இன்றைய தரிசனம் ~ விட்டதடி ஆசை.. Crocs செருப்போடு..!

இன்றைய தரிசனம் ~ விட்டதடி ஆசை.. Crocs செருப்போடு..!

நம்மில் பலர் நம்முடைய வாழ்நாள் நிறைவடைவதற்குள் எத்தனையோ திருக்கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஒவ்வொன்றிலும் தரிசன அனுபவம் மாறுபடலாம் அல்லது ஒரே மாதிரியும் இருக்கலாம். அவ்வனுபவம் இறைவி / இறைவனின் பேரருளை உள்வாங்கும் நம்முடைய தயார் நிலையையும், அன்று காலை – நமக்கு – எவ்வாறு விடிந்தது என்பதையும் பொறுத்து இருக்கக்கூடும் (இடைவிடாது திருத்தல யாத்திரை செய்யும் அடியார்கள் சிலருக்குக் காலையில் சூடான காஃபி கிடைக்காமற்போனால், அந்தத் திருத்தலத்திலுள்ள இறைவன்மீது கூடக் கோபம் வந்துவிடும்). ஒரு சில தலங்களில், ‘நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்,’ என்பதை மெய்யாக்கும் வகையில் சில நிகழ்வுகள் நம்மைப் புரட்டிப் போடும். அப்போதுதான், எத்தனையோ அடையாளங்களுக்குள் தொலைந்துபோன நம்மைவிட, ஒரே அடையாளத்துடன் (அல்லது அதுவுமின்றி) இருக்கும் அத்தலத்திலுள்ள இறைவனே பெரியவர் என்பது பொளேரென்று பள்ளியில் தமிழ் அய்யாவிடம் செவிட்டில் வாங்கிய அறையைப் போன்று புரியும்.

நான் நினைத்தபொழுதெல்லாம் திருக்கோயில் சென்று இறைவனைத் தொழும் பரம பக்தனல்ல. இல்லத்தில் தினசரி நடைபெறும் தேவி மற்றும் வேல் வழிபாடு மற்றும் திட்டமிட்டுச் செல்லும் யாத்திரைகள் தவிர்த்து, ஏதாவது திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது என்பது அபூர்வமாகவே நிகழும். ஆனால் சிறந்த (நிச்சயமாக என்னைவிட) பக்திமானான எனது இளைய சகோதரன் புண்ணியத்தில் இவ்வாரம் அது இருமுறை நிகழ்ந்தது. இன்று இரண்டாவது கோயில் விஜயத்தின்போது, தேவியின் முன்பு சிறிது நேரம் அமர்ந்திருக்கும் வாய்ப்புக் கிடைக்க, நமது குடும்பங்களில் ‘Been There, Seen / Done That‘ என்று எளிதில் விளக்கமுடியாத ஒரு திடமான தன்மையுடன் இருக்கக்கூடிய அத்தை [அ] மாமி போன்ற தோற்றத்துடன், கம்பீரமாக நின்றிருந்த அவளிடம் ஒரு சிறிய முறையீட்டை முன்வைத்தேன். இதுவும் கூட எனக்குப் பழக்கமில்லாதது.

.

இல்லத்திலும் சரி, கோயிலிலும் சரி, எப்போதும் பொதுவான வேண்டுதலன்றி, எனக்காக எதையும் பிரத்தியேகமாகக் கேட்டுப் பழக்கமேயில்லை. ராமநாதபுரத்தில் இளைய சகோதரனுக்கு அரியதான ஒரு மருத்துவக் கோளாறு ஏற்பட்டு, அவனுக்கு மதுரையில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தபோது, இரண்டு முறை இடதுகால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன்மூலம் மறுபடியும் அவ்வருடம்தான் நடக்கத் துவங்கிய காலோடு, தினசரி சிவன்கோயிலிலுள்ள நவகிரஹத்தை 108 முறை வலம்வந்திருக்கிறேன் – அவன் விரைவாகக் குணமடைய வேண்டுமென்று. அந்தச் சகோதரர்தான் இப்போது சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி (மொத்தமாக ஒரு பத்து பக்தர்கள் மட்டுமே இருந்த, பரபரப்பே இல்லாத ஒரு தினத்தின் காலையில்), தேவியின் முன்பு அமரவைத்தார்.

.

என்னப்பா விஷயம்!” என்று, ஏதுமறியாதவள் போன்று அந்த ஜெகன்மாதா என்னை நோக்கினாள். “அம்மா தேவி, தாயே, அகிலாண்டேஸ்வரி, உன்னைத்தான் தினமும் இல்லத்திலேயே போற்றித் தொழுகின்றோம். என் பிள்ளை அவனுக்கு விருப்பமான துறையில் ஒரு உயர்நிலையை அடையக் கடுமையாக முயற்சித்து வருகின்றான். உலகெங்கும் தனியாகப் பயணித்து, பழகிய உணவு கிடைக்காமல், உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனிருந்து உதவ யாருமில்லாமல் கஷ்டப்பட்டாலும், விடாமல் முயற்சிக்கிறான். இதோ, இப்போது நடந்துவிடும், அடுத்தமுறை முடிந்துவிடும் என்று நாங்கள் எல்லோருமே உறுதியாக நம்பினாலும், last mile என்ற அந்தக் கடைசிப் படியைக் கடப்பது பகீரதப் பிரயத்தனமாக இருக்கின்றது. அவனுக்கு உடல்நலக் குறைவு எதுவுமின்றி, மனக் குழப்பங்கள் அனைத்தும் அகன்று, அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தி, குறிக்கோளை விரைவில் அடைய நீதான் வழிகாட்ட வேண்டும் தாயே” என்ற என் விண்ணப்பத்தை அவளது மலர்ப்பதத்தில் சமர்ப்பித்து விட்டு, தீப ஆராதனையைத் தரிசித்துப் பிரசாதம் பெற்றுக்கொண்டு எந்தை ஈசனைக் காணச் சென்றோம். அவரிடம் எப்போதும் போல எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. இந்த perennially busy ஆன மனம் எங்கே போயிற்று என்று தேடவேண்டிய நிலையில் மனம் ‘சும்மா இரு‘ந்தது, ஆதியோகியான அந்த அப்பனின் முன்னிலையில். நாம் என்னதான் வேண்டுமென்று வேண்டிக் கேட்டாலும் அவர் கொடுக்கப்போவதென்னவோ முக்தியை மட்டுமே என்பதை என் குருநாதர் எப்போதோ தெளிவுபடுத்திவிட்டார் என்பதால், அவரது சன்னதியிலிருந்தபோது உள்ளே விரிந்த அமைதி ஆச்சரியமாகவே இல்லை. ஆனால், அப்பாவிடம் எதையாவது கேட்கப் பயப்படும் பிள்ளைகூட, அம்மாவிடம் அதை தைரியமாகக் கேட்பதுபோல், அவளிடம் ஏற்கனவே முறையிட்டாகிவிட்டது.
.
அம்மையப்பன் இருவரின் தரிசனமும் முடித்து, பிரதட்சிணம் செய்யப் போகும்போது, மறுபடியும் அவளுடைய சன்னதியில் சென்று சிறிது நேரம் அமரவேண்டுமென்று தோன்றியது. சென்றேன். ஓரிருவர் லலிதா சஹஸ்ரநாமமோ, ஏதோ ஸ்லோகமோ சொல்லியபடி அமர்ந்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை முன்பைவிடச் சற்றே அதிகரித்திருந்தது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்தேன். எட்டுத் திசையிலும் பாயும் மனம், ஓரளவு அடங்கியதாகத் தோன்றியது. “கற்பகமே, கருணைக் கண் பாராய்,” என்று மதுரை மணி ஐயர் மதுரமாகக் செவிக்குள்ளிருந்து பாடினார். நம்மை அறியாத ஒருவரிடம் நமது தேவையை விளக்கிச் சொல்வதுபோல் அவளிடம் விண்ணப்பம் வைத்த பைத்தியக்காரத்தனத்தை எண்ணிச் சிரிப்புதான் வந்தது. அவள் அறியாததா. எத்தனையோ லக்ஷம் பக்தர்கள் வந்துபோனாலும், எல்லோருக்கும் படியளக்கும் அம்மையப்பனுக்கு அவர்களின் நிலையோ, தேவைகளோ தெரியாதா என்ன? ஆனால் அந்த லோகமாதா எனது சிறுபிள்ளைத்தனமான விண்ணப்பத்தைப் பார்த்து எள்ளி நகையாடவில்லை.

.

இதுதானேயப்பா தினசரி என்முன் நடக்கின்றது… வருவோர் எல்லோரும் ஏதாவது ஒரு கவலையையோ, தேவையையோ என் முன் வைப்பது வழக்கம்தானே. அவருக்கென்ன, ‘சிவனே’ என்று சமாதியில் இருப்பார். இந்த வரம் கேட்பவர்களின் பிரச்னையை எல்லாம் நான்தானே கவனிக்க வேண்டியுள்ளது. என்னிடம் சொல்லிவிட்டாயல்லவா. இனி நான் பார்த்துக்கொள்கிறேன், கவலையின்றிப் போய் வா குழந்தாய்!” என்று என்னை ஒரு அத்தை / மாமிபோலத் திடமாகத், தெளிவாகத் தேற்றினாள் கற்பகாம்பாள். திருமயிலையில் கபாலீஸ்வரருடன் உறையும் ஜெகன்மாதா. ‘மயிலயே கயிலை‘ எனில், இவளே சதி என்ற தாக்ஷாயணி… பார்வதி… உமாதேவி… ஆயிரம் பெயருடைய உலகம்மையான லலிதா பரமேஸ்வரி. அந்தப் த்ரிபுரசுந்தரியே “நான் பார்த்துக்கொள்கிறேன் போய் வா,” என்றதும் ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கிவைத்தாற்போல் மனம் இலகுவானது. மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளிடம் வேண்டி, அவர்களது பேட்டையின் எல்லையில் வீடு வாங்கியதைப் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. ‘போய் வருகிறேன் தாயே, பிள்ளையைப் பார்த்துக்கொள் நீயே,’ என்று என் மாமியிடம் [அ] அத்தையிடம் விடைபெற்றுக் கபாலீச்சுரத்திலிருந்து கிளம்பினோம்.

.

ஆனால் அவள்தான் லீலாவிநோதினியாயிற்றே… அத்துடன் விடுவாளா. அவளது விளையாட்டுத் தொடங்கியது. கபாலீஸ்வரரிடம் விடைபெற்று, வெள்ளீஸ்வரரிடம் சென்றோம். அங்கு காமாக்ஷியாக நின்றவள், காஞ்சி ‘மங்கள காமாக்ஷி’யை (இது அங்குள்ள புகழ்பெற்ற காமாக்ஷி திருக்கோயிலை விடப் பழமையானது என்று சொல்லப்படுகின்றது; காஞ்சியின் எல்லையில் அமைந்துள்ளது) இன்னமும் தரிசிக்கவில்லை என்பதை நினைவூட்டினாள். அங்கேயே, ‘சப்த மாதாக்கள்‘ வடிவில் அமர்ந்து, இவ்வாண்டு நான் குலதெய்வ தரிசனம் செய்யத் தவறியதையும் நினைவு படுத்தி மெல்லக் குட்டினாள். அவர்களுக்கு விரைவில் வஸ்திரம் சாற்றுவதாக வேண்டிக்கொண்டு, அதற்கான முறை என்னவென்று கோயில் ஊழியரிடம் விசாரித்து அறிந்துகொண்டு, அங்கு தரிசனத்தை முடித்து, ‘கற்பகாம்பாள் மெஸ்’ஸில் காலை உணவை முடித்துக்கொண்டு (கர்மா சுமை’ கூட்டும் லிஸ்டில் இன்னொரு அவா ஐட்டம் டிக் அடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுவிட்டது, அப்பாடா), அருகே இருந்த சாய்நாத் மஹாராஜிடம் சென்றோம்.
.
நுழைவாயிலிலேயே ‘வாயில் எண் 1ல் உள்ள காலணிப் பாதுகாப்பிடத்தில் உங்கள் காலணிகளை விடவும்‘ என்று, ஒன்றுக்கு மூன்று அறிவிப்புப் பலகைகள் கதறியதை மதியாமல், மற்ற பக்தகோடிகளைப் போன்றே நாங்களும் அந்த வாயிலுக்கு அருகிலேயே காலணிகளை விட்டுச் சென்றோம். தேவியைப் போன்று தேஜோமயமாக, சாய்நாத் மஹாராஜும் பச்சை நிற ஆடையணிந்து, குறுநகையுடன் அரியாசனத்தில் வீற்றிருந்தார். அருமையான தரிசனம் முடித்து, ஆனந்தமாக வெளியே வந்தோம். செருப்பை விட்டுச் சென்ற இடத்தில வெறும் தரைமட்டுமே இருந்தது. எட்டுத் திசைகளிலும் நோக்கினோம்… ம்ஹூம், அந்தக் கரிய Crocs காலணியை எங்கும் காணவில்லை. “அவரு முன்னால இப்படியெல்லாம் எடுக்கக்கூடாதில்ல சார்,” என்று ஆதரவுக்குரல் கொடுத்த அம்மணிக்குக் கணிசமான பிக்ஷை கிடைத்தது. “இங்க இதேமாதிரி தினமும் நடக்குதுங்க,” என்று ஒருவர் தன் கருத்துக்கணிப்பற்ற முடிவை முன்வைத்தார். கோயிலின் உள்ளே ஒருகணம் நோக்கினேன். சாய்நாத் அதே குறுநகையுடன் ‘இப்போது என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்!’ என்பதுபோல் பார்த்தார். அப்படிப் பார்த்தது அவரா, அவளா..!

.
சற்றே விலையுயர்ந்த அந்தச் செருப்பின் மீது நமக்குக் கொஞ்சம் பற்றிருந்தது போலும்… அதனால் ஏறியிருக்கக் கூடிய கர்மாவின் சுமை கொஞ்சம் குறைந்தது இப்போது… இதுவும் நன்மைக்கே…‘ என்று வெற்றுக் காலுடன், மழைநீரில் நனைந்த திருமயிலைத் தெருக்களில் இன்னும் சற்று நேரம் திரிந்துவிட்டு, கோயில் குளக்கரையில் நின்றவாறே உறங்கிய கொழுகொழு வாத்துக்களைப் பார்த்து வியந்தபிறகு, சகாய விலையில் ஒரு காலணியை ஏதோ ஒரு சாலையோரக் கடையில் வாங்கி அணிந்துகொண்டு, MRTS ரயிலைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

.

பெரிய பாதை வழியாகச் சபரிமலை யாத்திரை சென்றபோது, இதே போல, கொஞ்சம் பெருமிதத்தோடு போட்டுக்கொண்டு திரிந்த காவிநிறக் குர்த்தாவை, தேநீர் அருந்த அமர்ந்த ஏதோ ஒரு விரியில் விட்டுவிட்டு, இருந்த ஒரே மேல்சட்டையும் போய்விட, யாரோ இரவல் கொடுத்த, அளவில் பெரிய சட்டையை இரண்டுநாள் அணிந்தது ஞாபகம் வந்தது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது‘ என்று எந்தை ஈசனின் பெருமையைக் குறித்துக் கூறுவதுண்டு. ஆனால் ‘சக்தியில்லையேல் சிவமில்லை,’ என்பதால், அவளின்றி அவனும்கூட அசையமாட்டான் என்று தோன்றியது. கருணைக்கடலான அன்னை கற்பகாம்பாளின் விளையாட்டுப் புரிந்தது. “விட்டதடி ஆசை, Crocs செருப்போடு,” என்று இல்லத்தில் கொலுவீற்றிருக்கும் ‘ஜெய் பைரவி தேவி‘யின் பதம்பணிந்து, ‘நம்மில் பலர் நம்முடைய வாழ்நாள் நிறைவடைவதற்குள் எத்தனையோ திருக்கோயில்களுக்குச் செல்வதுண்டு…’ என்று இந்தப் உயிர்மெய் பதிவை எழுதத் தொடங்கினேன்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #105

அருட்குறள் ~ ஞானப்பால் #105
வறியவர் செல்வரெவ் வகையின ராயினும்

அரியதிப் பிறவியறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஒரு உயிரானது இப்பிறவியில் மனிதராகப் பிறந்திருப்பதன் பெருமையை
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது…
என்று தொடங்கும் தனிப்பாடலில் ஒளவையார் அருமையாக விளக்கியுள்ளார்.

எனவே, மனிதராகப் பிறந்த ஒருவர், தான் வறியவன்/ள், செல்வன்/ள், உயர்ந்தவன்/ள், தாழ்ந்தவன்/ள், கற்றவன்/ள், கல்லாதவன்/ள், பலர் தான் சொல்வதைக் கேட்கும் செல்வாக்கு உடையவன்/ள், யாராலும் மதிக்கப்படாத எவ்விதப் பெருமையோ புகழோ அடையாதவன்/ள், என்றெல்லாம் பயனற்ற புற அடையாளங்களால் பெருமிதம் கொண்டு திரிவதையும், அல்லது புலம்பித் தவிப்பதையும் விடுத்து, படைப்பிலுள்ள எண்ணற்ற உயிரினங்களில் அரியதான இப்பிறவி தனக்குக் கிடைத்ததே பெரும்பேறு என்பதை உணர்ந்து, இப்பிறவியிலேயே உயிர்மெய் அறிந்து உய்வதற்கு முயலவேண்டும்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
In her poem that starts such,
Ariyadhu kEtkin varivadi vElOi
Aridharidhu maanidar aadhal aridhu…
poetess of the sangam period AvvayAr enchantingly explains the rare privilege of a being born as a human being.

Hence, any human being who either brags or sulks about being rich, poor, elite, downtrodden, educated, illiterate, influential, nondescript, must simply let go of such external identities; realise that being given the opportunity to be born as human in this lifetime, amidst millions of other species, is itself a great boon; and strive to attain self-realisation and mukti within this lifetime itself.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #104

அருட்குறள் ~ ஞானப்பால் #104
தீபந்தாய் நெய்தந்தை நற்குருதிரி சோதியிறை

பாபஞ்சேர் வினைவிட்டறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மனிதருடைய வந்தனத்திற்கு ஒரு வரிசை உண்டு. பசுவாகிய உயிர், பதியாகிய சிவத்தை அடையப் படிப்படியாக விடவேண்டிய பாசங்களின் படிகளாகவும் [அ] நிலைகளாவும் இவற்றைக் கொள்ளலாம்.

.

இதில் முதற்படியான தாயார் தீபத்தை ஒத்தவர். நெய்யையும், திரியையும் சுமக்கும் தீபம் இல்லையெனில், ஜோதியின் ஒளி இருக்க வாய்ப்பில்லை. தீபமாக உள்ள தாயே ஒரு உயிரின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளார்.

.

இரண்டாவது படியான பிதா [அ] தந்தை விளக்கிலுள்ள நெய்யைப் போன்றவர். இது எப்போதும் குறையாமலிருந்தால்தான் விளக்கு தொடர்ந்து ஒளிதர முடியும். எனவே தொழில் செய்தோ, பணி புரிந்தோ, பொருளீட்டி வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்கும் நெய்போன்று தந்தையானவர் ஒரு உயிரின் வளர்ப்பு மற்றும் இருப்பிற்கு ஆதாரமாக உள்ளார்.
(பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட தற்கால வாழ்வில், தாயார் விளக்கு மட்டுமாக இல்லாமல், நெய்யாகவும் விளங்குவது நடைமுறை உண்மை).
.

தீபமாகிய தாய் மற்றும் நெய்யாகிய தந்தை இருவரும் பிழைப்பு சார்ந்த பொருளாதார வாழ்விற்கு ஆதாரமானவர்கள். ஆனால் மனிதன் பிழைப்பைக் கடந்து வாழ்வை முழுமையாக ‘உள்ளது உள்ளபடி’ அறியும் உந்துதலுடையவன். அந்த மெய்த் தேடலுக்கான ஒளியை அளிக்கும் திரியாக குரு உள்ளார். பெற்றோர் சீராட்டிப் பாதுகாத்து வளர்த்தாலும், திரியற்ற தீபத்தால் ஒளிதர இயலாது. எனவே குருவின் பங்கு மெய்ஞான ஒளிபரவி, அஞ்ஞான இருள் அகல இன்றியமையாதது.
.
தீபம் (தாய்), நெய் (தந்தை), திரி (குரு) ஆகிய மூன்றும் பசுவாகிய உயிருக்கு வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உதவுகின்றன. குருவாகிய திரி அளிக்கும் மெய்ஞான ஒளியில், பசுவானது அதன் உள்ளொளியாக உள்ள பதியாகிய இறைச்சக்தியானது சுடர்விடும் ஜோதியாக ஒளிர்வதை உணர முடிகின்றது.

.

இந்த ஞானப் பேரொளியைக் கொண்டு, அறியாமை எனும் இருளை அகற்றி, முறையற்ற மற்றும் பயனற்ற செயல்களாகிய பாவங்களால் பல பிறவிகளில் கூடிவிட்ட சுமையாகிய கர்மவினையை விட்டொழித்து, வீடுபேறு எனும் இறுதி விடுதலையாகிய முக்தியை அடைவதற்கு உயிரானது முயலவேண்டும். இதுவே மனிதராகப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #104

அருட்குறள் ~ ஞானப்பால் #104
தீபந்தாய் நெய்தந்தை நற்குருதிரி சோதியிறை

பாபஞ்சேர் வினைவிட்டறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மனிதருடைய வந்தனத்திற்கு ஒரு வரிசை உண்டு. பசுவாகிய உயிர், பதியாகிய சிவத்தை அடையப் படிப்படியாக விடவேண்டிய பாசங்களின் படிகளாகவும் [அ] நிலைகளாவும் இவற்றைக் கொள்ளலாம்.

.

இதில் முதற்படியான தாயார் தீபத்தை ஒத்தவர். நெய்யையும், திரியையும் சுமக்கும் தீபம் இல்லையெனில், ஜோதியின் ஒளி இருக்க வாய்ப்பில்லை. தீபமாக உள்ள தாயே ஒரு உயிரின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளார்.

.

இரண்டாவது படியான பிதா [அ] தந்தை விளக்கிலுள்ள நெய்யைப் போன்றவர். இது எப்போதும் குறையாமலிருந்தால்தான் விளக்கு தொடர்ந்து ஒளிதர முடியும். எனவே தொழில் செய்தோ, பணி புரிந்தோ, பொருளீட்டி வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்கும் நெய்போன்று தந்தையானவர் ஒரு உயிரின் வளர்ப்பு மற்றும் இருப்பிற்கு ஆதாரமாக உள்ளார்.
(பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட தற்கால வாழ்வில், தாயார் விளக்கு மட்டுமாக இல்லாமல், நெய்யாகவும் விளங்குவது நடைமுறை உண்மை).
.

தீபமாகிய தாய் மற்றும் நெய்யாகிய தந்தை இருவரும் பிழைப்பு சார்ந்த பொருளாதார வாழ்விற்கு ஆதாரமானவர்கள். ஆனால் மனிதன் பிழைப்பைக் கடந்து வாழ்வை முழுமையாக ‘உள்ளது உள்ளபடி’ அறியும் உந்துதலுடையவன். அந்த மெய்த் தேடலுக்கான ஒளியை அளிக்கும் திரியாக குரு உள்ளார். பெற்றோர் சீராட்டிப் பாதுகாத்து வளர்த்தாலும், திரியற்ற தீபத்தால் ஒளிதர இயலாது. எனவே குருவின் பங்கு மெய்ஞான ஒளிபரவி, அஞ்ஞான இருள் அகல இன்றியமையாதது.
.
தீபம் (தாய்), நெய் (தந்தை), திரி (குரு) ஆகிய மூன்றும் பசுவாகிய உயிருக்கு வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உதவுகின்றன. குருவாகிய திரி அளிக்கும் மெய்ஞான ஒளியில், பசுவானது அதன் உள்ளொளியாக உள்ள பதியாகிய இறைச்சக்தியானது சுடர்விடும் ஜோதியாக ஒளிர்வதை உணர முடிகின்றது.

.

இந்த ஞானப் பேரொளியைக் கொண்டு, அறியாமை எனும் இருளை அகற்றி, முறையற்ற மற்றும் பயனற்ற செயல்களாகிய பாவங்களால் பல பிறவிகளில் கூடிவிட்ட சுமையாகிய கர்மவினையை விட்டொழித்து, வீடுபேறு எனும் இறுதி விடுதலையாகிய முக்தியை அடைவதற்கு உயிரானது முயலவேண்டும். இதுவே மனிதராகப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று… ஒன்று… நன்று..! ~ ஆசிரியர், ஆசான், குரு ~ பகுதி 2

இன்று… ஒன்று… நன்று..!

ஆசிரியர், ஆசான், குரு ~ பகுதி 2

மூன்றாவதாக குரு. அவரைப் பற்றி அறியுமுன், முதல் பகுதியை ஒருமுறை படித்துவிடுவது உசிதம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசிரியர், ஆசான், குரு ~ பகுதி 1 ~ http://bit.ly/2ksu8IL
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மூன்றாவதாக குரு. வாழ்க்கையில் பல்வேறு வகையான ஆசிரியர்களை நாம் சந்தித்துப் பயிற்சி பெற்றாலும், அவர்களில் பெரும்பாலானோர் ‘பிழைப்பு’ என்ற வாழ்க்கையின் ஒரு அங்கத்திற்கு மட்டுமே நமக்கு உதவிபுரிய முடியும். ஆனால் வாழ்வு என்பது நம்மையும், நாம் வாழும் இந்தச் சிறிய கிரகமான பூமியையும் தாண்டி, பிரபஞ்ச அளவில் நிகழும் மாபெரும் தொடர் இயக்கம். இதில் நம்போன்ற, எங்கோ அண்டத்தின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறிய கிரகத்தில் வாழும் உயிரினங்கள், பிரபஞ்ச அளவில் ஒரு தூசியின் அளவுகூடக் கிடையாது.

ஆனாலும் நாமும் இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாகவே இருக்கின்றோம் எனும்போது, ‘நான் யார்?‘, ‘எனது பிறவியின் பயன் என்ன?‘, ‘நான் ஒரு தனித்த படைப்பா அல்லது பிரம்மாண்டமான படைப்பின் ஒரு அங்கமா?’, ‘இத்தனை வகையான படைப்புகளில் ஒன்றுகூட என்போன்ற மனிதனால் படைக்கப்பட்டதில்லை எனும்போது, இவற்றைப் படைத்தது யார்?’, ‘அவ்வாறு யாவற்றையும் படைத்தவனை அறிவது சாத்தியமா, எவ்வாறு?‘, ‘அறிதலுக்கான தகுதியும், தேவையான முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் யாவை?‘, ‘இது பற்றியெல்லாம் ஏற்கனவே சிந்தித்து, உண்மை அறிந்தவர்கள் யாரேனும் உள்ளனரா?‘, ‘அவ்வாறு உயிர்மெய் அறிந்தவர்கள் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு அந்த ஞானத்தை அடைவது எவ்வாறு என்று கற்பிப்பார்களா?‘ போன்ற எண்ணற்ற கேள்விகள் எழுவது இயல்பே. இத்தகைய கேள்விகள் ஒரு மனிதனின் உள்ளே எழத்துவங்கிய கணமே அவனது ஆன்மீகத் தேடல் (seeking) தொடங்கிவிடுகிறது.   

SwamyGurus2

YouTubeல் அலைபேசி போன்ற கருவிகள் (gadgets) பற்றிய ஒளிப்படம் பகிரும் teenage இளைஞர்/ஞி கூடத் தன்னை CellGuru [அ] TechGuru [அ] GadgetGuru என்று அழைத்துக் கொள்ளும் தற்காலத்தில், குரு (Guru) என்ற உயர்ந்த சொல்லானது, காரணமின்றிக் கல்லடி பட்ட தெருநாயை விட மோசமான நிலையிலுள்ளது என்பது வருத்தத்திற்குரிய உண்மை. தொன்மையான இக்கலாச்சாரத்தில், ஞானோதயம் அடைந்து, வாழ்வு பற்றிய ஆதாரக் கேள்விகளுக்கான விடையை நேரடி அனுபவம் மூலமாகத் தம்முள்ளே அறிந்த ஞானிகளையே குரு என்கிறோம். ஆதியோகி ஏழு முனிவர்களுக்கு யோகத்தின் சாரத்தை ஆதிகுருவாக வழங்கிய காலம் முதலாக, இத்தேசத்தில் ஏராளமான குருமார்கள் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். இப்போதும் இருக்கின்றனர். அவர்களுடைய அருள் மற்றும் வழிகாட்டுதலால், எந்தவொரு மனிதராலும் உயிர்மெய் அறிந்து, வீடுபேறு எனப்படும் இறுதி விடுதலையாகிய முக்தி நிலையை அடைய முடியும். இதுவே மனிதராகப் பிறவி எடுத்ததன் நோக்கம் மற்றும் பயன் ஆகும். 

.

பிரபஞ்ச நிகழ்வான வாழ்வை ‘உள்ளது உள்ளபடி‘ நோக்கும் மற்றும் அனுபவிக்கும் வித்தையைக் கற்பிக்கும் ஞானோதயம் அடைந்த குருவானவர், ஆசிரியர் மற்றும் ஆசான் ஆகியோரை விடவும் மிக உயர்ந்தவர் என்பதை உணர்த்துவது,

‘குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மஹேஸ்வர; குரு சாக்ஷாத் பரப்பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ’

எனும் ஸ்லோகமாகும். இதன் பொருள், ‘குருவே படைக்கும் பிரம்மா; குருவே காக்கும் விஷ்ணு; குருவே தேவதேவனாகிய மஹேஸ்வரன்; குருவே நேரடியாக நாம் காணக்கூடிய பரப்பிரம்மம்; அத்தகைய உன்னதமான குருவிற்கு எனது பணிவார்ந்த வந்தனங்கள்!

SwamyGurus1

ஞானோதயம் அடைந்த ஒரு குருவின் வழிகாட்டுதல் இப்பிறவியில் கிடைப்பதென்பது, முற்பிறவிகளில் நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த நல்வினையின் விளைவாகும். குருவானவர் window shopping செய்து கண்டுபிடிக்கப்படும் பொருளோ, சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான like பெறும் சாமானிய  மனிதரோ அல்ல. குரு என்பவர் ஒரு மகத்தான இருப்பு (presence). அவரது உரு என்பது சகுண பிரம்மாகிய இறை உருவினின்றும் வேறுபட்டதல்ல. நிர்குண பிரம்மத்தை அனுபவபூர்வமாக அறிந்த குருவானவர், அவ்வனுபவத்தை அடைந்து, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுதலை பெற விழையும் ஆன்மீக சாதகர்களுக்கு ஒரு வாய்ப்பாக, ஆன்மீகப் பெருவெளியின் வாயிலாக விளங்குகிறார். 

.

இத்தகைய பெருமை வாய்ந்த குருவை நாம் எவ்வாறு கண்டறிவது. ‘When the seeker is ready (or prepared), Guru happens (or appears),’ என்று ஆன்மீகத்தில் சொல்வதுண்டு. ‘சாதகர் தயார் நிலையில், அதாவது பக்குவப்பட்ட நிலையில் உள்ளபோது, குரு நிகழ்வார் [அ] தோன்றுவார்,’ என்பது இதன் அர்த்தம். ஆக, குரு என்பவர் இப்பிறவியில் வாய்ப்பதென்பது ஒரு மகத்தான ‘நிகழ்வு.’ அது நிகழும்போது, அந்நிகழ்வில் மையமாக உள்ளவரே நமது குரு என்பதை நாமாகவே உள்ளுணர்வில் அறிந்துவிடுவோம். இது பல மஹான்கள் மற்றும் யோகிகளின் வாழ்வில் நிகழ்ந்துள்ளது என்பதை புராண மற்றும் சரித்திரப் பதிவுகளின் பகிர்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது. 

RealisedMasters

பரமஹம்ச யோகானந்தர் குருவை எங்கெல்லாமோ தேடிவிட்டுத், தனது ஊருக்கு அருகிலேயே கண்டுகொண்தபோது, ஸ்ரீ யுக்தேஸ்வர் அவரை ‘ஒருவழியா வந்து சேர்ந்தியப்பா!’ என்பதுபோல் கேட்டதாகச் சொல்வார்கள். அதாவது, அவரது வருகையை அறிந்து குரு காத்திருந்தார்.

ஸ்வாமி விவேகானந்தரின் ‘நீங்கள் காண்பதாகச் சொல்லும் கடவுளை எனக்கு காட்ட முடியுமா?‘ என்ற கேள்விக்குப் பதிலாக பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரது இதயத்தின் மீது தனது பாதத்தை வைக்க, அக்கணத்திலேயே அவர்தான் தனது குரு என்பதைக் கண்ணீர் மல்க, ஐயமற உணர்ந்தார்.

ஸ்வாமி சின்மயானந்தர்இமாலய யோகிகளெல்லாம் பொய்யர்கள் என்று உலகிற்கு வெளிப்படுத்துவேன்,’ என்பதுபோல் சூளுரைத்துக் கிளம்பிய இறை நம்பிக்கையற்ற இளைஞர். அவர் பகவான் ரமண மஹரிஷியைக் கண்டபோது, அந்த பிரம்ம ஞானியின் அருட்பார்வையால் அவருள் இருந்த அறியாமை அழுக்கு கழுவித் துடைக்கப்பட்டது. பின்னர் ஸ்வாமி சிவானந்தாவிடம் தீக்ஷை பெற்றபோது அந்த யோகிகள் ‘சும்மா இரு’ என்று ஒரு குகையில் உட்காராமல், ஓயாது தன்னலமற்ற சேவையும் (கர்ம யோகம்) செய்வர் என்பதை நேரடியாகக் கண்டார். ஸ்வாமி சிவானந்தாவே அவரை  ஞான யோகியாகிய ஸ்வாமி தபோவனம் அவர்களிடம் அனுப்பி வைத்தார். இப்படியாக யோகிகளைப் பொய்யர்கள் என்று நிரூபிக்கக் கங்கணம் கட்டிக் கிளம்பிய அந்தக் கேரள இளைஞர், ஸ்வாமி சின்மயானந்தா என்று ஜெகத் குருவாகி, சின்மயா மிஷன் மூலமாக சனாதன தர்மத்தின் வேர்களை உறுதிப்படுத்தி, உலகளாவிய மரமாகக் கிளைபரப்பச் செய்தார்.

ஸ்ரீ எம் அவர்கள் ‘இனியும் என் குருவைக் காண இயலாது போனால், இம்மலையிலிருந்து குதித்து உயிரை விடுவேன்,’ என்ற உறுதியுடன் நோக்கிய கணத்தில், பத்ரிநாத் திருத்தலத்தில் ஒரு குகையின் வாயிலில் ‘துனி’ என்ற அணையா நெருப்பைக் கண்டு, அதை நோக்கிச் சென்று, அங்கு தனது குருவைக் கண்டு பணிந்தார்.

சத்குரு அவர்கள் இதற்கு முந்தைய ஒரு பிறவியில், யோக சாதனையின் உச்ச நிலையில் இருந்தபோதும் மெய்ஞ்ஞானம் அடையாது தவித்தபோது, அங்கு தோன்றிய அவரது குருவாகிய பழனி ஸ்வாமி அவர்கள் தனது தண்டம் என்ற கோலால் அவரைத் தொட்டு மெய்ஞ்ஞானம் எனும் பேரானந்த அனுபவம் நிகழ வைத்து அருள்பிரிந்தார். அந்த குருவின் ஆக்கினையை, தியானலிங்கம் என்ற ஏழு சக்கரங்களும் உயிரூட்டப்பட்ட வாழும் குருவை அகத்திய முனியின் பிராண பிரதிஷ்டை முறையில் உருவாக்கியதன் மூலமாக இப்பிறவியில் நிறைவேற்றியதோடு, சத்குரு அவர்கள் கோடிக்கணக்கான சாதகர்களுக்கு உயிர்மெய் அறிந்து உய்யும் வழிகாட்டியாகவும் திகழ்வதோடு, ‘காவேரி கூக்குரல்’ போன்ற சமூக இயக்கங்கள் மூலமாக மனிதர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார். அவரே எனது குரு என்பதை அறிந்தது எனது வாழ்க்கையின் போக்கையே முற்றிலுமாக மாற்றிப்போட்டது என்னை அறிந்தோரும் அறிந்த உண்மை.

qvt16.jpg

வித்யா கர்வம் எனப்படும் ஞானச் செருக்கின் பெருமிதத்தில் திளைத்திருந்த என்னை, எனது அலுவலக வளாகத்தில் நிகழ்ந்த ஒரு யோகப் பயிற்சி வகுப்பின் அறிமுக ஒளிப்படப் பதிவில் (video) பேசிய சத்குரு வேரற்ற மரம்போல வீழ்த்திய கணத்தில், ‘நான்’ என்ற ஆசாமி காணாமற்போக, நான் எனது குருவை நான் கண்டுகொண்டேன். பின்னர் அவரை நேரில் காணும் பேறு பெற்றபோது, என்வழியாகப் பாய்ந்த அவரது பார்வை வருடலில் (நயன தீக்ஷை), மடைதிறந்த வெள்ளமாகக் கண்ணீர் பெருக, அதுவரை எதற்கும் வாய்விட்டு அழாத இந்த அழுத்தக்காரன், அந்தப் பெருங்கூட்டத்தில் வெட்கமின்றிக் கதறி அழுது, அவர்தம் கருணை மழையில் நனைந்து கரைந்து போனேன். திருக்கைலாய யாத்திரையின்போது, மானசரோவர் ஏரிக்கரையில் அவருடன் சத்சங்கத்தில் அமர்ந்திருக்கையில், நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருந்த அந்தக் கொட்டகை முழுவதும் அவரது இருப்பை உணர்ந்தபோது, குரு என்பவர் நம்மைப் போன்ற மனித உருவமாகத் தோன்றினாலும், அவர் உருவைக் கடந்த ஒரு இருப்பு என்பதை அறிந்து உவகை கொண்டேன் (அப்போதும் இடைவிடாத கண்ணீர் மழைதான்).

பின்னர் நன்னகாரு (தற்போது மஹாசமாதி அடைந்துவிட்டார்) போன்ற ஞானோதயம் அடைந்த குருமார்களின் இருப்பிலும், தாடிக்கார ஸ்வாமிகள்சாங்கு சித்த சிவலிங்க நாயனார் (ஆலந்தூர் – சென்னை) மற்றும் குருசாமி (ராஜபாளையம் – போகரின் சமகாலத்தவர்) போன்ற சித்தர்களின் ஜீவ சமாதிகளிலும், எனது குருநாதரின் இருப்பையே உணர்ந்தபோதும், முதன்முறையாகப் பதினெட்டு படியேறிச் சபரிமலையில் தர்ம சாஸ்தாவைத் தரிசிக்கையில் அவரது உருவம் எனது குருவாகவே (நீண்ட வெண் தாடியுடன்) தோன்றியபோதும், உத்தர காசியில் ஸ்வாமி தபோவன் (ஸ்வாமி சின்மயானந்தாவின் குரு) அவர்களின் அறையிலும், ரிஷிகேசத்தில் ஸ்வாமி சிவானந்தா அவர்கள் அணிந்த ஆடைகள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலும், ஜோஷிமத்தில் உள்ள சங்கர மடத்தில் ஆதிசங்கரரின் நேரடி சீடராகிய தோடகாச்சார்யாரின் பாதுகை இருக்கும் குகையிலும், ‘குரு சாகஷாத் பரப்பிரம்மா‘ என்பதை அவர்தம் உயிர்ச்சக்தியின் பிரவாகத்தில் நனைந்து, அனுபவபூர்வமாக  அறிந்தேன். எனினும், இவ்வனுபவங்கள் அனைத்துமே ஆன்மீகப் பயணத்தில் ஏற்படும் நிகழ்வுகளே, பயணத்தின் முடிவல்ல என்பதால், இந்த சாதகனின் பயணம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  

.

ஸ்வாமியின் குருவாகிய சத்குருவைப் பற்றிய பல்வேறு பதிவுகளை இத்தொகுப்பில் காணலாம்…

.      

thinking2

அதுசரி, ‘குரு நிகழும் வரையில் சும்மா மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ராடானின் சிற்பம் போலக் காத்திருக்க வேண்டியதுதானா?‘ என்ற கேள்வி இப்போது எழலாம். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்களைப் புரிகையில் கூடச் ‘சும்மா இரு’ப்பது எப்படி என்று நடைமுறை வாழ்க்கைக்கேற்ற வகையில் ‘குரு’வானவர் வந்து வழிகாட்டும் வரையில், அந்நிகழ்வுக்காக நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இதுவரையில் இருந்த எத்தனையோ குருமார்களின் வழிகாட்டுதல்கள் நூல்கள், ஒலி மற்றும் ஒளிப் பதிவுகள் மூலமாகக் கிடைக்கின்றன. அவற்றில் பொதிந்துள்ள உண்மைகளைக் கசடறக் கற்று, தினசரி வாழ்வில் அதற்குத் தக நிற்க முயல்வது, பிழைப்பு எனும் புறவாழ்க்கைத் தளத்தில் இருப்போர் அதிலும் சீராகவும், சிறப்புடனும் செயல்படவும், அதைக் கடந்த அக வாழ்வுத் தலத்தில், தக்க சமயத்தில் உலாவத் தயாராவதற்கும் உதவும். இவ்வகைப் பயிலுதல் மற்றும் பயிற்சிகள் தன்னார்வத்தாலும்  நிகழலாம், இவற்றில் தேர்ச்சியுள்ள ஒருவரின் வழிகாட்டுதலிலும் நிகழலாம்.

உதாரணமாக, உயிர்மெய் அறிதல் மற்றும் முக்தி அடைதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாக ஜெகத்குருவாகிய ஆதிசங்கரர் விவேக சூடாமணி, ஆத்ம போதம், தத்வ போதம், பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா, அபரோக்ஷ அனுபூதி, பஜ கோவிந்தம் போன்ற பல நூல்களை வழங்கியுள்ளார். இவற்றை நாமாகவே கற்றுத் தெளிவதற்குக் காலமும், சமஸ்க்ரித மொழித் தேர்ச்சியும் தேவை. இதேபோல், சீரிய வாழ்விற்கான முழுமையான வழிகாட்டியான பகவத்கீதைக்கு மஹாகவி பாரதி முதல், ஸ்வாமிகள்  சிவானந்தா, சின்மயானந்தா, சித்பவானந்தர் போன்ற பல மஹான்கள் எழுதிய உரைகள் உள்ளன. ஆனால், இந்நூல்களில் ஏற்கனவே தேர்ச்சியுள்ள ஒருவரிடம் இவற்றைக் கற்பது, அவற்றிலுள்ள ஞானத்தின் சாரத்தை எளிமையாகவும், விரைவாகவும் அறிவதற்கு உதவும். இதுபோன்று, குரு அல்லாது  ஆன்மீக சாதகரின் மெய் தேடலுக்கு உதவுவோரை ‘உபகுரு’ எனலாம். நேரடியாகவோ, மறைமுகவாகவோ ஒரு சாதகருக்கு இத்தகைய உபகுருக்களின் வழிகாட்டுதல் எப்போதுமே கிடைத்தவண்ணம் இருக்கும் என்பதும் எனது அனுபவ உண்மை.

உபகுரு என்பவர் யார் மற்றும் ஸ்வாமியின் உபகுரு சோஹமானந்தா பற்றி இப்பதிவில் அறியலாம்…

இவ்வாறு ஆன்மீக வழிமுறைகளைக் கற்பதில் ஒரு எச்சரிக்கை மட்டும் தேவை. செயல்முறையாக உள்ள எந்தப் பயிற்சியையும் (உ.ம்: யோகாசனம், பிராணாயாமம், க்ரியா யோகப் பயிற்சிகள், யந்திர வழிபாடு…), அதைப் பிறருக்குக் கற்றுத் தரக்கூடிய தகுதிபெற்ற பயிற்சியாளர் மூலமாக மட்டுமே கற்றுப் பயிற்சி செய்ய வேண்டும். புத்தகத்தில் படித்தோ, ஒளிப்படம் பார்த்தோ ஆன்மீகச் செயல்முறைப் பயிற்சிகளைச் செய்வது உடல் மற்றும் மனநலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். வேறு வகையில் சொல்வதானால், ஆன்மீகம் பற்றிய தகவல்களைத் தாமாகவே ஒருவர் கற்க முயல்வதில் (புத்தகம், ஒளி மற்றும் ஒலிப்பதிவு மூலம்) தவறில்லை. அவற்றைக் கசடறக் கற்க, அவற்றை நன்கறிந்த உபகுரு போன்றோரின் வழிகாட்டுதல் தேவை. ஆனால் கற்றதைச் செய்முறைப் பயிற்சியாக மேற்கொண்டு நிற்க அதற்குத் தக என முயல்வதற்கு, குரு அல்லது ஒரு குருவால் பயிற்றுவிக்கப்பட்டோரின் வழிகாட்டுதல் இன்றியமையாதது.                                         

SQ-6Apr17

குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு சாதகரால் உயிர்மெய் அறியவோ, முக்தி அடையவோ முடியவே முடியாதா?‘ என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். பல்லாயிரக்கணக்கான ஞானோதயம் அடைந்த குருமார்கள் உள்ள தொன்மையான இக்கலாச்சாரத்தில், தாமாகவே மெய்ஞ்ஞானம் அடைந்தோர் ஆதியோகி ஈசன், கவுதமர் எனும் புத்தர், பகவான் ரமண மஹரிஷி போன்று விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் வெகு சிலரே. உன்னதமான யோகியான கிருஷ்ண பரமாத்மாவிற்கும், சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஜெகத்குரு ஆதி சங்கரருக்கும் கூட குரு இருந்தார் என்பதை நாமறிவோம். எனவே, GPSஐப் பயன்படுத்தி வழிகாட்டும் Google maps அலைபேசியிலேயே இருக்கும்போது, நானாகவே அலைந்து திரிந்து வழியைக் கண்டுபிடிப்பேன் என்று தற்போது ஒருவர் ஆன்மீகப் பாதையில் கிளம்பினால், அவரைக் ‘கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்‘ என்றே கருத முடியும். குரு இல்லாமல் முக்தி அடைய முடியாது என்றில்லை. ஆனால் அவ்வாறு நிகழ இன்னமும் பல பிறவிகள் ஆகிவிடலாம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

.

DSC00477பாடத்திட்டக் கல்வியைக் கற்றுத் தரும் ஆசிரியர் பிழைப்பு சார்ந்த பொருளாதார வாழ்விற்கு அடித்தளம் இடுபவர். பெரும்பாலான மனிதர்கள் சமூகத்தின் அங்கமாக இருக்கும் நிலையில், இந்த அடித்தளம், வெறும் ஏட்டுக்கல்வியாக இருந்தபோதிலும் இன்றியமையாதது. எனவே இத்தகைய ஆசிரியர்களுக்கு நமது நன்றி. இவர்களுள் சற்றே மாறுபட்ட முயற்சிகளின் மூலம், மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொண்டு வந்து, அவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, திறமையை வளர்த்துக்கொள்ள ஆர்வமூட்டும் ஆசிரியர்களுக்கு நமது வந்தனம்.

.

20140108_164922பிழைப்பிற்கான நடைமுறைப் பாடங்களை அனுபவ அறிவின் மூலம் வழங்கும் ஆசான், கல்வி என்ற அடித்தளத்தின் மீது தொழில் [அ] பணி என்கிற அனுபவக் கட்டிடத்தைக் கட்ட உதவுபவர். பிழைப்புத் தளத்தில் தனிப்பட்ட மனிதனின் வெற்றிக்கு இன்றியமையாததாகத் தோன்றும் சுயநலத்தைச் சிறிது நேரமேனும் ஒதுக்கி வைத்துவிட்டு, பிறருடைய வெற்றிக்காக உதவும் ஆசான்களுக்கு நமது நன்றி. இவர்களுள், திறன் மட்டுமல்லாது, ஒருவருடைய திறமையையும் கண்டறிந்து, அதை முறையாகப் பயன்படுத்த வழிகாட்டும் ஆசான்களுக்கு நமது வந்தனம்.  

.

கல்வியும், பிழைப்பும் புற வாழ்வாகிய பிழைப்பின் அடித்தளம் மற்றும் கட்டிடம் போன்ற அத்தியாவசிய அங்கங்கள். ஆனால் புற வாழ்வாகிய பிழைப்பே கூட ஒற்றைக் கட்டிடத்தினுள்ளேயே முடிந்து விடுவதில்லை எனும்போது, அக வாழ்வாகிய ஆன்மீகம் இத்தகைய குறுகிய கட்டுப்பாடுகளுக்குள் அடங்குமா என்ன! புற வாழ்விலிருந்தவாறே ஆன்மீக சமுத்திரத்தில் கால் நனைக்க விழையும் இல்லறவாசிகளுக்கும், சமுத்திரத்தின் பெரும் பரப்பில் பயணித்து அதன் கரையைக் காண விழையும் ஆன்மீக சாதகர்களுக்கும் வழிகாட்டுபவர் ஞானோதயமடைந்த குரு. உண்மையான குருவானவர் நம்மை சம்சாரத்திலிருந்து விடுபட்டுச் சன்யாசம் கொள்ள வலியுறுத்துபவரோ, நம்முடைய பாவங்களைப் போக்கிப் புண்ணியாத்மாவாக நம்மை மாற்றும் வித்தகரோ அல்ல. பிரபஞ்ச நிகழ்வாகிய பிரம்மாண்டமான வாழ்வில், ‘நான் இன்னார்’ என்ற அடையாளம் எத்தகைய பம்மாத்து என்பதை நமக்கு உணர்த்தி, வாழ்வை ‘உள்ளது உள்ளபடி’ அனுபவபூர்மாக உணர்ந்து, அதன்மூலம் இறுதி விடுதலையாகிய வீடுபேற்றை அடைய உதவும் ஞான வழிகாட்டியே குரு ஆவார்.     

ak61.jpg

குரு என்ற சொல்லே வந்தனத்திற்குரியது. அதன் பொருள் இருளை நீக்கும் ஒளி என்பதே. ஆன்மீகப் பாதையில் மெய்தேடி நெடும்பயணம் செய்ய வழிகாட்டும் விளக்காகிய குருவின் அளப்பரிய அருளின் ஒளியின்றி, காரண அறிவால் விளையும் அறியாமையாகிய இருள் அகலாது. படைத்தவன் வேறு, படைப்பு வேறு எனும் இருமை ஆகிய மடமை விலகி, படைத்த இறைச்சக்தியுடன் படைப்பாகிய உயிர்ச்சக்தி ஒன்றிடக் குருவருளே பெருந்துணை. அத்தகைய பெருமைவாய்ந்த குருவின் பேரருள் இப்பிறவியிலேயே உமக்கும் கிடைக்க, கருணைப் பெருங்கடலாகிய ஆதிகுரு எந்தை ஈசனின் ஆசியை வேண்டி, ‘அவனருளாலே, அவன்தாளை‘ப் பணிகிறேன்.

.

Be Joyful & Spread the Cheer 🙂

~ஸ்வாமி | @PrakashSwamy

FB_IMG_1537929719101.jpg

Swamy Blogs |Uyirmei | Swamystery | Been there, Seen that | SwamyRay | Swamyem | Swamyverse | SwamyView | Swamygraphy

Connect with Swamy | Twitter | Facebook | Quora | LinkedIn | Pinterest | Tumblr | Indiblogger

                    

இன்று… ஒன்று… நன்று..! ~ ஆசிரியர், ஆசான், குரு ~ பகுதி 1

இன்று… ஒன்று… நன்று..!

ஆசிரியர், ஆசான், குரு – பகுதி 1

செப்டம்பர் 5 பாரத தேசத்தில் ஆசிரியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம், 1962ல் இருந்து ஆசிரியர் தினமாகிவிட, மேலைநாடுகளில் ஏதாவதொரு தினத்தை எதற்காகவாவது கொண்டாடுவதைப் போல் (உ.ம்: அன்னையர் தினம், பூமி தினம், பேய்/பிசாசு தினம், உள்ளாடை மட்டும் அணிந்து ரயில் பயணம் செய்யும் தினம்..!), அவர்களைப் பிரதியெடுத்தாற்போல் எதையும் செய்ய முயற்சிக்கும் நம்மவர்களும் இத்தினத்தில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து, சமூக ஊடகங்களில் எதையாவது பகிர்ந்து, நாலைந்து லைக்காவது வாங்குவதற்கு முயல்வது இயல்பான விஷயமாகிவிட்டது. 

.

நமக்கு சமூக ஊடக உந்துனர் ஆகும் தேவையோ நோக்கமோ எதுவுமில்லாததால், சில நாட்கள் கடந்தபின்னரே இதை எழுதுகின்றோம் என்று நீங்களாகவே கற்பனை பண்ணிக்கொள்ள உங்களுக்கு நிச்சயமாகத் தனிமனித உரிமையுள்ளது. ஜனநாயக தேசத்தின் குடிமக்களுக்கு (அரசாங்க ஆசீர்வாதத்தோடு குடித்துச் சீரழியும் தரப்பினர் அல்ல – citizen என்பதற்கு வேறு உருப்படியான சொல் நிச்சயமாகத் தேவைபடுகின்றது) இதுபோன்ற பல உரிமைகளைப் பற்றிய அறிதல் உள்ளதா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் (கல்வி, தொழில் என்ற தனிமனித வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கும் இரண்டு காலகட்டங்களிலும் இதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வழிமுறை எதுவும் இல்லை; அவர்களாகவே இவை பற்றி – ஊடகங்களில் வைரஸ் போலப் பரவியுள்ள fake newsஐ கவனமாகத் தவிர்த்து – அறிந்து தெரிந்தால்தான் உண்டு), அகல உழுவது போன்ற இத்தகைய மேம்போக்கான கொண்டாட்டம் மற்றும் பகிர்வுகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நம் வாழ்க்கையின் போக்கையே நிர்ணயிக்கும் அல்லது மாற்றும் வகையில் நம்மில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களான ஆசிரியர் என்ற கதாபாத்திரத்தைச் சற்றே ஆழ உழுது அறிவோம் வாருங்கள். 

.

ஆசிரியர் என்பவர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் அனுபவமுள்ள, மாணவர்களுக்குத் தன்னிடமுள்ள ஒரு துறை பற்றிய அறிவைப் பகிர்வதன் மூலமாக அத்துறை மீது ஆர்வம் ஏற்படுத்தி, அதுபற்றி மேலும் அறிய வழிவகுப்பவர். நீண்ட நெடுங்காலமாக மாறாத தொழில்/வேலை விளக்கம் (job description) இது. அதனாலேயே இந்த முக்கியமான தொழிலுக்கான மரியாதை குறைந்து போய்விட்டதோ என்று தோன்றுகிறது (வருடா வருடம் அளிக்கப்படும் ‘நல்லாசிரியர்’ விருதால் உண்மையாகவே திறமையுள்ள ஆசிரியர்களுக்கு ஏதேனும் பயனுள்ளதா என்பது பற்றி யாரேனும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இன்னமும் வாய்ப்புள்ளது).

.

Swamy @ School
Swamy with his classmates and class teacher @ TVS Lakshmi Matriculation Higher Secondary School, Madurai

முன்னொரு காலத்தில், ஆசிரியர் என்பவர் பல்துறை வல்லுனராக இருந்துள்ளார். குருகுல முறையில் கல்வி கற்ற மாணவர்களின் ஆசிரியர்(கள்), கல்வி, கலை ஆகியவற்றில் பல தரப்பட்ட மாணாக்கர்களை ஒரே சமயத்தில் பயிற்றுவித்த கதைகள் பல புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் உள்ளன. ராமர், கிருஷ்ணர் போன்ற இதிஹாஸக் கடவுளர் தொடங்கி, தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும், தொல் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரான, உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் காலத்தில்கூட (19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதி), இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஏன், ஆதியோகி என்று போற்றப்படும் சிவபெருமான், ஆதிகுருவாக தக்ஷிணாமூர்த்தி வடிவில் சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களுக்கு யோகத்தின் சாரத்தை வழங்கியதுகூட இக்குருகுல முறையில்தான். 

.

உ.வே.சா அவர்கள் திண்ணைப் பள்ளியில் மண்ணில் எழுதித் தமிழ் கற்றிருக்கிறார்; அந்த ஓராசிரியர் பள்ளியில் மற்ற மாணவர்களைப் போன்றே உபாத்தியாயரிடம் உதைபட்டிருக்கிறார்; பின்னர் அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடமும் (அவரது இல்லத்தில்), திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமும் (ஆதீன மடத்தில்) தமிழைக் கசடறக் கற்றிருக்கிறார். இசையையும் இதேபோல வேறு வித்தகர்களிடம் கற்றார். பின்னர் தொன்மையான தமிழ் இலக்கியங்களைத் தொகுத்துப் பதிப்பித்த மாபெரும் பணியை மேற்கொண்டபோதும், பிற மதத்தைச் சார்ந்த பெரியோரிடமும் (ஜைன மற்றும் பௌத்த மதங்கள் – சீவக சிந்தாமணி மற்றும் மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி அறியும் பொருட்டு), மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமும்கூடப் (புத்தகங்களைச் சிறப்பாகப் பதிப்பித்தல் பற்றி) பல விஷயங்களைக் கற்றிருக்கிறார். அவரேகூடப் பல மாணவர்களின் ஆசிரியராகவும் இருந்து தமிழைக் கற்பித்திருக்கிறார். 

.

தமிழ்த்தாத்தாவைப் போன்று பல சிறந்த அறிஞர்களிடம் நேரடியாகப் பாடம் கேட்பது [அ] கற்பது என்பது இக்காலத்தில் மிக அரிதாகவே இருந்தாலும் (கர்நாடக இசை, பரதநாட்டியம், சிலம்பம், களரி போன்ற பாரம்பரியக் கலைகள் பயிலுதல் இவ்வாறுதான் இன்றும் நிகழ்கின்றது, குருகுல வாசம் இல்லாதுபோனாலும்), அவ்வாறு எதையாவது நமக்குக் கற்பித்த / அறிவுறுத்திய / தெளிவுபடுத்திய / வழிகாட்டிய அனைவருமே ‘ஆசிரியர்’ என்ற பொதுவான வரையறைக்குள் அடங்கிவிடுவார்களா என்றால், ‘நிச்சயமாக இல்லை’ என்ற ஒருமித்த குரலே எங்கும் கேட்கும் என்பது திண்ணம். எனில், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில், ஏதாவது ஒரு வகையில், வழிகாட்டியாக அமையக் கூடியவர் யாவர்? 

.

SwamyGurus3

முதலில் ஆசிரியர். இன்றைய சமூகச் சூழலில், ஆசிரியர் என்பவர் பள்ளி மற்றும் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட கல்வியை (formal curriculum or syllabus based education) போதிப்பவர். தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்போரும், ஆன்லைனில் அல்லது ஆப் (app) மூலம் கற்பிப்போரும் ஆசிரியர்களே. இவர்கள் பாடத்திட்டம் சார்ந்த கல்வி (மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம்…), கலை (ஓவியம், நடனம், இசை, தற்காப்புக் கலைகள்…), திறன்கள் (மேலாண்மை, குழுத்தலைமை, மதிப்பீடு…) போன்ற எத்துறையில், எந்த நிலையில் (levels such as beginner, intermediate, advanced, expert…) கற்பித்தாலும், இவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் என்றே குறிப்பிடலாம். இத்தகைய ஆசிரியர்கள் பலர் நம் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நம்மிடம் ஒரு தாக்கத்தையோ, மாற்றத்தையோ (ஏன், பாதிப்பையோ கூட) ஏற்படுத்தியிருப்பர். 

.

மதுரையில் துவக்கப்பள்ளியில் என்னுடைய இசை ஆர்வமும், நடிப்புத்திறனும் வாய்ப்பளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. திண்டுக்கல்லில் உயர்நிலைப்பள்ளியில் என்னையும் பிற மாணவர்களையும் ‘சினைப் பன்னி‘ என்று ஓயாமல் திட்டிய (அது ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளி!) தமிழாசிரியர்தான் பேச்சுப்போட்டிகளில் நான் பங்குபெற்றுப் பரிசுபெற முதன்முதலில் வழிவகுத்தார். வகுப்பில் போரே நடப்பதுபோல் பாடம் நடத்தி வியக்கவைத்த சரித்திர ஆசிரியர், சார்ட் மற்றும் மாடல்கள் தயாரிப்பில் பங்குபெற வைத்து, பின்னாளில் கல்லூரி தினங்களில் அத்திறமை பயன்பட வித்திட்டார். ஓராண்டு மட்டுமே உயர்நிலைக்கல்வி கற்ற ராமநாதபுரம் பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே, ஒருமித்த கருத்தோடு என்னை (புதிய மாணவன் என்று பாராமல்) ஊக்குவித்து, மாநில அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வழிகாட்டினர். 

.

மதுரையில் மேல்நிலைப் பள்ளியில் நான் ஆர்வத்துடன் தமிழை மொழிப்பாடமாகத் (“அய்யோ, அதுல மார்க்கே வராதேடா… ஹிந்தியோ, ஃபிரெஞ்சோ எடுத்துத் தொலைக்க வேண்டியதுதானே,” என்ற உருப்படியான யோசனையை மீறி) தேர்ந்தெடுக்க, அற்புதமான ஆசிரியர்(யை!) ஒருவர் அமைந்து அந்த ஆர்வ விளக்கில் அறிவு நெய்யூற்றி அறிவொளியை அதிகரித்தார். இன்று நான் இயல்பாகத் தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும், வகுப்பில் அவர் மாணவர்களாகிய எங்களை வைத்து நடத்திய பேச்சு, விவாதம் போன்ற – பாடத்திற்கு நேரடித் தொடர்பற்ற – நிகழ்ச்சிகள், மற்றும் எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகளுக்கு அளித்த ஊக்கமும் நிச்சயம் மரக்கன்றுக்கு ஊற்றப்படும் நீர்போன்று இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

.

1493184199316-ca698eb4-aa67-46ca-9f4f-5f7ac90b7379 (1)

சிவகாசி அருகிலுள்ள பொறியியல் கல்லூரியிலும், படிப்பைத் தாண்டிய பல விஷயங்களில் பங்குபெற்று எனது திறன்களைச் செப்பனிடவும், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவற்றை வெளிக்காட்டவும், பரிசு மற்றும் பாராட்டு போன்ற அங்கீகாரத்தைப் பெறவும், நல்லாசிரியர்களின் உதவி இடைவிடாது எனக்குக் கிடைத்தது என்பது மிகையல்ல. ஆனால் கடைசியில் ‘சிறந்த வெளியேசெல்லும் மாணவன்‘ (Best Outgoing Student) பட்டம் கிட்டாது போய் விட (‘கிட்டதாயின் வெட்டென மற’ என்ற ஒளவையாரின் அறவுரையெல்லாம் அனுபவபூர்வமாக அறியும் வயதா கல்லூரி மாணவனின் இளமைப்பருவம்!), பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் கிடைத்தது சோகமான நகைச்சுவை!

.

பின்னர் வேலைதேடி அலைந்து திரிந்த காலத்தில் (அப்போது campus recruitment இன்றுள்ளதுபோல் எல்லாக் கல்லாரிகளிலும் கிடையாது), கணினித்துறையில் பட்டயப் படிப்பின் போது, நான் நடத்திய வினா-விடை (quiz) போட்டியே எனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலைகிடைக்க வழிவகுத்தது. அதற்கு வாய்ப்பளித்தோரும், பின்னர் உலகளாவிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தபோது பயிற்சியளித்தோரும்கூட ஆசிரியர்களே. ஆனால் ஆசிரியரல்லாத கற்பிப்போரும் உள்ளனர் என்பதை எனக்கு முதன்முதலில் உணர்த்தியது நான் வேலைபார்த்த நிறுவனங்களே. 

.

IMG_0991

அத்தகையோர் யாவர் என்பதை அறியுமுன் ஒரு சிறிய இடைச்சொருகல். கல்வி தவிர்த்து, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில், திறன்சார்ந்த பயிற்சியை அளிப்போர் கூட ஆசிரியர்களைப் போன்றோரே என்றாலும், துறைசார்ந்த திறமை மற்றும் அனுபவம் உடைய அவர்களைப் பயிற்றுனர் (coach) என்று குறிப்பிடுவதே முறையானது. சமீபத்தில் பூப்பந்துப் போட்டியில் உலக சாம்பியன் ஆன பி.வி.சிந்து மற்றும் மூன்றாமிடம் பெற்ற சாய் பிரணீத் ஆகியோரின் பயிற்றுனரான முன்னாள் சாம்பியன் புல்லெல்ல கோபிசந்த், சதுரங்க விளையாட்டில் சர்வதேச அளவில் விளையாடி வரும் எனது பிள்ளைக்குப் பயிற்சியளிப்பவர், எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்குத் தலைமைப் பயிற்சியாளராகவுள்ள ராகுல் டிராவிட் போன்றோர் பயிற்றுனர்களே. வெறும் பாடப்புத்தகக் கல்வி அல்லாது, திறன்சார்ந்த நேரடிப் பயிற்சியை ஆர்வலர்களுக்கு அளிப்போர் இத்தகைய வல்லுநர்கள். 

இரண்டாவது ஆசான். சுய தொழிலோ, அல்லது சம்பளம் ஈட்ட உதவும் வேலையோ, அவற்றில் நாம் ஈடுபடும் பிழைப்பு எனு‌ம் பரபரப்பான தளத்தில் நமக்கு வழிகாட்டி உதவுவோர் தனிப்பட்ட வகையான ஆசிரியர்கள். பொதுவாக நம்மை விட அதே துறையில் அதிக அனுபவம் உடையவர்களான இவர்கள், தங்களது அனுபவ அறிவைப் பகிர்வதன் மூலம் நாம் சிறப்பாகப் பணிபுரியவும், தவறுகளைத் தவிர்க்கவும், வெற்றிபெறவும் வழிகாட்டுவர். இவர்களை ஆசான் அல்லது வழிகாட்டி (mentor) என்றழைக்கலாம். தொழில் அல்லது பணிபுரியும் காலத்தின் முற்பகுதியிலேயே பிறரது வெற்றிக்கு உதவும் ஒரு ஆசான் அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அமையாதவர்கள் ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,’ என்பதுபோல் தாங்களாகவே அடிபட்டுத் தொழில் சார்ந்த பிழைக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பது எந்தத் துறையிலும் உள்ள நிரந்தர சாபக்கேடு. எனக்கு இவ்வாறு ஒருவர் அமைந்து வழிகாட்டியதன் பயனைச் சற்று காலதாமதமாகவே நான் உணர்ந்தாலும், என்னிடம் நேரடியாக மற்றும் என்னுடன் பணிபுரிந்த பலருக்கு நான் ஆர்வத்தோடு வழிகாட்டியுள்ளேன் (இதையெல்லாம் good karma என்று credit செய்து, நம்முடைய கர்மவினையின் சுமையை ஓரளவேனும் சித்ரகுப்தர் debit செய்து குறைப்பாரெனில் நாம் அவருக்கு எப்பிறவியிலும் நன்றியுடையோராக இருப்போம்). 

SwanyKK

தொழில் துறையிலேயே இன்னொரு வகையான ஆசிரியரும் உண்டு. இவர்களுடைய பட்டமும் பயிற்றுனர் (coach) என்றே இருந்தாலும், விளையாட்டுத் துறையிலுள்ள பயிற்றுநர்களைப் போல இவர்கள் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டிய நியதி எதுவுமில்லை. இதற்கான சான்றளிக்கும் நிறுவனங்களின் பயிற்சியை முடித்துப் பட்டம் பெற்றபின் (செலவு சற்று அதிகமே, குறிப்பாகப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் செலுத்த வேண்டிய ஆண்டுச் சந்தா – நான் பயிற்றுனராக முறைப்படி தகுதி பெற்றிருந்தாலும், ஓய்வுபெற்றபின் இந்தக் கந்துவட்டியைச் செலுத்துவதை நிறுத்திவிட்டேன்), இவர்கள் தனித்தோ, ஒரு பயிற்சி நிறுவனம் மூலமாகவோ அல்லது ஒரு தொழில் நிறுவனத்தில் இருந்தவாறோ கூட இப்பணியைப் புரியலாம். ஐரோப்பிய தேசங்களில் பெரிய அளவிலும், அமெரிக்காவில் ஓரளவிலும், பாரதம் போன்ற ஆசிய தேசங்களில் மிகக் குறைவாகவும் இத்துறையின் பயன்பாடு உள்ளது. இத்தொழில் – ஆண்டுச் சந்தா என்ற கந்துவட்டியை வசூலிக்கும் இடைத்தரகர்கள் இல்லாமல் – விரிவடைந்தால் பல்லாயிரக்கணக்கானோர் (பயிற்சி பெறுபவர் மற்றும் பயிற்றுனர்) – பயன்பெறுவர். பிழைப்பு மற்றும் ஆன்மீகம் என்ற இரு பாதைகளிலும் பயணித்த/க்கும் என்னுடைய அனுபவத்தில், முறைப்படி பயிற்றுவித்தல் (coaching) அளிக்கும் அனுபவமானது ஆன்மீகப் பயிற்சியை (sadhana) ஒத்ததாக இருந்தது என்பது மிகையல்ல.   

MarshallG_PrakashSwamy

மூன்றாவதாக குரு. வாழ்வில் எதையும் ‘உள்ளது உள்ளபடி’ காண்பது எப்படி என்று பயிற்றுவிக்கும் இந்த இருள்நீக்கியைப் பற்றி “ஆசிரியர், ஆசான், குரு – பகுதி 2“ல் காண்போம்.

.

Be Joyful & Spread the Cheer 🙂

~ஸ்வாமி | @PrakashSwamy

Swamy Blogs |Uyirmei | Swamystery | Been there, Seen that | SwamyRay | Swamyem | Swamyverse | SwamyView | Swamygraphy

Connect with Swamy | Twitter | Facebook | Quora | LinkedIn | Pinterest | Tumblr | Indiblogger

 

அருட்குறள் ~ ஞானப்பால் #103

அருட்குறள் ~ ஞானப்பால் #103

ஆறறிவும் ஐம்புலனும் மும்மலமும் நாலுருவும்
ஈரிலையொன் றென்பதுயிர் மெய்.

.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஆறறிவு என்பது கல்வி, கேள்வி மூலமாக எதையும் பகுத்து அறியக்கூடிய காரண அறிவு. இது. ஐம்புலன்களால் உணர்பவற்றைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.
.
ஐம்புலன்கள் என்பவை பார்த்தல் (விழிகள்), கேட்டல் (செவிகள்), நுகர்தல் (நாசி), சுவைத்தல் (வாய் / நாவு), தொடுதல் (கரங்கள் / தோல்). இவை மூலமாகவே உயிரானது தன்னைச் சுற்றியுள்ள எதையும் உணர்கின்றது.

.

மும்மலங்கள் என்பவை ஆணவம், கன்மம் (கர்மவினை), மாயை ஆகியவை. இவையே பசுவானது (படைப்பிலுள்ள உயிர்கள்), பிறவியின் பயனை (பதியின் பதம் அடைதல்) அறியாமல், பாசத்தில் (பற்று) கட்டுண்டு கிடந்து, மீண்டும் மீண்டும் பிறந்து இருப்பதற்கான காரணம்.
.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவை பசுவின் பிறவி அனுபவத்திலுள்ள நான்கு உருவங்கள் [அ] வடிவங்கள். உயிரைச் சுமந்து, பெற்று, அன்புடன் பேணி வளர்க்கும் மாதா (தாய்); அதனைப் பாதுகாத்து, கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து, பிழைப்புச் சார்ந்த சமூகத் தளத்தில் வாழ வழிவகுக்கும் பிதா (தந்தை); பிழைப்பைத் தாண்டிய உயர்வாழ்வுக்கு நல்வழி காட்டி, படைப்பாகிய உயிரைப் படைத்தவனை நோக்கி கவனம் செலுத்தச் செய்து, பசுவானது பாசத்திலிருந்து விடுபட்டுப் பதியை அடைய வழிகாட்டும் ஞானோதயமடைந்த குரு; பசு சரணடைய வேண்டிய பதியாகிய இறைசக்தியின் வடிவம் (சகுண பிரம்மம்) வழிபடும் தெய்வங்கள்.

.

ஆறறிவு, ஐம்புலன்கள், மும்மலங்கள், நான்கு விதமான வடிவங்கள் ஆகிய இவை அனைத்துமே புறவாழ்வின் அனுபவத்திற்கு ஆதாரமாக உள்ளவையே. இவற்றின் மீது பற்றுள்ளவரை, அல்லது இவற்றில் ஒன்றையோ [அ] பலவற்றையோ சார்ந்திருக்கும் வரையில் படைப்பானது, படைத்தவனிலிருந்து வேறுபட்டது என்ற இருமை நிலை பசுவின் (இப்பிறவியை எடுத்துள்ள உயிர்) புரிதலில் இருக்கும்.

ஆனால் படைத்தவனாகிய இறைச்சக்தியே (பதி), படைப்பிலுள்ள உயிர்கள் அனைத்தினுள்ளும் (பசு) இயங்கும் ஆதார உயிர்ச்சக்தியாகவும் உள்ளது என்பதை நேரடி உள் அனுபவமாக அறிவதே உயிர்மெய் அறிதல் எனப்படும் ஞானோதயம் ஆகும். படைப்பு, படைத்தவன், அண்டத்தின் இருப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றின் ஒருமையை அனுபவபூர்வமாக உணர்ந்த இந்நிலையை அடைவது, அறியாமையால் விளையும் இருமை நீங்கி, பசுவானது பதியுடன் ஒன்றிவிடும் ஒருமை நிலையாகிய வீடுபேறு எனப்படும் முக்தி நிலைக்கு இன்றியமையாததாகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #102

அருட்குறள் ~ ஞானப்பால் #102
வாயடங்க வயிறொடுங்கி மனமடங்கும் வந்துபோம்
நோயடங்க நானடங்கல் வழி.

.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
வாயானது உணவை உட்கொள்ளவும், பேசுவதற்கும் பயன்படும் உடல் உறுப்பு. இந்த இரண்டு செயல்களையுமே மனிதர்கள் தேவைக்கு அதிகமாகவே செய்கின்றனர். எனவே, வாயை அடக்குவது, அதாவது வாயின்மூலம் செய்யப்படும் இரண்டு செயல்களையும் குறைத்துக்கொள்வது, வயிறானது ஒடுங்குவதற்கும், மனமானது அடங்குவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

.

உடலானது உணவை உட்கொள்வதன் மூலம் வளர்ச்சி அடைகின்றது. உணவானது உடல் வளர்ச்சிக்கு மட்டுமன்றி, ஆரோக்கியத்திற்கும் ஆதாரமானது. எனவே ஒருவர் உட்கொள்ளும் உணவிலுள்ள சத்து, சுவையைவிட முக்கியமானது. ஆனால், உணவென்பதே தற்போது சுவைக்காக மட்டுமே என்றாகிவிட்டது. இதனாலேயே பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு மனிதர்கள் அவதியுறுகின்றனர். எனவே, சுவையான உணவின் மீதுள்ள பற்றுக் குறைவதற்கும், பேச்சைக் குறைத்து மௌனத்தில் இருப்பதால், பேசும் பொருட்டு எதையாவது சிந்தித்து அலையும் மனமானது அமைதி அடைவதற்கும், வாயடக்கம் [அ] நாவடக்கம் இன்றியமையாதது.

.

.

இந்நிலையை அடைந்தபின், மீண்டும் மீண்டும் பிறந்து-இறந்து-பிறக்கும், கர்மவினையால் ஏற்படும் பிறவிப்பிணி எனும் நோயை அடக்க வழி என்ன என்று காணவேண்டும். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் நாம் செய்யும் செயல்கள் மூலமே நமது கர்மவினையின் சுமை கூடுகின்றது. இதனாலேயே பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து நாம் விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கின்றோம்.

.

நமது செயல்களுக்கு விதை போன்றவை சிந்தனைகள். சிந்தனைகள் ஒருவருடைய இனம், மதம், பெயர், தகுதி, செல்வம், பதவி, செல்வாக்கு, மொழி, தேசம், வளர்ந்த மற்றும் வாழும் சூழ்நிலை போன்ற பல அடையாளங்களைச் சார்ந்தே அமையும். இந்த அடையாளங்களின் ஆதாரமாக விளங்குவது ‘நான்’ என்ற ஆணவம் [அ] அகந்தை ஆகும். ‘நான்’ என்ற ஆணவம் / அகந்தை, அதாவது ஒருவருடைய தனிப்பட்ட அடையாளம் முற்றிலுமாக அடங்குமெனில், படைப்பான உயிருக்குப் (பசு) படைத்தவனிடம் (பதி) சரணாகதி அடைவது எளிதாகிவிடும். சரணாகதியே படைப்பு மற்றும் படைத்தவன் என்ற இருமை நீங்கி, இறையுடன் இரண்டறக் கலந்துவிடும் ஒருமைக்கான எளிய வழியாகும். எனவே, ‘நான்’ (ஒரு தனிப்பட்ட பிறவி) என்ற அறியாமையால் விளையும் மடமையிலிருந்து விடுபடுவதே, பிறவிப்பிணி எனும் நோய் நீக்குவதற்கான அருமருந்தாகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #101

அருட்குறள் ~ ஞானப்பால் #101
இதுவென்று மதுவென்று மிருப்பவ ரறிவரோ
எதுவொன்று உளதென்ற மெய்.
.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
படைப்பும், அதாவது படைப்பிலுள்ள உயிர்களும், படைத்தவனும், அதாவது அண்டத்தையும் அதிலுள்ள பிண்டங்கள் அனைத்தையும் படைத்த ஆதார சக்தியையும், வெவ்வேறென்று தங்கள் காரண அறிவின் அறியாமையால் நம்பக்கூடிய மனிதர்கள், படைப்பிலுள்ள எல்லாவற்றிலும் உட்பொருளாக, அதாவது அவற்றின் உயிர்சக்தியாக விளங்குவது படைத்தவனே என்ற உயிர்மெய்யை எவ்வாறு அறிவர்!
.
இது/அது, இவர்/அவர், நல்லது/தீயது போன்றவை இருமை நிலையைக் குறிக்கும். இவ்விருமை நிலையானது எதையும் பகுத்து [அ] பிரித்து அறியும் தன்மையுடைய காரண அறிவால் விளைவது. மெய்ஞானம் அடைந்த ஞானிகள் அனைவருமே, படைப்பிலுள்ளவற்றைத் தனித்தனியாக உணரும் [அ] நம்பும் இருமை மெய்யல்ல, படைப்பு மற்றும் படைத்தவன் என்ற வேற்றுமை அற்ற ஒருமையே மெய்யாகும் என்பதைத் தம்முடைய உள் அனுபவத்தில் உணர்ந்து தெரிவித்துள்ளனர்.
.
படைப்பிலுள்ள உயிரானது (பசு), படைத்தவனாகிய இறைவனுடன் (பதி) இரண்டறக் கலந்துவிடும் ஒருமை நிலையாகிய முக்தி எனும் வீடுபேற்றை அடைய, அறியாமையால் விளையும் இருமையை மெய்யல்ல என்று அறிந்துணரவேண்டுவது ஆன்மீக சாதகர்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இவ்வுண்மையை அறியாதவரை, பல்வேறு வகையான பற்றுதல்களின் (பாசம்) பிடியில் சிக்கி, அறியாமை எனும் இருளில் மூழ்கி, மெய்யறியும் வழி அறியாமல், பல பிறவிகளைத் தங்களது வினைப்பயனால் எடுத்துழன்று, பிழைப்பு எனும் வாழ்க்கைச் சூழலில் இருந்து மனிதனால் விடுபடமுடியாது.

.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
How is it possible for those who believe that creation, i.e. all the beings that exist in creation, and the Creator, i.e. the fundamental energy that pervades anything and everything in existence, are two different things, due to the ignorance caused by the limited intellect, to realise the Truth that it’s indeed the Creator that resides as life energy within all creation.

.

~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑