இன்றைய தரிசனம் ~ ஆண்டவனை ஆண்டாள் – மதுர பாவத்தின் மகத்துவம்!

இன்றைய தரிசனம் ~ ஆண்டவனை ஆண்டாள் – மதுர பாவத்தின் மகத்துவம்!

முதலில் இரண்டு ‘வினா-விடைகள்.’ ஸ்வாமி என்ற இந்த ஆசாமி எழுதியவை அல்ல. உண்மையான சுவாமி ஒருவர் எழுதியவை.

கே: பக்தி மார்க்கத்தில் ஸ்ரீமதி ராதை அடைந்திருந்த பரவச நிலையைப் பக்திமதி மீராபாய் அடையவில்லை என்று சொல்லுவதற்குக் காரணம் யாது?
ப:
பக்தி மார்க்கத்தில் மஹாபாவம் என்னும் பாரமார்த்திகப் பெருநிலையொன்று உண்டு. சரித்திர பூர்வமாக அதை முதன்முதலில் அடையப்பெற்றவள் பாலகிருஷ்ணன் மீது பக்தி பூண்டிருந்த ஸ்ரீமதி ராதையாவாள். பராபக்தியின் கிளைகள் ஐந்து உள. அவை முறையே சாந்த பாவம், தாஸ்ய பாவம், சகா பாவம், வாத்சல்ய பாவம், மதுர பாவம் எனப்பகரப்படுகின்றன. பரம்பொருள் போற்றுதற்குரிய பெரிய பொருள் எனக்கருத்துவது சாந்த பாவம். ஏனைய நான்கு பாவங்களும் மக்களுக்கிடையில் உள்ள இணக்கங்களுக்கு நிகரானவைகள். இறைவன் ஆண்டவன். அவனுக்குப் பணிவிடை பண்ணும் பாங்கில் ஒரு தொண்டனாகப் பக்தனிருக்கிறான் என்பது தாஸ்ய பாவம் அல்லது ஆண்டான் – அடிமை இணக்கம். கடவுளை மேலான நண்பனாகக் கருதுவது சகா பாவம் அல்லது தோழமை இணக்கம். தெய்வத்தோடு தாய் தந்தை இணக்கம் பண்ணுவது வாத்சல்ய பாவம். தெய்வத்தைத் தன் தந்தையாகவோ, தாயாகவோ கருதிக்கொள்ளலாம். இதில் மற்றொரு பகுதி; பால கணபதி, பால முருகன், பாலாம்பிகை, பாலராமன், பாலகிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளைப் பக்தன் தன்னுடைய செல்வர்களாகக் கருதி வழிபடுகின்றான். தெய்வத்தைத் தன் கணவனாகவும், தன்னைத் தெய்வத்தின் மனைவியாகவும் கருதி பக்தி பண்ணுவது மதுரபாவம்.
ஸ்ரீமதி ராதை கையாண்டது வாத்ஸல்ய பாவம். பாலகிருஷ்ணனைத் தான் பேணும் செல்வனாக அவள் வைத்துக்கொண்டாள். அத்தகைய தெய்வீக இணக்கத்தில் அவள் உச்சநிலை அடைந்தாள். அவள் மேனி முழுவதுமே தெய்வப் பெற்றி வாய்ந்ததாக மாறியமைந்தது. ஐம்பொறிகளும் ராதையினிடம் பரஞான நிலையை எட்டியிருந்தது. ஆதலால் ஏதேனும் ஓர் இந்திரியம் தன் செயலையும் செய்யும்; ஏனைய நான்கு இந்திரியங்களின் செயலையும் செய்யும். அதற்குச் சான்று ஒன்று எடுத்துக் கொள்வோம். கண் வடிவங்களைப் பார்க்கிறது. அதே கண்ணுக்கு வடிவத்திலுள்ள ஓசையை நுகருகிற வல்லமையும், மனத்தை மோப்பவல்ல வல்லமையும், சுவையை ரசிக்கவல்ல திறனும் வந்தமைகின்றன. இது ஒரு அலாதியான பேறு. சரித்திர பூர்வமாக இந்தப் பேற்றினை அடையப் பெற்றவர்கள் மிகச் சிலரேயாம். ஸ்ரீமதி ராதை அடைந்திருந்த மகாபாவம் என்னும் இப்பெரிய பேற்றினை மாணிக்கவாசகர், ஆண்டாள், ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் ஆகிய பெருமக்கள் அடையப் பெற்றிருந்தனர். இக்காலத்தில் அவதரித்து வந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் இந்த மகாபாவம் வாய்த்திருந்தது என அவருடைய சிஷ்யர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மீராபாய் எட்டவில்லை என்பதில் குறையொன்றுமில்லை. இந்த நிலையை அடையப்பெறாமலே அனைவரும் முக்திக்கு அருகதை உடையவர்கள் ஆகலாம். அலாதியான இந்தப் பாரமார்த்திகப் பெருநிலை அரிதினும் அரிதாக யாரோ சிலருக்குத்தான் வாய்க்கிறது. நமக்கு இத்தகைய பெரியபேறு வைக்கவில்லையே என்று நாம் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. ஈசனுடைய லவலேசான அருளைக்கொண்டு நாம் அனைவரும் உய்வு அடையலாம்.

கே: “ஏழு பிறவிகளிலும் உனக்குப் பணிவிடை செய்வேன்” என்றாள் ஆண்டாள். ன் முக்திவேண்டுமென்று அவள் சொல்லவில்லை?

ப: “எற்றைக்கும் ஏழேழு பிறவியிலும் உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமன்கள் மாற்றேலோர் எம்பாவாய்” என்பது ஆண்டாளின் கூற்று. ஆண்டாள் படைத்திருந்த பக்தியின் உச்சநிலை இக்கூற்றின் வாயிலாக வெளியாகிறது. பக்தியில் சிறப்பு ஒன்று உளது.
பக்தன் ஒருவன் அல்லது பக்திமதி ஒருத்தி தெய்வத்திடமிருந்து எதையும் கேட்பதில்லை. தங்களிடத்திலுள்ள அனைத்தையும் தெய்வ வழிபாட்டுக்கென்றே அவர்கள் பயன்படுத்துகின்றனர். முக்தி வேண்டுமென்று கேட்டால் அது தன்னைப்பற்றிய உணர்ச்சியாகிறது. அதற்கு மாறாகப் பக்தி பண்ணிக்கொண்டே இருந்தால் அது பகவத் சிந்தனையை வளர்க்கிறது. தன்னைப் பற்றிய சிந்தனையை அது ஒழிக்கிறது. பக்தியின் வாயிலாகப் பக்தன் பகவானைக் கடன்பட்டவன் ஆக்குகின்றான். பகவானுக்கு அனைத்தையும் படைக்கிற பெருநிலைக்குப் பக்தன் போய்விடுகிறான். தன்னிடமிருந்து ஒன்றையும் கேளாத பக்தனுக்குத் தான் எதை எடுத்து வழங்குவது என்று தெரியாது பகவானே திகைத்துப் போகின்றான். பக்தனுடைய மனப்பான்மையோ நான் யாண்டும் பகவானுக்குப் பணிவிடைகள் பண்ணிக்கொண்டே இருக்கின்றேன், அவனிடமிருந்து நான் எதையும் கேளேன் என்பதாம். இந்த மனப்பான்மையின் விளைவாகவே பக்தன் பகவானுக்கும் மேலோன் ஆகிறான். ஆண்டாள் படைத்திருந்ததும் அந்த மனநிலையே. முக்தியைப் பற்றி நினைக்க அவளுக்கு நேரமில்லை. முக்தி கேட்பதிலும் மேலானது பக்தியை வழங்குவது.

மேற்கண்ட இரு விடைகளையும் அளித்தவர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவராக இருந்தவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வழிவந்த குருமார்களின் மிகவும் மதித்துப் போற்றப்படும் ஞானி. ‘ஐயம் தெளிதல்‘ என்ற புத்தகத் தொகுப்பில் இம்மாதிரியான எண்ணற்ற வினாக்களுக்கு எளிமையாக, எவரும் புரிந்து கொள்ளும் வகையில், பிரவசனம் செய்வோர் இயல்பாகப் பயன்படுத்தும் ஹைப் (hype) எதுவும் இல்லாமல், இனிய தமிழில் விடையளித்துப் பல அற்புதமான சனாதன தர்மம் தொடர்பான விஷயங்களை விளக்குகிறார்.

மேற்கண்ட இரு விடைகளும் உள்ளது ‘ஐயம் தெளிதல்’ மூன்றாவது தொகுப்பில். அவற்றுக்கு அடுத்த விடை ‘சபரியின் பக்தி’ பற்றியது. அது இதைவிடவும் மேலாகத் தோன்றும். அதனால் இத்துடன் ‘நிற்க’ போட்டுவிட்டு, சுவாமி சித்பவானந்தருக்கு வந்தனத்துடன் (அவருடைய ‘திருக்கைலாய யாத்திரை’ ஒரு mindboggling travelogue – என் குருவருளால் தற்காலத்தில் பல வசதிகளுடன் எந்தை ஈசனின் இருப்பிடத்திற்குச் சென்று வந்ததால், அவருடைய காலத்தில் அப்புனித யாத்திரை எவ்வளவு கடினமாக இருந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து, வணங்க முடிந்தது. அவருடைய காலத்திலேயே அப்படியென்றால், அப்பரும், காரைக்கால் அம்மையாரும், ஆதிசங்கரரும் சென்றபோது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் அந்த யாத்திரை என்ற எண்ணம் வாயடைத்துப் போகச் செய்கிறது..!) ‘இன்றைய தரிசனம்‘ காணச் செல்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய புத்திரன் ராஜபாளையத்தில் ஒரு போட்டியில் விளையாடும்போது (அவர் சதுரங்கத்தில் உலக அளவில் விளையாடும் நிபுணர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் நிலைக்கு வெகு அருகில் இருப்பவர்), தினசரி காலை அவர் போட்டி நிகழும் இடத்திற்குச் சென்றபின் நான் அருகாமையிலுள்ள திருக்கோயில்கள், ஜீவ சமாதிகள் போன்ற புனிதத் தலங்களைத் தேடிச் செல்வது வழக்கம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ராஜபாளையத்திற்கு அருகாமையில் அமைந்த பிரபலமான திருத்தலம். வைணவர்களுக்கு முக்கியமான 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் இருவர் – தந்தை-மகள் duo – வாழ்ந்து, திருமலைப் போற்றி பாடி, முமுக்ஷுத்வம் பெற்ற அற்புதமான நகர்.

தற்காலத்தில் மக்களுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றல் பால்கோவாவும், பாண்டேவும்தான் உடனடியாக நினைவுக்கு வரும். எனினும், எக்காலத்திலும் அவ்வூரின் புகழ் மணம் உலகெங்கும் பரவச் செய்தோர் பெரியாழ்வார் மற்றும் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள் ஆகியோரே. மஹாபாரத இதிஹாசத்தைத் தமிழில் ‘வில்லிபாரதம்’ என்று எழுதி வழங்கிய வில்லிபுத்தூராரும் இவ்வூர்க்காரரே. ராஜபாளையத்தில் அருள்பாலிப்பவர் ‘தையல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி‘ எனும் சிவபெருமான். ராஜபாளையத்திற்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் உள்ள மடவார் வளாகத்தில் அருள்பாலிப்பவர் ‘சிவகாமி உடனுறை வைத்தியநாத சுவாமி‘ எனும் சிவபெருமான். இத்திருத்தல வரலாறு திருச்சி தாயுமானவ சுவாமியுடையதைப் போன்றே உள்ளது வியப்பளிக்கின்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்பாலிப்பவர் ‘கோதை நாச்சியார் உடனுறை வடபத்ரசாயீ‘ எனும் பெருமாள். அருகிலேயே சிறிய மலைமீது கோயில்கொண்டு அருள்புரியும் ‘திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள்‘ (பெருமாளுக்கும் ஒரு ‘திருவண்ணாமலை’ இருப்பதை இங்கு சென்று தொழுதபோதுதான் அறிந்தேன் – இதை எடுத்துக்கூறி அழைத்துச் சென்றவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர்). இங்கிருந்து சற்றுத் தொலைவில் ‘ஒப்பனை நாயகி உடனுறை பால்வண்ணநாதர்‘ எனும் மிகத் தொன்மையான சிவபெருமான் திருத்தலம். அதைக் கடந்து சென்றால், ‘அரியும் அரனும் ஒண்ணு, அறியாதார் வாயிலே மண்ணு‘ என்ற உண்மைக்கு நிரூபணமாக விளங்கும் ‘கோமதி அம்மன் உடனுறை சங்கர நாராயணர்‘ திருக்கோயில், சங்கரன்கோவில் எனும் புகழ்பெற்ற திருத்தலத்தில். இவ்வாறு, இப்பகுதி முழுவதும் அற்புதமான, தொன்மையான திருத்தலங்கள் அமைந்துள்ளன.

சதுரங்கப் போட்டி நிகழ்ந்த நாட்களில் ஒருநாள் காலை ராஜபாளையத்திலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றேன். நெடுஞ்சாலையிலேயே, எண்ணற்ற பால்கோவா கூட்டுறவு கடைகளின் மத்தியில் கோபுர வாசல் அமைந்துள்ளது (கோயில் வாசலிலேயே பேருந்து நிற்கிறது). எம்பெருமான் வடபத்ரசாயீ. பத்ரம் என்றால் இலை. ஆலிலை மீது பள்ளிகொண்ட பெருமாள். மிகப்பெரிய திருவுருவை உடைய பெரிய பெருமாள். ஸ்வயம்பு மூர்த்தி. அவரது திருவுருவை முழுமையாகத் தரிசிக்க மூன்று வாயில்கள். குறிப்பிட்ட திருவிழாக் காலம் தவிர்த்து ஏனைய காலங்களில் மத்தியில் உள்ள வாயில் மட்டுமே திறந்திருக்கும் எனப்படுகின்றது.

வடபத்ரசாயீ பெருமாளின் மற்றொரு திருநாமம் என்னுள் எப்போதுமே ஒரு விந்தையான உணர்வை ஏற்படுத்தும் ‘ரங்கமன்னார்.’ பொதுவாகவே பெருமாள் அலங்காரப்பிரியர் (நம்மவர் எந்தை ஈசன் அபிஷேகப்பிரியர்) என்றாலும், அவருடைய சில திருநாமங்களே ‘வாவ்’ என்று அதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. ‘ரங்கமன்னார்‘ என்ற திருநாமத்தைக் கேட்டதுமே அற்புதமான கட்டுமானம் கொண்ட அரசவையில், பட்டுப் பீதாம்பரங்கள், ரத்தினம் பதித்த மாலை, நவமணிகளும் ஒளிவீசும் கிரீடம், நறுமணம் கமழும் மலர்களும் துளசியும் சேர்த்துத் தொடுத்த மாலை ஆகியவற்றை அணிந்து, அரியணையில் திண்டின்மீது சாய்ந்து அமர்ந்து நம்முள்ளே ஆழ்ந்து நோக்கும் ஒரு அற்புதத் திருவுருவே எனக்குத் தோன்றுகிறது. அத்தகைய பேரழகுத் தோற்றத்தில் என் போன்ற சாதாரண பக்தனைக்கூட மயக்கும் ரங்கமன்னார், கோதைப் பிராட்டியின் உள்ளங்கவர் கள்வனாகியதில் ஆச்சரியம் ஏதுமில்லை என்றுதான் கூறவேண்டும்.

பெரியாழ்வார் என்று போற்றப்படும் விஷ்ணுசித்தரே பெரிய ஆழ்வார்தான். மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலுக்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறது. மதுரை அரசன் அவரை யானை மீதேற்றி ஊர்வலம் வரவைத்துப் போற்றியிருக்கின்றான். திருமாலைக் குழந்தையாக, பாலகிருஷ்ணனாக பாவித்து அவர் பாடிய பிரபந்தப் பாடல்கள், அக்மார்க் அன்னையரையே ‘ஆஹா, ஒரு தாயான எனக்கே கூட இப்படியெல்லாம் குழந்தையைப் பார்க்கவும், ரசிக்கவும், போற்றவும் தோன்றவில்லையே‘ என்று ஆச்சரியப்பட வைக்கும் தன்மை உடையவை. பெருமாளுக்கே பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியவர். ‘தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்,’ என்ற முதுமொழியை மெய்யாக்கிய அவரது தவப்புதல்வியால், அந்தப் பெருமாளுக்கே மாமனாராகும் பேறும் பெற்ற மிகப்பெரியவர்.

பெருமாளுக்குத் தினசரி மாலை தொடுக்கத் தேவைப்படும் மலர்களுக்காக அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைத்த நந்தவனத்திலேயே கோதையைக் கண்டெடுத்தார். பூமியில் கண்டெடுக்கப்பட்ட ஆண்டாளின் தோற்ற நிகழ்வு கிட்டத்தட்ட சீதாப்பிராட்டியைப் போன்றதே. அவர் பூதேவித் தாயாரின் அம்சமாகவே போற்றப்படுகிறார். அவ்வாறு பெரியாழ்வார் நந்தவனத்தில் கோதையைக் கண்டெடுத்த திருநாளே ஆடிப் பூரம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் மிகப்பிரபலமான திருவிழாக்களில் ஒன்று. தந்தை பெருமாளைக் குழந்தையாகப் பாவித்துப் பாடித் தொழுதது ‘வாத்ஸல்ய பாவம்.’ அவரது தவப்புதல்வி பெருமாளைக் கணவனாக வரித்துப் பாடித் தொழுதது ‘மதுர பாவம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் தோன்றி, ரங்கமன்னாரைக் காதலித்து, ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதனின் கரம்பற்றிக் அவருடன் இரண்டறக் கலந்து கரைந்த அப்பெருமாட்டி மஹாபாவத்தையும் (பாவங்களில் எல்லாம் உயர்ந்த பாவம்*) பெற்றவர் என்று சுவாமி சித்பவானந்தர் குறிப்பிடுவதைத்தான் இப்பதிவின் துவக்கத்திலேயே கண்டோம்.

இன்று ஆடிப் பூரம். கோதை நாச்சியார் எனும் ஆண்டாளின் திருஅவதாரத் திருநாள். பலநாட்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்சவமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு ஆண்டாளின் பிறப்பு/தோற்றம் ஆகும். ‘கோதை நாச்சியார் உடனுறை ரங்கமன்னார்’ திருக்கோயிலில், ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் (சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது – இன்றளவும்) உள்ள சிறிய திருக்கோயிலில் சிறிது நேரம் தியானம் செய்யும் பேறு பெற்ற அத்தினத்தில், அந்த பக்த சிரோன்மணி அவதரித்த நந்தவனத்தில் அமர்ந்தெழுந்த பின்னர் எழுதிய ‘கோதையின் பெருமை‘ எனும் ‘தினம் ஒரு பதிகம் ~ புகழ் மணிமாலை‘ பதிகத்தை இன்று தாயாரின் பாத கமலத்தில் சமர்ப்பித்து, உங்களுடன் பகிர்வதில் அகமகிழ்கிறேன். ஓம் நமோ நாராயணாய. ஓம் நமோ பகவதே வாசுதேவாய.

பி.கு.1: இப்பதிவில் ‘பாவம்’ என்று ஆண்டாள் போன்ற புண்ணியர்களைப் பற்றிக் குறிப்பிடப்படுவது bhaavam ஆகும். அதாவது ‘ஒன்றைப் போன்று (மற்றொன்றை) பாவிப்பது’ என்று கொள்ளவேண்டும். எனவே, இறைவனைத் தன்னுடைய குழந்தையாகப் பாவிப்பது ‘வாத்ஸல்ய பாவம்.’ அதே இறைவனைத் தன்னுடைய (வாழ்க்கை) துணைவனாகப் பாவிப்பது ‘மதுர பாவம்.’ இதைப் ‘பாவம்’ (paavam – sin) என்ற பொருளில் புரிந்து கொண்டோர் நிலை மிகவும் பாவம்!
பி.கு.2: அடியேனுடைய ஜன்ம நக்ஷத்திரமும் ஆண்டாளுடையதே – பூரம் எனும் பூர்வ ஃபல்குனி (பிறந்தது சித்திரை மாதத்தில்). அதைத் தவிர அடியேன் மதுர பாவத்தின் பெருமையைத் தான் வாழ்ந்த முறையில் உலகிற்கு உணர்த்தி, இறைவனுடன் இரண்டறக் கலந்த அந்தப் பெருமாட்டியின் கால்தூசு கூடப் பெறமாட்டேன். அடியேன் தாஸன்.
பி.கு.3: ஆண்டாளுக்குரிய ஆடிப்பூரம் திருவிழாவைப் போலப் புகழ்பெற்றது சங்கரன்கோவில் கோமதி அம்மனின் ‘ஆடித் தபசு‘ உற்சவமும். ஆடிப்பூரம் பொதுவாகவே தேவிக்குரிய திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது. நெல்லை காந்திமதி அம்பாளுக்கு இன்று வளைகாப்பு உற்சவம் மிகப் பிரபலம். இன்று நெல்லையப்பர் சமேதமாக காந்திமதி அம்மனைத் தொழ வரும் பக்திமதிகளுக்கு வளையலே பிரசாதமாக அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.கு.4: மேலே குறிப்பிட்டுள்ள, ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகாமையிலுள்ள பிரபலத் திருத்தலங்கள் அனைத்திலும் இருந்து அருள்பலிக்கும் இறைவன்/வி பற்றிய ‘தினம் ஒரு பதிகம்‘ பதிகங்கள் எழுதும் பாக்கியம் அடியேனுக்கு அருளப்பட்டது. முறைப்படி புலமையோ, இசைத் திறமையோ இல்லாத இந்த சாமானியனுக்கு அவ்வாறு நிகழ்ந்தது இறைவனின் அளப்பரிய பெருங்கருணைக்குச் சான்று.

~ஸ்வாமி | @PrakashSwamy


ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள திருக்கோயில்கள் பற்றிய தகவல்கள் இவ்வலைத்தளத்தில் அருமையாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.http://www.tamiltempledetails.com/srivilliputhur-sri-vatapathrasayee-perumal-temple-thiruvilliputhur/

இன்று.. ஒன்று… நன்று… சாத்தமுது ~ ஒரு ரசமான விளக்கம்!

இன்று.. ஒன்று… நன்று… சாத்தமுது ~ ஒரு ரசமான விளக்கம்!

வைணவர்கள் உணவு படைக்கையில் அவர்களுக்கே உரித்தான சில வழக்குச் சொற்களைப் பயன்படுத்துவர். கறமுது… சாத்தமுது… திருக்கண்ணமுது… போன்றவை உணவு வகைகளைப் பற்றிய அழகான சொற்கள். சைவர்கள் இச்சொற்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. எனவே, இவற்றின் பெயர்க்காரணம் என்னவாக இருக்கும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்? இதற்கான விடை (வழக்கம்போல!), தற்போது வாசித்துக்கொண்டிருக்கும், உணவிற்கு சம்பந்தமே இல்லாத (உண்மையில் படைப்பிலுள்ள அனைத்துக்குமே சம்பந்தம் உண்டு – நேரடியாகவோ, மறைமுகமாகவோ!) ஒரு நூலில் கிட்டியது. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அம்ருதம் என்ற வடசொல் அமுதம் என்று வந்தது. அச்சொல், மரணத்தைப் போக்குவது, மரணம் இல்லாதது என்ற பொருள்களைத் தரும். பொதுவாக அமுதம் என்றால் தேவர்கள் உண்ட தேவாமுதத்தையே நாம் நினைக்கிறோம். அம்ருதம் என்ற சொல்லின் பொருளாகிய மரணத்தைப் போக்குவது என்பது தேவாம்ருதத்துக்குப் பொருந்துமா என்பதை ஆராய வேண்டும். தேவர்கள் சாவாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அமுதத்தைக் கடைந்தனர்; உண்டனர். அதற்கு முன்பெல்லாம் மனிதர்களைப்போல் இன்ன காலம் என்று இல்லாமல் அமரர்கள் இறந்து கொண்டிருந்தார்கள். அமுதம் உண்ட பிறகு தமக்குரிய ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள். அந்த ஆயுட்காலம் முடிந்தால் அவர்களும் இறந்தார்கள். 

“நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்” என்பது தேவாரம். இந்திர பதவியில் ஒரே இந்திரன்தான் இருக்கிறான் என்பது இல்லை. எத்தனையோ இந்திரர்கள் வந்து வந்து போனார்கள். பிரமர்களும் பலர் வந்து போனார்கள். அவர்களுக்கும் மரணம் உண்டு. சிவபெருமான் ஒருவனே மரணம் இல்லாமல் காலகாலனாக இருக்கிறான். அமுதம் கடைந்த போது ஆலகால நஞ்சு வந்தது. அதை உலவவிட்டிருந்தால் அமுதை உண்பதற்கு முன்பே தேவர்கள் அழிந்திருப்பார்கள். தேவர்களின் ஓலத்தைக் கேட்டு இரங்கிய சிவபெருமான் அந்த நஞ்சை உண்டு அவர்களைக் காப்பாற்றினான். 

நஞ்சையுண்ட திருவிளையாடலைச் சிவபெருமான் செய்தாலும் அம்மையே அதனை உண்டாள் என்றும் சொல்வது உண்டு. சிவபெருமானுக்கும் சக்திக்கும் வேறுபாடு இல்லாமையால் அவ்வாறு சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் பாலைநிலத்தில் உள்ள வேடுவர்கள் கொற்றவையை வழிபடுகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அவர்கள் தேவியைப் பாடுகிறார்கள். வேட்டுவ வரி என்ற பகுதியில் அப்பாடல்கள் உள்ளன. அங்கே அம்மை நஞ்சுண்ட செய்தியை அழகாக அமைக்கிறார் இளங்கோவடிகள். தேவர்கள் சாவாமையைத் தரும் என்று எண்ணி அமுதம் உண்டார்கள். அப்படி உண்டும் அவர்கள் இறந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் அஞ்சி நடுங்கிய நஞ்சைத் தான் உண்டு அழிவின்றி விளங்குவதோடு, இறந்தும் பிறந்தும் வரும் அமரர்களுக்குத் திருவருள் பாலிக்கிறாளாம் அம்பிகை. விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்என்பது அங்குள்ள பாடற் பகுதி. “நஞ்சுண்டு கறுத்த கண்டி” என்று பின்னும் பாடுவார். 

நஞ்சையே தன் கண்டத்தில் அமைத்துச் சாவாமல் இருக்கும் அம்பிகைதான் சாவாப் பரம்பொருள்; மூவாத கன்னிகை. அவள்தான் உண்மையான அமுதம். அவளை உட்கொண்டவர்கள் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறுவார்கள். ஆதலின் அபிராமிபட்டர், 

நிறைந்த அமுதமுமாய் 

என்றார். மற்றவையாவும் குறைவுடைய அமுதம்; சுவை மிகுதிபற்றி அமுதம் என்ற பெயரைப் பெற்றவை. நாம் உண்ணும் உணவில் கறியமுது, சாற்றமுது, இலையமுது ஆகியவை உண்டு. உணவையே அமுதம் என்கிறோம். சிறிது நேரத்திற்கு அவை உயிரைக் காப்பதனாலும், சுவை மிகுதியினாலும் அமுது என்று பெயர் பெற்றன. அப்படிச் சொல்வது உபசார வழக்கு. அந்த முறையில் வைத்துத்தான்தேவாமிர்தமும் அமிர்தம் என்ற பெயர் பெற்றது. சாற்றமுதும், சோற்றமுதும் மனிதர்களை உயிர்வாழச் செய்வது போலத் தேவாமிர்தமும் தேவர்களை உயிர்வாழச் செய்கிறது. சாறும் சோறும் மரணத்தை மாற்ற முடியாதது போலத் தேவாமிர்தமும் மரணம் இல்லாத வாழ்வைத் தர முடியாது. 
தேவராயினும் மனிதராயினும் அம்பிகையாகிய அமுதத்தை உட்கொண்டால் மாயாத நிலையை அடைவர்.

“மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி, குனிதரும் சேவடிக் கோமளமே”

என்று முன்பு சொன்ன பாட்டில், இறைவியைப் பணிபவர்களில் மாயா முனிவர்களும் இருத்தலைச் சொன்னார். அவள் அருளைப் பெற்றவர்கள் அவர்கள். 

ஆனந்தமாய் என்றவர் அடுத்து அறிவாய் என்றார்; அறிவு சித்துப்பொருள். பிறகு நித்தியமாகிய அமுதத்தைச் சொன்னார்; அது சத்துப்பொருள். ஆகவே இந்த மூன்றினாலும், அம்பிகை ஆனந்தமாய்ச் சித்தாய்ச் சத்தாய் நிற்பவள். சச்சிதானந்த ஸ்வரூபி என்பதும் புலனாகும். “ஸச்சிதானந்த ரூபிணீ” (700) என்பது தேவியின் திருநாமங்களில் ஒன்று.” …

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அபிராமி அந்தாதி விளக்கவுரை ~ கி.வா.ஜ

அம்பிகையைப் பற்றியும், அமுதைப் பற்றியும் உள்ள சுவையான மேற்கண்ட விளக்கத்தை அளிக்கும் நூல் ‘அபிராமி அந்தாதி விளக்கவுரை‘ (பாகம் 1). அற்புதமான இத்தமிழ் விளக்கத்தை அளிப்பவர் வாகீச கலாநிதி என்று போற்றப்படும் சொல்லின் செல்வர் திரு. கி. வா. ஜகந்நாதன் (சுருக்கமாக மற்றும் பிரபலமாக கி.வா.ஜ). நான்கு பாகங்கள் கொண்ட தமிழ் அமுதமாகிய ‘அபிராமி அந்தாதி விளக்கவுரை’ தொகுப்பை வெளியிட்டோர் சென்னையில் உள்ள அல்லயன்ஸ் பதிப்பகத்தார் (பிரபல துக்ளக் ஆசிரியர் மறைந்த திரு.சோ அவர்களின் நூல்களை வெளியிடுவோரேதான்). அம்பிகையின் அருள் பெற்ற ஆசிரியருக்கும், அவரது நூலை வெளியிட்டு அருட்பணி ஆற்றிய பதிப்பகத்தாருக்கும் நம் வந்தனங்கள். 

ஆக, கறமுது என்பது கறி+அமுது. அதாவது அமுதம் போன்ற சுவையை உடைய காய்கறிகள்.

சாத்தமுது [அ] சாற்றமுது என்பது சாறு+அமுது. பொதுவாக ரசம் என்பதைக் குறிக்கவே இது பயன்படுத்தப் படுகிறது என்றாலும், சுவையான திரவ உணவு வகைகள் அனைத்துமே சாற்றமுது என்று கொள்வதே முறை.

இலையமுது என்பது இலை+அமுது. இலை என்பது இங்கு கீரை போன்ற இலைகளால் ஆன உணவு வகைகளைக் குறிக்கின்றது. 

உணவே அமுது என்பதால், உணவின் அங்கங்களாக உள்ள ஒவ்வொரு உணவு வகைகளையும் கூட அமுது என்றே அழைப்பது பொருத்தம்தானே. எனினும், ஏன் வைணவர் மட்டுமே இவ்வாறு அழைக்கின்றனர் என்ற கேள்வி தொக்கி நிற்கின்றதே?

ஆலகால விஷத்தை உண்டு உலகைக் காத்தவன் எந்தை ஈசன். ஆனால், அதன் பின்னர் வந்த அமுதத்தை அசுரர்களிடமிருந்து காத்துத் தேவர்களுக்கு அளித்தது யார்? மோகினி வடிவத்திலிருந்து மஹாவிஷ்ணு அல்லவா? வைணவர் என்போர் விஷ்ணுவின் அடியார்கள். எனவே அமுதளித்து தேவர்களைக் காத்த திருமாலின் அடியார்கள், தாம் பரிமாறும், உண்ணும் உணவுப்பொருட்களையும் அமுது என்று அழைப்பதில் வியப்பென்ன!

இந்தக் கறியமுது, சாற்றமுது, இலையமுது எல்லாம் சரி. அதென்ன திருக்கண்ணமுது? திரு என்பது திருமாலின் தேவி மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். கண் என்பது மாலின் தேவியுடைய விழிகளைக் குறிக்கும் என்று கொண்டால், அமுது வழங்கித் தேவர்களின் வேண்டுதலை நிறைவேற்றிய தன் புருஷனின் அழகே உருவான பெண் (மோகினி) வடிவை நோக்கி திரு எனும் மஹாலக்ஷ்மியின் விழியில் எழுந்த பெருமிதம் மற்றும் பேரன்பை ஒத்த சுவையுடையது என்பதால் பாயசம் திருக்கண்ணமுது என்றானதோ!

ஆஹா, நல்ல சாத்தமுதான, அதாவது ரசமான விளக்கம்தான் ஸ்வாமி என்கிறீர்களா? விளக்கம் ரசிக்கத்தக்கதாக இருந்தால் நன்றி முழுமையாகக் கி.வா.ஜ அவர்களுக்கே உரித்தாகும். அவருடைய ‘அபிராமி அந்தாதி விளக்கவுரை‘ நான்கு பாகங்களையும் அடுத்த சென்னைப் புத்தகச் சந்தை வரை காத்திருக்காமல், கிரி டிரேடிங் கடையிலோ, ஆன்லைனிலோ வாங்கிப் படித்துப் பாருங்கள். இதுபோல் இன்னும் பல சாத்தமுதான விளக்கங்களை ரசித்து மகிழலாம்!

Be Joyful & Spread the Cheer 🙂

~Swamy | @prakashswamy

உயிர்மெய் (தமிழ் பதிவுகள்) | SwamyQuote | Swamystery | QuorAnswers by Swamy | Quoraவிடை by ஸ்வாமி | BeenThere, SeenThatSwamystery on Telegram

 

பிராணனும், இறைவனும்!

உயிர்வாழ்தலுக்கு ஆதாரமான பிராணனை நாம் நேரடியாகக் கண்டறிந்ததில்லை. எனினும் இயல்பாகவே உள்ளே சென்று, வெளியே வரும் சுவாசம் மூலமாக, மறைமுகமாக அதுபற்றி உணர்ந்து, படைப்பிலுள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களின் இயக்கத்திற்குப் பிராணனின் இன்றியமையாமை பற்றி நன்றாகவே அறிந்துள்ளோம்.

அதுபோலவே, படைப்பிற்கு ஆதாரமான இறைவன் அல்லது படைப்பின் மூலத்தையும் நாம் நேரில் கண்டறிந்ததில்லை. எனினும், பிரம்மாண்டமான பிரபஞ்ச நிகழ்வான வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அதன் எல்லையற்ற, எங்கும் நிறைந்த தன்மையை மறைமுகமாக உணர்வதன் மூலமாக, படைப்பின் இயக்கத்திற்கு ஆதாரமான அச்சக்தியின் இன்றியமையாமை பற்றியும் நம்முள்ளேயே நேரடியாக உணர்ந்தறிய முடியும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று… ஒன்று… நன்று… ~ அச்சமுண்டு… அச்சமுண்டு..!

அச்சமுண்டு, அச்சமுண்டு! 

இன்று… ஒன்று… நன்று… பதிவு


சமீபத்தில் உறவினர் ஒருவர் அச்சம் என்ற உணர்வு எப்படி மனித வாழ்க்கையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக முக்கியப் பங்கு வகிக்கிறது; அதன்காரணமாகவே மனித குலம் தற்போது கோவிட்-19 பெருநோய்ப் பரவலைத் திறம்பட எதிர்கொள்ளாமல், உயிர்வாழ்தல் பற்றிய அச்சத்தில் மூழ்கித் தவிக்கின்றது என்று குறிப்பிட்டு, சுவாரஸ்யமான கதை வடிவில், ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அதுபற்றிய சிந்தனை ஓட்டமே ஸ்வாமியின் இந்த ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற இந்த ‘இன்று… ஒன்று… நன்று..!’ பதிவு. 


உயிர்வாழ்தல் பற்றிய பயம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. ஒரு தெருநாய் தான் ஈன்ற குட்டிகளின் உயிரைக் காப்பாற்ற, தன்னைவிடப் பலமடங்கு வலிமை வாய்ந்த மனிதனை எதிர்கொண்டு உறுமி, குலைப்பதையும், துரத்துவதையும் நாம் எல்லோருமே பார்த்திருப்போம். 
இதைப்போலவே, தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ளவும் பிராணிகள் தங்களுடைய இயல்பான சக்தி மற்றும் திறனைக் கடந்த செயல்களைப் புரியும்.

Self-preservation is something wired into all creatures in creation. And most creatures use their ‘intuition,’ aka natural instinct, effectively to preserve themselves and those dependent on them.


ஆனால், தன்னுடைய ஆறாவது அறிவு பற்றி ஓயாமல் தம்பட்டம் அடிக்கும் மனிதர்களோ, ஏட்டுக் கல்வி என்ற சங்கிலியால் தம்மைத் தாமே பிணைத்துக் கொண்டு, பகுத்தறிவைப் (dissecting everything perceived through the five senses, in order to to comprehend and store as/in memory) பற்றிக் கொண்டு தொங்குவதால், தம்முள் இருக்கும் natural instinct பற்றிய உணர்வே இல்லாமல், survival என்கிற பொருளாதாரம் சார்ந்த பிழைப்பு மற்றும் சமூக அமைப்பில் சிக்கி உழல்கின்றனர்.


அந்த காணொளிக் கதையில் குறிப்பிட்டதுபோல, இயற்கையாக மலை, காடுகளில் விளையும்  மூலிகைகளின் பயன்களை அறிந்து, அவற்றைப் பயன்படுத்தும் வழிமுறைகளை வகுத்தளித்த நம் முன்னோர் intellectடை விட instinct அல்லது natural intelligenceஸையே சார்ந்திருந்தனர் என்பது வெள்ளிடை மலை. அவர்களது விழிப்புணர்வு மற்றும் படைப்பைப் பற்றிய உள்ளார்ந்த புரிதலை, பிராணிகள் எப்படி நீண்ட நேரம் அசையாமல், சலனமின்றி இருக்கின்றன (உணவுக்காகவோ, உயிர் பிழைப்பதற்காகவோ) என்பதை ஆழ்ந்து கவனித்து உருவாக்கிய யோகாசனங்கள் போன்ற நடைமுறைப் பயிற்சிகள் மூலமாகவும் அறியலாம்.


Intellect என்கிற கற்ற மற்றும் (அனுபவம் மூலம்) பெற்ற புற அறிவைப் பொருள்சார்ந்த பிழைப்பிற்கும், Intelligence அல்லது Natural Instinct என்ற அக / மெய்யறிவை ஆனந்தமான நல்வாழ்விற்கும், வீடுபேறு எனப்படும் இறுதி விடுதலையாகிய முக்தியை அடையவும் திறம்படப் பயன்படுத்திய நம் முன்னோர்களின் வழிகாட்டலை முற்றிலும் மறந்து / ஒதுக்கிவிட்டு, வஞ்சனையால் நம் தேசத்தை ஆக்கிரமித்து, வன்முறையால் ஆண்டு, வளங்கள் அனைத்தையும் வரையறையின்றிச் சூரையாடிய மேலைநாட்டவர் விட்டுச் சென்ற, வரி வசூலுக்கான இயந்திரத்தனமான, இயல்பான புத்திசாலித்தனம் அவ்வளவாகத் தேவைப்படாத, ஊதியத்திற்காக உழைக்கும் கிளெரிக்கல் ஊழியர்களை (clerical staff) உருவாக்கும் முட்டாள்தனமான கல்விமுறையை, அவர்களைத் துரத்திய பின்னரும் மாற்றமின்றித் அப்படியே தொடர்ந்த மடமையால், தொன்மையான இக்கலாச்சாரத்தின் ஆதார அம்சமான, படைப்பில் உள்ள எதையும் பற்றி, விழிப்புணர்வோடு, கசடறக் கற்கும் முறையை நாம் தொலைத்தே விட்டோம்.


பொருளாதாரம் சார்ந்த பிழைப்பே வாழ்வாதாரம் என்பது, ஆனந்தமான, ஆரோக்கியமான நல்வாழ்விற்கு எது தேவையோ அதிற்கான பயிற்சி மற்றும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல், பொருள் ஈட்டல், பொழுதுபோக்கு மற்றும் பிறர் நம்மை மதித்துப் போற்றுவது ஆகியவையே சமூக வாழ்விற்கு முக்கியம் என்று நம்மை திசை திருப்பிவிட்டது. இதுதான் நம்மை மொட்டையடித்துச் சூரையாடிய மேலைநாட்டவர் நமக்கு விட்டுச் சென்ற எச்சில் இலை போன்ற மிச்சம். இத்துடன் வெற்றியே முக்கியம் என்ற போட்டி மனப்பான்மையும் சேர்ந்ததால், நம்மைத் தற்போது வழிநடத்துவது ‘எதுவானாலும் – பிறரைப்போல் – அதை அடைய முடியாமல் போனால் என்ன ஆகும்?’ என்ற அச்சம் மட்டுமே. Celebrities மற்றும் Influencers ஆகியோர் மீது சாதாரண மக்கள் கொண்டுள்ள வெறித்தனமான வேட்கை, செல்வந்தர்கள் மீதுள்ள வெறுப்பு போன்றவை இதன் உச்சபட்ச வெளிப்பாடு என்றால் மிகையில்லை.

நாம் நம்மளவில் ஆனந்தமாக வாழ வேண்டும், பிறரும் அவ்வாறு வாழ நம்மாலியன்ற உதவியைப் புரிய வேண்டும் என்ற உயர் நோக்கமின்றி, அச்சத்தால் உந்தப்படும் இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கும், அமைதிக்கும், ஆனந்தத்திற்கும் இடம் இருக்க வாய்ப்பில்லை. இதனால்தான் மனித வாழ்க்கை என்பது தற்போது ஒரு tragi-comedy ஆகிவிட்டது.


புதிது புதிதாக நாம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் ஆகியவை பொருளாதார அளவில் நிச்சயம் பயனுள்ளவைதான். ஆனால் அவை ஒருபோதும் நம்முள்ளேயே உள்ள natural instinct என்ற சக்திவாய்ந்த கருவிக்கு ஈடாகாது. மேலும், பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அது சமூக வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. ஆனால், உண்மையில் வாழ்வு என்பது, நாம் வாழும் பூமி என்ற இந்த கிரகம் கூட ஒரு சிறு துகள் அளவே உள்ள பிரம்மாண்டமான, இன்னமும் விரிவடைந்து கொண்டிருக்கும், பிரபஞ்ச அளவில் இடையறாது நிகழும் அற்புதமான நடனம். இதில் நாம் கூட கரோனா வைரஸைப் போன்ற கண்ணுக்குப் புலப்படாத நுண்ணியிர் போலத்தான். 
பிராணிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும், தங்களுடைய வசிப்பிடங்களில் – மனிதனின் கட்டுக்கடங்காத விஸ்தரிப்பால் – ஏற்பட்டுள்ள, அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத மாற்றங்களைத் தவிர்த்து, வாழும் முறையில் பண்டைய காலத்தில் இருந்த மாதிரியேதான் இன்றளவும் இருக்கின்றன. அவற்றை விட ஓரறிவு அதிகமுள்ள உயிரினமாக மார்தட்டும் மனிதர்கள் அவற்றை விட உயர்நிலையில், தங்களுடைய ஆற்றல், திறன் மற்றும் கருவிகளைக் கொண்டு, அவற்றை விடவும் ஆனந்தமாக அல்லவா இருக்கவேண்டும்? ஆனால் நாம் அப்படி இல்லை, எதைப் பற்றியும் எப்போதும் கவலையில் ஆழ்ந்து, பயந்தே சாகிறோம்… ம்ம்ம், வாழ்கிறோம் என்பதை யாரும் Ph.D பண்ணி நமக்குச் சொல்லவேண்டியதில்லை. 


கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் அச்சத்தால் உந்தப்படும் மனிதர்களின் உயிர்வாழ்தலை மைக்ரோஸ்கோப் பயன்படுத்தாமலே காட்டிவிட்டது – உலக அளவில். இந்த வைரஸ் நோயைப் பொருத்த அளவில், வளர்ச்சி அடைந்த, அடையும், அடையாத நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள மனிதர்களின் லட்சணம் ஒரே மாதிரிதான் இருக்கின்றது. உலக அளவில், மனித இனத்தின் மடத்தனமான பொருளீட்டல் மற்றும் புகழ் தேடலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பிழைப்பை, கண்களால் காண முடியாத SARS-CoV-2 என்ற நுண்ணுயிர் தற்போது உறைய வைத்து விட்டது. இந்நிலையில், பயனுள்ள செயல்களைப் புரிவோர் யார் என்று பார்த்தோமானால் மருத்துவம், சுகாதாரம், காவல், அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருள், மருந்துகள் ஆகியவற்றை உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை செய்வோர் ஆகியோர் மட்டுமே. தொழிலதிபர்கள் போன்ற பெரும் செல்வந்தர்கள், ஊடகங்களில் ஓயாமல் பேசும், எழுதும் பகட்டான பிரபலஸ்தர்கள், யுவர்களை அடிமைகள் போன்று வசியம் செய்து பிழைக்கும் சமூகத் தள உந்துநர்கள் போன்றோர் நம்போன்ற சாதாரண, அத்தியாவசியமற்ற செயல்களைப் புரிவோரே என்ற உண்மை வெட்டவெளிச்சமாகி உள்ளது, இப்பெருநோய் பரவலால் கிட்டிய எதிர்பாராத வாழ்க்கைப் பாடம்.

உண்மையில் பார்த்தால், ‘வளர்ச்சி அடைந்த’ மேலைநாடுகளில்தான் இதன் பாதிப்பு அதிகம். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, ஏனெனில் அவர்களின் வளர்ச்சி முற்றிலும் ஏட்டுக் கல்வி மற்றும் பொருளாதார உயர்வை மட்டுமே சார்ந்தது. மேலும், இயற்கை அழிப்பிலும் அவர்களது பங்கே தலையாயது என்பதையும் மறுக்க முடியாது. இதுவும், நாம் மேலைநாடுகளின் வாழ்க்கை முறையை அப்படியே பிரதி எடுக்க முயலும் நம்மை அந்த மடமையிலிருந்து விழித்தெழ உதவும் தகவல் ஆகும். இதற்கும் நாம் அந்த நுண்ணுயிருக்குத்தான் நன்றி கூற வேண்டும்.


பாரதம் போன்ற தொன்மையான கலாசாரம் உள்ள தேசத்தில், மனித இனம் இன்னமும் முழுமையாக இயந்திரமயமாக்கப்படவில்லை என்பதாலும், நகரங்களைத் தவிர்த்து சிற்றூர்கள், கிராமங்கள், மலை மற்றும் காடு சார்ந்த இடங்களில் உள்ளோர் இன்னமும் கூட இயற்கையோடு – ஓரளவேனும் – ஒத்திசைவாக வாழ்வதாலும், நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மிதமாகவே உள்ளது. இது போக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எண்ணற்ற யோகிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள் உயிர்சக்தி தொடர்பாகப் புரிந்துள்ள ஆழ்ந்த உள்நிலை விஞ்ஞானச் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் அளித்துள்ள வழிமுறைகள், பயிற்சிகள் ஆகியவையும் பாரத தேசத்தின் குடிமக்களைக் காக்கும் கவசமாகச் செயல்படுவது மறுக்க முடியாத, அதேசமயம் data points என்ற தகவல் தொகுப்பைக் கொண்டு நிரூபணம் செய்யவியலாத உண்மை.

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல. இயற்கையோடு ஒத்திசைவாக அமைந்த, பிற உயிர்களுக்கு அறிந்தே துன்பம் விளைவிப்பதைத் தவிர்க்கக் கூடிய, அறம், பொருள், இன்பம், ஞானம் என்று பன்முக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட, உயிர்மெய் அறிந்து, முக்தி என்ற இறுதி விடுதலையே மனிதப் பிறவியின் பயன் மட்டும் நோக்கம் என்ற தெளிவை உடைய வாழ்க்கை முறை நம்முடையது. தொடர்ந்து நிகழ்ந்த அன்னியப் படையெடுப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, நம் வாழ்க்கை முறை அவ்வாறுதான் இருந்தது. அதனால்தான் நாம், பொருட்செல்வத்தில் மட்டுமின்றி, மொழி, கலை, தொழில், விவசாயம், மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய பல துறைகளிலும் சிறப்பாக வளர்ச்சி அடைந்த தேசமாக விளங்கினோம். அத்தகைய சிறப்பை மறந்து, மேலைநாட்டவரின் மூட வாழ்க்கை முறையை ஈயடிச்சான் காப்பி என்பது போல அப்படியே கடைப்பிடிக்கும் மற்றுமொரு காலனியாக நாம் மாறிப்போனது சமீபத்திய சில நூற்றாண்டுகளில்தான். 

இந்த இழிநிலையை நாம் உணராத வகையில், இதில் மாற்றம் ஏற்பட வழியில்லை. அவ்வாறு உணர்ந்த பின்னர், மாற்றம் ஏற்படுத்த வேறு யாரும் பொறுப்பேற்கப் போவதுமில்லை. 
நமது நல்வாழ்விற்கான முன்னேற்றத்திற்குத் தேவையான சிந்தனை மற்றும் செயல்களுக்கு முழுமையாக நாமே பொறுப்பேற்க வேண்டும். கோவிட்-19 பெருநோயின் பரவல் மற்றும் பாதிப்பால் ஏற்பட்ட இந்த நேரடி அனுபவப் புரிதலை விதையாகக் கொண்டு,கல்வி முறை தொடங்கி, வாழும் முறை வரை அடிப்படை மாற்றங்கள் விளைவதற்கான முயற்சிகளை நாம் இந்தத் தலைமுறையிலாவது தொடங்காவிட்டால், அடுத்தமுறை இயற்கை தன்னை சமன்படுத்த மற்றும் குணப்படுத்த எடுக்கும் தொற்றுநோய், பூகம்பம் போன்ற முயற்சிகளின் விளைவு, இதைவிடக் கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…

என்று பெருமிதத்துடன் மஹாகவி சுப்பிரமணிய பாரதி பாடக் காரணம், பாரத தேசம் மற்றும் இதன் தொன்மையான கலாசாரம், பாரதத் தாயின் குழந்தைகளான குடிமக்கள் ஆகியோர் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு மற்றும் வலிமையான நம்பிக்கையால்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், நம் கலாச்சாரத்தின் பெருமையை மறந்து, சூரையாடிகளின் வாழ்க்கை முறையை அப்படியே கடைப்பிடித்து, நமது தேசத்தை நாமே தூற்றும் மடமையைக் கைவிட்டு, சில நூற்றாண்டுகளுக்கு நீடித்துவிட்ட இந்தக் கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து நாம் உடனடியாக விடுபட்டு, ‘எழுமின்.. விழிமின்.. குறிக்கோளை அடையும் வரை ஓயாது உழைமின்.!‘ என்று பாரதவாசிகளைத் தட்டியெழுப்பிய ஸ்வாமி விவேகானந்தர் போன்ற உத்தம ஊக்குநர்களைப் பின்பற்றி, நமது வாழ்க்கை முறையைச் செம்மைப்படுத்தும் செயல்களைப் போர்க்கால அடிப்படையில், இந்த நுண்ணுயிர் நோய்ப் பரவலால் ஏற்பட்ட wake-up callலைப் பயன்படுத்தித் துவங்காவிட்டால், இயற்கையின் அடுத்த ஆயுதம் செயல்வடிவம் பெறும்போது, நாம் அஞ்சி நடுங்கிப் பிதற்றப்போவது ‘அச்சமுண்டு… அச்சமுண்டு…’ என்றுதான்!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை!

இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை!

இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை 樂
~~~~~~~~~~~~~~~

மன்னித்தல் என்பது ஒரு உயர்ந்த பண்பாகக் கருதப்படுகிறது. தவறான எண்ணம் அல்லது செயலுக்கு ஒருவர் மன்னிப்புக் கோருவதும், வேறொருவர் அதற்கு மன்னிப்பு வழங்குவதும், பலராலும் சிறந்த செயல்களாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், எடுத்துக்காட்டாகவும் கொள்ளப்படுகின்றது. “To err is human, to forgive is divine” என்ற இந்த glorified lie  நகைப்புக்குரியது.

கொலைக்குற்றம் புரிந்த ஒருவன், சட்டப்படி தண்டிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்டாலும், அச்செயல் புரிந்த கணமே, அவனது கர்மவினையின் சுமை கூடிவிடும். எந்த ஒரு செயலுக்கும் எவ்வாறு பின்விளைவு உண்டோ, அவ்வாறு கொலை எனும் கொடுஞ்செயலுக்கும் நிச்சயமாக ஒரு விளைவை அம்மனிதன் அனுபவித்தே  தீரவேண்டும். இப்பிறவியில் இல்லாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு பிறவியில் அவ்விளைவு அவ்வுயிரின் வாழ்வில் செயல்படும். உயிர்க்கொலையை – மனிதரல்லாத உயிர்களையும் சேர்த்து – ஒரு தொழிலாகக் கொள்வோரும், அவ்வுயிர்களின் வேதனைக்கும், வலிக்கும், தவிப்பிற்கும் காரணமாயிருந்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும்.

சில மதங்களில், தவறு செய்வோருக்குப் பாவமன்னிப்பு வழங்குதல் என்ற சடங்கு நிகழ்கின்றது. தன்னுடைய தவறை ஒருவர் மற்றொருவரிடம் பகிர்வதன் மூலம், உள்ளத்தின் ஆற்றாமையை ஓரளவிற்குத் தணிக்கும் உளவியல் விளைவைத் தவிர, இதனால் கர்மவினையின் சுமையைக் குறைப்பதற்குப் பயன் எதுவுமில்லை. அவ்வாறு பாவமன்னிப்பு வழங்கும் பொறுப்பில் உள்ள பலரே, பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளைப் புரிந்தது பற்றிய கொடூரமான தகவல்கள் வெளிவருகையில், அச்சடங்கு  மேலும் ஏளனத்திற்குரியதாகின்றது.

எந்தச் சமூகத்திலும், மன்னிப்பு வேண்டுபவன் தனது பெருமிதத்தை ஒடுக்கிக்கொண்டே அதைக் கேட்கவேண்டியுள்ளது. “நான் எப்பேர்ப்பட்ட ஆள் தெரியுமா,” என்ற ஆணவத்தை விட்டுத், தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனித சமுதாயத்தில் நிலவுகின்றது. ஆனால், மன்னிப்பு வழங்குபவருக்கு, அவரது பதவி வழங்கும் அதிகாரம் மட்டுமே போதுமானது என்ற வரைமுறை விந்தையானது. தனது சொல்லாலோ, செயலாலோ, பதவியின் அதிகாரம் வழங்கும் மமதையில் அம்மனிதன் பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டிருந்தால்கூட, பதவி என்ற கவசம் அவனைக் காப்பது எவ்வளவு பெரிய கொடுமை.

சட்டம் அல்லது மதத்திற்கு அப்பாற்பட்டும் மன்னிப்பு வழங்குதல் நிகழ்கின்றது. இரு தனி மனிதர்களுக்கிடையில், குடும்பத்தில், அலுவலகத்தில், வீதியில் என்று பல இடங்களிலும், “I am sorry,” ஓயாது கேட்கும் ஒலியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிந்தோ அறியாமலோ யாரோ ஒருவர் செய்த செயலை நான் மன்னிக்கிறேன் என்பது எவ்வளவு ஆணவத்திற்குரிய செயல் என்று யாரும் சிந்திப்பதே இல்லை. மன்னிப்பு வழங்குதல் ஒரு மகத்தான செயலாக எல்லோராலும் உறுதியாக நம்பப்படுவதால், நம்பிக்கை சார்ந்த செயல்கள் அனைத்திலும் மாறாது காணப்படும் மடமையின் மைதோய்த்த அச்சு, மன்னிப்பிலும் தனது கறையை அழிக்கமுடியாதவாறு பதித்து விடுகின்றது. நான் வேறொருவனை மன்னிக்கிறேன் என்ற எண்ணமே ஆணவ நாகத்தைப் படமெடுத்து ஆடவைக்கும். அகத்தில் அகந்தை நச்சு ஏறுவதை அறியாது, ஆணவச் செருக்கில் பிறரது தவறை மன்னித்துப் பெருமை தேடுபவர்கள், “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே,” என்ற கிருஷ்ண பரமாத்மாவின் அறவுரை கேட்டும்கூடத் திருந்த வாய்ப்பில்லை.

தனது செயல்கள் அனைத்திற்கும் தானே பொறுப்பு என்ற உணர்வு மனிதர்களிடம் ஏற்படாதவரை, தவறான செயல்கள் நடப்பதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. எந்த ஒரு செயலைப் (சரியோ, தவறோ) புரிபவரும் , அந்தச் செயலுக்கான பலனை அல்லது அச்செயலின் விளைவை என்றாவது சந்தித்தே ஆகவேண்டும் என்ற தெளிவை அடையாதவரை, தவறுகள் திருத்தப்பட அல்லது குற்றத்திலிருந்து தப்பிக்க, மன்னிப்பு போன்ற குறுக்கு வழிகள் பயன்படுத்தப்படுவதையும் யாராலும் தடுக்கமுடியாது. கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் மூழ்கி, உண்மையை உணர்ந்தறியும் ஆர்வமற்று, பிழைப்பே வாழ்வு என்ற தவறான புரிதலுடன், வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் நிறைந்த இன்றையப் பொருளாதாரச் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பிணிகளில் தலையாயது “மன்னிப்பு எனும் மடமை!”

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 111

அருட்குறள் ~ ஞானப்பால் 111

தெரிதலிற் தொடங்கிப் புரிதலைக் கடந்துள்

அறிதலில் அறிவதுயிர் மெய்.


குறள் விளக்கம்

புலன்கள் மூலமாக உணரக்கூடியவற்றைக் காரண அறிவால் பகுத்தறிதலின்றி, அப்படியே நினைவில் பதிந்து கொள்வது என்பது, தெரிதல் எனும் தொடக்க நிலை. தான் கண்டு, கேட்டவற்றைப் பிறருடன் பகிர்வது என்பது பெரும்பாலும் இந்நிலையிலேயே நிகழ்கின்றது. நம்பிக்கை சார்ந்த மத போதனைகள் போன்றவையும் இந்நிலையில் நிகழ்பவையே. மனனம் செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெறும் ஏட்டுக்கல்வியும் கூட இந்த அடிப்படை நிலையில்தான் சிக்கியுள்ளது. 


புலன்கள் மூலமாக உணரக்கூடியவற்றைக் காரண அறிவால் பகுத்தறிந்து, அவை பற்றி அனுபவரீதியாகவோ, ஆழ்ந்த சிந்தனை மூலமாகவோ தெளிவு பெற முயல்வது புரிதல் என்ற இடைநிலை. பொருள்சார்ந்த வாழ்க்கைத் தளத்தில் அறிஞர் என்று கருதப்படுவோர் இவ்வகையினரே. தொன்மையான மற்றும் புனிதமாகக் கருதப்படும் நூல்களை ஆய்ந்து அவற்றுக்கு விளக்கம் அளிப்பது என்பது இந்நிலையில் உள்ளோராலேயே பெரும்பாலும் செய்யப்படுகின்றது. 


புலன்கள் மற்றும் காரண அறிவின் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து, ஒருவர் தன்னுள் நேரடி தரிசனமாக, அனுபவப்பூர்வமாக உணர்வது என்பதே அறிதல் எனும் இறுதி நிலை. உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் இத்தகைய அறிதலே. அதனால்தான் அதனைப் பிறருக்கு விளக்குவது எளிதானதல்ல. ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பது அறிவின் புரிதலைக் கடந்த, தன்னைத் தானே அறிதலின் பெருவியப்பின் வெளிப்பாடே. 


KuRaL explanation

Simply registering or storing the information gathered via the sense organs in one’s brain is the elementary stage of knowing. There’s limited or no intellectual comprehension happening at this stage. Most social media sharing happens at this superficial level. The sermons by preachers of organised belief systems too belong to this level. All kinds of theoretical / rote education too are most certainly stuck at this rudimentary level. 


Striving to comprehend the information gathered via the sensory perception, either through experience or deep thought, in order to gain clarity, is the intermediate stage of knowing. Those who are acknowledged as experts in the survival plane of existence (the physical realm) typically belong to this category. All the insightful literature interpreting and explaining ancient scriptures and holy texts belong to this level of comprehension. 


Realising through direct perception of Truth / Reality, as an intensely inward looking experience, that’s beyond the realm of comprehension through sensory perception and the intellect, is the final stage of knowing. Self-realisation, aka enlightenment is certainly such a kind of knowing. That’s why it’s not easy to explain to others. ‘Those who have seen, can’t explain; Those who explain, haven’t really seen,’ is nothing but an expression of amazement, of such an inner knowing, of one’s own self!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று, ஒன்று, நன்று ~ பகவான் பார்த்துப்பார்!

இன்று, ஒன்று, நன்று ~ பகவான் பார்த்துப்பார்! 

.

கிரி டிரேடிங் கார்ப்பரேஷன் கடைக்கு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது செல்வதுண்டு. சனாதன தர்மம் சார்ந்த வழிபாடு மற்றும் செயல்முறைகள் போன்றவற்றுக்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்றே பலரும் எண்ணும் இந்நிறுவனத்தின் கடைகளில் பல ஆச்சரியங்கள் உள்ளதைக் கண்டு வியந்த நான் இப்போது வருடத்திற்குச் சில முறையாவது அங்கு செல்லும் வாடிக்கையாளர். அவ்வாறு செல்லும்போதெல்லாம் அங்குள்ள புத்தக அலமாரி வரிசைகளிடையே கணிசமான நேரத்தைச் செலவிட்டு, ‘திருக்குமரனடியார்கள்’ (சிவனடியார்களைப் போற்றும் ‘திருத்தொண்டத்தொகை’ போன்ற,’ முருகன் அடியார்களைப் போற்றிடும் ‘சேய்த்தொண்டத்தொகை’ விளக்க நூல்), விஷ்ணு மற்றும் லலிதா சஹஸ்ரநாமங்களின் விளக்கம் (ஒவ்வொன்றாக ஆயிரம் பெயருக்கும்), சகல தேவதைகளுக்கான காயத்ரி மந்திரங்கள் (ஸந்த்யாவந்தனத்தின்போது ஜெபிப்பது போன்று பல இறை வடிவங்களுக்கும் காயத்ரி உள்ளது – உ.ம். முருகப்பெனுமனுக்குரிய ஷண்முக காயத்ரி மற்றும் சூரிய பகவானுக்குரிய பாஸ்கர காயத்ரி) போன்று சில – சென்னை புக் ஃபேரில் தவற விட்ட / காணாத – புத்தகங்களை ஒவ்வொரு முறையும் வாங்குவது வழக்கம்.

மயிலையில் கபாலீச்சுரம் அருகிலுள்ளதுதான் பெரிய கடை என்று நினைக்கிறேன். எனக்கு ஓரளவேனும் அருகிலிருப்பவை தாம்பரம் மற்றும் நங்கநல்லூரில் உள்ளவை. இந்த முறை தாம்பரம் கிரியில் வழக்கம்போல புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். கிரியின் டிரேட்மார்க் வாடிக்கையாளர் சேவை முறைப்படி ஒரு அன்பர் தனிப்பட்ட சேவை அளிக்க என்னை உறுத்தாமல் அணுக, ‘குறையொன்றுமில்லை’ முதற்பாகம் படித்து முக்கூர் ஸ்வாமிகளின் ஃபேன் ஆகிவிட்டதால், 2 மற்றும் 3ம் (மொத்தம் ஏழு என்று நினைக்கிறேன்) பாகங்களைக் கேட்டு வாங்கிக் கொண்டேன். ‘வாரம் ஒரு பாசுரம்’ மற்றும் ‘ஆழ்வார்கள் ஒரு அறிமுகம்’ ஆகிய அருமையான புத்தகங்கள் மூலமாக ஆதர்ச எழுத்தாளர் சுஜாதா ‘நாலாயிர திவ்யப் பிரபந்த’த்தின் அற்புதமான பக்தியின் சுவையைக் காட்டிவிட்டதால், அதற்கு விளக்கம்/உரையோடு உள்ள புத்தகம்/ங்களைத் தேடிக் கொட்டிருக்கையில் ஒரு மாமி நமக்கு சேவை புரிந்த பணியாளரைக் கவர்ந்து செல்லப் போவதுபோல் அணுகினார். 

சகல காரிய சித்திக்கு விநாயகர், மற்ற சுவாமியோட ஸ்லோகம்லாம் இருக்கற புக் வேணுமே…”

சேவகர் மிகுந்த ஆர்வமுள்ள ஆசாமியாக இருந்தாலும், பும்ராவின் யார்க்கரை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் போலக் கொஞ்சம் அதிர்ந்து, சற்று அதிகம் அனுபவமுள்ள மற்றொரு சேவகி அக்காவை உதவிக்கு அழைத்தார். 

புத்தகப் பித்தனான நம்மால் சும்மா இருக்க முடியவில்லை. மாமியிடம்,

என்ன காரியம் சித்தியாவதற்கு முயற்சி பண்ணப்போறேள்?” 

மாமி ‘யாருடா இந்த முன்பின் தெரியாத தாடிக்கார ஸ்வாமி..!‘ என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. பளிச்சென்று தந்தார் பதில். 

வேறென்ன, பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கணும்… பொண்ணுக்கு நல்ல எடத்துல கல்யாணம் ஆகணும்… இதே வேண்டுதல்தானே எல்லாருக்கும்…”

நான் அப்படியெல்லாம் என் ப்ரிய தெய்வங்களிடம் வேண்டுவதில்லை என்ற கருத்தைச் சொல்லாமல் நீலகண்டன் உண்ட ஆலகாலம் போல விழுங்கிக்கொண்டு, “யார் சொல்லப் போறா ஸ்லோகத்தை?

அவாளைப் பெத்துக்காக நான்தான் சொல்லணும்!

.

டெம்ப்ளேட் எக்சிஸ்டென்ஸ் மணவாழ்க்கையில் (அனேகமாகப் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்), இரண்டு பிள்ளைகள் பெற்று, அவர்களின் நல்வாழ்வுக்காக பகவானிடம் ஸ்பெஷல் வேண்டுதல் பண்ணக் ‘காரிய சித்தி‘ ஸ்லோகப் புத்தகம் தேடும் அந்த மத்யமர் வர்க்கத் தாயின் மீது எனக்குத் தடாலென்று மரியாதை வந்து விட்டது. இருந்தாலும் மதுரைக்காரனின் நக்கல் தலைகாட்டாமல் இருக்குமா என்ன! 

கரோனா வைரஸ்னால பாதிப்பு ஏதும் வந்திடாமல் இருக்க வேண்டிக்கலையா?

அதெல்லாம் பகவான் பார்த்துப்பார்,’ என்று சர்வசாதாரணமாக கோவிட்-19 பேண்டமிக் பேராபத்திலிருந்து பக்தகோடிகளைக் காக்கும் பொறுப்பை எளிமையாக பகவானிடமே விட்டுவிட்டு, மாமி ஸ்லோகப் புத்தகம் தேடிப் போய்விட்டார். 

ION_Bhagavan_Paarthuppar_bnr

நான்கு வகை யோகம் பற்றியும் விலாவாரியாகப் படித்து ஆன்மீகப் பயணத்தில் பல விஷயங்களை அறிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கும் ஆர்வலர் + சாதகரான நான் ஆயிரக்கணக்கான புத்தகங்களின் நடுவில் நின்று, அந்த எளிய ஔட்சோர்ஸிங் செய்கையின் ஆழத்தைச் சில கணங்கள் வியந்துவிட்டு, தேவி (லிங்க பைரவி), ஆதியோகி மற்றும் முருகப்பெருமானுக்குகான அலங்காரப் பொருட்கள், எந்தை ஈசனுக்கு அபிஷேகப் பொருட்கள் (சனிப் பிரதோஷ தினமான இன்றிலிருந்து, அந்த அபிஷேகப் ப்ரியருக்கு, ‘அவனருளாலே, அவன்தாள் பணிந்து’ 24×7 அபிஷேகம் நிகழ்வதற்கான கருவிகள் உட்பட), மற்றும் தினசரி அவர்தம் வழிபாட்டுக்கான அகர்பத்தி, சாம்பிராணி போன்றவற்றை வாங்கச் சென்றேன். 

தாம்பரம் கிரி டிரேடிங் பில்லிங் கௌண்டரில், பகவத்கீதைக்கு ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் உரை பற்றி விசாரிக்கும்போதுதான் ‘அதெல்லாம் பகவான் பார்த்துப்பான்‘ என்ற நம்பிக்கை வாசகத்தின் பக்தி யோக சாரம் அலெக்ஸா ஆன் செய்த ஸ்மார்ட் பல்பின் ஒளிபோலப் பளிச்சென்று தெரிந்தது! ஆனால், கரோனா தாக்குதலின் பாதிப்பிலிருந்து தன்னைக் காக்கும் பணியைக் காண்ஃபிடன்ட்டாகக் கடவுளிடம் நேரடியாக விட்டுவிட்ட அந்த பக்தை, ஏன் தன் குழந்தைகளின் வேலை மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கான உதவியைப் பெறுவதற்கு மட்டும், ‘காரிய சித்தி‘ ஸ்லோகம் சொல்லி பகவானிடம் மனுப் போடுகிறார் என்று, கரோனா பற்றிய கவலையே இல்லாமல் வழக்கமான பரபரப்புடன் சாலையில் வழிந்த பீக் அவர் போக்குவரத்து நெரிசலில், பைக்கில் யோசித்தபடியே ஊர்ந்து, ஒருவழியாக இல்லம் வந்து சேர்ந்தேன்! 

.

பக்தி என்பது நிச்சயமாகக் காரண அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்ட புரியாத புதிர்தான். அது பக்தன்/பக்தைக்கும் பகவானுக்குமிடையே உள்ள ஒரு காம்ப்ளிகேடட் டீல். புத்தியால் மெய்யறிய விழையும் ஞான மார்க்கிகளுக்கு இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினம்.

பெற்ற பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான செயல்கள் நம்முடைய பொறுப்பிலுள்ளவை. ஆனால் அவை சீராக நடைபெற இறையருள் தேவை என்று உணர்ந்த அந்த பக்தை அதற்கு இறைவனிடம் மனுப்போட உதவக்கூடும் என்று நம்பி, இறைவனின் துதிபாட ஸ்லோகத்தை சொல்லுகிறார். ஆனால் கோவிட்-19 போன்ற பெருநோய்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாதவை. அவற்றை எதிர்கொள்ள நமக்கு திராணியில்லை என்பதை நன்றாகவே அறிந்ததால், அதிலிருந்து நம்மைக் காக்கும் பொறுப்பை முழுமையாகவே ‘அன்னவர்க்கே சரண் நாங்களே‘ என்று இறைவனிடம் ஔட்சோர்ஸிங் பண்ணிவிட்டு, கூட்டமான இடங்களைத் தவிர்த்தல், கூடுமானவரை வீட்டிலேயே இருத்தல், சோப் பயன்படுத்திக் கை கழுவுதல், கரோனா வைரஸ் பற்றிய அபத்தமான வதந்திகளை ஃபார்வர்ட் பண்ணாமல் இருத்தல் போன்ற தற்காப்புச் செயல்களை மட்டும் நாம் மேற்கொள்வதே சரியானது என்று அந்த மதியமர் வர்க்க பக்தை போன்ற பலர், அறிந்தோ/அறியாமலோ, தெளிவாகக் கடைபிடிக்கிறார்கள் என்பது, இன்றளவும் எத்தகைய முயற்சிகளாலும் அழிக்கப்பட முடியாமல் தழைக்கும் நம் தொன்மையான பாரத கலாச்சாரத்தின் ஆச்சரியங்களில் ஒன்று.

ஆன்மீகப் பயணத்திற்கான வழிகள் நான்கையும் நன்கறிந்து, அதில் மூன்றிலேனும் உயிர்மெய் தேடலைத் தொடரும், அத்தேடலுக்கான தினசரி சாதனைகளைச் செய்துவரும் ஸ்வாமி போன்ற சாதகர்களுக்கு இத்தகைய பக்தர்களின் மாறுபட்ட (தன் செயல் vs தன்னைக் கடந்த பகவான் செயல்) அணுகுமுறை அவ்வளவாக ஆச்சரியத்தை அளிப்பதில்லை – எல்லா வழிகளும் சாதகரை இட்டுச் செல்வது ஓரே இலக்கை நோக்கித்தான் என்ற தெளிவு இருப்பதனால். ஆனால் அறிந்தோ/அறியாமலோ சரணாகதியை இயல்பாகச் செய்யும் ‘காரிய சித்தி‘ ஸ்லோகப் புத்தகம் தேடிய பக்தை மாமி  போன்றோர் வந்தனத்திற்கு உரியோர் என்பதில் ஐயமில்லை. அத்தகைய தெளிவு கிட்டாத, ‘மை வே ஆர் ஹைவே‘ என்று தன்னுடைய பாதையே சிறந்தது என்று விக்கிரமாதித்தன் இல்லாத வேதாளமாகத் தொங்கும், கோவிட்-19 ஏற்படுத்தக் கூடிய கடுமையான பாதிப்பைப் பற்றிய கவலையேதும் இல்லாமல், சாயங்கால டிராஃபிக் ஜாமிலும் சிகப்பு சிக்னலை மதியாமல் அவசரமாய்ப் பறக்கும் ‘இதுவும் கடந்து போகும்‘ என்று தெனாவெட்டாகத் திரியும் (அஞ்)ஞானிகளின் அறியாமை இருள் அகற்றும் பணியையும் நிச்சயம் ‘பகவான் பார்த்துப்பார்…’ என்று உறுதியாகக் கூற இயலவில்லை!

.

FB_IMG_1551157547919.jpgபி.கு.: நாலாயிர திவ்யப்ரபந்த விளக்க நூல் தொகுப்பு ஒன்றை ஒருவழியாக வாங்கிவிட்டேன். ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் படிக்கலாம் என்று முதலாயிரம் தொகுதியை மட்டும்தான் எடுத்தேன். ஆனால் அணுக்கத் தொண்டர் போல என்னைத் தொடர்ந்த பணியாளர் ‘நாலு தொகுதியும் சேர்த்துதான் வாங்கணுமாம் சார்...’ என்று பணிவன்புடன் நாலாயிரத்தையும் சேர்த்தே கொடுத்துவிட்டார். இனி அவற்றைப் படித்து, ரசித்து, பகிர்வதைத் தவிர்க்க முடியாது. So, stay tuned for Swamusings on Naalaayira Dhivya Prabandham soon வாசகர்காள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று, ஒன்று, நன்று ~ இயற்கையும் இறைவனும்!

இன்று, ஒன்று, நன்று ~ இயற்கையும் இறைவனும்!

தெய்வ வடிவங்கள் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்ததற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
.
இந்துமத தெய்வ வடிவங்கள் இயற்கை ரசனையில் உருவானவை என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது. இமய மலையின் பிரம்மாண்டத்தைக் கண்டு திகைத்தவன் படைப்பின் அதிசயத்தைத் தனக்குள்ளாகவே ரசித்துக் கொண்டான்.
.
பனி படர்ந்த அந்த சிகரங்களில் பரம்பொருளின் தோற்றத்தையே கண்டு ரசித்தான். இமய மலையின் பனிப்பாறைகள் உருகி, நீரோட்டமாகச் சிதறி, சிற்றாறாக உருவெடுத்து வெள்ளப் பிரவாகமாகி, சமவெளியை அடைந்து, அலை மோதும் அகண்ட நீர்ப்பரப்பாக பூமி மாதாவை அளந்து, கடலில் சங்கமித்த கட்சி இறைவனின் எழில்மிகு காட்சிகளில் ஒன்றாக அவனுக்குத் தோன்றியது.
.
அவன் காண விரும்பிய கடவுள் கற்பனையில் உருவானார்.
.
இமயமலை கயிலாயமாயிற்று. கொடும்புலியை வேட்டையாடி அதன் தோலையே உடையாகத் தரித்தவன் சிவபெருமானானான். காட்டிலும் மேட்டிலும் திரிந்து விஷம் கொண்டு அலைந்த பாம்பு சிவனாரின் கழுத்தில் ஆபரணமாயிற்று.
.
இமய மலையிலிருந்து புறப்பட்ட கங்கை அவனுடைய சடை முடியில் வாசம் செய்யும் கங்கா தேவி ஆனாள்.  காலை அகட்டி, சூலாயுதத்தை கம்பீரமாக ஏந்தி சிவபெருமான் நின்ற திருக்கோலம் இந்துக்களின் தெய்வக்கோலம் என்ற நிலையைப் பெற்றது.
.
காலைக் கதிரவன் செவ்வொளி பரப்பி கடல் நீர்ப்பரப்பில் மீது உதயமாகிறான். இமயக் காட்சியைப் போல இதுவும் ஓர் இயற்கைக்கு காட்சிதான். சிவந்த சூரியன் செவ்வேள் என்கிற முருகன் ஆகிறான். சூரியனின் வருகையை சேவல் கூவி அறிவிக்கிறது. ஆகவே சேவற்கொடி அவனது வருகையை அறிவிக்கும் கொடியாகிறது.
.
காலை சூரியன் கடல் மீது உதிக்கும் காட்சியை ஒருகணம் கற்பனை செய்யுங்கள். நீல நிற நீர்ப்பரப்பின் மீது சூரியன் புறப்படுகிறான். மயில் தோகை விரித்த காட்சி அல்லவா அது! ஆகவே முருகனின் வாகனமாக மயில் ஆகிறது.
.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Paramacharya_HinduismQA_book
.
மேற்கண்ட அற்புதமான, ‘இயற்கையும் இறைவனும்‘ ஒன்றே என்று நிறுவும் வகையில் அமைந்த, வருணனையை அளித்தவர் யாரோ நவயுகக் கவிஞரோ அல்லது ஞான பீட விருது பெற்ற நவீன எழுத்தாளரோ அல்ல. இதைச் சொன்னவர் ‘வாழும் தெய்வம்‘ என்று இன்றளவும் பலராலும் போற்றி வணங்கப்படும் மஹாபெரியவா என்ற காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
.
பொதுவாகவே நமக்கு ஒருவரைப் பற்றிய ‘இவர் இன்ன மாதிரி ஆசாமி‘ என்ற கண்ணோட்டம் இருக்கும். இது நாம் ஐம்புலன்கள் மூலம் அறிந்த தகவல்களைக் கொண்டு எடுத்த முன்முடிவே. காஞ்சி பரமாச்சாரியார் போன்ற மடாதிபதிகள் பற்றியும் இத்தகைய முன்முடிவு சார்ந்த கண்ணோட்டம் பலருக்கும் இருக்கும். ஆனால் கிட்டத்தட்ட ஒரு பகுத்தறிவுவாதியைப் போன்று அவர் இறை உருவத்தை, இயற்கையின் வெளிப்பாடாக விவரிப்பதைப் படித்து ரசித்ததும், அத்தகைய முன்முடிவு – அது எவரைப் பற்றி இருந்தாலும் – எவ்வளவு அபத்தமானது என்று புரியும்/யக்கூடும்!
.
எது ஒன்றை [அ] எவரைப் பற்றியும், காரண அறிவு சார்ந்த முன்முடிவுகளைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு, வாழ்வில் எதையுமே ‘உள்ளது உள்ளபடி‘ நோக்க / அனுபவிக்க அறிந்து கொண்டோமானால், பிரபஞ்ச நடனமான வாழ்வில் எவருமே, எதையுமே ரசித்து ஆனந்தப்பட வாய்ப்புள்ளது.
.
மூலம்: ஸ்ரீ பரமாச்சார்யரின் இந்துமத விளக்கங்கள் ~ என்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடை ~ நர்மதா பதிப்பகம்
.
~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 110

அருட்குறள் – ஞானப்பால் 110

மறந்ததை யறிந்திடா மனம்விடுங் கணந்தனிலறிந்திடு வதாமுயிர் மெய். 

குறள் விளக்கம்

நான் இன்னார்‘ என்ற சமூக அடையாளங்களைக் கடந்து, ‘நான் யார்‘ என்ற உண்மையைக் காரண அறிவால் கண்டறிய இயலாது. காரண அறிவின் ஊற்றுக்கண்ணாகிய மனத்தை அடக்கும் திறன் கைவரப்பெறுவது மிக அரிது. எனவே, மனத்தை அதன்போக்கில் விட்டுவிடுவதே எளிய வழியாகும். 

அவ்வாறு ‘நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,’ என்ற தெளிவுடன், உடல் மற்றும் மனத்தின் பிடிப்பிலிருந்து ஒரு ஆன்மீக சாதகர் விடுபடும் அதே கணத்தில், தன்னுள்ளேயே உயிர்சக்தியாக ஒளிரும் இறைசக்தியை அவரால் உணர முடியும். இந்நிலையில், படைப்பு (உயிர்களாகிய நாம்) வேறு, படைத்தவன் (படைப்பின் மூலமான இறைைவன் [அ] சக்தி) வேறு என்ற காரண அறிவின் அறியாமையால் விளையும் இருமை நிலை அகன்றுவிடும். இவ்வாறு ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மம்) என்று தன்னை அறிதலே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும்.

KuRaL explanation

It’s not easily possible for the limited intellect to let go of the ‘I’, which is made of many social identities, and realise the Truth about ‘Who am I!’ it’s also practically impossible for most humans to control or conquer the mind, from which is the origin of the intellect. The relatively easier way is to let the mind simply go about its business, i.e. not hinder or block the ceaseless flow of thoughts in any manner. 

When a seeker on the spiritual path gains the clarity of ‘I’m not the body, I’m not even the mind,‘ and distances oneself from both, in that very moment s/he can realise the divine within, glowing as the life energy. In this state of realisation, the duality of creation (beings like us) and creator (God or source of all creation) being different, which is caused by the ignorance of the limited intellect, will vanish. Realising the Truth of ‘Aham BrahmAsmi’ (I’m Brahman) thus is known as self-realisation or enlightenment.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 109

அருட்குறள் ~ ஞானப்பால் 109

மும்மலமும் முழுவதுமாய் விலகிடநா னற்றிடவுள் நிர்மலமாய் நிற்பதுவே சிவம்.

குறள் விளக்கம் 

ஆணவம், கன்மம் எனும் கர்மவினை, மாயை ஆகிய மூன்று மலங்களும் முழுவதுமாக விலகியபின், நான் என்ற தனிப்பட்ட அடையாளம் அழிந்துபோகும். அக்கணத்தில், தன்னுள்ளேயே, எந்தவிதமான மலங்களோ, குறைபாடுகளோ இன்றி, எது எப்போதும் நிலைத்திருக்கின்றதோ, அந்தப் படைப்பின் மூலத்தினுடைய தரிசனம் கிட்டும். அதுவே சிவம் என்பதை அப்போது அனுபவப்பூர்வமாக அறியலாம். 

ஆணவம் என்பது ‘நான் இன்னார்’ என்ற, பல்வேறு சமூக அடையாளங்களால் ஏற்படும் அகந்தையைக் குறிக்கும். இது முழுவதுமாக நம் மனத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. தான் தனிப்பட்ட ஒரு படைப்பு என்று நம்மை எண்ணவைக்கும் ஆணவத்தை விட்டொழித்தால்தான் உயிர்மெய் அறிவதென்பது சாத்தியமாகும்.

கன்மம் [அ] கர்மா எனப்படும் கர்மவினை என்பது பல பிறவிகளில் ஒரு உயிரானது புரிந்த பல்வேறு செயல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. தான் செய்த செயல்களின் விளைவுகளை [அ] பலன்களை அவ்வுயிரானது அனுபவித்தாக வேண்டும். அவ்வாறு தன்னுடைய செயல்களின் பலன்களை ஒரு உயிரானது அனுபவிப்பதற்காகவே அது பல பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது. 

கர்மவினையானது பிராரப்தம், சஞ்சிதம், ஆகமியம், க்ரியமான [அ] புருஷார்த்த என்று பலவகைப்படும்.

இதில் பிராரப்தம் என்பது இப்பிறவியில் நாம் அனுபவித்தே ஆகவேண்டிய கர்மா. இதிலிருந்து மெய்ஞானிகளுக்குக் கூட விதிவிலக்கு கிடையாது. 

சஞ்சிதம் என்ற ஒட்டுமொத்தக் கர்ம மூட்டையை, ஞானோதயம் அடைந்த ஒரு குருவால், கர்ம சம்யமா போன்ற யோக வழிமுறைகள் மூலமாக முற்றிலுமாக நீக்கிவிட முடியும். 

ஆகமியம் – அதாவது, இனிமேல் செயல்படவிருக்கும் – கர்மாவைக் கையாள்வதும், க்ரியமான – அதாவது, புதிதாக உருவாக்கப்படும் – கர்மாவைத் தவிர்ப்பதும், யோக சாதனை மூலம் நிலையற்ற மனத்தின் ஓட்டத்தைக் கையாளும் பயிற்சிகளைப் பெற்று, விழிப்புணர்வோடு வாழ்வதன்மூலம் ஒரு சாதகருக்குச் சாத்தியமாகும். 

மாயை என்பது ஐம்புலன்களால் அறியப்படும் பொருள்தன்மை சார்ந்த புற உலகிலுள்ள யாவற்றையும், ஆறாவது புலனாகிய கற்றறிவால் பகுத்தறிந்து, மெய்யென்று நம்புதல். பகுத்தறிவானது கடந்தகால நிகழ்வுகள் மற்றும் தகவல்களைச் சார்ந்து, எதிர்காலம் பற்றிய பதிவுகளை ஏற்படுத்தவல்லது. நிகழ்காலத்தில், ‘இந்தக் கணம் தவிர்க்க முடியாதது‘ என்ற புரிதலோடு உயிர்மெய் அறிய விழைவோர், இப்புலன்கள் மூலமாக நிகழும் குறைபாடுடைய அறிதலைக் கடந்து உள்நோக்கிச் செல்லப் பழக வேண்டும். 

குருவருளால் ஒரு ஆன்மீக சாதகர் இம்மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுபட, யோக சாதனை போன்ற தொன்மையான வழிமுறைகளைக் கையாண்டு, இடைவிடாது முயற்சிப்பதன் மூலம், சவமாகும் ஜீவாத்மாவினுள்ளே உயிராக ஒளிரும் சிவமாகிய பரமாத்மாவின் தரிசனம் கிட்டும். இதுவே உயிர்மெய் அறிந்த மெய்ஞான நிலை ஆகும். இவ்வாறு ஞானோதயம் அடைகையில், தான் என்ற படைப்பு வேறு, சிவம் என்ற படைப்பின் மூலம் வேறு என்ற இருமை மறைந்து, படைப்பானது படைத்தவனுடன் இணைந்து ஒன்றிவிடும். 

உடலுள் உயிர் நிலைத்திருக்கையிலேயே இப்பேரானந்த நிலையை அடைந்தோர் ஜீவன்முக்தர்கள் என்று போற்றி வழிபடப்படுவர். உடலை அத்தகையோரின் உயிரானது இறுதியாக உதிர்த்து, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று, படைப்பின் மூலத்துடன் ஒன்றிக் கரைந்துவிடும் நிலையே முக்தி எனப்படும் வீடுபேறு ஆகும். இதனை அடைவதே மனிதராகப் பிறவியெடுத்த உயிரின் நோக்கம். இதுவே மனிதர்களின் பிறவிப்பயன்.

ஞானோதயம் மற்றும் முக்தியை அடைவதற்கான ஆன்மீகப் பாதைகளே கர்மம் எனும் செயல், பக்தி எனும் முழுமையான சரணாகதி, ஞானம் எனும் மெய்யறிவு மற்றும் க்ரியா [அ] கிரியை எனும் உயிர்சக்தி ஆளுமை ஆகிய நான்கு யோக வழிமுறைகள். இவற்றை ஒரு குறிப்பிட்ட சாதகரின் கர்மவினைப் பதிவு, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், உணர்வுகளைக் கையாளும் திறன் மற்றும் வாழும் தன்மை ஆகியவற்றைச் சார்ந்து, குருவானவர் சரியான விகிதத்தில் வழங்கி வழிகாட்டுவார்.

மெய்ஞானம் மற்றும் முக்தி ஆகிய உயர்நிலைகள் எவ்வகையான மனிதருக்கும் சாத்தியமே – அருளின் வழிகாட்டுதலுடன்,  கவனத்தை ஒருமுகப்படுத்தி, முழுமையான ஈடுபாட்டுடன், பலன்களின் மீது பற்றெதுவுமின்றி, இடைவிடாது முயற்சித்தால், பயணம் முற்றுப்பெறும்வரை!

~ஸ்வாமி | @PrakashSwamy

KuRaL explanation

When the three malams (impurities), viz. Ego, Karma and Maya are eradicated, the individual identity will be demolished. In that very moment, the being will have darshan of the source of creation that glows within, devoid of any impurities or imperfections. Then one will realise that source of creation as Shiva, experientially. 

Ego is the individual identity, created by the various identifications that the society imposes on a being. This is entirely the mind’s creation. Only when a being gets rid of the ego, which makes one believe in one’s individual identity, knowing / realising the Truth is possible.

Karma is the collection of actions that a being has performed in many lifetimes. The being has to experience the outcome of all such actions. The being takes many births in order to experience the fruits / results of its own actions.

There a many types of karma such as Prarabdha, Sanchita, Agamiya and Kriyamana or Purushartha.

Prarabdha is the karma that one must experience in this lifetime itself. Even realised beings aren’t exempted from experiencing Prarabdha karma.

Sanchita is the entire volume of accumulated actions of a being, over many lifetimes. This can be eradicated by a Realised Master (Guru) through yogic processes such as Karma Samyama.

Ably facing Agamiya, i.e. karma that is going to get activated in future, and completely avoiding Kriyamana or Purushartha, i.e. fresh karma that is going to be created by the being, is possible through diligent sadhana (spiritual practices) that helps one handle the uncontrollable mind effectively, and living in awareness.

Maya is believing the unreal, i.e. anything in the physical, external world, that is sensed through the five sense organs and comprehended through the sixth – the intellect, as real. The intellect is limited in nature as it uses the past events and information to project impressions about the future.

Seekers who know that ‘this moment is inevitable’ and live in the present, in order to experience ‘Life, the way it is,’ i.e., reality, will do well to go past the limited sense and intellect-based knowing and learn to turn inward.

When a seeker learns and performs ancient yogic practices diligently, with Guru’s (Realised Master) Grace, s/he will gain the darshan of Shiva, the Paramatma, glowing as the life source within the Shava (corpse-to-be), the Jeevatma. This is the state of self-realisation, aka enlightenment.

When a being attains self-realisation, the duality of thinking / believing creation (individual being) and creator (source of creation) as two distinct or different entities will vanish and the being will attain yoga (union) with the divine.
Beings who attain the union with the divine while still remaining alive in a physical form (body) are revered and celebrated as Jeevanmuktas. When a Jeevanmukta, aka Realised Being / Master chooses to drop the body for good and the Jeevatma merges with Paramatma for good, it is liberated from the repetitive birth-survival-death lifecycle and attains Mukti, the ultimate or conclusive liberation. 

Attaining Mukti is the purpose of being born as a human being. The spiritual paths to attain mukti are Karma yoga – the path of attainment through action, Bakthi yoga – the path of total surrender, Gnana yoga – the path of pure wisdom / knowing and Kriya yoga – the path of attainment through mastery of life energy. A Guru (Realised Master) offers the right mix of Sadhana, with all the four types in a certain proportion, which is determined by the Master based on the seeker’s karma, level of acceptance, ability to handle emotions, way of living, etc.

Enlightenment and Mukti are a possibility for any and all human beings, provided the being is receptive to the guidance of Grace, remains singularly focused, performs actions with absolute involvement, remains completely detached from outcomes and sustains the spiritual pursuit diligently, continuously, until the journey concludes.

~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑