அருட்குறள் – ஞானப்பால் 109

அருட்குறள் ~ ஞானப்பால் 109

மும்மலமும் முழுவதுமாய் விலகிடநா னற்றிடவுள் நிர்மலமாய் நிற்பதுவே சிவம்.

குறள் விளக்கம் 

ஆணவம், கன்மம் எனும் கர்மவினை, மாயை ஆகிய மூன்று மலங்களும் முழுவதுமாக விலகியபின், நான் என்ற தனிப்பட்ட அடையாளம் அழிந்துபோகும். அக்கணத்தில், தன்னுள்ளேயே, எந்தவிதமான மலங்களோ, குறைபாடுகளோ இன்றி, எது எப்போதும் நிலைத்திருக்கின்றதோ, அந்தப் படைப்பின் மூலத்தினுடைய தரிசனம் கிட்டும். அதுவே சிவம் என்பதை அப்போது அனுபவப்பூர்வமாக அறியலாம். 

ஆணவம் என்பது ‘நான் இன்னார்’ என்ற, பல்வேறு சமூக அடையாளங்களால் ஏற்படும் அகந்தையைக் குறிக்கும். இது முழுவதுமாக நம் மனத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. தான் தனிப்பட்ட ஒரு படைப்பு என்று நம்மை எண்ணவைக்கும் ஆணவத்தை விட்டொழித்தால்தான் உயிர்மெய் அறிவதென்பது சாத்தியமாகும்.

கன்மம் [அ] கர்மா எனப்படும் கர்மவினை என்பது பல பிறவிகளில் ஒரு உயிரானது புரிந்த பல்வேறு செயல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. தான் செய்த செயல்களின் விளைவுகளை [அ] பலன்களை அவ்வுயிரானது அனுபவித்தாக வேண்டும். அவ்வாறு தன்னுடைய செயல்களின் பலன்களை ஒரு உயிரானது அனுபவிப்பதற்காகவே அது பல பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது. 

கர்மவினையானது பிராரப்தம், சஞ்சிதம், ஆகமியம், க்ரியமான [அ] புருஷார்த்த என்று பலவகைப்படும்.

இதில் பிராரப்தம் என்பது இப்பிறவியில் நாம் அனுபவித்தே ஆகவேண்டிய கர்மா. இதிலிருந்து மெய்ஞானிகளுக்குக் கூட விதிவிலக்கு கிடையாது. 

சஞ்சிதம் என்ற ஒட்டுமொத்தக் கர்ம மூட்டையை, ஞானோதயம் அடைந்த ஒரு குருவால், கர்ம சம்யமா போன்ற யோக வழிமுறைகள் மூலமாக முற்றிலுமாக நீக்கிவிட முடியும். 

ஆகமியம் – அதாவது, இனிமேல் செயல்படவிருக்கும் – கர்மாவைக் கையாள்வதும், க்ரியமான – அதாவது, புதிதாக உருவாக்கப்படும் – கர்மாவைத் தவிர்ப்பதும், யோக சாதனை மூலம் நிலையற்ற மனத்தின் ஓட்டத்தைக் கையாளும் பயிற்சிகளைப் பெற்று, விழிப்புணர்வோடு வாழ்வதன்மூலம் ஒரு சாதகருக்குச் சாத்தியமாகும். 

மாயை என்பது ஐம்புலன்களால் அறியப்படும் பொருள்தன்மை சார்ந்த புற உலகிலுள்ள யாவற்றையும், ஆறாவது புலனாகிய கற்றறிவால் பகுத்தறிந்து, மெய்யென்று நம்புதல். பகுத்தறிவானது கடந்தகால நிகழ்வுகள் மற்றும் தகவல்களைச் சார்ந்து, எதிர்காலம் பற்றிய பதிவுகளை ஏற்படுத்தவல்லது. நிகழ்காலத்தில், ‘இந்தக் கணம் தவிர்க்க முடியாதது‘ என்ற புரிதலோடு உயிர்மெய் அறிய விழைவோர், இப்புலன்கள் மூலமாக நிகழும் குறைபாடுடைய அறிதலைக் கடந்து உள்நோக்கிச் செல்லப் பழக வேண்டும். 

குருவருளால் ஒரு ஆன்மீக சாதகர் இம்மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுபட, யோக சாதனை போன்ற தொன்மையான வழிமுறைகளைக் கையாண்டு, இடைவிடாது முயற்சிப்பதன் மூலம், சவமாகும் ஜீவாத்மாவினுள்ளே உயிராக ஒளிரும் சிவமாகிய பரமாத்மாவின் தரிசனம் கிட்டும். இதுவே உயிர்மெய் அறிந்த மெய்ஞான நிலை ஆகும். இவ்வாறு ஞானோதயம் அடைகையில், தான் என்ற படைப்பு வேறு, சிவம் என்ற படைப்பின் மூலம் வேறு என்ற இருமை மறைந்து, படைப்பானது படைத்தவனுடன் இணைந்து ஒன்றிவிடும். 

உடலுள் உயிர் நிலைத்திருக்கையிலேயே இப்பேரானந்த நிலையை அடைந்தோர் ஜீவன்முக்தர்கள் என்று போற்றி வழிபடப்படுவர். உடலை அத்தகையோரின் உயிரானது இறுதியாக உதிர்த்து, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று, படைப்பின் மூலத்துடன் ஒன்றிக் கரைந்துவிடும் நிலையே முக்தி எனப்படும் வீடுபேறு ஆகும். இதனை அடைவதே மனிதராகப் பிறவியெடுத்த உயிரின் நோக்கம். இதுவே மனிதர்களின் பிறவிப்பயன்.

ஞானோதயம் மற்றும் முக்தியை அடைவதற்கான ஆன்மீகப் பாதைகளே கர்மம் எனும் செயல், பக்தி எனும் முழுமையான சரணாகதி, ஞானம் எனும் மெய்யறிவு மற்றும் க்ரியா [அ] கிரியை எனும் உயிர்சக்தி ஆளுமை ஆகிய நான்கு யோக வழிமுறைகள். இவற்றை ஒரு குறிப்பிட்ட சாதகரின் கர்மவினைப் பதிவு, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், உணர்வுகளைக் கையாளும் திறன் மற்றும் வாழும் தன்மை ஆகியவற்றைச் சார்ந்து, குருவானவர் சரியான விகிதத்தில் வழங்கி வழிகாட்டுவார்.

மெய்ஞானம் மற்றும் முக்தி ஆகிய உயர்நிலைகள் எவ்வகையான மனிதருக்கும் சாத்தியமே – அருளின் வழிகாட்டுதலுடன்,  கவனத்தை ஒருமுகப்படுத்தி, முழுமையான ஈடுபாட்டுடன், பலன்களின் மீது பற்றெதுவுமின்றி, இடைவிடாது முயற்சித்தால், பயணம் முற்றுப்பெறும்வரை!

~ஸ்வாமி | @PrakashSwamy

KuRaL explanation

When the three malams (impurities), viz. Ego, Karma and Maya are eradicated, the individual identity will be demolished. In that very moment, the being will have darshan of the source of creation that glows within, devoid of any impurities or imperfections. Then one will realise that source of creation as Shiva, experientially. 

Ego is the individual identity, created by the various identifications that the society imposes on a being. This is entirely the mind’s creation. Only when a being gets rid of the ego, which makes one believe in one’s individual identity, knowing / realising the Truth is possible.

Karma is the collection of actions that a being has performed in many lifetimes. The being has to experience the outcome of all such actions. The being takes many births in order to experience the fruits / results of its own actions.

There a many types of karma such as Prarabdha, Sanchita, Agamiya and Kriyamana or Purushartha.

Prarabdha is the karma that one must experience in this lifetime itself. Even realised beings aren’t exempted from experiencing Prarabdha karma.

Sanchita is the entire volume of accumulated actions of a being, over many lifetimes. This can be eradicated by a Realised Master (Guru) through yogic processes such as Karma Samyama.

Ably facing Agamiya, i.e. karma that is going to get activated in future, and completely avoiding Kriyamana or Purushartha, i.e. fresh karma that is going to be created by the being, is possible through diligent sadhana (spiritual practices) that helps one handle the uncontrollable mind effectively, and living in awareness.

Maya is believing the unreal, i.e. anything in the physical, external world, that is sensed through the five sense organs and comprehended through the sixth – the intellect, as real. The intellect is limited in nature as it uses the past events and information to project impressions about the future.

Seekers who know that ‘this moment is inevitable’ and live in the present, in order to experience ‘Life, the way it is,’ i.e., reality, will do well to go past the limited sense and intellect-based knowing and learn to turn inward.

When a seeker learns and performs ancient yogic practices diligently, with Guru’s (Realised Master) Grace, s/he will gain the darshan of Shiva, the Paramatma, glowing as the life source within the Shava (corpse-to-be), the Jeevatma. This is the state of self-realisation, aka enlightenment.

When a being attains self-realisation, the duality of thinking / believing creation (individual being) and creator (source of creation) as two distinct or different entities will vanish and the being will attain yoga (union) with the divine.
Beings who attain the union with the divine while still remaining alive in a physical form (body) are revered and celebrated as Jeevanmuktas. When a Jeevanmukta, aka Realised Being / Master chooses to drop the body for good and the Jeevatma merges with Paramatma for good, it is liberated from the repetitive birth-survival-death lifecycle and attains Mukti, the ultimate or conclusive liberation. 

Attaining Mukti is the purpose of being born as a human being. The spiritual paths to attain mukti are Karma yoga – the path of attainment through action, Bakthi yoga – the path of total surrender, Gnana yoga – the path of pure wisdom / knowing and Kriya yoga – the path of attainment through mastery of life energy. A Guru (Realised Master) offers the right mix of Sadhana, with all the four types in a certain proportion, which is determined by the Master based on the seeker’s karma, level of acceptance, ability to handle emotions, way of living, etc.

Enlightenment and Mukti are a possibility for any and all human beings, provided the being is receptive to the guidance of Grace, remains singularly focused, performs actions with absolute involvement, remains completely detached from outcomes and sustains the spiritual pursuit diligently, continuously, until the journey concludes.

~Swamy | @PrakashSwamy

யோகி!

யோகா என்றால் இணைதல் அல்லது ஒன்றுதல். படைப்பாகிய உயிர், படைத்தவன் எனப்படும் படைப்பின் மூலத்துடன் இணைவது அல்லது ஒன்றிவிடுவதே யோகா.
.
யோகத்தில் இருத்தல், அதாவது, இருமை நிலையைக் கடந்து, ஒருமை அடைந்து, அந்நிலையில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாதகரின் நோக்கமாக இருக்குமெனில், புறத்தே வெளிப்படுத்தும் தனது குணநலன் [அ] குணாதிசயங்கள் மற்றும் அகத்தே ஒளித்து வைத்திருக்கும் தனிப்பட்ட மனிதனின் தன்மை ஆகிய இருவேறு நிலைகளை ஒருமைப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்க முதற்படியாகும். ஏனெனில், இவை இரண்டும் பெரும்பாலான மனிதர்களுக்குச் சீரின்றி அமைந்துள்ளது.
.
வெளிப்படையான குணநலன் என்பது வேறொருவரின் நகைப்புக்குரிய பிரதியைப் போன்ற முகமூடியாகவும், உள்ளே ஒளிந்திருக்கும் தன்மை ஒருபோதும் உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையாகவும் இருக்கையில், எத்தனை விதமான யோக சாதனைகளைப் பயின்றாலும், அவை பற்றி விலாவாரியாகப் பேசினாலும், அல்லது பயிற்சியே செய்தாலும் கூட, அத்தகைய மனிதர் போகியாகவோ, ரோகியாகவோதான் இருக்கமுடியுமே தவிர, யோகியாக ஆவதென்பது சாத்தியமில்லை – இப்பிறவி முடிவதற்குள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 108

அருட்குறள் ~ ஞானப்பால் 108

 

பொருள்காணும் புலனைந்தும் இருள்சூழும் பகுத்தறிவும்

அருள்நாடும் வழியன்று காண்.

.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~~

படைப்பிலுள்ள அனைத்தையும் பற்றி மனிதர்கள் அறிவது தங்களது ஐம்புலன்கள் மற்றும் காரண அறிவின் மூலமாக. ஐம்புலன்களும் பொருட்தன்மை உடையவற்றை மட்டுமே உணரும் திறனுடையவை. அவற்றின் மூலம் உணரும் எதையும், ஏற்கனவே அறிந்தவற்றுடன் ஒப்பிட்டுப், பகுத்தறியும் காரண அறிவோ, அறியாமை எனும் இருளால் சூழப்பட்டது. 

.

உயிர்மெய் அறிந்து, முக்தி எனும் வீடுபேற்றை அடைவதற்கு குரு மற்றும் இறை அருள் தேவையாகும். அருளானது பொருட்தன்மை உள்ளதன்று. அதைப் பகுத்தறிவதும் சாத்தியமில்லை. எனவே, ஐம்புலன்களும், காரண அறிவும் அருளை நாடுவதற்கான வழியன்று என்ற உண்மையை ஆன்மீக சாதகர்கள் அறிவது இன்றியமையாதது ஆகும். 

.

AK108

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Humans know everything in existence through the five senses and intellect. The perception / experience of the five senses, viz. visual, aural, olfactory, taste and touch are confined to the physical realm. The limited intellect, which comprehends anything sensed via the five senses, by comparing the input with something already known, is encompassed by the darkness of ignorance.

.

The Grace of Guru and Divine is essential for self-realisation and attaining mukti (the ultimate liberation from the repetitive birth-death lifecycle). Grace isn’t physical in nature. It’s also practically impossible to comprehend Grace. Therefore, the five senses and the intellect aren’t the way to seek Grace. It’s important for seekers on the spiritual path to realise this truth.

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ சுரைக்காய் ஸ்வாமிகள் ஜீவ சமாதி

திருமலையில் ஒரு நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட பின்னர், சென்னை திரும்பும் வழியில் திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமியின் தரிசனத்திற்குச் செல்லும் திட்டம், திருமணம் இனிதே நிறைவடைந்து, மதிய உணவுக்குப்பின் (இரண்டு நாட்கள் நடைபெறும் திருமணங்களில், முக்கியமான நிகழ்வான பாணிக்கிரஹனம் நிகழ்ந்தபின் பரிமாறப்படும், ஏராளமான பண்டங்களைக் கொண்ட ‘கல்யாணச் சாப்பாடு’ சாப்பிடப் பந்தியில் அமரும்போது, திருவிழாக் காலங்களில் டபுள் ஓவர்டைம் பார்த்த காவலரைப் போல வயிறு கிட்டத்தட்ட ‘ஏம்பா என்னை இந்தப் பாடுபடுத்தறே,’ என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிடுகின்றது ~ கல்யாண சமையல் ஸ்பெஷலிஸ்டுகள் இனிமேலாவது ஒரு டயடீஷியனையும் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது) செயல்படத் துவங்கியது.
.

திருமலை இறக்கத்தின் எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து (திருமலை ஏற்றத்தில் செய்யும் டிரைவிங், வாகனங்களை விரும்பி ஓட்டுவோருக்கு அருமையான அனுபவம் – அவசரக்கார ஓட்டுனர்களின் அபஸ்வர ஹார்ன் ஒலிகளைப் பொறுத்துக் கொள்ளும் திறனிருந்தால்), திருப்பதி நகரப் போக்குவரத்தில் நீந்தி, திருத்தணி செல்லும் சாலையில் பயணிக்கையில், ‘கும்பகோணம் டிகிரி காபி‘ கடை ஒன்று ‘வாரும் ஸ்வாமி‘ என்று அழைக்க, அங்கே ஒரு சிறிய காஃபி / தேநீர் பிரேக் (பித்தளை டபரா தம்ளரில் நுரைபொங்க, சூடான காஃபி வழங்கும் இத்தகைய கடைக்காரர்கள் பலருக்கும் ‘கும்பகோணம்’ தெரிந்த அளவிற்கு, காப்பிக்கு முன்புள்ள அடைமொழியான ‘டிகிரி’ என்னவென்று தெரியவில்லை!).
.
பணம் செலுத்துமிடத்தில், காசாளரின் பின்புறம் ஒரு மஹானுடைய படத்தைப் பார்த்து, “அவர் யார்?” என்று திருமதி விசாரிக்க, கடைக்காரர் க்ளூக்கோஸ் குடித்த மராத்தான் வீரர் போலத் திடீர் உற்சாகம் பெற்று, எங்களது பயணத்திட்டத்தில் கூகிள் மேப்பின் ‘Add a stop’ போல ‘நாராயண வனம்‘ என்ற அழகிய பெயர்கொண்ட, புத்தூர் அருகிலுள்ள ஒரு சிற்றூருக்கு வழிகாட்டினார். ‘திருத்தணிக்கு வேறு செல்லவேண்டும், வரும்போதே மழையால் செல்லமுடியவில்லை, இப்போது இடையில் இன்னொரு இடத்திற்குக் கட்டாயம் போக வேண்டுமா என்ன..?’ என்று குழப்ப ஆரம்பித்த மனத்தை ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்‘ என்று கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டு, நாராயண வனத்தை நாடிச் செல்ல முடிவெடுத்தோம்.
.
இவர் சுரைக்காய் ஸ்வாமிகள் என்ற சித்தர். இவருடைய ஜீவ சமாதி இருக்கும் நாராயண வனம் இங்கிருந்து சுமார் நாலரை கிலோமீட்டர்தான். மாலை நாலு மணிக்குத்தான் திறப்பார்கள். ஆனால் நீங்கள் வெளியிலாவது அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். மிக சக்தி வாய்ந்த ஜீவ சமாதி,” என்றார் டிகிரி காப்பி கடைக்காரர். ஜீவசமாதி என்றாலே ஆன்மீக சாதகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் கொண்டாட்டம்தான். அதுவும் இது நாங்கள் திருத்தணி செல்லும் சாலையில் இருந்து ஒருசில கி.மி.தான் தள்ளியிருந்தது என்பதால், கூகிள் பெண்மணியின் வழிகாட்டலில் நாராயண வனத்தை நோக்கி சியாஸைச் செலுத்தினோம்.
.
ஸ்ரீநிவாசப் பெருமாள் என்கிற வேங்கடாசலபதி, பத்மாவதி தாயார் ஆகியோரின் திருமணம் நடந்த இடமே நாராயண வனம் என்கிறது தல புராணம். அங்கிருந்த விசாலமான கல்யாண ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலின் அருகிலேயே சுரைக்காய் ஸ்வாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. ஊர்க்காரர்கள் இவ்விடத்தையும் கோயில் என்றே குறிப்பிடுகின்றனர். நாங்கள் சென்றது நான்கு மணிக்கு முன்பே என்றாலும், அங்கிருந்த அடியவர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார். தீப ஆர்த்தி, தீர்த்தப் பிரசாதம், சடாரி ஆசீர்வாதம் என்று வைணவக் கோயில்களை நினைவூட்டும் வழிபாட்டு முறைகள் இனிதே நடைபெற்றன.
.
ஜீவ சமாதிகளில் வழக்கமாக இருக்கும் லிங்க ரூபத்திற்கு மாறாக இங்கு சுரைக்காய் ஸ்வாமியின் திருவுருவமே கருவறையில் உள்ளது. மிகுந்த உயிரோட்டமுள்ள, நேரில் அவரையே தரிசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் அற்புதமான உருவச்சிலை. தீப ஆராதனை மற்றும் பிரதட்சிணம் (கருவறை உள்ளேயே செய்யப் பணிக்கப்பட்டோம்) நிறைவாக இருந்தது. தியானம் இயல்பாகக் கைகூடும் இடமாக உள்ளது சுவாமிகள் அடங்கிய இடம். தியானத்தின்போது அனுபவப்பூர்வமாக சித்தரின் சக்தி அதிர்வுகளை உணர முடிகின்றது (எனது உடலின் இடதுபுறத்தில் – குறிப்பாகக் கரத்தில் – ஏதோ வேலை செய்தார் ~ என்ன செய்தார் என்பதை அவரும் என் குருவுமே அறிவர்). கோயிலின் உள்ள பல இடங்களில் வேண்டுதலுக்காக பக்தர்கள் கட்டிவிட்டுச் செல்லும் சுரைக்காய்கள் தொங்குகின்றன. நம்பிள்ளை சார்பாகவும் ஒன்று கட்டப்பட்டது.
.

.
சுரைக்காய் ஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்வாமிகளே பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் அவர் நீண்ட காலம் வாழ்ந்துள்ளது தெரிய வருகின்றது (சில குடும்பங்களில் ஏறக்குறைய ஐந்து தலைமுறையினர் அவரைத் ‘தாத்தா’ என்று அன்போடு நினைவுகூர்ந்ததாகத் தகவல்). சென்னையிலும், நாராயண வனத்திலும் ஸ்வாமிகள் பலருடைய கடுமையான வியாதிகளைக் குணப்படுத்தும் சேவையை நீண்ட காலம் செய்துள்ளார். வாழும் காலத்திலேயே அவர் புகழ் பரவியிருக்கின்றது. சமாதித் திருக்கோயிலில் அவரே ஏற்றிவைத்த துனி (Dhuni) இன்றளவும் கனன்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து எடுத்த விபூதி பிரசாதமாக வழங்கப்படுகின்றது. துனி, விபூதிப் பிரசாதம், சுரைக்காய்களைச் சுமந்து திரிந்த விநோதம், தனது திருவுருவத்தையே பக்தர்கள் வழிபடுமாறு செய்தது, பிறப்பு பற்றிய தகவல் இல்லாமல் போனது, கடும் வியாதிகளை எளிதாகக் குணப்படுத்தியது போன்ற சித்து விளையாடல்கள், அவருடன் எப்போதும் காணப்பட்ட இரு பைரவர்கள் ஆகிய விந்தையான விஷயங்கள் அனைத்துமே, ஷீர்டி சாய்பாபா என்ற சாய்நாத் மஹராஜ் போன்றே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க ஆச்சரியம்.
.
ஸ்ரீ சுரைக்காய் ஸ்வாமிகள் – ஆங்கிலேய அரசாங்க அனுமதியுடன் – ஜீவ சமாதி அடைந்தது 1902ல். அவரது சமாதி நிகழ்ந்த பின்னரும், 117 வருடங்களாக அவர் புகழ் மங்காது இருப்பதற்கு சான்று அவரது சமாதிக் கோயிலின் சிறந்த கட்டுமானம் மற்றும் இன்றுவரை நிகழும் தினசரி மற்றும் சிறப்பு வழிபாடுகள் (குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில்) மற்றும் சமாதிக் கோயிலின் பராமரிப்பு ஆகியவை. இந்தத் திருப்பணியைச் செவ்வனே செய்து வருவோருக்கு நம் வந்தனங்கள். இங்கு தேடி வந்து ஸ்வாமிகளை வழிபடுவோருக்கு வாழ்வில் உள்ள இடர்கள் நீங்கி, வாழ்க்கை நிலை சிறக்கும் என்று அங்குள்ள அடியவர்/பூசாரி உறுதியாகக் கூறுகின்றார். அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கைக்கு உரமூட்டும் வகையில் இந்த ஜீவ சமாதி அமைந்துள்ளதை, அங்கு ஒருமுறை செல்வோர்கூட உணரவியலும் என்றே தோன்றுகின்றது.
.
அங்கு முதன்முறையாக நாங்கள் சென்ற இப்பயணத்தின் மூலம் உணர்ந்தது என்னவென்றால், ‘அருள் எப்போதுமே உள்ளது. நீங்கள் திறந்த நிலையில் இருந்தால், அருளை உணர முடியும்,’ என்ற எனது குரு தெரிவித்த உண்மையைத்தான். அங்கு செல்லுமாறு எங்களுக்கு வழிகாட்டப்படுகின்றது என்பதை நாங்கள் தெளிவாக உணர்தோம் இம்முறை. அந்த சக்திவாய்ந்த இடத்தில் செலவிட்ட கணங்கள், எங்களது வாழ்நாளின் பயனுள்ள கணங்களில் சில என்பதில் ஐயமில்லை. சுரைக்காய் சித்தரின் ஜீவ சமாதி அருளின் உயிர்ப்புள்ள இருப்பிடம். அங்கு ஒருமுறையேனும் சென்று நீங்களும் பெறவேண்டும் ‘யாம் பெற்ற இன்பம்‘ என்பதே எங்களது அவா. அப்பயணம் விரைவில் நிகழ ஸ்ரீ சுரைக்காய் ஸ்வாமிகள் உங்களுக்கும் வழிகாட்டட்டும். ஷம்போ.

~ஸ்வாமி | @PrakashSwamy

Google Maps Directions to Narayana Vanam Sri Venkateswara Swamy temple
Narayanavanam, Andhra Pradesh 517583. Suraikkai Swamigal Jeeva Samadhi temple is located nearby.
https://maps.app.goo.gl/swbn7SwqStxoaJ7B8

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று, ஒன்று, நன்று! ~ ‘குறையொன்றுமில்லை’ என்ற வசீகரக் களஞ்சியம்!

இன்று, ஒன்று, நன்று! ~

‘குறையொன்றுமில்லை’ என்ற வசீகரக் களஞ்சியம்!

.
தெய்வத்தின் குரல்‘ படித்தவர்களுக்கு அதுபோல் சனாதன தர்மம் பற்றிய விளக்கம் வேறு ஏதேனும் உள்ளதா என்று தேடும் ஆர்வம் பொதுவாக இருப்பதில்லை. அது அத்தகைய என்சைக்ளோபீடியா மாதிரியான ரெஃபரன்ஸ். ஆனால் ஒவ்வொரு பாகமும் படிக்கும்பொழுதே கண் சொருகினால் அவசரத்திற்குத் தலையணையாகப் பயன்படும் அளவு பெரியது (இதுபோன்ற பொக்கிஷத்தையெல்லாம் ஏன் கிண்டிலில் போட மாட்டேங்கறா எந்தப் பப்ளிஷரும்! 🙄). சோவின் ‘ஹிந்து மஹாசமுத்திரம்‘, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்‘ (முழுத்தொகுப்பு) ஆகிய அற்புதமான புத்தகங்களும் இதே வகையைச் சேர்ந்தவைதான். உட்கார்ந்து படித்தால் கை வலிக்கும்; நடந்துகொண்டே படித்தால் கை, கால், கழுத்து எல்லாம் சேர்ந்து வலிக்கும்!

.

சமீபத்தில் என் பிள்ளை தாம்பரம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா உள்ளே சென்றிருந்தபோது (பக்கங்கள் காலி ஆகிவிட்டதால், 60 பக்க பாஸ்போர்ட் ரீ இஷ்யுவிற்கு அப்ளை பண்ண ~ இதுபோன்ற கேஸை அவர்கள் அடிக்கடி பார்ப்பதில்லை என்பதால் 3 மணி நேரத்திற்குமேல் அவனை வெளியே விடாமல் பேசித் தீர்த்துவிட்டனர்! 😂), எதிரே இருந்த கிரி டிரேடிங் கார்ப்பரேஷன் கடையில் சும்மா விண்டோ ஷாப்பிங் பண்ணிவிட்டு வரலாம் என்று போய், ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கும் செக்ஷனுக்குப் போனதும் வழக்கமான சென்னைப் புத்தகக் கண்காட்சி சமயத்தில் வரும் ஆர்வ ஜுரம் படக்கென்று வந்துவிட, பத்துப் பதினைந்து புத்தகங்களை எடுத்துக் கூடையில் போட்டுவிட்டேன்.
.
நாலாயிர திவ்யப்பிரபந்தத்திற்குச் சிறிது காலமாக நல்லதொரு உரை தேடிக்கொண்டிருக்கிறேன் (ஆதர்ச எழுத்தாளர் அதை எழுதாமலே ஆசார்யன் திருவடியை அடைந்துவிட்டார்; ஆனந்தத்தைப் பெயராகக் கொண்ட வைணவ நண்பர் ரொம்ப நாளாக ஒரு உரையைக் கைகாட்டக் கடுமையாக முயற்சித்து வருவதாகப் பட்சி சொல்கிறது 😜). வெறும் பாட்டு மட்டும் உள்ள புத்தகமே திக்கான தலையணை மாதிரி இருந்ததால் (‘நாலாயிரம் பாட்டு இல்ல சார்’ – கடையிலிருந்த ஒரு சேல்ஸ் பெண்மணி!) அதைத் தூக்கிப் பார்த்தவுடனே மேல் ஷெல்ஃபில் வைத்துவிட்டேன்.

கழுத்து வலித்ததே என்று குனிந்தால் எதிர் வரிசையில், கீழே இருந்த ஷெல்ஃபில் அடுக்கியிருந்த கையடக்கப் புத்தகத்திலிருந்து ஸ்ரீதேவியை (இவர் ஒரிஜினல் ~ பாற்கடலைக் கடைந்தபோது வந்தவர்) ஜம்மென்று மடியில் அமர்த்தி மெல்ல அணைத்தபடி, மெத்த மகிழ்ச்சியுடன் விரிந்த புன்னகையுடன் நரசிம்ஹர் ‘என்னை அட்டையில் போட்டிருக்கிறார்கள் ஆனால் ஸ்லோகப் புஸ்தகமில்லை, என்னவென்றுதான் எடுத்தும் பாருமேன் ஸ்வாமி‘ என்றார். கையில் எடுத்த புத்தகம்

குறையொன்றுமில்லை“. ஆசிரியர் முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார்.

.

.

என்னடா இது புதுசா இருக்கே (புத்தகம் ரொம்ப காலமாகவே இருந்திருக்கின்றது – 34ம் பதிப்பு – நமக்குத்தான் இன்றுவரை கண்ணில் படவில்லை) என்று அந்த ஷெல்ஃபை மறுபடி நோக்கினால், நரசிம்மர் விதவிதமான போஸில் பல புத்தகங்களின் அட்டையில் சிரித்தார். அன்போடு கூடை எடுத்துக் கொடுத்து, என்னை சஃபாரி அணியாத கறும்பூனைக் கமாண்டோ மாதிரி நிழலாகத் தொடர்ந்து வந்த கடை அலுவலரிடம் “ஏண்ணா, குறையொன்றுமில்லை மொத்தம் எத்தனை பாகம்?” என்றேன். பும்ராவின் யார்க்கரை எதிர்பார்க்காத பேட்ஸ்மேன் போல ஒருகணம் விழித்தவர், சட்டென்று விற்பனைக் கமிஷன் ஞாபகம் வந்த சேல்ஸ்மேன் போலச் செயலில் இறங்கினார். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, இரண்டு அடுக்கு புத்தகங்களை எடுத்துப் பரப்பி, ஆரம்பப் பள்ளி மாணவப் பருவத்தை நினைவூட்டும் விதமாக ஒண்ணு, ரெண்டு என்று எண்ணிக் கடைசியில் “எட்டு பாகம் சார் மொத்தம்” என்று வெற்றிப் புன்னகை புரிந்தார். நான் முதல் பாகத்தை மட்டும் அவரிடமிருந்து கவர்ந்துகொண்டு பில் போடப் போய்விட்டேன் (இன்னொரு பத்து நிமிடம் இருந்திருந்தால் எட்டையும் நிச்சயம் வாங்கியிருப்பேன் – அறிவுத் தாக ஜுரத்தின் வலி[மை] ஆயிரம் புத்தகமாவது வாங்கியவர்களுக்குத்தான் தெரியும்)!

.

முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார் மிகப் பிரபலமான பிரவசனம் (ஆன்மீகச் சொற்பொழிவு) செய்த வைணவப் பெரியவர். அவரது நடை கிருபானந்த வாரியாருடைய பேச்சைப் போல வசீகரமாக இருக்கின்றது. வேதத்தில் ஆரம்பித்து, காயத்ரியை போகிறபோக்கில் மென்ஷன் பண்ணிவிட்டு, நரசிம்ம அவதாரத்தின் அறிவியல் பிண்ணனியை விளக்கி, சஹஸ்ரநாமம் எவ்வளவு உயர்ந்தது என்று ஒண்ணரைப் பக்கத்திலே சொல்லும் அவரது திறம், ‘குறையொன்றுமில்லை‘யின் பக்கங்களில் பிரகாசித்து, ‘சுஜாதாவின் வசீகர எழுத்தில் ஆன்மீகப் புத்தகம் ஏதாவது கிடைக்காதோ‘ என்ற என்போன்ற பாமர ரசிகனின் ஏக்கத்தைத் தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாகச் சொல்வது மிகையாகாது. சனாதன தர்மம் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு, முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியாரின் ‘குறையொன்றுமில்லை’ ஒரு வசீகரக் களஞ்சியம்!

.

இதோ “குறையொன்றுமில்லை ~ பாகம் 1 ~ முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார்” ப்ரிவியூ…
~~~~~~~~~~

விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே நரசிம்ஹ அவதாரம் பற்றி விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நரசிம்ஹ அவதாரம் பற்றி அதர்வ வேதம் விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது.
.
பிரஹலாதனுக்கும் ஹிரண்யகசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம், நரசிம்ம அவதாரத்தை மின்சக்தி என்கிறது! பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான்; ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான்.

.

அஸ்தி என்ற பாஸிடிவ் தத்துவமும் நேதி என்ற நெகடிவ்வும் மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம். அவனுடைய அட்டகாசம் ஏழு உலகங்களையும் தாண்டிப் போய், பிரும்மா அமர்ந்திருந்த தாமரையை ஒரு அடி அடித்ததாம்! பிரும்மாவைக் கீழே தள்ளியதாம்!
.
பிரும்மாவை மட்டும் ஏன் தள்ள வேண்டும்..? ‘இருக்கிறவனுக்கெல்லாம் வரத்தைக் கொடுத்துவிட்டு, நீ மட்டும் ஜப மாலையை உருட்டிக் கொண்டு மனைவியின் (சரஸ்வதி) வீணா கானத்தைக் கேட்டிண்டிருக்கியே..?’ என்றுதான் பிரும்மாவை வீழ்த்தியதாம்!

.

ஜெர்மன் அறிஞர் மாக்ஸ் முல்லர் கூட நரசிம்ம அவதாரத்தை An Electrical Phenomenon என்றுதான் விவரிக்கிறார்.

.

நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு!
.
ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும் சஹஸ்ரநாம தொடக்கத்திலே இடம் பெற்றிருக்கிறது.

~~~~~~~~~~

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 107

அருட்குறள் ~ ஞானப்பால் 107

காண்பதெலாங் காணாது காணாப்பே ரொளிகான
மாண்புடையோன் நாமமொரு வழி.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~
மனிதர்களின் புரிதல் என்பது ஐம்புலன்களின் வழி உணர்வதை, காரண அறிவைக் கொண்டு புரிந்து கொள்வதே. காரண அறிவானது ஏற்கனவே அறியப்பட்டவற்றின் ஒட்டுமொத்த சேமிப்பே அன்றி வேறில்லை. கண்களால் நாம் கண்டறியும் எல்லாவகையான பொருட்கள் மற்றும் உயிர்கள் பற்றிய நம் புரிதல் அனைத்தும் இவ்வகையானதே.

.
எனவே, கண்களால் கண்டறிய முடியாத, புறத்திலுள்ள பருப்பொருளாக இல்லாத, உயிரினுள்ளே சலனமற்று ஒளிரக் கூடிய இறைவனை [அ] இறை சக்தியை ஒருவர் கண்டுணர வேண்டுமென்றால், அதற்கென்று ஞானோதயம் அடைந்த பெரியோர் வழங்கியுள்ள ஆன்மீக சாதனை என்னும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இறைவனின் திருநாமத்தை ஜெபம் செய்வது என்பது (நாம ஜெபம்), உயிர்மெய் அறிந்து உய்வதற்கான அத்தகைய ஒரு வழியாகும்.
.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~
Anything that humans comprehend in existence, is nothing but an analysis and conclusion of whatever is observed / experienced through the five sense organs, through their limited intellect. Intellect is nothing but a data dump of whatever is already known. So whatever we perceive via the visual sense organ, aka eyes, too belongs to this category of comprehension only.
.

So, in order to perceive the divine or the energy that’s the source of creation, which remains still and glows as the light within every being in creation, which isn’t a physical entity to be comprehended through our visual perception, one must perform the sadhana (spiritual practices) offered by the Realised Masters (Guru), who have actually been there and done/seen that. Doing Japa (nhAma japam), i.e. chanting the sacred name of the divine, is one such sadhana to attain self-realisation and gain mukti (ultimate liberation from the repetitive birth-death lifecycle).

.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 106

அருட்குறள் ~ ஞானப்பால் 106

கூற்றன்கொள் ளுடலன்று கூத்தாடும் மனமன்று

மாற்றமிலா ததுநீமெய் யறி.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~
மனிதனாகப் பிறவி எடுத்தவர்கள் கூற்றுவன் எனும் யமன், இறப்பின்போது எடுத்துக் கொள்ளும் ‘நான் இன்னார்’ என்ற அடையாளத்தை உடைய உடல் அல்ல. அதேபோன்று, எவ்விதமான கட்டுப்பாடுமின்றிக் கூத்தாடித் திரியும் மனமும் அல்ல மனிதர்கள்.

.

படைப்பு என்பது உருவாகும் முன்பும், உருவாகி இயங்கும் பொழுதும், பிரளயம் ஏற்பட்டு முழுமையாக மறைந்த பின்னும் மாறாது உள்ளது எதுவோ, படைப்பிற்கு மூலகாரணமாக உள்ள அந்த பரப்பிரம்மமே மனிதரைப் போன்று உள்ள அனைத்து விதமான படைப்பும் ஆகும். இந்த உயிர்மெய் அறிந்து முக்தி என்ற இறுதி விடுதலையை அடைவதே மனிதராகப் பிறந்ததன் பயனாகும்.

.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~
Those who are born as human beings aren’t the physical form (body) with identities that’s taken by YamA when death happens. Nor are humans the mind that frolics and roams around uncontrollably.
.
That which remains unchanged from the time before creation, when creation happened and flourishes, and when it vanishes during the praLaya, the Parabrahmam is the one that has manifested into all the beings that exist in creation, including humans. Realising this Truth (about Creator, creation, existence, et al) and attaining Mukti (the ultimate liberation from the repetitive birth-death lifecycle) is the purpose of being born as human.

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ விட்டதடி ஆசை.. Crocs செருப்போடு..!

இன்றைய தரிசனம் ~ விட்டதடி ஆசை.. Crocs செருப்போடு..!

நம்மில் பலர் நம்முடைய வாழ்நாள் நிறைவடைவதற்குள் எத்தனையோ திருக்கோயில்களுக்குச் செல்வதுண்டு. ஒவ்வொன்றிலும் தரிசன அனுபவம் மாறுபடலாம் அல்லது ஒரே மாதிரியும் இருக்கலாம். அவ்வனுபவம் இறைவி / இறைவனின் பேரருளை உள்வாங்கும் நம்முடைய தயார் நிலையையும், அன்று காலை – நமக்கு – எவ்வாறு விடிந்தது என்பதையும் பொறுத்து இருக்கக்கூடும் (இடைவிடாது திருத்தல யாத்திரை செய்யும் அடியார்கள் சிலருக்குக் காலையில் சூடான காஃபி கிடைக்காமற்போனால், அந்தத் திருத்தலத்திலுள்ள இறைவன்மீது கூடக் கோபம் வந்துவிடும்). ஒரு சில தலங்களில், ‘நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்,’ என்பதை மெய்யாக்கும் வகையில் சில நிகழ்வுகள் நம்மைப் புரட்டிப் போடும். அப்போதுதான், எத்தனையோ அடையாளங்களுக்குள் தொலைந்துபோன நம்மைவிட, ஒரே அடையாளத்துடன் (அல்லது அதுவுமின்றி) இருக்கும் அத்தலத்திலுள்ள இறைவனே பெரியவர் என்பது பொளேரென்று பள்ளியில் தமிழ் அய்யாவிடம் செவிட்டில் வாங்கிய அறையைப் போன்று புரியும்.

நான் நினைத்தபொழுதெல்லாம் திருக்கோயில் சென்று இறைவனைத் தொழும் பரம பக்தனல்ல. இல்லத்தில் தினசரி நடைபெறும் தேவி மற்றும் வேல் வழிபாடு மற்றும் திட்டமிட்டுச் செல்லும் யாத்திரைகள் தவிர்த்து, ஏதாவது திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது என்பது அபூர்வமாகவே நிகழும். ஆனால் சிறந்த (நிச்சயமாக என்னைவிட) பக்திமானான எனது இளைய சகோதரன் புண்ணியத்தில் இவ்வாரம் அது இருமுறை நிகழ்ந்தது. இன்று இரண்டாவது கோயில் விஜயத்தின்போது, தேவியின் முன்பு சிறிது நேரம் அமர்ந்திருக்கும் வாய்ப்புக் கிடைக்க, நமது குடும்பங்களில் ‘Been There, Seen / Done That‘ என்று எளிதில் விளக்கமுடியாத ஒரு திடமான தன்மையுடன் இருக்கக்கூடிய அத்தை [அ] மாமி போன்ற தோற்றத்துடன், கம்பீரமாக நின்றிருந்த அவளிடம் ஒரு சிறிய முறையீட்டை முன்வைத்தேன். இதுவும் கூட எனக்குப் பழக்கமில்லாதது.

.

இல்லத்திலும் சரி, கோயிலிலும் சரி, எப்போதும் பொதுவான வேண்டுதலன்றி, எனக்காக எதையும் பிரத்தியேகமாகக் கேட்டுப் பழக்கமேயில்லை. ராமநாதபுரத்தில் இளைய சகோதரனுக்கு அரியதான ஒரு மருத்துவக் கோளாறு ஏற்பட்டு, அவனுக்கு மதுரையில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தபோது, இரண்டு முறை இடதுகால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன்மூலம் மறுபடியும் அவ்வருடம்தான் நடக்கத் துவங்கிய காலோடு, தினசரி சிவன்கோயிலிலுள்ள நவகிரஹத்தை 108 முறை வலம்வந்திருக்கிறேன் – அவன் விரைவாகக் குணமடைய வேண்டுமென்று. அந்தச் சகோதரர்தான் இப்போது சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கி (மொத்தமாக ஒரு பத்து பக்தர்கள் மட்டுமே இருந்த, பரபரப்பே இல்லாத ஒரு தினத்தின் காலையில்), தேவியின் முன்பு அமரவைத்தார்.

.

என்னப்பா விஷயம்!” என்று, ஏதுமறியாதவள் போன்று அந்த ஜெகன்மாதா என்னை நோக்கினாள். “அம்மா தேவி, தாயே, அகிலாண்டேஸ்வரி, உன்னைத்தான் தினமும் இல்லத்திலேயே போற்றித் தொழுகின்றோம். என் பிள்ளை அவனுக்கு விருப்பமான துறையில் ஒரு உயர்நிலையை அடையக் கடுமையாக முயற்சித்து வருகின்றான். உலகெங்கும் தனியாகப் பயணித்து, பழகிய உணவு கிடைக்காமல், உடல்நிலை சரியில்லாமல் போனால் உடனிருந்து உதவ யாருமில்லாமல் கஷ்டப்பட்டாலும், விடாமல் முயற்சிக்கிறான். இதோ, இப்போது நடந்துவிடும், அடுத்தமுறை முடிந்துவிடும் என்று நாங்கள் எல்லோருமே உறுதியாக நம்பினாலும், last mile என்ற அந்தக் கடைசிப் படியைக் கடப்பது பகீரதப் பிரயத்தனமாக இருக்கின்றது. அவனுக்கு உடல்நலக் குறைவு எதுவுமின்றி, மனக் குழப்பங்கள் அனைத்தும் அகன்று, அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தி, குறிக்கோளை விரைவில் அடைய நீதான் வழிகாட்ட வேண்டும் தாயே” என்ற என் விண்ணப்பத்தை அவளது மலர்ப்பதத்தில் சமர்ப்பித்து விட்டு, தீப ஆராதனையைத் தரிசித்துப் பிரசாதம் பெற்றுக்கொண்டு எந்தை ஈசனைக் காணச் சென்றோம். அவரிடம் எப்போதும் போல எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. இந்த perennially busy ஆன மனம் எங்கே போயிற்று என்று தேடவேண்டிய நிலையில் மனம் ‘சும்மா இரு‘ந்தது, ஆதியோகியான அந்த அப்பனின் முன்னிலையில். நாம் என்னதான் வேண்டுமென்று வேண்டிக் கேட்டாலும் அவர் கொடுக்கப்போவதென்னவோ முக்தியை மட்டுமே என்பதை என் குருநாதர் எப்போதோ தெளிவுபடுத்திவிட்டார் என்பதால், அவரது சன்னதியிலிருந்தபோது உள்ளே விரிந்த அமைதி ஆச்சரியமாகவே இல்லை. ஆனால், அப்பாவிடம் எதையாவது கேட்கப் பயப்படும் பிள்ளைகூட, அம்மாவிடம் அதை தைரியமாகக் கேட்பதுபோல், அவளிடம் ஏற்கனவே முறையிட்டாகிவிட்டது.
.
அம்மையப்பன் இருவரின் தரிசனமும் முடித்து, பிரதட்சிணம் செய்யப் போகும்போது, மறுபடியும் அவளுடைய சன்னதியில் சென்று சிறிது நேரம் அமரவேண்டுமென்று தோன்றியது. சென்றேன். ஓரிருவர் லலிதா சஹஸ்ரநாமமோ, ஏதோ ஸ்லோகமோ சொல்லியபடி அமர்ந்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை முன்பைவிடச் சற்றே அதிகரித்திருந்தது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னையை மீண்டும் வணங்கிவிட்டு ஒரு மூலையில் கண்மூடி அமர்ந்தேன். எட்டுத் திசையிலும் பாயும் மனம், ஓரளவு அடங்கியதாகத் தோன்றியது. “கற்பகமே, கருணைக் கண் பாராய்,” என்று மதுரை மணி ஐயர் மதுரமாகக் செவிக்குள்ளிருந்து பாடினார். நம்மை அறியாத ஒருவரிடம் நமது தேவையை விளக்கிச் சொல்வதுபோல் அவளிடம் விண்ணப்பம் வைத்த பைத்தியக்காரத்தனத்தை எண்ணிச் சிரிப்புதான் வந்தது. அவள் அறியாததா. எத்தனையோ லக்ஷம் பக்தர்கள் வந்துபோனாலும், எல்லோருக்கும் படியளக்கும் அம்மையப்பனுக்கு அவர்களின் நிலையோ, தேவைகளோ தெரியாதா என்ன? ஆனால் அந்த லோகமாதா எனது சிறுபிள்ளைத்தனமான விண்ணப்பத்தைப் பார்த்து எள்ளி நகையாடவில்லை.

.

இதுதானேயப்பா தினசரி என்முன் நடக்கின்றது… வருவோர் எல்லோரும் ஏதாவது ஒரு கவலையையோ, தேவையையோ என் முன் வைப்பது வழக்கம்தானே. அவருக்கென்ன, ‘சிவனே’ என்று சமாதியில் இருப்பார். இந்த வரம் கேட்பவர்களின் பிரச்னையை எல்லாம் நான்தானே கவனிக்க வேண்டியுள்ளது. என்னிடம் சொல்லிவிட்டாயல்லவா. இனி நான் பார்த்துக்கொள்கிறேன், கவலையின்றிப் போய் வா குழந்தாய்!” என்று என்னை ஒரு அத்தை / மாமிபோலத் திடமாகத், தெளிவாகத் தேற்றினாள் கற்பகாம்பாள். திருமயிலையில் கபாலீஸ்வரருடன் உறையும் ஜெகன்மாதா. ‘மயிலயே கயிலை‘ எனில், இவளே சதி என்ற தாக்ஷாயணி… பார்வதி… உமாதேவி… ஆயிரம் பெயருடைய உலகம்மையான லலிதா பரமேஸ்வரி. அந்தப் த்ரிபுரசுந்தரியே “நான் பார்த்துக்கொள்கிறேன் போய் வா,” என்றதும் ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கிவைத்தாற்போல் மனம் இலகுவானது. மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளிடம் வேண்டி, அவர்களது பேட்டையின் எல்லையில் வீடு வாங்கியதைப் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. ‘போய் வருகிறேன் தாயே, பிள்ளையைப் பார்த்துக்கொள் நீயே,’ என்று என் மாமியிடம் [அ] அத்தையிடம் விடைபெற்றுக் கபாலீச்சுரத்திலிருந்து கிளம்பினோம்.

.

ஆனால் அவள்தான் லீலாவிநோதினியாயிற்றே… அத்துடன் விடுவாளா. அவளது விளையாட்டுத் தொடங்கியது. கபாலீஸ்வரரிடம் விடைபெற்று, வெள்ளீஸ்வரரிடம் சென்றோம். அங்கு காமாக்ஷியாக நின்றவள், காஞ்சி ‘மங்கள காமாக்ஷி’யை (இது அங்குள்ள புகழ்பெற்ற காமாக்ஷி திருக்கோயிலை விடப் பழமையானது என்று சொல்லப்படுகின்றது; காஞ்சியின் எல்லையில் அமைந்துள்ளது) இன்னமும் தரிசிக்கவில்லை என்பதை நினைவூட்டினாள். அங்கேயே, ‘சப்த மாதாக்கள்‘ வடிவில் அமர்ந்து, இவ்வாண்டு நான் குலதெய்வ தரிசனம் செய்யத் தவறியதையும் நினைவு படுத்தி மெல்லக் குட்டினாள். அவர்களுக்கு விரைவில் வஸ்திரம் சாற்றுவதாக வேண்டிக்கொண்டு, அதற்கான முறை என்னவென்று கோயில் ஊழியரிடம் விசாரித்து அறிந்துகொண்டு, அங்கு தரிசனத்தை முடித்து, ‘கற்பகாம்பாள் மெஸ்’ஸில் காலை உணவை முடித்துக்கொண்டு (கர்மா சுமை’ கூட்டும் லிஸ்டில் இன்னொரு அவா ஐட்டம் டிக் அடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுவிட்டது, அப்பாடா), அருகே இருந்த சாய்நாத் மஹாராஜிடம் சென்றோம்.
.
நுழைவாயிலிலேயே ‘வாயில் எண் 1ல் உள்ள காலணிப் பாதுகாப்பிடத்தில் உங்கள் காலணிகளை விடவும்‘ என்று, ஒன்றுக்கு மூன்று அறிவிப்புப் பலகைகள் கதறியதை மதியாமல், மற்ற பக்தகோடிகளைப் போன்றே நாங்களும் அந்த வாயிலுக்கு அருகிலேயே காலணிகளை விட்டுச் சென்றோம். தேவியைப் போன்று தேஜோமயமாக, சாய்நாத் மஹாராஜும் பச்சை நிற ஆடையணிந்து, குறுநகையுடன் அரியாசனத்தில் வீற்றிருந்தார். அருமையான தரிசனம் முடித்து, ஆனந்தமாக வெளியே வந்தோம். செருப்பை விட்டுச் சென்ற இடத்தில வெறும் தரைமட்டுமே இருந்தது. எட்டுத் திசைகளிலும் நோக்கினோம்… ம்ஹூம், அந்தக் கரிய Crocs காலணியை எங்கும் காணவில்லை. “அவரு முன்னால இப்படியெல்லாம் எடுக்கக்கூடாதில்ல சார்,” என்று ஆதரவுக்குரல் கொடுத்த அம்மணிக்குக் கணிசமான பிக்ஷை கிடைத்தது. “இங்க இதேமாதிரி தினமும் நடக்குதுங்க,” என்று ஒருவர் தன் கருத்துக்கணிப்பற்ற முடிவை முன்வைத்தார். கோயிலின் உள்ளே ஒருகணம் நோக்கினேன். சாய்நாத் அதே குறுநகையுடன் ‘இப்போது என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்!’ என்பதுபோல் பார்த்தார். அப்படிப் பார்த்தது அவரா, அவளா..!

.
சற்றே விலையுயர்ந்த அந்தச் செருப்பின் மீது நமக்குக் கொஞ்சம் பற்றிருந்தது போலும்… அதனால் ஏறியிருக்கக் கூடிய கர்மாவின் சுமை கொஞ்சம் குறைந்தது இப்போது… இதுவும் நன்மைக்கே…‘ என்று வெற்றுக் காலுடன், மழைநீரில் நனைந்த திருமயிலைத் தெருக்களில் இன்னும் சற்று நேரம் திரிந்துவிட்டு, கோயில் குளக்கரையில் நின்றவாறே உறங்கிய கொழுகொழு வாத்துக்களைப் பார்த்து வியந்தபிறகு, சகாய விலையில் ஒரு காலணியை ஏதோ ஒரு சாலையோரக் கடையில் வாங்கி அணிந்துகொண்டு, MRTS ரயிலைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

.

பெரிய பாதை வழியாகச் சபரிமலை யாத்திரை சென்றபோது, இதே போல, கொஞ்சம் பெருமிதத்தோடு போட்டுக்கொண்டு திரிந்த காவிநிறக் குர்த்தாவை, தேநீர் அருந்த அமர்ந்த ஏதோ ஒரு விரியில் விட்டுவிட்டு, இருந்த ஒரே மேல்சட்டையும் போய்விட, யாரோ இரவல் கொடுத்த, அளவில் பெரிய சட்டையை இரண்டுநாள் அணிந்தது ஞாபகம் வந்தது. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது‘ என்று எந்தை ஈசனின் பெருமையைக் குறித்துக் கூறுவதுண்டு. ஆனால் ‘சக்தியில்லையேல் சிவமில்லை,’ என்பதால், அவளின்றி அவனும்கூட அசையமாட்டான் என்று தோன்றியது. கருணைக்கடலான அன்னை கற்பகாம்பாளின் விளையாட்டுப் புரிந்தது. “விட்டதடி ஆசை, Crocs செருப்போடு,” என்று இல்லத்தில் கொலுவீற்றிருக்கும் ‘ஜெய் பைரவி தேவி‘யின் பதம்பணிந்து, ‘நம்மில் பலர் நம்முடைய வாழ்நாள் நிறைவடைவதற்குள் எத்தனையோ திருக்கோயில்களுக்குச் செல்வதுண்டு…’ என்று இந்தப் உயிர்மெய் பதிவை எழுதத் தொடங்கினேன்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #105

அருட்குறள் ~ ஞானப்பால் #105
வறியவர் செல்வரெவ் வகையின ராயினும்

அரியதிப் பிறவியறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஒரு உயிரானது இப்பிறவியில் மனிதராகப் பிறந்திருப்பதன் பெருமையை
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது…
என்று தொடங்கும் தனிப்பாடலில் ஒளவையார் அருமையாக விளக்கியுள்ளார்.

எனவே, மனிதராகப் பிறந்த ஒருவர், தான் வறியவன்/ள், செல்வன்/ள், உயர்ந்தவன்/ள், தாழ்ந்தவன்/ள், கற்றவன்/ள், கல்லாதவன்/ள், பலர் தான் சொல்வதைக் கேட்கும் செல்வாக்கு உடையவன்/ள், யாராலும் மதிக்கப்படாத எவ்விதப் பெருமையோ புகழோ அடையாதவன்/ள், என்றெல்லாம் பயனற்ற புற அடையாளங்களால் பெருமிதம் கொண்டு திரிவதையும், அல்லது புலம்பித் தவிப்பதையும் விடுத்து, படைப்பிலுள்ள எண்ணற்ற உயிரினங்களில் அரியதான இப்பிறவி தனக்குக் கிடைத்ததே பெரும்பேறு என்பதை உணர்ந்து, இப்பிறவியிலேயே உயிர்மெய் அறிந்து உய்வதற்கு முயலவேண்டும்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
In her poem that starts such,
Ariyadhu kEtkin varivadi vElOi
Aridharidhu maanidar aadhal aridhu…
poetess of the sangam period AvvayAr enchantingly explains the rare privilege of a being born as a human being.

Hence, any human being who either brags or sulks about being rich, poor, elite, downtrodden, educated, illiterate, influential, nondescript, must simply let go of such external identities; realise that being given the opportunity to be born as human in this lifetime, amidst millions of other species, is itself a great boon; and strive to attain self-realisation and mukti within this lifetime itself.

~ஸ்வாமி | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑