மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

முதலீடு!

தினசரி பிறரைப் பற்றிப் ஏதாவது அர்த்தமற்ற கருத்துக்களைப் பேசி வீண்செலவு செய்யும் காலத்தை, தன்னைப் பற்றிய உயிர்மெய் அறிய மௌனத்தில் முதலீடு செய்தால், மெய்ஞானம் என்ற லாபத்தை ஈட்ட இந்த வாழ்நாளிலேயே யாவர்க்கும் வாய்ப்புள்ளது!

~ஸ்வாமி | @PrakashSwamy

விடை!

விடை உடனடியாகக் கிடைத்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவரையில், கேள்விகள் சுமையாக ஆவதில்லை.

அர்த்தமுள்ள கேள்வி என்ற விதையிலிருந்து தெளிவுதரும் பதில் துளிர்விடும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.

அதற்காகக் காத்திருக்கும் வேளையைக் கவலையில் வீணடிப்பதை விட, பயனுள்ள ஏதோ காரியத்தில் கவனம் செலுத்தப் பயன்படுத்தலாம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

தரிசனம்!

போட்டி, பரிசு, பாராட்டு, விருது, புகழ்ச்சி என்று எதுவுமே இல்லாதபோதும்

உங்களது முழுத்திறனுடன், மெய்யான ஆர்வத்துடன், முனைப்புடன் எந்த ஒரு செயலையும் நீங்கள் தொடர்ந்து செய்யும்பொழுது…

பகட்டான பிழைத்தலின் எல்லையைக் கடந்து, மகத்தான வாழ்வின் உயிர்மெய் தரிசனம் உங்களுள்ளே இயல்பாக நிகழும்.

~ஸ்வாமி |@PrakashSwamy

மௌனம்!

மெய்யான மௌனம்…
எதையும் வாய்திறந்து சொல்லாதிருப்பது அல்ல.
எவரிடமும், எதுவும் சொல்லவேண்டிய தேவையற்றிருப்பது!

~ஸ்வாமி | @PrakashSwamy

வரம்!

சொற்கள் உதிரி மலர்கள்.
கவிதை மலர்களின் கொத்து.
உரைநடை கதம்பச் சரம்.
பாடல் மலர் அலங்காரம்.
பதிகம் தொடுத்த மாலை.
அர்த்தம் சொல்லின் மணம்.
மௌனம் அர்ப்பணிப்பின் வரம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அடங்கல்!

ஆழ்ந்த மௌனத்தின் சன்னிதியில்…
ஆனந்த அமுதை விழிகள் பருகும்
அமைதிச் சாறை செவிகள் அருந்தும்
அருளின் ஒலியை நாசிகள் உண்ணும்
அன்பின் வருடலில் விரல்கள் உறங்கும்
அசையும் தேவையற்று நாவும் அடங்கும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑