சந்தப்பெருங்கவிக்கோ அருணகிரிநாதரின் சமாதி!

சந்தப்பெருங்கவிக்கோ அருணகிரிநாதரின் சமாதி!

(The final resting place of the great Saint-Poet AruNagirinAdhar!) 🙌😇✍🙏🤔
.
தமிழறிந்த ஆன்மீக அன்பர்களுக்கு, அருணகிரிநாதர் யார் என்ற அறிமுகம் தேவையில்லை. செந்திலன் அருளுடைச் சந்தப்பெருங்கவிக்கோ அருணகிரிநாதர் அவதரித்த தலம் அருணாசலா என்று போற்றித் துதிக்கப்கடும் தொன்மையான சிவ ஸ்தலமான திருவண்ணாமலை.

.

பெண்பித்தனாய்த் திரிந்து, அதனால் பொருளிழந்து, உடல் நலிவுற்ற தனது இழிநிலையை உணர்ந்து மனங்கலங்கித் திருவண்ணாமலையின் ஹிருதயமாக உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கோபுரத்திலிருந்து உயிர்விடத் துணிந்து குதித்த அவரை எந்தை ஈசனின் ஈடிலா இளைய செல்வனாகிய ஸ்கந்தப் பெருமான் தடுத்தாட்கொண்டு, கணத்தில் ஞானோதயம் அளித்து, ‘இனி நீர் எம்மைப் பற்றிப் பாடுக’ என்று பணித்தான். அடியார்க்கு அருட்பெருங்கருணையை அள்ளி வழங்கிய எம்பிரான் முருகப்பெருமான், ‘கம்பத்து இளையனார்’ என்ற திருநாமத்துடன், அண்ணாமலையாரைத் தரிசிக்க வரும் பக்த கோடிகளுக்கு ஆசி வழங்கி ஆலயத்துள் அனுப்புகின்றான்.

(திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ~ ஸ்கந்தாஸ்ரமம் செல்லும் வழியில், அருணை மலையிலிருந்து)

.

அம்பலத்தரசனின் அறுமுகக் குழந்தையின் அருளால், உன்மத்தத்திலிருந்து உன்னத நிலைக்கு ஒரே கணத்தில் உயர்ந்த அடியவர் அருணகிரியார் பதைத்தார். கவி பாடுவது அவருக்குப் புதியதல்ல. ஆனால் தமிழ்க் கடவுளான கந்தஸ்வாமியின் பெருமையைப் பாடும் தகுதியும் தமக்கு உண்டோ என்றெண்ணித் தவித்த அருணகிரியார், தனது குழப்கத்தைத் தகப்பன்சாமியிடம் தெரிவிக்க, ஞானப்பழமாகிய கந்தவேள் “முத்தைத்தரு பத்தித் திருநகை” என்று முதலடியைக் கொடுக்க, பொழியத்தொடங்கியது தெள்ளு தமிழ்க் கவி மழை அவரிடமிருந்து. ஸ்கந்தகுருநாதனின் அருட்தலங்களெங்கும் சென்று அருணகிரிநாதர் அவரது புகழை உளமுருகிப் பாடப் பாட, சந்தம் கொஞ்சும் திருப்புகழின் மணம் புவியெங்கும் பரவத்தொடங்கியது. கந்தரலங்காரம், கந்தர் அநுபூதி என்பன போன்றவையும் ஆறுமுகனின் அடியார்களிடையே பெரும்புகழ் பெற்றன.

.

(அருணகிரிநாதரின் திருமேனி எரியூட்டப்பட்ட இடம், அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நந்தவனம் செல்லும் வாயிலுக்கு அருகில்; பிண்ணனியில் அருணை மலை)

.

ஓடித் தலம் பல தேடி அருளைப் பாடிக் களித்த கவிக்கோ, இறுதியாக அடங்குமிடமாகத் தான் அவதரித்த தலத்தையே தேர்ந்தெடுத்தார். ஆனால், அவர் தனது உடலை உதிர்த்து, உலகளந்த பெருமாளின் மருகனான முருகனுடன் இரண்டறக் கலக்குமுன், கிளியின் உடலுள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செய்யவேண்டிய செயலுக்காகத் தனது திருமேனியை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் ஓரிடத்தில் விட்டுச் சென்றார்.

.

பக்தர்கள் நிறைந்த உலகில் பாதகர்களும் எப்போதும் இருப்பர். அதுபோன்ற, அருணகிரியாரின் அளப்பரிய புகழ்மீது பொறாமை கொண்ட ஒரு பாதகன், அவர் மீண்டும் தனது மேனியில் உட்புகுமுன், அதைக் கண்டெடுத்து அதற்கு எரியூட்டினான். அப்பாதகச் செயல் நிகழ்ந்த இடமே இப்புகைப்படத்திலுள்ள இடம். இது அருணைத் திருக்கோயிலின் பரந்த பிரகாரத்தில், நந்தவனம் செல்லும் வாயிலுக்கருகில் அமைந்துள்ளது. இதுவே ஈடிணையற்ற அமுதினும் இனிய தமிழ்க்கவி அடங்கிய இடம் (சமாதி) என்பது சிலர் கூற்று.

(அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பிரகாரத்தில், அருணகிரிநாதரின் திருமேனி எரியூட்டப்பட்ட இடத்தில் ஒரு மண்டபம் அமைந்துள்ளது; அதன் முன்பு, சிறு பீடமும், அருகே விநாயகர் சிலை ஒன்றும் உள்ளன)

.

இதே திருக்கோயிலினுள், நந்தவனத்தைக் கடந்து கோசாலைக்கு அருகில் உள்ள மதிற்சுவற்றின் அடியில் ஒரு அழகிய சிறு லிங்கம், நந்தியுடன் அமைந்துள்ளது. இதற்கு தினசரி வழிபாடு நிகழ்கின்றதா என்று தெரியவில்லை. கோசாலையில் உள்ள பசுக்களுக்கு உணவளிக்கச் செல்வோர் இவ்விடத்தைத் தரிசிக்கலாம். எவரும் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்டு வரும் இவ்விடமே அருணகிரிநாதரின் சமாதி ஆகும் என்றும் சிலர் உறுதி கூறுகின்றனர். ஆனால் இவ்விடம் இடைக்காடர் என்ற சித்தர் தவம் செய்த இடமென்றும், இதுவே அவர்தம் ஜீவ சமாதி என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

.

இதில் எது உண்மையோ யாமறியோம். இரு இடங்களில் எது அருணகிரிநாதர் அடங்கிய இடமாக இருந்தாலும், அவ்விடம் அடியவர் பணிந்து வணங்கும் தகுதியுடையதே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிணென் சித்தர்களுள் ஒருவரான இடைக்காடரும் நமது வணக்கத்திற்குரியவரே. ஆகவே, அடுத்த முறை நீங்கள் ஆதியோகி அருணாசலேஸ்வரர் மற்றும் அன்னை உண்ணாமுலை அம்மையைத் தரிசிக்கச் செல்லும்பொழுது, மறவாமல் கம்பத்து இளையனாரான கந்தப் பெருமானைப் பணிந்து வணங்கிவிட்டு, அருணகிரிநாதர் அடங்கிய இடத்தில் அமர்ந்து அமைதியான தியானமோ அல்லது மெல்லிய குரலில் அவரது அற்புதப்பாடல்களில் ஏதாவதொன்றைப் பாடியோ, சந்தப்பெருங்கவிக்கோவான அந்தத் தமிழ்க்கவியைப் பணிந்து, அன்னாரின் அருளாசியைப் பெறத் தவறாதீர்கள்.

.
~ஸ்வாமி | @PrakashSwamy

முருகன் அல்லது அழகு ~ திரு வி க

முருகன் அல்லது அழகு ~ திரு வி க

திரு.வி.க என்ற திரு.வி.கலியாணசுந்தரருக்கு அறிமுகம் தேவையில்லை – குறிப்பாகத் தூய தமிழ் (எ) தனித்தமிழ் விரும்பிகளான தமிழ் வாசகர்களுக்கு. திருக்குறளுக்கு அவர் எழுதியுள்ள உரையை (2 தொகுதிகள்) சென்னைப் புத்தகத் திருவிழாவில் தேடிக்கொண்டிருந்தபோது, “முருகன் அல்லது அழகு” (பாரி நிலையம் பதிப்பு) என்ற சிறிய புத்தகத்தைக் கண்டதும் வாங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.  அதற்குக் காரணங்கள் இரண்டு
  1. தனித்தமிழ் ஆசாமி தமிழ்க் கடவுள் பற்றி என்ன சொல்லியிருப்பார் என்ற வியப்பு   
  2. எந்தை ஈசனின் இளைய பெருமாளாகிய அறுபடைத்தலைவன் எமது குலதெய்வம் என்பதால் விளைந்த இயல்பான ஆர்வம் 
அவருக்கே உரித்தான தூய தமிழ் நடையில் எழுதப்பெற்றிருக்கும் இந்நூல், உலகெங்குமுள்ள தமிழர்களால் தங்களின் தனிப்பெருந்தலைவனாகக் கொண்டாடப்படும் முருகப்பெருமானை முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் நோக்குகின்றது. பக்கங்கள் புரளப் புரள, சங்க காலம் தொட்டுப் புகழ்பெற்றுள்ள பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலிருந்தும் பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றின் மூலம் முருக வழிபாடு எவ்வளவு தொன்மையானது என்று நிறுவுகிறார். “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்த குடி” என்று கேட்டவுடன் instagramமில் போடும் படத்திலுள்ளதைப் போன்ற புன்னகை முகத்தில் விரியும் பெருமிதத் தமிழர்களுக்கு முருகன் வழிபாட்டின் இந்தத் தொன்மை ஆச்சரியமாக இராது.
murugan_alladhu_azhagu_thiruvika
பண்டைய பழங்குடி மக்களால் – குறிப்பாக மலைகளிலும், மலைசார்ந்த நிலமாகிய குறிஞ்சிப் பகுதியில் வாழ்ந்தவர்களால் – கடைப்பிடிக்கப்பட்ட இயற்கை வழிபாடு முருக வழிபாடே என்பதைப் படிப்படியாக அவர் நிறுவுவது அற்புதமாக உள்ளது. புத்தகத்தின் தலைப்பும் அக்கருத்தையே குறிப்பதில் எந்த வியப்புமில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைக் கைபேசியில் மட்டுமே பார்த்திருக்கக்கூடிய digital natives கூட, இயற்கை மற்றும் அழகு ஆகியவை ஒன்றே என்பதை மறுக்க முடியாது. பண்டைய தமிழர்கள் இயற்கையை அதன் அழகினால் மெய்மறந்ததால் மட்டுமின்றி, அதன் அளப்பரிய அழிக்கும் சக்தியினால் ஏற்பட்ட அச்சத்தாலும் வழிபட்டிருக்கலாம். தொழில்நுட்பம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வளர்ந்திருக்கும் இன்றைய காலத்தில்கூட மனிதர்களால் இயற்கையின் அழிவு விளையாட்டை ஓரளவுக்கு கணிக்க மட்டுமே முடிகின்றது, ஆனால் நிறுத்தவோ அதனால் விளையும் பாதிப்பைக் குறைக்கவோ முடியவில்லை  என்ற நிலையில், பண்டைய காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இயற்கை வழிபாட்டிற்கும் முருக வழிபாட்டிற்கும் உள்ள உறுதியான தொடர்பை, ஆறுமுகப்பெருமானின் பெயரின் வேர்ச்சொல்லிலிருந்து திரு.வி.க வெளிக்கொண்டு வருவது அழகு. ‘முருகு’ என்ற சொல் அழகு, இளமை, கடவுட்தன்மை, மணம் என்ற பல பொருள் கொண்ட சொல்லாகும் (தொன்மையான சமஸ்கிருதம் போன்ற – அல்லது அதைகாட்டிலும்  தொன்மையான – தமிழ் மொழியில், அதைப்போன்றே பல பொருள் உடைய சொற்கள் பல உண்டு). இயற்கையோடு ஒத்து வாழ்ந்தோர் அந்த நான்கு தன்மைகளையும் இயற்கையில் கண்டிருக்க வாய்ப்புள்ளது. அவ்வற்புத குணக் கலவைக்கு ஒரு கடவுள் வடிவம் கொடுக்க முயன்றோர், ‘அன்’ என்ற ஆண்பாலைக் குறிக்கும் விகுதியை அதனுடன் இணைத்து அழகின் வடிவமாகிய ஆறுமுகனுக்கு “முருகன்” (முருகு + அன்) என்று பெயரிட்டனர். ஆஹா! 
உபநிடதங்களில் ‘நிர்குண பிரம்மம்’ (குணம் மற்றும் வடிவங்களற்ற) என்றே இறைவனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. படைப்பும், படைத்தவனும் வெவ்வேறு என்பது பகுத்தறிவால் விளையும் அறியாமை. படைக்கப்பட்ட உயிரானது படைத்த சக்தியுடன் இரண்டறக் கலந்து ஒன்றுவதே ஆன்மீக ஆர்வலர்களின் தேடல். முருகனினது பெயரின் மூலத்தை நிறுவியபின், திரு.வி.க அதைக் கடந்து மிகவும்  தொன்மையான ‘நிர்குண ப்ரம்மமே’ முருகன் என்பதையும், பண்டைய இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்களைக் காட்டி நிறுவுகிறார். முருகன் புகழ் பாடிய புலவர்களில் மிகப் பிரபலமாகிய, திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி போன்ற அற்புதப் பாடல்களை பாடிய  சந்தப் பெருங்கவிக்கோ அருணகிரிநாதரின் பல பாடல்கள் மற்றும் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களைக் காட்டுவதோடு, அழகிற்கு உதாரணமாகக் கவிஞர்களால் காலங்காலமாகப் பாடப்பெற்றுவரும் பெண்மையையும் எடுத்துக்காட்டி முருகப்பெருமானது (ஞான சக்தி) இரு துணைவியர்களாகிய வள்ளி (இச்சா சக்தி) மற்றும் தெய்வானையை (கிரியா சக்தி) விளக்குகிறார். அதன்பின், சோமாஸ்கந்த தத்துவக் குறியீடு விளக்கத்தின் மூலம், சிவம், சக்தி மற்றும் முருகன் ஆகியோர் ஒன்றே (தனிப்பட்ட உரு மற்றும் குணம் அற்ற, ஒன்றுபட்ட சக்தி) என்பதையும் அழகாக வெளிப்படுத்துகின்றார்.
திரு.வி.க அவர்களின் மொழி ஆளுமை நூலெங்கும் புலப்பட்டதில் ஏதும் வியப்பில்லை. ஆனால் அவரே முருக வழிபாட்டைக் கொண்டாடியவர் என்பது நிச்சயம் வியப்பாயிருந்தது. முருக வழிபாட்டின் மூலம் பக்தி யோகத்தை வளர்க்க அவர் தோற்றுவித்த பஜனைத் திருச்சபை அவரது காலத்திற்குப் பின்பும் (புத்தகத்தின் மறுபதிப்பு வெளியிடப்பட்ட காலத்தில்) இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. முருகன் வழிபாடு தமிழ் மொழியின் பொற்காலமாகிய சங்க காலத்திற்கும்  முன்பிருந்தது என்பதை ஆணித்தரமான விவாதமாக இல்லாது அனைவரும் ஆமோதிக்கும் வகையில் அழகாக நிறுவும் இந்த நூல், அன்றிலிருந்து இன்றுவரை பக்தியின் தீவிரம் குன்றாது அதீத ஆர்வத்துடன் ஸ்கந்தகுருநாதனை வழிபட்டு உருகும் முருகனடியார்களைப் பரவசப்படுத்தி அவர்தம் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகச் செய்வது நிச்சயம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!!!
உலகெங்கும் பரவியுள்ள முருகனடியார்கள் மட்டுமில்லாது, தமிழ் ஆர்வலர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்நூலைப் படித்து ரசித்து மகிழலாம். 
~ஸ்வாமி | @PrakashSwamy 
English version of this book review can be enjoyed here…

Powered by WordPress.com.

Up ↑