்தின் மெகா கோடீஸ்வரர்களுள் ஒருவர். பெர்க்ஷயர் ஹாத்தவே நிறுவனத்தின் அதிபர். பில் கேட்ஸுக்கு மென்ட்டர் மாதிரி இருந்து, அவரது சமூக சேவை செயல்பாடுகளுக்கு வழிகாட்டியவர். இருவரும் இன்னமும் ஜிகிரி தோஸ்த்துகள்தான்.

பல நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக வாங்கி, அந்நிறுவனங்களின் முதலீடு, பொருட்கள்/சேவைகள், செயல்பாடுகள் போன்றவற்றை நிர்ணயிக்கும் வல்லமை உள்ளவர் பஃபெட். இதே மாதிரி இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும், ‘பிக் புல்’ என்று செல்லமாக அழைக்கப்படும் (ஆளும் அப்படித்தான் இருப்பார்!) ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலாவை, நம்ம ஊர்/தேச வாரன் பஃபெட் என்றும் சொல்வதுண்டு.

எனிவே, வாரன் பஃபெட்டிடம் ஒருமுறை பிட்காயின் என்கிற நவீன மாயை பற்றி யாரோ, ‘நீங்கள் ஏன் பிட்காயினில் முதலீடு செய்வதில்லை‘ என்கிற மாதிரியான கேள்வியைக் கேட்டபோது, நச்சென்று ஒரு பதில் அளித்தார்.

“நான் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எல்லாமே ஏதாவது ஒரு பொருள் அல்லது சேவையை மக்களுக்கு வழங்கி, அதன் மூலம் வருவாய் மற்றும் லாபம் ஈட்டுபவை. அப்பொருட்கள், சேவைகள் என்ன என்பதை நேரடியாக நம்மால் அறிய, பயன்படுத்தி உணர முடியும் (tangible). இந்த பிட்காயின் என்பது என்ன மாதிரி வஸ்து, இதை யார் உற்பத்தி செய்கிறார்கள், இதன் பயன்பாடு என்ன, பயனாளிகள் யார் போன்ற எதுவுமே தெளிவாகத் தெரியாதபோது (intangible / unknown), அதன் பிஸினஸ் மாடல் என்ன என்பது எனக்குப் புரியாதபோது, அம்மாதிரியான ஒரு அஸ்ஸெட்டில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம் இல்லை!”

அவர் முதலீடு செய்த நிறுவனங்களையே கூட, அவர் நேரடியாக நிர்வகிப்பதெல்லாம் கிடையாது. அதற்கான தகுதி மற்றும் அனுபவம் உள்ளோர்தான் – பெரும்பாலானவற்றில் ஆதிகாலத்து ஒரிஜினல் ஃபௌண்டர் ரக ஆசாமிகள் – நிர்வாகம் செய்வதெல்லாம். வாரன் பஃபெட் மற்றும் அவரது பெர்க்ஷயர் ஹாத்தவே ஊழியர் குழு செய்வது முதலீடு தொடர்பான முடிவுகள் மற்றும் செயல்களே.

பெர்க்ஷயர் ஹாத்தவே நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு தற்போது 432,902 டாலர்கள். தோராயமாக 3,24,31,026 ரூபாய். ஆம், ஒரு பங்கின் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய். (இதே நிறுவனத்தின் மற்றொரு வகை பங்கின் மதிப்பு 287 டாலர்கள் – சுமார் 21500 ரூபாய் – இதில்தான் பொதுவாக முதலீட்டார்கள் டிரேடிங் செய்ய முடியும் என்று தோன்றுகிறது). இதோடு ஒப்பிடுகையில் கூகிள் பங்கின் மதிப்பு 2,965 டாலர்கள் (சுமார் 222124 ரூபாய்). மைக்ரோஸாஃப்ட்டின் மதிப்பு 331 டாலர்கள் (சுமார் 24797 ரூபாய்).

வாரன் பஃபெட்டின் வருடாந்திர மீட்டிங் ஒன்றுக்கு, ஏராளமான தொகை கொடுத்து சீட் புக் பண்ணி, ஏதோ புனித யாத்திரை செல்வது போலச் சென்று, அவர் சொல்வதை பயபக்தியுடன் கேட்டுக் கொண்டு வருவோர் பலர் – பில் கேட்ஸ் போன்ற தனவான்கள் உட்பட! நிற்க.

நம்முடைய வீட்டின் பக்கத்தில் உள்ள மொபைல் அயர்ன் கடை, முடி திருத்தகம், பெட்டிக்கடையில் நல்ல வருமானம் வருகிறதே என்பதற்காக நாமும் அதுமாதிரி ஒன்றை ஆரம்பிக்கலாம் என்பது அபத்தம். எல்லோராலும் எல்லாத் தொழில்களையும், ஜஸ்ட் லைக் தட் எல்லாம் செய்ய முடியாது என்பதே நடைமுறை உண்மை. தொழில் தொடங்குவது தற்காலத்தில் மிக எளிதான விஷயம் என்றாலும், அதைத் தொடர்ந்து செம்மையாக நடத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல.

ஒரு தொழில் நடத்துவது என்பது பல பராமீட்டர்களைச் சார்ந்தது. நம்முடைய இல்லங்களிலேயே கூட, சமையல் போன்ற வாழ்வாதார செயல்பாடுகளில் ஒருவர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருப்பார். மாதாந்திர வரவு, செலவு, முதலீடு போன்ற நிதி நிர்வாகத்தை வேறொருவர் திறம்படக் கையாள்வார். ஆகையால், ‘நாங்கள்லாம் ஒரு ஆல் இன் ஆல் அலமேலு / அழகுராஜாவாக்கும்… என்னால் செய்ய முடியாதது என்று எதுவுமே கிடையாது தெரியும்ல…‘ என்று சம்பந்தமே இல்லாத மேட்டரையெல்லாம் கையிலெடுப்பது என்பது எக்காலத்திலும் உசிதமல்ல.

கோவிட்-19 காரணமாக வீட்டில் முடங்கிய பலர், யூடியூப் மாமிகள் /ச்செஃப்கள் / பாபிகள் (ஹிந்தி ‘பாபி’ண்ணே, டமில் பாவி அல்ல 😂) அசால்டாக பதார்த்தங்கள் செய்வதைப் பார்த்து உற்சாகமாகி, அடுக்களையில் நுழைந்து அதகளம் பண்ணத் துவங்கியதும், குடியிருப்புகளின் அருகாமையில் உள்ள க்ளினிக் மற்றும் மருத்துவமனைகளில் பர்ன் விக்ட்டிம் (சூடு ப/போட்டுக்கொண்ட சமையல் விற்பன்னர்கள்) ரக கேஸ்களின் எண்ணிக்கை தடாலென அதிகரித்ததாம். எதையாவது புதிதாக முயற்சிக்க, வெறும் ஆர்வம் மற்றும் பரவலாகக் கிடைக்கும் ரெஃபரன்ஸ் மெட்டீரியல் மட்டும் போதாது என்பதே இதன் மூலம் அறிவது.

நான் பொறியியல் பட்டம் பெற்றபின், பணிபுரியத் துவங்கிய புதிதில், ஒரு முறை தீபாவளி பட்டாசு விற்பனை செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. அது ஆன்லைன் வர்த்தகமெல்லாம் சயன்ஸ் ஃபிக்ஷனில் மட்டுமே இருந்த அனலாக் காலம். பொருள் விற்பனையெல்லாம் ப்ரிக் அண்ட் மார்ட்டர் ரக ஃபிஸிக்கல் பரிவர்த்தனைதான் அப்போதெல்லாம். அதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிப் பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் பிரெய்ன்வாஷ், க்ரீன் கிராக்கர்ஸ் பயன்பாட்டு சட்டம் போன்ற உபத்திரவங்கள் ஏதும் இல்லாமல், எல்லோரும் ஆனந்தமாக ஓரிரு நாட்கள் பட்டாசு விட்டு மகிழ்ந்த எளிய காலமும் கூட.

படித்த கல்லூரி சிவகாசி அருகில் என்பதால், பட்டாசு உற்பத்தி செய்யும் அவ்விடத்தில், விலை குறைவாக ஒருமுறை வாங்கிய அனுபவம் தவிர, பட்டாசு விற்பனையெல்லாம் செய்ய எங்கு, எவரிடம், எப்படி டீல் பண்ண வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. அகஸ்மாத்தாக ஒரு ஹோல்ஸேல் டீலரின் அறிமுகம் கிடைத்தது. எட்டுத்திக்கும் பானர் வைத்து, செய்தித்தாளில் முழுப்பக்க விளம்பரம் செய்யும் ‘ஸ்டாண்டர்டு ஃபயர்வொர்க்ஸ்’, ‘க்காக் பிராண்டு’ மாதிரி அவ்வளவு பிரபலமில்லாத ஒரு பிராண்டின் டீலர் அவர் (யுவராஜ் ஃபயர்வொர்க்ஸ் என்று ஞாபகம்). கடையில் விற்பனை செய்யப்படும் விலையில் பாதியை விடக் குறைவான விலைக்கு பட்டாசு சப்ளை செய்யத் தயாராக இருந்தார்.

இத்தனைக்கும் அவர் பட்டாசு தயாரிப்பவர் அல்ல. தன்னுடைய லாபத்திற்குத் தேவையான டீலர் மார்ஜின் வைத்த பின் அவர் வழங்கிய விலையே அத்தனை கம்மி. அதற்குமேல் இருபது சதவிகிதம் மார்ஜின் வைத்து விற்றால் கூட, நல்ல லாபம் கிட்டும் என்று என் எளிய பொருளாதார அறிவைக் கொண்டே கணக்கிட்டு, ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்று என் சகோதரர்களையே வொர்க்கிங் பார்ட்னர்களாக ஆக்கி, களத்தில் குதித்து விட்டேன். அனேகமாக என் பரம்பரையில் முதல் ஆன்ட்ரபிரன்யூராகக் கூட இருக்கலாம்!

குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிந்தோர், அருகில் குடியிருந்தோர் என்று ஒரு கேப்ட்டிவ் கஸ்டமர் பேஸ் கைவசம் இருந்ததால், ‘ClassiQ Crackers’ என்று நாமகரணம் செய்து, விலைப்பட்டியல் வடிவமைத்து (DTPயில் பெற்ற பட்டயம் கைகொடுத்தது), பட்டியலை ப்ரிண்ட் பண்ணி, அதைப் பலரிடம் சர்க்குலேஷன் பண்ணியதோடு மார்க்கெட்டிங் வேலை முடிவடைந்தது. அதற்கப்புறம்தான் முக்கியமான வேலையே துவங்கியது எனலாம்.

கஸ்டமர்களிடமிருந்து ஆர்டர்களை வாங்கி, மொத்தக் கொள்முதலுக்கான பட்டியல் தயாரித்து, அதை டீலரிடம் கொடுத்து, ஓரிரு நாட்களில் அவரிடம் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து, எல்லாவற்றையும் (வீட்டிலேயே!) பிரித்து அடுக்கி, ஒவ்வொரு ஆர்டராக ரீபேக்கிங் செய்து, கஸ்டமரிடம் டெலிவரி செய்து, ஆர்டருக்கான பணத்தை வாங்கி, டீலருக்கு பேமண்ட் பண்ணி, வரவு, செலவு, லாபத்தைக் கணக்கிடுகையில், தீபாவளியே வந்து விட்டது. அந்த வருடம் ஒரு சேஞ்சுக்கு, நாங்களும் எங்களது பிராண்ட் பட்டாசையே விட்டு மகிழ்ந்தோம்.

ஆயிரக்கணக்கான பணியாட்கள் அளவான ஊதியம் பெற்று ஒரு தொழிலை வளர்த்தாலும், வெற்றிகரமான தொழில் / வர்த்தக நிறுவனங்களில் சி.எக்ஸ்.ஓ ரக உயரதிகாரிகளின் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை டிஸ்புரொபோர்ஷனேட்லி அதிகமாக இருப்பது போல், கடுமையாக உழைத்த என் சகோதர பார்ட்னர்கள், லாபத்தைப் பகிர்வதில் நான் பாரபட்சம் காட்டியதாக நினைத்து வருத்தப் பட்டனர். அன்பை முறிப்பது கடன் மட்டுமல்ல, லாபமும் கூடத்தான் என்று உணர்ந்து, அதோடு நான் என் (பட்டாசு) ஆன்ட்ரபிரன்யூர்ஷிப் வென்ச்சரைக் கைவிட்டேன்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஊதியத்திற்காகப் பணிக்குச் செல்வதை விட, சுயதொழில் தொடங்கி ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்று ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் ஆர்வம் பலருக்கு உள்ளது. அதில் தவறேதுமில்லை. ஆனால் யூடியூப் சேனல்கள் மற்றும் ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இலவசமாகக் கிட்டும் ஐடியாக்களை நம்பி, நம்முடைய ஆர்வம், திறன், குணாதிசயங்கள், சூழல் போன்றவற்றுடன் ஒத்துப்போகாத ஏதேனும் ரேண்டம் தொழிலில் இறங்குவதும், நீச்சல் தெரியாமல் சமுத்திரத்தில் ஸ்விம் செய்யப் போவதும் ஒன்றுதான்.

  • தாராளமாக தொழில் துவங்குங்கள். ஆனால் துவங்குவதற்கு முன்பு அதற்காகத் தயாராகுங்கள்.
  • தொழில் துவங்கவிருக்கும் துறை பற்றிய விவரங்களை, நுணுக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்.
  • ஏற்கனவே அத்தொழில் புரிவோரைப் பற்றிக் கொஞ்சமேனும் ஆராய்ச்சி செய்யுங்கள்.
  • குறிப்பிட்ட திறன்/மை தேவைப்பட்டால், அதைப் பெறுங்கள்; அல்லது திறன்/மை உள்ளோரை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்களுடைய திட்டங்கள், செயல்பாடுகள் போன்றவற்றை தைரியமாக, நேரடியாக கேள்வி கேட்டுக் குடையும் ஆசாமி ஒருவரைக் கண்டுபிடித்து அவரது க்ரிட்டிக் திறனைப் பயன்படுத்துங்கள் (இம்மாதிரி அவ்வப்போது குட்டுகிற ஆசாமி யாரும் இல்லாது போனதால்தான், ஜக்கர்பாய் மாதிரி புதுப்பணக்காரர்கள் ரொம்பவே அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்).
  • எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு!” என்கிறார் வள்ளுவர். எனவே தொழில் துவங்கியபின் அதுபற்றிய திட்டமிடல், யோசனை எல்லாம் செய்வதில் பயனில்லை. ஆப்பரேஷனல் மாற்றங்கள் இடையிடையே செய்து கொள்ளலாம். ஓரளவு டாக்ட்டிக்கல் மாற்றங்கள் கூட செய்யலாம். ஆனால், ஸ்டிராட்டஜியையே மாற்றுகிறேன் என்பது தொழில் துவங்கியபின் அதை நாமே கழுத்தை நெரித்துக் கொல்வதற்கு ஈடாகும்.
  • எல்லாவற்றையும் விட முக்கியமாக, எந்தத் தொழிலும், ஏதோ காரணத்தால் வொர்க் அவுட் ஆகாமல் டுமீல் ஆகிவிடலாம் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ரத்தன் டாடா போன்ற ஜாம்பவான்களே கூட, அவரது கனவுக் காரான நானோவைக் கைவிட வேண்டி வந்தது (அடியேனும் அந்த கியூட் காரின் ஹேப்பி ஓனர்களுள் ஒருவன்) என்பதை மறந்து விடக்கூடாது.

என்னைப் பலர் ‘நீங்க ஏன் இன்னும் யூடியூப் சானல் ஆரம்பிக்கவில்லை?‘ என்று கேட்டிருக்கிறார்கள். பல்லாண்டுகள் கார்ப்பரேட் டிரெய்னிங் மற்றும் மேய்ப்பர் வேலை பார்த்திருப்பதால், எனக்கு எதையாவது பற்றி யாரிடமாவது பேசுவது – அது கேமராவைப் பார்த்துதான் என்றாலும் – என்பது கடினமான ஒன்றல்ல.

அதைபோல்தான், ‘எப்ப ஸ்வாமி உங்க புக் பப்ளிஷ் ஆகப்போகுது?‘ என்ற கேள்வியும். இரண்டையுமே என்னால் எப்போது வேண்டுமானாலும் கண்டிப்பாக செய்ய முடியும். இருந்தாலும், ‘பல ஆவரேஜ் ஆசாமிகள் சானல் ஆரம்பித்திருப்பதால் நானும் ஒன்று ஆரம்பிக்கிறேன்… ஏதோ ஒரு மொழியில் எழுதத் தெரிந்த காரணத்தால் புத்தகம் பதிப்பிக்கும் ஆசாமிகளைப் போல நானும் பதிப்பிக்கிறேன்…‘ என்றெல்லாம் என்னால் ஒரு காரியத்தில் குதிக்க முடியாது.

எதையேனும் புதிதாக முயற்சிக்க / துவக்க வேண்டுமென்றால்,

  • அதற்கு ஒரு கம்பெல்லிங் ரீஸன் வேண்டும்
  • அதில் என்னுடைய தனித்துவம் வெளிப்பட வேண்டும்
  • அதில் நான் செலவிடும், முதலீடு செய்யும் திறன், நேரம், கவனம் போன்றவற்றுக்கு ஆர்.ஓ.ஐ இருந்தாக வேண்டும்
  • அம்முயற்சியின் பலனுக்கு லான்ஜிவிட்டி இருக்க வேண்டும்
  • அதனால் சிலரேனும் உண்மையாகவே பயன்பெற வேண்டும்.

இதெல்லாம் இல்லாமல், ‘ஆல்ஸோ ரேன்’ ரக ஆட்டுமந்தை மேய்ச்சலெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்று என்னளவில் ஒரு உறுதிப்பாடு வைத்துள்ளேன்.

கோராவிலேயே சிலர் ‘யூடியூப் சேனல் ஆரம்பித்து காசு பார்ப்பது எப்படி?‘ என்றெல்லாம் கேட்பதைப் பார்க்கிறேன். என்னுடைய கண்ணோட்டத்தில், யூடியூப் எ/போன்ற ஒரு விஷுவல் மீடியத்தைப் பயன்படுத்தி, நம்மால் கன்சிஸ்டென்ட்டாக நாம் அறிந்த எதையாவது பற்றித் தொடர்ந்து கம்யூனிக்கேட் செய்ய முடிந்தால், காணொளி உருவாக்குனராக முயற்சிக்கலாம். கான்ட்டென்ட் தரமாக, பயனுள்ளதாக, ரசிக்கும்படியாக இருந்தால், ரசிகர்கள்/பார்வையாளர்கள் முதலில் வருவார்கள். பின்னர் வருமானம் தானாகவே வரும். எனவே, சேனல் துவங்க, ‘கூரைய பிச்சுக்கிட்டுக் கொட்டப் போகுதுடி வெள்ளக்காரி‘ மாதிரியான அபத்தக் கனவோ, தரம் பற்றிய கவலையே இல்லாத வருவாய் ஈட்டும் நோக்கமோ, என்னை ஊக்குவிக்க வாய்ப்பே இல்லை.

ஆனால், எல்லோரும் என்னைப்போலத்தான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நகைப்பிற்குரியது. ஈலான் மஸ்க் போன்ற நவீன பிசினஸ் சாம்ராஜ்யதிபதிகள், எந்தவிதமான தொடர்பும் இல்லாத வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வெற்றியடைவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேசமயம், வாரன் பஃபெட் / ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா போன்றோர் முதலீடு செய்யும், ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி போன்றோரின் அனலாக் தொழில்களும் சிறப்பாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன – காலத்திற்கேற்ற டிஜிட்டல் மாற்றங்களுடன்.

ஆனால், மேலே குறிப்பிட்ட ஜாம்பவான்கள் யாருமே ஓவர்னைட் பில்லியனர்கள் ஆனவர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்வது, புதிதாகத் தொழில் துவங்க விழைவோருக்குப் பயனளிக்கும் என்பது திண்ணம். ஈலான் மஸ்க் தன்னுடைய ஆன்ட்ரபிரனியூர் முயற்சிகளை ஆரம்பித்தது ‘ப்பே ப்பால்’ பிசினஸ் மூலம்தான். அது இன்னமும் டிஜிட்டல் உலக டிரான்ஸாக்ஷன்களின் பின்புலமாக சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும், ட்டாஞ்சிபிள் பிஸினஸ்தான். ட்டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று அவர் சமூக ஊடகங்களின் அதீத ஜால்ரா சப்த சப்போர்ட்டுடன் செய்யும் எல்லா பிஸினஸ்களுமே, வாரன் பஃபெட், ராக்கேஷ் ஜுன்ஜுன்வாலா போன்ற பிதாமகர்கள் தைரியமாக முதலீடு செய்யக் கூடிய, அந்தக்கால மாடல் ட்டாஞ்சிபிள் தொழில்கள்தான்!

இன்னொருவரைப் பார்த்து, நானும் அவரைப் போலவே திடீர்ப் பணக்காரனாகப் போகிறேன் என்பதெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது மாதிரி டிராஜி-காமெடியாகிவிடக்கூடும்.

தனிப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய திறன்/மைகளை பெருவாரியான மக்களிடம் நேரடியாக வெளிப்படுத்த வாய்ப்புகள் தற்காலத்தில் ஏராளமாக உள்ளன. ஏதேனும் தொழில் பற்றிய தகவல்களும் இலவசமாகவே கிடைக்கின்றன – பலரிடமிருந்து. எனவே, நம்முடைய ஆர்வம் மற்றும் திறன்/மை சார்ந்து நம்மால் என்ன தொழில் செய்ய முடியுமோ, அதை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. அத்தகைய முயற்சியில் முழுமையாக அதில் கவனம் செலுத்தி, இடையில் ஏற்படும் தடைகளைப் பற்றிக் கவலைகொள்ளாமல் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டால், வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.

‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்பது முதுமொழி.

‘பயிற்சியுடன் முயற்சியுடையார் புகழ்ச்சி அடைவார்’ என்பது புதுமொழி.

அதில் ஒருசிலர் மட்டுமே, வெற்றியும் அடைவார்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இக்கேள்விக்கான Quoraவிடை ~ https://qr.ae/pGxJ9M

15 ஆண்டுகள் முதலீடு செய்தேன்… 45 வயதில் ஓய்வு பெற்றேன்… ‘நாணயம் விகடன்’ இதழில் சிறப்புப் பதிவு!

நாணயம் விகடன் இவ்வார இதழில், விரைவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கு உதவிய, ‘15 ஆண்டுகள் முதலீடு செய்தேன்… 45 வயதில் ஓய்வு பெற்றேன்‘ என்ற எனது முதலீட்டு அனுபவம் பற்றிய சிறப்புப் பதிவு.

சூப்பர் இன்வெஸ்டார் – முதலீட்டு அனுபவம்” ~ நாணயம் விகடன்

நம் வாழ்க்கையில் சீக்கிரம் ஓய்வு பெற வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. 30 வயதில் முதலீட்டைத் தொடங்கியதன்மூலம், 45 வயதில் ஓய்வு பெற்று, சென்னையை அடுத்துள்ள பள்ளிக் கரணையில் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் பிரகாஷ் ராமஸ்வாமி. அவரால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்று அவரிடமே கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

https://www.vikatan.com/business/investment/investment-experience-in-super-investor-3

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பெற்ற வெற்றிகளில் பெருமை தரும் வெற்றி எது!

எது வெற்றி என்பது நாம் வாழும் காலம், சூழல், நிலை, தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வெற்றி, தோல்வி என்பதை பைனரியாகவோ (இருமை), எதிர்மறையாகவோ பார்ப்பது மிகவும் மேம்போக்கான கண்ணோட்டம். இப்பதிவைப் பொறுமையாகப் படிப்போரில் சிலரேனும் இறுதியில், ‘ஹ்ம்ம்ம், தட் வாஸ் இண்டீட் அன் இன்ட்டரஸ்ட்டிங் இன்ஸைட்,’ என்று ஆமோதிக்கலாம்!

மிக இளம் வயதில், அதாவது பால பருவத்தில், போட்டிகளில் (பேச்சு, ஓவியம், இசை, விளையாட்டு, இத்யாதி…) ஏதாவது ஒரு பரிசு கிடைத்தாலே மிகப்பெரிய வெற்றி பெற்றதாகத் தோன்றும். அவ்வாறுதான் பெற்றோரும், மற்றோரும் கூறி நம்மை ஊக்கப்படுத்துவர்.

வளர வளர, நம்மைப்போன்றோ, நம்மை விடச் சிறப்பாகவோ, திறன் மற்றும் திறமை உடையோர் உலகில் பலர் உளர் என்பது தெரியவர, போட்டியிட்டு முதற்பரிசு [அ] தரவரிசையில் முதலிடம் பெறுவதே வெற்றி என்று தோன்றும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்பதெல்லாம் இடம், பொருள், ஏவல், செல்வம், செல்வாக்கு போன்ற பலவற்றைச் சார்ந்தது என்பது இந்நிலையில்தான் புரியத் துவங்கும்.

இது அடியேன் வாழ்விலும் எல்லோரையும் போலத்தான் இருந்தது. பள்ளியிலும், கல்லாரியிலும் பல போட்டிகள்.. பல பரிசுகள்.. பாராட்டுக்கள்.. ஜஸ்ட் மிஸ்டு ரக தோல்விகளும்தான்…

பள்ளிப்பருவத்தில் தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டவனாக, பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தடகள விளையாட்டு தொடர்பான ஒரு விபத்தில், இடது கால் செயலிழந்து விட்டது. காலாண்டுத் தேர்வு எழுதும் சமயத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. லிட்டரலாகப் படுத்த படுக்கை. இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து, நான் மீண்டும் எழுந்து நடப்பதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஐவருள் மூத்த பிள்ளைக்கு இப்படி ஆனதில், என் பெற்றோர் பதறிப் போயினர் (‘பிள்ளை மீண்டும் நடப்பானா.. மாட்டானா.? முருகா.. தாயே மீனாக்ஷி.. எப்படியாவது மறுபடி நடக்க வைத்து விடுங்கள்..!’).

கல்வி, கலை, விளையாட்டு என்று பல துறைகளில் ஆர்வமும், திறமையும் உள்ள ஒரு இளைஞ/ஞிக்கு, இம்மாதிரியான  எதிர்பாராத, அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு மிகப்பெரிய பின்னடைவாக  அமைந்து விடக்கூடும். இறையருளால், இச்சமயத்தில் என்னை நோக விடாமல், ஊக்குவித்தோரே அதிகம். குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சிலர். மெல்ல எழுந்து, நடந்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயாரானபோது, அரசு அலுவலரான என் தந்தை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர்  செய்யப்பட, அதுவரை நடந்தவற்றை அவ்வூரிலேயே விட்டுவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த ஆண்டு, வேறு ஊரில், புதிய பள்ளியில், அதுவரை அறியாத சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பை மீண்டும் படித்தபோது, எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் போல், இதுவரை என் வாழ்நாளில் யாரையும் சந்திக்கவில்லை எனலாம். நடந்தால் போதும் என்ற நிலையில் (சைக்கிளும் ஓட்டத் துவங்கிவிட்டேன் மறுபடியும் – குடிநீரைக் குடத்தில் பிடித்து, எடுத்து வரவேண்டிய ஊர் என்பதால் நோ ச்சாய்ஸ்), விளையாட்டுக்கு முற்றும் போட்டுவிட்டு (பாரத மாதா தனக்கு அம்மாதிரி ஒரு ஒலிம்பிக் லெவல் ஓட்டப்பந்தய வீர மகன் இருப்பதை அறிந்ததாகத் தகவலில்லை), படிப்பில் முழு கவனமும் திரும்ப, வகுப்பெடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் என்னை “நீ கண்டிப்பாக மாநில அளவில் ரேங்க் எடுப்பாய்,” என்று நேரடியாகக் கூறி ஊக்கப்படுத்தி, அவ்வருடம் மாநிலத் தரவரிசை (state rank) பட்டியலில் இடம்பெறச் செய்தே விட்டனர். இப்பிறவியில் அது நிச்சயம் ஒரு மைல்கல் எனினும், அதுவும் கடந்து போனது.

பிளஸ் ட்டூவில் அதே அளவு பெர்ஃபார்ம் பண்ண முடியாமல் போக (மேல்நிலைப்பள்ளி காலத்தில் பொதுவாகவே மாணவர்/விகளுக்கு கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் – இது தற்காலத்தில் சமூக ஊடகங்கள் + செயலிகள் தயவில் ரொம்பவே ஆம்ப்ளிஃபை ஆகிவிட்டது), சென்னை, கோவை பெருநகர்க் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில்தான் பொறியியல் படிக்க வேண்டிதாகிவிட்டது (நோ ரெக்ரெட்ஸ் தோ – மிகத் தரமான கல்லூரிதான்).

பின்னர் கல்லூரிக் காலத்தில், விகடனில் முதல் சிறுகதை வெளிவந்தது ஒரு மகத்தான மைல்கல். ஒருபக்கக் கதைதான் என்றாலும், கதையின் முடிவை மட்டும் ஆசிரியர் மாற்றிவிட்டாலும், பதிப்பில் வெளிவந்தது வந்ததுதானே. ஏதோ சன்மானம் கூட மணி ஆர்டரில் வந்ததென்று ஞாபகம். அதே காலத்தில் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் கிட்டியது. என் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளருக்கு இதுவே புக்கர் பரிசு பெற்றதற்கு ஈடு!

https://tinyurl.com/QV-SujathaDarshan

ஆனால், அதன்பின்னர் எழுத்துலகில் பரிமளிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவோர் யாருமின்றி, ஏதாவது நோட்டுப் புத்தகம் [அ] பேப்பர்களில் தார்மீகக் கோபம், காதல், இத்யாதியைப் பற்றிக் கவிதைகள் அவ்வப்போது எழுதியதோடு எமது எழுத்துப்பணி ப்பாஸ் ஆகிவிட, தமிழ் கூறும் நல்லுலகம் அடுத்த தலைமுறை சுஜாதாவை (ஆஹா, என்ன ஒரு நெனப்பு அண்ணனுக்கு!) இழந்தது.

அடுத்த படித்து முடித்து, பட்டம் வாங்கி (பொறியியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியதும் நடந்தது – ஆனால் அப்போது நான் வருந்தியதென்னவோ, ‘பெஸ்ட் ஒளட்கோயிங்க் ஸ்டூடெண்ட்’ பட்டத்தைத் தவற விட்டதைப் பற்றித்தான்), வேலை தேடி, சொந்த ஊரிலேயே முதல் வேலை வாய்ப்பைப் பெற்று (படிப்பினால் அல்ல, பேச்சுத் திறமையால்!), உழைத்து, திருமணம் புரிந்து, வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று, சென்னைக்கு ஜாகை மாற்றி, பிள்ளை பெற்று, வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து திரும்ப வந்து, கார் வாங்கி, வீடு வாங்கி, ஈ.எம்.ஐ கட்டி, மேலும் உழைத்து, பதவி உயர்வுகள் பெற்று, மேலும் இன்க்கம் டாக்ஸ் கட்டி… இவ்வாறு ஒரு சாதாரண நகர்வாழ் மதியமராகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இடையிடையே, பல தளங்களில், களங்களில் ஏதேதோ போட்டிகள்.. என்னென்னவோ சவால்கள்.. எத்தனையோ சாதனைகள்.. வெற்றிகள். அதையெல்லாம் லாங் லிஸ்ட் போட்டால் அபத்தமாக இருக்கும்.

இவையெல்லாம் ஒரு நிலையில் அலுத்துப்போய், 45லேயே (ஒரிஜினல் திட்டம் 50ல் – இதை என்னுடைய நிதி ஆலோசகர் இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிடுவார்) பிழைப்புத் தளத்திற்கு ச்சாவ் சொல்லி, விருப்ப ஓய்வு பெற்று விலகிவிட்டேன். திட்டமிட்ட ஓய்வு பெரிய அளவில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது – இதுவரையில். பெரும் சொத்தோ, பின்புலமோ இல்லாமல், சுய உழைப்பால் வாழ்வில் உயர்ந்த ஒரு சாமான்யனுக்கு, 9-x ஓய்வற்ற பிழைத்தலிலிருந்து, நாற்பதுகளில் ஈட்டிய இத்தகைய விடுதலை பெரும் வெற்றியே என்பதைக் கூறத் தேவையில்லை. https://bit.ly/3zxClfe

பிள்ளை/கள் பிறந்து, ஆரம்ப கால “அப்படியே எ/உன்ன உரிச்சு வெச்ச மாதிரி இருக்காப்ல இல்ல” (உண்மையில் பிறந்த குழந்தைகள் எல்லோரும், உலக அளவில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் – நிறம் மற்றும் முடி மட்டும் வேண்டுமானால் வேறுபடலாம்) கொஞ்சல்; ‘ஓஎம்ஜி’ கொண்டாட்டம்; நாக்ட்டர்னல் நாலு மாதக் குழந்தையால் தூக்கம் கெட்டு தாவு தீர்ந்து போய் நடக்கும் சண்டை; “ஏன், நீங்க டயப்பரை மாத்தினா தேஞ்சு போயிருவீங்களோ..” சச்சரவு எல்லாம் நடந்து முடிந்தபிறகு, குழந்தை/கள் ஏதேனும் பயிலத்துவங்கும் நிலையை அடைந்தவுடன், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதிலிருந்து, நமது குழந்தையின் வாழ்க்கை, அவரது வெற்றி என்று கவனம் தானாகவே திரும்பிவிடும். பெரும்பாலான பெற்றோர்களது நிலை இதுவே – குறிப்பாக பாரம்பரிய கலாச்சாரத்தில் வளர்ந்த பாரத தேசத்தவருள் (பொதுவாக மேலை நாடுகளில் தனிமனித / தன்னுடைய வெற்றிதான் இறுதிவரை முக்கியம் – பெரும்பாலானோருக்கு).

எனவே, இதுபற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டீவீட்டி விட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.‘ (குறள் #69)

பிள்ளையை/களைப் பெற்ற தாயைப் பொறுத்த அளவில், தன்னுடைய குழந்தை (இருபாலரும்தான்) சான்றோன் (திறன் மிகுந்தவன்/ள்) எனப் பிறரால் அங்கீகரிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வெற்றி. இவ்வினாவிற்கு ஏற்கனவே விடையளித்த பலர் (தாய், தகப்பன் இருவரும்) இதைக் குறிப்பிட்டிருப்பதே, வள்ளுவர் வாய்மொழிக்குச் சான்று.

எனில் தந்தை எதனை வெற்றியாகக் கருதுவார்? அதற்கும் வள்ளுவரே விடையளிக்கிறார் – ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு. முதலில் தந்தை பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்று ‘கடமை’ பற்றிக் குறிப்பிடுகிறார். பிள்ளையை/களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் தாய்தான் என்பதால், அவருக்குத் தனியாக கடமை எதுவும் குறிப்பிடப்படவில்லை போலும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.‘ (குறள் #67)

தன் பிள்ளையை (இங்கு பிள்ளை என்று குறிப்பிடுவது பொதுவாக குழந்தையை என்றே கொள்க; பையன், பெண் என்ற பாகுபாடு அர்த்தமற்றது – குறிப்பாகத் தற்காலத்தில்) அறிவுடையோர் (திறனுடையோர் என்றும் கொள்ளலாம்) உள்ள அவையில், முதன்மையானவராக ஆக்குவது தந்தையின் கடமை என்கிறார்.

ஆக, எந்தவொரு தந்தைக்கும், தன்னுடைய குழந்தையை(களை)த் தன்னைவிடச் சிறப்பான நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் – கல்வி, கலை, விளையாட்டு போன்று எத்துறையாக இருந்தாலும் – செய்வதுதான் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

சரி, கடமை புரிகின்றது. ஆனால், ‘தந்தை மகற்காற்றும் கடமை‘ என்று கூறாமல், ‘நன்றி‘ என ஏன் கூறுகிறார்? இதற்கான விடையை அறிய, அதே அதிகாரத்தில் சற்று முன்பாக இருக்கும் குறளுக்குப் போக வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.‘ (குறள் #61)

வாழ்வில் அறியவேண்டியவற்றை அறியக்கூடிய நன்மக்களைப் பெறுவதை விட வேறு பெரிய பேறு ஏதுமில்லை (பெற்றோருக்கு).

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.‘ (குறள் #62)

(சமூகத்தில் / உலகில்)பழி ஏதும் ஏற்படாத வகையில் வாழக்கூடிய நற்பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெற்ற தாய்/தந்தையரை, ஏழு பிறப்பிலும் தீமை அண்டாது.

ஆக, நல்லறிவும், நற்பண்பும் கொண்ட பிள்ளைகளைப் பெறுவதே பெற்றோருக்குப் பெரிய பயன்தான் என்கிறார் வள்ளுவர். அத்தகைய பிள்ளைப்பேறானது, பரஸ்பர நிதியில் (mutual fund) சேமித்த செல்வம்போல் தழைத்து வளர்ந்து, (இறுதிக்காலம் போன்ற) தக்க சமயத்தில் பெற்றோருக்குக் கைகொடுக்கும் என்பது திண்ணம். 

சரி, இவ்வாறு பிள்ளைகளைச் சிறப்பாக, சான்றோராக, அவையத்தில் முந்தியிருப்பச் செய்வதால் பெற்றோருக்கு வேறு பலன் ஏதேனும் கிட்டுமா?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.‘ (குறள் #68)

நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக, திறன் மிக்கவர்களாக ஆவதால், நமக்கு  மட்டும் நன்மை / பெருமை இல்லையாம். அத்தகையோரின் உயர்வு, உலகிற்கும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் இனிமை (பயன்) தருவதாம். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும் பெற்றோருக்கு!

பை தி வே, அம்மாதிரி பிள்ளைகளின் வெற்றியை, உயர்வை முதன்மைப்படுத்திச் செயல்படும் தந்தைகளுக்கு (அட, தாய்மாருக்கும்தாங்க) அப்பிள்ளைகள் செய்யக்கூடிய கைம்மாறு என்னவாக இருக்கும் என்பதைக் கூறிவிட்டுத்தான், வள்ளுவர் ‘மக்கட்பேறு’ (பிள்ளை / குழந்தைப்பேறு) என்ற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ (குறள் #70)

‘இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் (குழந்தையை) பெற, இவரது தந்தை (+ தாய் – goes without saying) என்ன தவம் செய்தாரோ,’ என்று காண்போரை வியக்க வைப்பதுதான், நல்லறிவும், நற்பண்பும் உடையவனா/ளாகத் தன்னை வளர்த்த பெற்றோருக்கு அக்குழந்தை செய்யும் உதவியாம் (கடமை / கைம்மாறு).

அடியேனும், எனது வாழ்க்கைத் துணைவியும், எங்களது ஒரே பிள்ளையை, வள்ளுவர் வாய்மொழிப்படியே வளர்த்து ஆளாக்கியுள்ளோம் என்று உறுதியாக நம்புகிறோம். திருவருளும், குருவருளும் இதற்கு வழிகாட்டின என்பது எமது நம்பிக்கை. அவரது குறிக்கோளை எட்டி, வாழ்வில் பல வெற்றிகளை அவர் அடைவார் என்பது சர்வ நிச்சயம். அதற்கான கைம்மாறு எதுவும் அவர் செய்யத் தேவையில்லை என்கிற தெளிவு எங்களுக்கு இருந்தாலும் (இதை அவரிடமே நேரடியாகக் கூறியும் விட்டேன்!), செய்யத் தயங்கவோ, தவறவோ மாட்டார் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.https://qr.ae/pGZipe

இவ்வகையில் ஏற்கனவே செயல்பட்ட/படும் பெற்றோருக்கு நமது வந்தனங்கள். இனி அவ்வாறு செயல்பட விழைவோருக்கு நம் வாழ்த்துக்கள்!

கு: 90களில் கைவிட்ட எழுத்துத் திறனை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலைப்பதிவு (blog) எழுதுவதன் மூலம் மறுபடி ஆக்சிஜன் கொடுத்து உயிர்ப்பித்தேன். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னர், கடந்த சில  ஆண்டுகளாகத்தான், என்னுடைய எழுத்தை விரும்பி வரவேற்றுப் பாராட்டும் நல்வாசகர்களைக் கோராவில் கண்டுகொண்டேன். களிப்புற்றேன். தற்போது ‘வெற்றி’ பெறும் நோக்கமெல்லாம் ஏதுமில்லை என்பதால், தெரிந்த + அறிந்ததை எழுதுதிப் பகிர்வதே ஆனந்தம் அளிக்கின்றது. அதுவே போதுமானது.

பி.கு: ஆன்மீகத் தளத்தில் உலவத் துவங்கி, குருவருட் கருணை மழையில் நனைந்த பின்னர், வெற்றி/தோல்வி ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பது தெளிவாகிவிட, போட்டி, பொறாமை, கர்வம், பெருமிதம் போன்றவற்றுக்கு விடைகொடுத்து அனுப்பியாகிவிட்டது. ஆகவே, இவ்விடைக்குப் பெருத்த ஆதரவு கிட்டினாலும், வெறும் நாலைந்து பேர் மட்டுமே ஆதரவு வாக்கைச் சொடுக்கினாலும், நாம் இரண்டையும் சமமாகவே  பாவிப்போம்; இயல்பாகவே ஏற்றுக்கொள்வோம்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

25 வயதில், சுய சம்பாத்தியம் இல்லாமல், படித்துக் கொண்டிருப்பவருக்குப் பிறர் கருத்தால் என்ன பயன்!

ஓம் ஸ்வாமி என்று ஒரு குரு. இமயமலைச் சாரலில் ஆஸ்ரமம் அமைத்து, உலகெங்கிலும் உள்ள ஆன்மீக ஆர்வலர்களுக்கு வழிகாட்டி வருகிறார். தேவி உபாசகர். இவரது வழிமுறை மிகத் தொன்மையான, கிட்டத்தட்ட ரிஷிகள் காலத்து தந்திர சாதனா. இவரது வகுப்புகளில் பல மந்திர சாதனைப் பயிற்சிகள். வயது 41தான் ஆகிறது.

அன்னார் சொந்தமாக சர்வதேச ஐ.ட்டி நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தார். உலகம் சுற்றிய வாலிபன் + செல்வந்தர். முப்பதுகளில் அத்தனையையும் துறந்துவிட்டு (மல்ட்டி மில்லியன் நிறுவனத்தை நண்பரிடம், ‘மாதச் செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுப்பா, போதும்’ என்று அளித்து விட்டார்), உண்மை தேடிப் பயணம். ஒரு குருவுடன் சிலகாலம். பின்னர் இமயத்தில் தனிமைத் தவம். உண்மை தேடியவருக்குக் கிட்டியதோ தேவி தரிசனம். ஆதியோகி எந்தை ஈசனின் வாமபாகி, அக்மார்க் ஜகத்ஜனனியாகிய சக்தியேதான். நேரடி தரிசனம்!

அவரது சுயசரிதத்தில் (If Truth Be Told by Om Swami) அந்த தேவி தரிசன அனுபவத்தைப் பற்றிப் படித்தபோது அடியேனது விழியிலிருந்து மடைதிறந்த வெள்ளம். எப்படிப்பட்ட பாக்கியவான்! எனிவே, தற்போது டிஜிட்டல் யுக ஆன்மீக ஆர்வலர்களுக்கு வழிகாட்டும், ட்டெக் ஸாவ்வி குரு. நிற்க.

தங்களது வினாவிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம். பின்னர் இதற்கும், அதற்கும் ஒரு இணைப்புக் கொடுக்கலாம்.

’25 வயதிலும்…’

ஆரோக்கியமான உடல் மற்றும் சிந்தை உள்ள மனிதனுக்கு, கால் நூற்றாண்டு என்பது, வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்வோம் (ஆண்+பெண் இருபாலரின் சராசரி ‘வாழக்கூடிய காலம்’ தற்போது 73.2 ஆண்டுகள்). இன்னமும் இரண்டு ‘கால் நூற்றாண்டு’ இன்னிங்ஸ் உங்களுக்கு பாக்கி இருக்கின்றது, இப்பிறவியிலேயே – உடல் மற்றும் மன நலத்தைப் பேணினால்! ஆக, ’25 வயதிலும்’ என்பது ஒரு மேட்டரே இல்லை.

‘சுய சம்பாத்தியம் இல்லாமல்…

இது அவரவரது குடும்ப / வாழும் சூழலைப் பொறுத்தது. ‘படிக்கற வரைக்கும் நல்லாப் படிய்யா; செலவெல்லாம் நாங்க பாத்துக்கறோம்‘ என்கிற பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ உள்ளவர்களுக்கு இது பிரச்சினை இல்லை. மத்யமர் வர்க்க, நேர்மையான அரசு ஊழியரான என் தந்தை, அடியேன் உட்பட, தன் ஐந்து பிள்ளைகளையும் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். அவரால் செய்ய முடியாது போன ஒன்றை, அடுத்த தலைமுறையினர் சாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் அதற்குக் காரணம்.

விளையாட்டு + கல்வி என்ற இரட்டைக் குதிரைச் சவாரியை வெற்றிகரமாகச் செய்த எனது ஒரே பிள்ளை, கோவிட்-19 காரணமாக விளையாட்டுத் தளத்தில் இயக்கம் முற்றிலும் நின்றுபோன போது, சுமார் பதினைந்து வருட விடாமுயற்சியை, சிகரத்திற்கு அருகிலிருக்கும் நிலையில், அப்படியே ப்பாஸ் செய்துவிட்டு, ‘இப்போது மேற்படிப்புப் படிக்கப் போகிறேன்‘ என்று முடிவெடுத்தபோது, எந்தத் தடையும் சொல்லாமல் நாங்கள் ஊக்குவிக்கவே செய்தோம் (கொஞ்சம்போல வருத்தம் இருந்தாலும்). அவனது எதிர்காலம் அவனது தேர்வே (ச்சாய்ஸ்) என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. இதுபற்றிய பதிவு இங்கே…https://qr.ae/pGZipe

தங்களது நிலை என்னவென்று அடியேன் அறியேன். நீங்கள் சம்பாதித்துக் குடும்பத்தை கவனிக்க வேண்டிய தேவை இருந்தால், அதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், பணிபுரிவது மேலும் படிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதற்கு என் வாழ்விலேயே பல உதாரணங்களைப் பார்த்திருக்கிறேன். சில நடைமுறை சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், என்ட்ராப்மெண்ட்டில் ஷான் கானரி, கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸிடம் சொல்லிய மாதிரி, ‘இட்ஸ் இம்ப்ராபபிள், பட் நாட் இம்ப்பாஸிபிள்.’

வாழ்க்கை ஸ்ப்ரிண்ட் ஓட்டம் அல்ல; மராத்தான் ஓட்டம். இறுதி இலக்கை அடைய வேண்டும் என்ற ஆர்வம் + தீவிரம் உள்ளோர்,  கஷ்டப்பட்டாலும் ஒடித்தான் ஆகவேண்டும்.~ஸ்வாமி

‘இந்திய ஆட்சிப் பணிக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்…’

வாழ்த்துக்கள் வருங்கால கலெக்ட்டர், ஊப்ஸ் ‘மாவட்ட ஆட்சியர்’ அவர்களே. தற்காலத்தில் இம்மாதிரியான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கு ஏராளமான களங்கள், தளங்கள், ஊடகங்கள், நூல்கள், வழிகாட்டிகள் உள்ளனர். முடிந்த அளவு அவற்றைப் பயன்படுத்தி, முனைப்போடு தயார் செய்யுங்கள். வேறு யாருடனாவது ஒப்பீடு செய்வதை மட்டும் தவிர்த்து விடுங்கள். அதனால் தேவையற்ற தலைவலிதான் வரும். உங்களது முயற்சி நீங்கள் அடையவேண்டிய குறிக்கோளை, நிலையை மட்டுமே நோக்கியதாக இருப்பது முக்கியம்.

‘இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?’…

கருத்துக்கள் குதத்துளையைப் போன்றவை. எல்லாரிடமும் ஒன்றாவது இருக்கும். எல்லாமே நாற்றமடிக்கும்‘ என்று எங்கோ படித்து, ரசித்து, சிரித்ததாக ஞாபகம். பிறருடைய கருத்துக்களால் நம்முடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை. அதேபோல், நம்முடைய கருத்துக்களால் பிறருடைய வாழ்வில் பெருத்த மாற்றம் எதுவும் நிகழப்போவதுமில்லை. ஆனால், இரு தரப்பிலும், ஏமாற்றம் நிகழ நிறையவே வாய்ப்பிருக்கின்றது.

படம்: பிறரது கருத்தையெல்லாம் கேட்டு, காலம் + சக்தி விரயம் செய்யாமல், தங்களுடைய நோக்கத்தின் மீதிருந்த தீவிரம் மற்றும் அயராத சுயமுயற்சியால் சாதித்தவர்கள்!

ஓம் ஸ்வாமி மல்ட்டி மில்லியன் டாலர் சுயதொழிலை விட்டுவிட்டு மெய்யறியவோ, தேவி தரிசனம் பெறவோ செல்வதற்கு முன், யாருடைய கருத்தையும் கேட்டதாகக் குறிப்பிடவில்லை (அப்பாடா, அந்த முன்கதையையும், இந்த வினாவையும் இணைத்தாகிவிட்டது). அது அவரது தேர்வு + முடிவு. அதில் அவர் வெற்றி பெற்றார்.

எட்மண்ட் ஹில்லரியும், ட்டென்ஸிங் நார்கேயும் 28,839 அடியில், அதுவரை மனிதர்கள் கண்டிராத / அனுபவித்திராத பயங்கரமான குளிர் மற்றும் காற்றுக்கிடையே, பின்னாளில் ‘ஹில்லரி ஸ்டெப்’ என்றே பெயர்சூட்டப்படவிருக்கும் இக்கட்டான ஒரு இடத்தில் நின்றபோது, ‘மேற்கொண்டு ஸாகர்மாதா / ச்சோமோலுங்மா சிகரத்தில் ஏறுவதா, இல்லை வந்த சுவடு தெரியாமல் கீழே இறங்கிப் போய்விடலாமா‘ என்று யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை. கேட்பதற்கு அங்கு அந்த மலையையும், பனியையும், விண்ணையும், காற்றையும் தவிர வேறு யாருமில்லை என்பது வேறு விஷயம். அவர்களது சாதனை என்னவென்று உலகிற்கே தெரியும் (ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிக்கும் உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும்)!

இந்திய ஆட்சிப் பணிக்குத் தயார்செய்து, ‘இ.ஆ.ப’ என்று பெயருக்குப் பின் இணைத்துக் கொண்டு, ஆட்சிப் பணியில் பதவி பெற்று, மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் (அதுக்குத்தானே படிக்கிறீங்க.. இல்ல ட்டெம்ப்ளேட் தமிழன் மாதிரி வேற ஏதேனும் சினிமா-இன்ஸ்பையர்ட் காரணம் இருக்கா!) என்பது உங்களது எண்ணம் / திட்டம் / நோக்கம் / குறிக்கோள் / ஆர்வம் / ஆசை / கனவு என்று எதுவாக இருந்தாலும், அதில் உங்களது சாதனை என்னவாக இருந்தாலும், அது முற்றிலும் உங்களது ஆர்வம் + முயற்சியைச் சார்ந்ததே. பிறரது கருத்தை எல்லாம் இந்தக் காதில் வாங்கி, அந்தக் காது வழியாக வெளியே விட்டுவிடுங்கள்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்தூன்றும் தூண்.‘ என்கிறார் வள்ளுவர் (குறள் #615).

‘தன் இன்பத்தை விரும்பாமல் எடுத்த காரியத்தை முடிப்பதை விரும்புபவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தை நீக்கி அவர்களைத் தாங்கும் தூண்’ போன்றவனாம்.

யார், யாரோ போகிறபோக்கில் அள்ளி வீசும் கருத்துக் குவியலை எல்லாம் தலையில் சுமந்து கொண்டு திரிந்தால், 30 வயதிலும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருப்பீர்கள் – கோராவிலோ, வேறொரு ஊடகத்திலோ. அப்புறம் ட்டு-பீ-கலெக்ட்டர் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லாம், விரக்தியில் வேறு ரோல் மாடலைத் தேட வேண்டி வரும். ‘வ்வாட் எ மேஸிவ் டிஸ்ஸப்பாயிண்ட்மென்ட் தட் வுட் பீ‘ என்று யோசியுங்கள்!

ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்

தாழா(து) உஞற்று பவர்,‘ என்றும் வள்ளுவரே முயற்சிப்போருக்கு ஊக்கமளிக்கிறார் (குறள் #620).

‘மனத் தளர்ச்சி இல்லாமல் முயற்சி செய்கிறவர்கள் விதியையும் துரத்தி விடலாம்’ என்று வள்ளுவரே கியாரண்ட்டி கொடுக்கிறார் சார்!

அதனால் பிறர் கருத்தைல்லாம் கேட்காமல் (ஐடியா, இன்ஸைட், வழிகாட்டுதல் போன்றவற்றை தாராளமாகக் கேளுங்கள்), உங்களது முயற்சியைத் தீவிரமாக்கி, நோக்கத்திலிருந்து கவனம் சிதறாமல், வெகு விரைவில் நீங்களே எல்லோருக்கும் ரோல் மாடலாகி விடுங்களேன்!

25 வயதிலும் சுய சம்பாத்தியம் இல்லாமல் இந்திய ஆட்சிப் பணிக்கு தயார் செய்து கொண்டிருக்கிறேன். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

Quoraவிடை ~ https://qr.ae/pGS601


~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பதிவிடும் கேள்விகளுக்கான பதிலில், உங்களது சந்தேகங்கள் நீங்கி, எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா?

இங்கே பதிவிடும் கேள்விகளுக்கான பதிலில், உங்களது சந்தேகங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா?
Quoraவிடை ~ https://qr.ae/pGSm0t

கேள்விகள்.. பதில்.. சந்தேகங்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. அந்த வரிசையை உல்ட்டா ஆக்கிப் பின்னாலிருந்து முன்னுக்கு வருவோமா!

முதலில் ‘எதிர்பார்ப்புகள்

எதிர்பார்ப்புக்கள் இருக்குமிடத்தில் ஏமாற்றமும் இருந்தே தீரும்‘ என்பது, வாழ்க்கைக்கான எனது ஆதார பொன் விதிகளில் ஒன்று (அதான்ணே இந்த ‘கோல்டன் ரூல்ஸ்’ம்பாய்ங்களே அதேதான்.. சமீபத்தில் ‘இங்கிலிஷ் வர்ட்ஸை அப்படியே உன்னுடைய ஆன்ஸர்ல பயன்படுத்தாதே’ என்று ஒரு அன்பர் விரல்சுட்டியிருப்பதால், தமிழ்ப்’படுத்தி’ப் பார்த்தேன்ணே.. வேற ஒண்ணுமில்ல.. ஹெ..ஹெ..)

படிப்பு, பிழைப்பு, குடும்பம், பயணம், ஆன்மீகம், முதலீடு, வாகனம் என்று ஏகப்பட்ட தளங்களில் இந்த எதிர்பார்ப்பு என்கிற வஸ்துவால் நிறைய உ/வதை பட்டிருக்கிறேன். ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு‘ம்பாய்ங்கல்ல, அதோடு, ‘ஒவ்வொரு முயற்சியிலும்.. இடத்திலும்.. ஆசாமியிடமும்..‘ என்பவற்றையும் ஆடண்டம் மாதிரி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால், நடைமுறை வாழ்க்கையில் எந்த இடத்தில் / முயற்சியின்போது / எவரிடமிருந்தும் ஏமாற்ற அம்பு / புல்லட் / குக்ரி / கவண்கல் போன்றவை வந்து நம்மைப் பதம்பார்க்கும் என்று, யூடியூப் சானலுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் (அட்ரா சக்க.. ‘சப்ஸ்கிரைபர்’னு தட்டச்சு செய்யத் துடித்த விரல்களைப் பதமாக அதன் டமில் ஈக்குவலன்ட் சொல்லை அடிக்க வைத்துவிட்டேன் பார்த்தீங்களா.. ய்யெஸ்.. ஓ யே.. ஆஸம்..) உள்ள ஜோசியரால் கூடத் துல்லியமாகக் கணிக்க முடியாது.

அன்பார்ந்த தாய்மார்களே.. பெரியோர்களே.. சகோதர சகோதரிகளே.. வாசகர்களே.. இந்த மாட்சிமை பொருந்திய கோரா தளத்திலே, லொட்டு லொட்டென்று மெக்கானிக்கல் கீபோர்டில் தட்டி, அண்ணன் ஸ்வாமி அவர்கள் எழுதும் / பகிரும் / பதிப்பிக்கும் எதைப்பற்றியும், அவருக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் கிடையாது என்பதை உறுதிபட எடுத்துரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.. நன்றி.. வணக்கம்..
அடுத்ததாக, அண்ணன் இந்தக் கேள்விக்கான தனது விடையை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்வார் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. இவண்..

ஊப்ஸ், சாரி ப்ரோ/ஸிஸ், நமக்குள்ள கீழடி புதைபொருள் மாதிரி கெடக்கற மதுரக்காரன் அப்பப்போ இந்த மாதிரி பொங்கி எழுந்து ஏதாச்சும் ஏடாகூடமா சொல்லிருவாப்ல.. அதெல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு மேல படிங்க…

ஆகவே, கோராவில் கூட, நாம் எதிர்பார்ப்புடன் எதுவும் எழுதுவதில்லை.
ஏனெனில், நான் ரேப்பிட் ஃபையர் ரௌண்ட் மாதிரி அதிவேகமாக எழுதும் விடைகள் சில அட்டகாசமான டிராக்ஷன் பெறுவதும் உண்டு. பயங்கரமாக ஹோம் வொர்க் பண்ணி, விளக்கமாக எழுதும் விடைகள் ‘நூறைக் கூடத் தாண்டாது போல வியூ கௌண்ட்.. என்ன கொடும சார் இது‘ என்று காற்றிறக்கி விடும். ஸோ,

தனஞ்சயா! யோகத்தில் நில். பற்று வைப்பதை நீக்கு. வெற்றி தோல்விகளைச் சமம் எனக் கொள். பின், பணியைச் செய். ‘நான் யோகம்’ என்பது நடுநிலையே (அன்றி வேறில்லை)!’
என்று யோகீஸ்வரரான க்ருஷ்ண பரமாத்மா சொன்னபடி, நாங்க பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருப்போம் – ரீடர் ரெஸ்பான்ஸ் என்னவா இருக்கும்னு கவலையே படாம.

அடுத்தது ‘சந்தேகங்கள்

தீவிரமான ஒரு ஆன்மீக சாதகரின் சந்தேகங்களை நீக்கக் கூடியவர்கள் கோராவில் பதிலெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதாக எனக்குத் தெரிந்த அளவில் இல்லை. குரு, உபகுரு, மற்றும் பல்வேறு வடிவங்கள் மற்றும் ஊடகங்களில் எண்ணற்ற மெய்ஞானிகளின் உபதேசங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றின் மூலம் எனது சந்தேகங்கள் நிவர்த்திக்கப்படுகின்றன. ஃபிரம் ட்டைம் டு ட்டைம்.

சமூக / பிழைப்புத் தளத்தைப் பொறுத்தவரை, கோராவில் சிறப்பாகக் கேள்வி எழுப்புவோர் ஏராளமானோர் ஏற்கனவே உள்ளனர்
(அவர்களுக்கு ஈடாக மொக்கையான, மற்றும் ‘இன்னிக்கு எவனயாச்சும் கடுப்படிச்சே ஆகணும்டா’ன்னு கொலவெறியுடன் வினா எழுப்புவோரும் ஏராளமாக உள்ளனர்).

அவற்றுக்குப் பொருத்தமான, வித்தியாசமான, பயனுள்ள விடைகளை அளிப்போரும் பலர் இங்குள்ளனர்
(‘ஏண்ணே, என்னத்தச் சொல்ல வராப்ல இந்த காமெடி பீசு.. ஒரு எளவும் புரியல.. காலைல கண்ணு முளிச்சதும் மொத வேலயா தண்ணியப் போட்டுட்டுதான் கைல ஃபோனை எதுதிருப்பானோ இந்த கோயான்’ என்று வாசகரை வியக்க வைப்போரும் நிச்சயம் இங்குண்டு).

ஆக, ஏற்கனவே உள்ள தரமான வினாக்களுக்கான செறப்பான விடைகளை மேய்வதே இப்பசுவுக்குப் போதுமானது. அதனால்தான் எனது கேள்வி கௌண்ட் அப்போதும், இப்போதும், எப்போதும் ‘0’ (பதில் எண்ணிக்கை 1000ஐக் கடந்துவிட்டது – ஆங்கில விடைகளையும் சேர்த்து).

பை தி வே, அது ‘பதி-பசு-பாசம்’ ரிலேட்டட் ‘பசு’ங்க.. அதனால
சாமிங்கறவரு காளையால்ல இருக்கோணும்.. அவரு போயி எப்படிங் ‘பசு’வாக முடியும்.. ஏனுங் இப்படி வெவரமில்லாம என்னத்தையோ எளுதி கொளப்பறாரு இந்தாளு, நம்மூருல தேர்தல்ல நின்னு தோத்த ஆளு பேசுன மாதிரி?‘ன்னுட்டு துணைக் கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது, சரியா!

அதுசரி, ‘எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும்’கறது ஓக்கே. அது எப்படி ‘சந்தேகங்கள் நிறைவேறும்!’ எனக்கு இப்போ கேள்வியே புரியலையே.. பாதி பதிலை வேற எழுதித் தொலைச்சிட்டேன். நாம வேற முன்வைத்த ஃபிங்கரை பின் வைக்காத மதுரக்காரன்கறதால, மீதி விடையை இப்போ எழுதி முடிச்சே ஆகணுமே!

அடங்கொக்கமக்கா, பொரட்டாசி சனிக்கெளமை மதியானமும் அதுவுமா இப்படி ஆகிப்போச்சே நம்ம நெலம… யப்பா கள்ளழகரே, வைகைல வாராம வந்த வெள்ளத்துல சிக்கின மாதிரி இப்படி நட்ட நடுவுல மாட்டிக்கிட்டேனே.. நீதேன் எப்படியாச்சும் கரையேத்தி விடணுமப்போ!

மூன்றாவது ‘கேள்விகள் + பதில்/கள்

கேள்விகள் மற்றும் பதில்களைப் பற்றி இதற்குச் சற்று முந்தைய பத்தியிலேயே ஓரளவு அலசிவிட்டோம். அதனால் இந்த ப்பார்ட் நறுக்.. சுருக்.. (என்று நம்பப்படுகிறது)!

கேள்விகளில்

  • தரமானவை
  • பயனுள்ளவை
  • மொக்கையானவை
  • சாமர்த்தியமானவை
  • யாரையாவது குறிவைத்துக் கடுப்படிப்பதற்காக மட்டுமே எழுதப்படுபவை
  • தன்னுடைய அதிபுத்திசாலித்தனத்தைப் பிரகடனம் செய்யும் வகையில் வெறும் வார்த்தை விளையாட்டானவை
  • கத்துக்குட்டியான குக் தயார்செய்த அவியலில் தனித்தனியே, இண்ட்டர்வெல்லுக்கு முன்பாகப் பிரிந்து போன கல்லூரி நண்பர்களைப் போல, மிதக்கும் காய்கறிகள் மாதிரி ஒரு குழப்பச் சொல் மாலையாக வீசப்பட்டு ‘எனக்கு பதில் சொல்ற அளவு எவனு/ளுக்காச்சும் இங்கன தில் இருக்கான்னு பாத்திருவோம்ல‘ என்று கர்/றுவிக்கொண்டு காத்திருப்பவை

என்று பலவகையானவை உள்ளன.

இம்மாதிரி கேள்விகளை ஸர்ஃப் செய்யும்போது, ஏதாவது ஒரு சொல்லோ, சொற்றோடரோ அல்லது அக்கேள்வியில் நேரடியாக இல்லாது மறைமுகமாக உள்ள ஒரு வஸ்துவோ, அவ்வினா தொடர்பான அறிந்த அனுபவமோ, தெரிந்த தகவலோ, புரிந்த விஷயமோ சரக்கென்று விளக்கேற்றக் கொளுத்தும் தீக்குச்சியின் ஜுவாலை போல ஒளிரும். பைக்கின் ஸ்பார்க் பிளக்கிலிருந்து வெளிப்படும் ஃபிளாஷ் எஞ்சினை எழுப்பிக் கிளப்புகிற மாதிரி, பதில் படக்கென்று விழித்தெந்து, சிந்தையிலிருந்து சிலிக்கானுக்குத் தனது பயணத்தைத் துவங்கிவிடும்.

விடை எழுதும்போது முகத்தில் ஒரு விவரிக்க முடியாத புன்னகை ஃப்ரீஸ் ஆகியிருந்தால், அன்றைய தினம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. தவிர்க்க முடியாத தலையாய கடமையாகிய ஃபில்ட்டர் காஃபி குடிப்பதைக் கூட மறந்து, ஓரிரு மணி நேரங்கள் தொடர்ந்து எழுத வைத்துவிடும் வினாக்கள் கூட அவ்வப்போது சிக்குவதுண்டு (தற்போது ஒரு விடையை ஒரு வார காலத்திற்கு மேல் எழுதிக் கொண்டே இருக்கிறேன்…). அம்மாதிரியான தினங்களில் நாட்காட்டியில் ராசி பலன் பார்க்காமலேயே என்ன போட்டிருப்பார்கள் என்று தெளிவாகத் தெரியும்.

இக்குறிப்பிட்ட வினாவிற்கான இந்த விடைகூட அம்மாதிரி துவங்கியதுதான். இடையில் அங்கங்கே சந்துகளில் டிவர்ஷன் ஆகி, ஒருவழியாக இந்தப் பத்தியில் முடிவுக்கு வந்துவிட்டது. உங்களது வினாவிற்கான இவ்விடையால் உங்களது சந்தேகம் நிவர்த்தியானதா + எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். அதையும் நானே சொல்லணும்னா எப்படி!

கு: ‘இவிங்கள்லாம் எதுக்குண்ணே விடாம என்னத்தையோ எளவு பதிலை நெதம் எளுதிக்கிட்டே இருக்காய்ங்க?‘ என்றுகூட ஒரு துணை வினா எழலாம்.

அதற்கான விடையை, மனிதனாக்கப்பட்டவன் எப்படி வாழவேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் / கூடாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் கோனார் உரை மாதிரி ஒரு மஹா ஸெல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் புத்தகத்தை வழங்கிச் சென்ற, ஒரு மகத்தான அவதாரத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்…

‘கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசந.
மா கர்ம பலஹேதுர் பூர்மா தே ஸங்கோஸ்த்வ கர்மணி’

மஹாபாரதப் போர்க்களத்தில், மாபெரும் வீரனான அர்ஜுனனின் லீடர்ஷிப் + மேனேஜ்மேண்ட் கன்சல்டண்ட் ஆக, கிருஷ்ண பரமாத்மா அருளிய பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில், 47வது ஸ்லோகம் அது. அதன் சுருக் விளக்..

உன் கடமை தொழில் செய்வது (‘பணி புரிவது’ / ‘கடமை ஆற்றுவது’).
அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவை அல்ல (செயலின் பலன்கள் / ஒளட்க்கம் மீது உனக்கு உரிமை கிடையாது).
(ஒரு செயலைச் செய்வதால்) என்ன வர / கிட்டப் போகிறதென்று நினைக்காதே (‘வாட்ஸ் இன் இட் ஃபார் மீ’ என்று எதையும் எதிர்பார்க்காதே).
அதற்காகத் தொழில் (பணி / செயல்) செய்யாமலும் இராதே (வேலை எதுவும் பண்ணாமல் வெட்டியாக ஓ.ப்பி அடிக்கவும் கூடாது).

மேற்படி விளக்கத்தை அளித்தவர் கவியரசர் கண்ணதாசன். அடைப்புக் குறிக்குள் உள்ள மேட்டர் அடியேனுடையவை. இதன் க்ரக்ஸை ‘கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே‘ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கிருஷ்ண பரமாத்மா கொடுத்த அட்வைஸை மீறி என்னைப் போன்றோர், கோராவில் வினாக்களுக்கு விடையளிக்காமல் எப்படி இருக்க முடியும்; அளிக்கும் விடையின் விளைவு (ரெஸ்ப்பான்ஸ்) மீது எப்படிப் பற்று வைக்க முடியும்; விடையளிக்காமல் எப்படி ஓ.ப்பி அடிக்க முடியும்! நீங்களே சொல்லுங்கள்…

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

இறந்த பின்னர் நம்மை மக்கள் எப்படி நினைவுகூற வேண்டும்!

இருபத்தோராம் நூற்றாண்டின் ஏதோ ஒரு வருடத்தின், மாதத்தின், வாரத்தின், தினத்தின், ரேண்டம் கணத்தில் ஸ்வாமி பிரகாஷ் என்கிற இந்த ஆசாமி, வெளியே விட்ட மூச்சை மறுபடி உள்ளே இழுக்க மறந்து விடுகிறார், அல்லது முயற்சித்து முடியாது போய் மொத்தமாக விட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது ஒன்றும் பெரிய யுகப்புரட்சி ரக நிகழ்வோ, சேனல் சேனலாக பேனல் வைத்து விவாதம் செய்யப்பட வேண்டிய விஷயமோ கிடையாது. பெரிஷபிள் உயிரினங்களான நாம் எல்லோருமே, இந்த வாழ்நாளில் அந்தக் கணத்தைச் சந்திக்கத்தான் போகிறோம். அதற்கு அடுத்து என்ன நடக்கின்றது / நடக்கும் என்று பார்ப்போமா…

அருகில் ருணானு பந்தம் உள்ள மிகவும் நெருங்கிய உறவினர் யாராவது இருந்தால் (ரெண்டே பேர்தான்), கொஞ்சம் பதைபதைப்பு, ‘ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன்‘ என்கிற மாதிரி தவிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடு நிகழலாம் (எல்லோருமே குருவின் வழிகாட்டல் பெற்றவர்கள்தான் என்பதால் இது டௌட்ஃபுல்தான்; அனேகமாக திடமாகத்தான் இருப்பார்கள்). இல்லாத பல்ஸ் இருக்கிறதா என்று எனது கரம், கழுத்து ஆகியவை ச்செக் செய்யப்படலாம்.

கொஞ்சம் பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் உள்ளோர், கோவிட்-19 சமயத்தில் வாங்கிய பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வைத்துக் கூட ச்செக் பண்ணலாம். யாராவது மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் ‘சாரி, உயிர் போய் கொஞ்ச நேரம் ஆயிருச்சு..‘ என்று கன்ஃபர்ம் பண்ணிவிட்டு, காசு வாங்கிக் கொண்டு (கூகிள் ப்பே, ஃபோன் ப்பே, ப்பேட்டிஎம், பீம் யூ.ப்பி.ஐ யாவுமே ஏற்றுக்கொள்ளப்படும் – இது டிஜிட்டல் இண்டியாண்ணே) காணாமல் போவார்கள்.

அவ்விடத்திலிருந்து வெகு சிலருக்கு, வெட்டவெளியில் மிதந்து, ஓங்கி உயர்ந்த டவர்களால் ரிஃப்ளக்ட் செய்யப்பட்டு, செல்ஃபோன் கால்கள் மூலம், தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் பயண ஏற்பாடுகளில் இறங்குவார்கள். குளிர்பதனப்பெட்டிக்கு ஆர்டர் கொடுக்கப்படும். வரிசையாக ஆட்கள் வர ஆரம்பிப்பார்கள் – சிலர் மஞ்சள் நிற மாலையுடன்; சிலர் வெறுங்கையுடன். அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று டஜன் பேர்.. அதற்கு மேலெல்லாம் எதிர்பார்ப்பு கிடையாது – போனவருக்கும், இருப்பவருக்கும்.

கொள்ளி வைக்க வேண்டிய நபர், ஆஸ்தான புரோகிதர், மயான ஸ்லாட் அவைலபிலிட்டி ஆகியவற்றைப் பொறுத்து, உயிர்போன அன்று மாலைக்குள்ளோ, அல்லது மறுநாள் காலையிலோ ‘எப்ப சார் எடுக்கறாங்க பாடிய?‘ என்ற மில்லியன் ரூபாய் கேள்விக்கு விடை கிடைக்கும். உடல் நீராட்டப்பட்டு, அதன் செவியில் கர்ண மந்திரம் ஓதப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்ட பாடையில் கிடத்தப்பட்டு, வாய்க்கரிசி இடப்பட்டு, ‘அமரர் ஊர்தி’யில் ஏற்றப்பட்டு, மயானத்தில் எரியூட்டப்பட்ட பின்னர் (அடியேனுடைய ப்ரிஃபரென்ஸ் எலக்ட்ரிக் க்ரிமட்டோரியம் – வேலை விரைவாக, துல்லியமாக முடியும்; என்ன எலும்புத்துண்டு எதுவும் கிடைக்காது.. வெறும் சாம்பல்தான் மிஞ்சும்), போனவர்கள் அங்கேயே குளித்து விட்டு, கழுவி விடப்பட்ட வீட்டிற்குத் திரும்பி, உணவு உட்கொண்டு, அங்கங்கே அமர்ந்து
என்னங்க இது, இப்படி பட்டுன்னு போயிட்டாரே.. போற வயசா அவருக்கு..‘ என்று ஏதாவது பேசக்கூடும்.
பேப்பர்ல ஆபிச்சுவரி நல்லா வந்திருக்குப்பா, வெரி நைஸ்‘ என்ற அர்த்தமற்ற பாராட்டு யாருக்காவது வழங்கப்படலாம். சாயங்காலம் காஃபி அருந்திவிட்டுப் பெரும்பாலானோர் ‘சாவு வீட்டுல சொல்லிக்காம போகணும்னு சொல்லுவாங்க..‘ என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்.

தொடர்ந்து பதிமூன்று நாட்களுக்கு வரிசையாக சில சடங்குகள் நடக்கும் போது, போனவரைப் பற்றிய நினைவுகள் ஓரளவு ஃபிரெஷ்ஷாக இருக்கும். சிலர் விழிகளில் அவ்வப்போது கண்ணீர்த் துளிகள் வரலாம். அதற்கப்புறம் மாதாமாதம் சோதகும்பம், மாஸிகம் காரியங்கள் நடக்கலாம். கடைசியில் ஒரு வருடம் கழித்து அதே திதியில் ஒரு சிரார்த்தம். அவ்வமயம், அன்னாரது நினைவுகள் பெரும்பாலானோரின் மெமரியில் ஏற்கனவே மழுப்பப்பட்டிருக்கும்.

நினைவு தினத்தின்போது, மறைந்தவரது படங்கள் வாட்ஸாப்பிலும், ஃபேஸ்புக்கிலும் ஷேர் பண்ணப்படலாம். கோராவில், ட்விட்டரில் உணர்ச்சி வசப்படும் டைப் வாசகர்கள் யாராவது, ஏதாவது பழைய விடையையோ, டீவீட்டையோ பகிரலாம். அதன் பின்னர், வருடா வருடம் அதே சடங்கு நடந்தாலும் நடக்கலாம். நடக்காது போனாலும் போகலாம். இடையில் மஹாளய அமாவாசையின் போதும் அன்னாரின் நினைவு அவருக்கு நெருங்கிய உறவினரிடத்தில் எழலாம். அவ்வளவுதான் மேட்டர்.

மேற்குறிப்பிட்ட எந்த நிகழ்விலும், இறந்து போன பிறகு, மேற்படி ஆசாமிக்கு ரோல் எதுவும் கிடையாது. எந்த செயலாலும், அவராலோ, அவருக்கோ, எவ்விதமான பாதிப்போ, பயனோ எதுவும் கிடையாது. இரண்டுமே அவரது குடும்பத்தினருக்கு மட்டும்தான். அவர் சேர்த்து வைத்தது அத்தனையும் கூட அவர்களுக்குத்தான் (ஹ்ம்ம்ம், இத்தனை புத்தகங்களையும் என்ன செய்வார்கள் – படிக்கிற ஆள் வேறு யாரும் கிடையாதே நம்ம வீட்டில்!). ஆடை, அணிகள் வேறு யாருக்கும் சைஸ் செட்டாகாது என்பதால், தானமாக அளிக்கப்பட்டு விடும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.

கர்மா பொதியின் அளவைப் பொறுத்து, அன்னார் வேறெங்காவது, மற்றொரு குடும்பத்தில், இதே பிறப்பு-பிழைப்பு-இறப்பு நாடகத்தில் மறுபடி பங்கு பெறலாம். அல்லது குருவருளாலும், திருவருளாலும், ‘இந்த டிராஜி-காமெடி ஆட்டம் போதும், இனிமே திரும்பி வருவதுங்கற பேச்சே கிடையாது‘ என்று ஒன்ஸ் அண்ட் ஃபார் ஆல் சித்ரகுப்தனின் லெட்ஜர் எண்ட்ரி அழிக்கப்பட்டு, கரைந்து காணாமலும் போய்விடலாம். நிற்க.

திருக்கயிலாயத்தில் ஒரு அன்ஸ்கெடியூல்ட் மீட்டிங். நடுநாயகமாக ஆதியோகி – எப்போதும்போல் நிர்விகல்ப சமாதியில். அவர் அருகில் அகிலத்தின் அன்னையான உமாதேவி. அவர்முன்பு ‘அன்னவர்க்கே சரண் நாங்களே‘ என்று நந்திகேஸ்வரர். அவரைச் சுற்றி அகத்தியர், கௌதமர் எனும் புத்தர், மஹாவீரர், வள்ளுவர், ஒளவையார், நக்கீரர், கோரக்கர், பூசலார், போகர், பதஞ்சலி, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் முதலிய அறுபத்துமூன்று நாயன்மார்கள், பட்டினத்தார், அருணகிரிநாதர், காரைக்கால் அம்மையார், அபிராமி பட்டர், கோரக்நாத், பாபாஜி, ஆதி சங்கரர், சாய்நாத் மஹராஜ், சதாசிவ பிரம்மேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, லாஹிரி மஹாஸாய, ஸ்வாமி ராமா, நிசர்கதத்த மஹராஜ், பரமஹம்ஸ யோகானந்தா, சுவாமி சித்பவானந்தர், சுவாமி சிவானந்தா, சுவாமி தபோவனம், தேவி மாயம்மா, காஞ்சி பரமாச்சாரியார், சுவாமி சின்மயானந்தா, கிருபானந்த வாரியார் என்று ஏராளமான மெய்ஞானியர்.

ஏறத்தாழ அதே சமயத்தில் வைகுண்டத்திலும் ஒரு மீட்டிங். நடுநாயகமாக ஆதிசேஷன் மீது, இருந்த, கிடந்த இரண்டு கோலங்களுக்கும் இடைப்பட்ட மாதிரி சாய்ந்தவாக்கில், அனந்தசயனத்தில் ஸ்ரீமன் நாராயணர். அவர் அருகே தாயார் மஹாலக்ஷ்மி தேவி. அவர்முன்பு பெரிய திருவடி கருடாழ்வார் மற்றும் சிறிய திருவடி ஆஞ்சநேயர். அவரைச் சுற்றி வால்மீகி, நாரதர், ராதாராணி, மீரா தேவி, பன்னிரு ஆழ்வார்கள், வில்லிப்புத்தூரார், ராமதாஸ், கபீர்தாஸ், ராமானுஜர், மத்வாச்சாரியார், ராகவேந்திர ஸ்வாமி, சைதன்ய மகாபிரபு, கம்பர், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியார், பிரபுபாத பக்திவேதாந்த சுவாமி, சுவாமி ஹரிதாஸ் கிரி என்று ஏராளமான மெய்ஞானியர்.

இரு தலங்களிலும் கோவிட்-19 மூன்றாவது அலையில் இருந்து அற்ப மானிடர்களைக் காத்தருள்வது பற்றியெல்லாம் யாரும் ஐடியேஷன் பண்ணிக் கொண்டு காலத்தை வீணடிக்கவில்லை. அஃப்கோர்ஸ் காலம் என்பதே அங்கெல்லாம் அர்த்தமற்ற ஒன்றுதானே.

அங்கு குழுமியிருந்த பக்தி மார்க்க ஞானியர் அற்புதமான துதிகளால் பரம்பொருளைப் போற்றிக் கொண்டிருந்தனர்.
கர்ம மார்க்க ஞானியர் எளிய, சாத்வீகமான மதிய உணவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
க்ரியா மார்க்க ஞானியர் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.
ஞான மார்க்க ஞானியர் மட்டும் அருகிலுள்ளோரைத் தொந்திரவு பண்ணாத மென்மையான குரலில் பேருண்மை பற்றிய சில நுணுக்கமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இரு இடங்களுக்கும் இடையில் தேவைப்படும் நாலெட்ஜ் எக்ஸேஞ்சை, நாரதர் 9ஜி டிரக்ட் மைண்ட் டிரான்ஸ்மிஷன் மூலம் கவனித்துக்கொண்டிருந்தார்.

இங்கிருந்து போன ஆசாமி (இந்த உதாரணத்தில் அது அடியேன்தான் என்பதால் வேறு யாரும் கவலைப்பட வேண்டியதில்லை) மெல்ல சிவகணங்களை (அல்லது துவாரபாலகரை) அணுகுகிறார். திருவிழாக் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு அர்ச்சக்கரைப் பார்த்துக் கையசைக்கும் னான்டெஸ்க்ரிப்ட் பக்தன் போல இன்விஸிபிள் ஆக இருந்தாரோ என்னவோ, அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசாமி மெல்லத் தொண்டயைச் செருமிக் கொண்டு,

‘நமஸ்காரம்’ என்றார்.

‘வாட்ஸ் அப் டூட்.. இங்கே உனக்கென்ன வேலை..’

‘பூலோகத்துல இடத்தை வெக்கேட் பண்ணிட்டு வந்திட்டேன் சார். உள்ள விட்டீங்கன்னா, ஒரு ஓரமா செட்டில் ஆகி, எம்பெருமானுக்கு ஏதோ என்னால முடிஞ்ச கைங்கர்யத்தைப் பண்ணலாம்னு…’

‘உன்னை மாதிரி மனிதப் பதர்களெல்லாம் முதல்ல யமதர்மராஜான்கிட்ட போயாகணுமே.. கலியுகத்தில் அங்கிருந்து அனேகமாக எல்லோருமே நேரே நரகத்துக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி விடுவார்களே.. நீ எப்படி இங்கு வந்தாய்? இங்கே வேக்கன்ஸி இருக்குன்னு உனக்கு யார் சொன்னது?’

‘அங்கே இறந்தவங்களை பொதுவா ‘சிவலோக பிராப்தி அடைந்தார்‘ அல்லது ‘வைகுண்ட பிராப்தி அடைந்தார்‘னுதான் சொல்லுவாங்க கணா சார்.. என்னோட குருநாதர் வேற அவர் இனிஷியேட் பண்ணின யாருக்குமே, புதுசா கர்மா லோடு எதுவும் ஏத்தாத வரையில், ஜம்பூத்வீபத்துல ரீ-எண்ட்ரி கிடையாதுன்னு சொல்லியிருக்கார்.. அதான் நேரா இங்கே தலைவர் தாண்டவக்கோன் இருக்குமிடத்துக்கு வந்திட்டேன்னு நெனக்கிறேன்..’

‘ஹ்ம்ம்ம்.. கொயட் இண்ட்டரஸ்ட்டிங்.. கொஞ்சம் வெய்ட் பண்ணுப்பா.. வேக்கன்ஸி இருக்கான்னு ச்செக் பண்ணிதான் சொல்ல முடியும்.’

அந்த சிவகணம் திரும்ப வரும்வரை, கயிலையின் அடிவாரத்தில் டிரான்ஸிட் பயணி போலக் காத்திருக்கையில், சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பூலோகத்தில் எனக்குத் தெரிந்த, நான் கேள்விப்பட்ட, செல்வம், செல்வாக்கு, அதிகாரம், புகழ் போன்றவற்றை ஈட்டி, ஒலகப் புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள், செல்லுலாய்டு / ஊடக செலிபிரிட்டிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், எதைப் பற்றி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ‘கருத்து’ மட்டும் தெரிவிக்கும் அதிமேதாவிகள், எழுத்தாளர்கள், கஷ்டப்பட்டு உழைத்துப் பிறர் சம்பாதித்ததை குயுக்தியாக ஆட்டயப் போட்ட களவாணிகள் போன்ற ஆசாமிகளை, சுற்றுமுற்றும் எங்கு நோக்கினாலும், காணவே இல்லை.

மொத்த பூலோகத்திலும் அந்த மகத்தான தினத்தில் உயிரை விட்ட ஒரே ஆள் நான்தான் என்று சொன்னால், ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடி‘ என்பதால் தான் ஹெல்மெட் அணியத் தேவையே இல்லை என்று உறுதியாக நம்பும் அக்மார்க் தமிழர் கூட நம்ப மாட்டார்களே!

அட நீங்க ஏன்ணே பேஸ்த் அடிச்ச மாதிரி இருக்கீங்க.. நான் ஏற்கனவே இறந்து போனவங்களைத்தாண்ணே சொல்றேன். ஒரு சிலர் எரியூட்டப்பட்டபோது சிவலோக பிராப்தி அடைந்ததாக முழுப்பக்க விளம்பரம் வந்தது. வேறு சிலர் மயானத்தில் வெந்தபோது வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஆபிச்சுவரி வெளியிடப்பட்டது. இன்னும் சிலர் பொதுவாக இறைவனடி சேர்ந்தனர். மற்றும் சிலர் தங்களது இறை மறுப்புக் கொள்கையைப் பறைசாற்றும் வகையில் வெறுமனே காலமானார்கள். வெகு சிலர் எரியாமல் புதைக்கப்பட்டு, அவ்விடத்தின்மேல் கோடிக்கணக்கான ருபாய் செலவில் எழுப்பப்பட்ட சலவைக் கல்லறைக்குள் காணாது போனார்கள். உண்மையில் எங்கே போனார்கள் எல்லாரும்!

சரி, ஒன்று எங்கேயோ போனார்கள். அல்லது எங்குமே போகவில்லை. எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இங்கே இருந்தவரை அந்த ஆசாமிகள் என்னவெல்லாம் செய்தார்களோ, அதையெல்லாம் பற்றி சிலர் புகழ்ந்தும், சிலர் இகழ்ந்தும் பேசிக்கொண்டிருப்பர். ஏதாவது வலைப்பதிவில்.. யூடியூபில்.. கோராவில்.. ட்விட்டரில்.. கூவில்.. தொலைக்காட்சியில்.. பத்திரிகைகளில்.. கொஞ்ச காலத்திற்கு. பின்னர் அவர்களைப் போன்ற வேறு சிலரைப் பற்றி அதே மாதிரி புகழ்ச்சி / இகழ்ச்சி. அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். அப்புறம், அம்மாதிரி பேசுவோரும் போய்ச் சேர்ந்து விடுவர் – எங்காவது, அல்லது எங்குமில்லை. காலப்போக்கில், வெறுமனே பிறந்து-பிழைத்து-இறந்தோர் யாவரும், பிறர் நினைவிலிருந்து மறக்கப்பட்டுக் காணாது போவர்.

இருக்கும்போதே என்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கின்றனர் என்ற கவலை அடியேனுக்கு அறவே இல்லை. அப்படி இருந்திருந்தால் இன்னமும் மந்தையில் ஒருவனாகத்தான் திரிந்து கொண்டிருந்திருப்பேன். எனவே, இறந்த பின்னர் யார் என்ன நினைத்தால் என்ன.. யாருமே நினையாது போனாலென்ன.. எதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும்!

உண்மையைச் சொன்னால், நாமிருக்கும் ரெசிடென்ஷியல் ஏரியா அளவிலாவது நம்மால் ஏதாவது குறிப்பிடத்தக்க, பயனுள்ள மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்பதே கேள்விக்குறிதான். இதில் புவி அளவில் எந்த ஆணியையும் பெரும்பாலானோர் பிடுங்கப் போவதில்லை. அப்படித் திறமையாக ஆணி பிடுங்கிய ஆசாமிகளையே உலகம் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதில்லை – சில காலத்திற்குப் பின்னர்.

எத்தனை விஞ்ஞானிகளை, மாபெரும் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தியவர்களை, உயிர்காக்கும் மருத்துவர்களை, அறிவுக்கு உரமிட்டு வளர்த்த ஆசிரியர்கள் மற்றும் ஆசான்களை, ‘உடுக்கை இழந்தவன் கைபோல‘ அவசர காலத்தில் உதவியவர்களை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்? இதில் ஒரு சாதாரண சென்னைவாழ் மத்யமரைப் பற்றி யார் என்ன நினைக்கப் போகிறார்கள்.. அதுவும் அன்னார் இங்கிருந்து போனபின்பு!

பிழைப்புத் தளத்தில் என்னுடைய கேம் ஏற்கனவே ஓவர் (என்று நம்பப்படுகிறது!). அக்காலத்தில் நம்முடன் பணிபுரிந்த, இன்னமும் தொடர்பில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தவிர, செல்வம், புகழ், பதவி என்று நிறுவனத்திற்கும், உடன் பணிபுரிந்தோருக்கும் ஈட்டிக் கொடுத்ததையெல்லாம் வேறு எவரும் நினைவுகூர்வதாகத் தெரியவில்லை. அப்படியே நினைவு கூர்ந்தாலும், அதனால் நமக்குக் காலணா பிரயோசனமும் இல்லை (கைலாய/வைகுண்ட எண்ட்ரி இதைச் சார்ந்ததில்லை என்பதை கவனத்தில் கொள்க). ஆக, நூற்று/ஆயிரக்கணக்கில் நாமறிந்தோர் + நம்மை அறிந்தோர் உலகில் எங்காவது இருந்தாலும், பணிபுரிந்த / தொழிலில் ஈடுபட்ட காலகட்டத்தைச் சார்ந்த யாரும் நம்மை நினைக்காதிருப்பதால் நஷ்டம் ஏதுமில்லை.

கோரா போன்ற சமூக ஊடகங்களில் இம்மாதிரி எழுதிக் கொண்டிருப்பதெல்லாம், ஆக்ட்டிவ்வாக எழுதும் வரைதான் சிலர் படித்து, ரசித்து, அப்வோட் செய்து, கருத்துக்களைப் பகிர்வர். அப்புறம் அதெல்லாம் ஆர்க்கைவ் ஆகி, வேறு வினாக்கள், விடையளிப்போர், வாசகர்கள் என்று வெகு வேகமாக மாறிவிடும். விகடனில் கதை எழுதிய, பிளாக்கிய (வலைப்பதிவு எழுதிய) காலத்திலேயே இம்மாதிரி கண்டுகொள்ளாது விடப்படும் அனுபவம் கைவரப் பெற்று, தற்போது ரைனாசரஸ் தோலுடன்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் யாரும் நம்மை நினைத்துப் பார்க்காமல் இருந்தாலும் கவலையே இல்லை.

யாருக்கும் அறிந்தோ, வலிந்தோ துன்பம் ஏதும் விளைவித்ததில்லை என்பதால் என்னுடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர், விரல்விட்டு எண்ணக்கூடிய நண்பர்கள் சிலர் ஒருவேளை என்னைப் பற்றி நினைக்கலாம். பொதுவாக மனிதர்களிடம் எதற்கெடுத்தாலும் கடந்த காலத்தையே ரெஃபர் பண்ணும் பழக்கம் இருப்பதால், இதிலும் சிலர் என்னுடைய ‘ஆங்க்ரி யங் மேன்‘ கால இமேஜிலேயே ஸ்டக் ஆகி, ‘எதுக்கு வம்பு அந்த ஆளைப் பத்தி மறுபடி நினைச்சு.. அதன் ஒரு வழியா போய்ச் சேர்ந்திட்டாருல்ல.. அப்புறம் என்ன‘ என்று நழுவி விடலாம் என்பதால், அதற்கும் கேரண்ட்டி எல்லாம் கிடையாது.

இப்படியே ஒவ்வொன்றாக ‘நேதி.. நேதி..’ என்று க/அழித்துக் கொண்டே வந்தோமானால், கடைசியில் மிஞ்சுவது க்ளீன் ஸ்லேட்டாகத்தான் இருக்கும். ‘நான் போன பின்னர் யார் என்னை நினைப்பார்கள்?‘ என்று மோட்டுவளையைப் பார்த்து, தாடி/டையை நீவியபடி யோசிக்கிற ஆசாமி ‘நான் இன்னார்’ என்ற அடையாளத்தில் சிக்கியவர். அது கன்னாபின்னாவென்று ஏதேதோ, யார் யாரோ கிறுக்கிய ஸ்லேட்டைப் போன்ற குழப்பமான நிலை. ‘நான் யார்’ என்று தேடி, குருவருளால் அனுபவபூர்வமாக அதற்கான விடை கிட்டியதும், கிறுக்கலெல்லாம் துடைக்கப்பட்டு தானாகவே இவ்வுயிரானது ஸ்லேட் க்ளீன் ஆகிவிடும்.

அதற்கப்புறம் பெரிஷபிள் வஸ்துவான என்புதோல் போர்த்த உடம்பை உதிர்த்தவுடன், ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஒளவைப் பாட்டி புகழ்ந்து பாடிய இப்பிறவியை, ‘பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பர் / கதைப்பர் ‘ என்றெண்ணி வீணடித்துவிட்டு, மறுபடி மறுபடி போய்வந்து கொண்டிருக்கும் நாடகம் முடிந்து திரை போடப்பட்டு விடும். கேம் ஓவர்.

உடனே ஒரு கணம் கூட தாமதிக்காமல், நேரே திருக்கயிலாயம் / வைகுண்டத்தில், லீக் ஆஃப் எக்ஸ்டராஆர்டினரி பீயிங்ஸ் (இவ்விடையின் முற்பகுதியில் ஒரு மெய்ஞானியர் லிஸ்ட் இருக்கும்.. அதைப் போய் ஒரு குவிக் ரிவியூ பண்ணிவிட்டு வாருங்கள்) அருகில் நமக்கும் பத்மாசனத்திலோ, சுகாஸனத்திலோ அமர ஒரு சிறிய இடம் கிடைத்து விட்டால் போதும். அங்கேயே செட்டிலாகி, ‘சும்மா இரு’க்கலாம். அம்பலத்தரசனின் ஊழித் தாண்டவ தரிசனம் கிட்டி, எங்கும், எதுவும் இல்லாது போகும்வரை!

வெய்ட் எ மினிட்.. அந்த சிவகணம் திரும்பி வந்து
ஏ மானிடா, இன்று காலையில் உன்னுடைய ராசி பலனைப் பார்த்தாயோ.. ‘லாபம்’ என்று போட்டிருந்ததோ என்னவோ.. இப்போதுதான் யாரோ ஒரு வி.ஐ.ப்பீ கயவன் கர்மா லெட்ஜர் எண்ட்ரியை மாத்த சித்ரகுப்தனுக்கு லஞ்சம் குடுக்க முயற்சி பண்ணியதால், அவரை நரகத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விட்டார்களாம். ஆச்சரியமாக உனக்கே உனக்காக ஒரு வேக்கன்ஸி இருக்கிறதாம் இன்று சிவலோகத்தில். வருக.. வருக..‘ அப்படீன்னு இன்னும் சொல்லவே இல்லையே. ஓ எம் ஜி!

எபிலாக்: யாரும் நம்மைப் பற்றி எதுவும் நினைக்கவும் வேண்டாம்; நினைக்காமல் இருக்கவும் வேண்டாம். இருந்த இடம், காலம் தெரியாமல், கொண்ட அடையாளம் காணாது, வந்த சுவடே இன்றிப் போய்விடுவதே, வீடுபேறு வேண்டித் தவமிருப்போர் வேண்டும் ஒரே வரம்.
மத்த மனுசப்பயலுவ நம்மளைப் பத்தி என்ன நெனப்பாய்ங்களோ!‘ என்று எண்ணித் தவிப்பதெல்லாம் கால மற்றும் சக்தி விரயம் – என்னைப் பொறுத்த அளவில். இதுபற்றிப் பிறரது நெனப்பு வேறு மாதிரி இருக்கலாம். அதற்கான முழு சுதந்திரம் அவரவர்க்கு உள்ளது. இதுதான் மனிதப் பிறவியின் தனித்துவம்!

பி.கு: “நான் போன பிறகு, ஆசிரமத்தில் ‘கால பைரவ கர்மா’வுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணிவிடுங்கள். வேறு எந்த அபர கர்மா / காரியம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக பித்ரு / சிவலோகத்திலிருந்து சாபமெல்லாம் கொடுக்க மாட்டேன். கவலை வேண்டாம்.” என்று ஏற்கனவே என் குடும்பத்தினருக்கு உறுதி அளித்துவிட்டேன்.
இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் எல்லாம் ஒழுங்காகக் கட்டி வருகிறேன். நான் போன பின்னர் என் குடும்பத்தினருக்குச் சேர வேண்டிய நிதி அனைத்தும் ஒழுங்காக அவர்களிடம் சேரும்படி ஏற்பாடு செய்ய நேர்மையான நிதி ஆலோசகர் மற்றும் வங்கி அதிகாரி நண்பர் வேறு கைவசம் இருக்கிறார்கள். விரைவிலேயே ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’ மாதிரி ஒரு ‘டிஜிட்டல் வில்’லும் பதிவு செய்து விடுவதாக உத்தேசம்.

ஸோ, டெக்னிக்கலி ஸ்பீக்கிங், பீஷ்மர் மாதிரியோ, யோகிகள் / சித்தர்கள் போலவோ, போகும் நாள், நக்ஷத்திரம், நேரம் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் திறனோ, தகுதியோ அற்ற இந்த சாதாரண மத்யமர், எப்போது வேண்டுமானாலும்,
இட் வாஸ் எ ப்ளெஸ்டு லைஃப்.. பிரணாம்..‘ என்று ஒரு திருப்தியான புன்னகையுடன் விடைபெறலாம்.
போனால் மனுஷன் அந்த மாதிரிதான் போகனும்யா.. என்ன ஒரு அற்புதமான சடன் & ஸ்விஃப்ட் டிப்பார்ச்சர் தெரியுமா,‘ என்று பலர் அதிசயிக்கும் வகையில், சமீபத்தில் சிவலோக பிராப்தி அடைந்த புண்ணியவாதியான எனது தாயார் வேறு ரோல் மாடலாகி விட்டார்!

பி.பி.கு: ‘பை ஃபாரெவர்‘ என்று சொல்லாமல் போய்விட்ட பின்னர் (கண்டிப்பாக ‘கோஸ்ட் ரைட்டிங்’ எல்லாம் பண்ணும் திட்டம் எதுவுமில்லை), கோராவில் அளித்த இதுபோன்ற விடையை ரசித்துவிட்டு கமெண்ட் போட்ட/டும் வாசகர்களை நான் மிஸ் பண்ணுகிறேனோ இல்லையோ, அவர்களில் ஒருசிலர் என்னுடைய எழுத்தை மிஸ் பண்ணலாமோ என்னவோ.. யார் கண்டது!

க.பி.கு: ‘இருக்கும்போதே இங்க எவனும் எவனையும் பத்தி நெனைக்கிறதில்ல.. இதுல போனப்புறம் நெனப்பாய்ங்களாமில்ல.. வெங்காயம்!‘ என்று இந்த விடையை எழுதும்போது என்னையறியாமல் சொன்னேனோ என்னவோ (நமக்கு இயல்பாகவே சற்று உரத்த குரல் வேறு)..
மஹாளய பக்ஷமும் அதுவும் வெங்காயமா.. வாயில வசம்பை வெச்சுத் தேய்க்க..‘ என்று கிச்சன் பக்கமிருந்து ஒரு அசரீரி!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Website Powered by WordPress.com.

Up ↑