இன்று, ஒன்று, நன்று! ~ ‘குறையொன்றுமில்லை’ என்ற வசீகரக் களஞ்சியம்!

இன்று, ஒன்று, நன்று! ~

‘குறையொன்றுமில்லை’ என்ற வசீகரக் களஞ்சியம்!

.
தெய்வத்தின் குரல்‘ படித்தவர்களுக்கு அதுபோல் சனாதன தர்மம் பற்றிய விளக்கம் வேறு ஏதேனும் உள்ளதா என்று தேடும் ஆர்வம் பொதுவாக இருப்பதில்லை. அது அத்தகைய என்சைக்ளோபீடியா மாதிரியான ரெஃபரன்ஸ். ஆனால் ஒவ்வொரு பாகமும் படிக்கும்பொழுதே கண் சொருகினால் அவசரத்திற்குத் தலையணையாகப் பயன்படும் அளவு பெரியது (இதுபோன்ற பொக்கிஷத்தையெல்லாம் ஏன் கிண்டிலில் போட மாட்டேங்கறா எந்தப் பப்ளிஷரும்! 🙄). சோவின் ‘ஹிந்து மஹாசமுத்திரம்‘, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்‘ (முழுத்தொகுப்பு) ஆகிய அற்புதமான புத்தகங்களும் இதே வகையைச் சேர்ந்தவைதான். உட்கார்ந்து படித்தால் கை வலிக்கும்; நடந்துகொண்டே படித்தால் கை, கால், கழுத்து எல்லாம் சேர்ந்து வலிக்கும்!

.

சமீபத்தில் என் பிள்ளை தாம்பரம் பாஸ்போர்ட் சேவா கேந்திரா உள்ளே சென்றிருந்தபோது (பக்கங்கள் காலி ஆகிவிட்டதால், 60 பக்க பாஸ்போர்ட் ரீ இஷ்யுவிற்கு அப்ளை பண்ண ~ இதுபோன்ற கேஸை அவர்கள் அடிக்கடி பார்ப்பதில்லை என்பதால் 3 மணி நேரத்திற்குமேல் அவனை வெளியே விடாமல் பேசித் தீர்த்துவிட்டனர்! 😂), எதிரே இருந்த கிரி டிரேடிங் கார்ப்பரேஷன் கடையில் சும்மா விண்டோ ஷாப்பிங் பண்ணிவிட்டு வரலாம் என்று போய், ஆன்மீகப் புத்தகங்கள் இருக்கும் செக்ஷனுக்குப் போனதும் வழக்கமான சென்னைப் புத்தகக் கண்காட்சி சமயத்தில் வரும் ஆர்வ ஜுரம் படக்கென்று வந்துவிட, பத்துப் பதினைந்து புத்தகங்களை எடுத்துக் கூடையில் போட்டுவிட்டேன்.
.
நாலாயிர திவ்யப்பிரபந்தத்திற்குச் சிறிது காலமாக நல்லதொரு உரை தேடிக்கொண்டிருக்கிறேன் (ஆதர்ச எழுத்தாளர் அதை எழுதாமலே ஆசார்யன் திருவடியை அடைந்துவிட்டார்; ஆனந்தத்தைப் பெயராகக் கொண்ட வைணவ நண்பர் ரொம்ப நாளாக ஒரு உரையைக் கைகாட்டக் கடுமையாக முயற்சித்து வருவதாகப் பட்சி சொல்கிறது 😜). வெறும் பாட்டு மட்டும் உள்ள புத்தகமே திக்கான தலையணை மாதிரி இருந்ததால் (‘நாலாயிரம் பாட்டு இல்ல சார்’ – கடையிலிருந்த ஒரு சேல்ஸ் பெண்மணி!) அதைத் தூக்கிப் பார்த்தவுடனே மேல் ஷெல்ஃபில் வைத்துவிட்டேன்.

கழுத்து வலித்ததே என்று குனிந்தால் எதிர் வரிசையில், கீழே இருந்த ஷெல்ஃபில் அடுக்கியிருந்த கையடக்கப் புத்தகத்திலிருந்து ஸ்ரீதேவியை (இவர் ஒரிஜினல் ~ பாற்கடலைக் கடைந்தபோது வந்தவர்) ஜம்மென்று மடியில் அமர்த்தி மெல்ல அணைத்தபடி, மெத்த மகிழ்ச்சியுடன் விரிந்த புன்னகையுடன் நரசிம்ஹர் ‘என்னை அட்டையில் போட்டிருக்கிறார்கள் ஆனால் ஸ்லோகப் புஸ்தகமில்லை, என்னவென்றுதான் எடுத்தும் பாருமேன் ஸ்வாமி‘ என்றார். கையில் எடுத்த புத்தகம்

குறையொன்றுமில்லை“. ஆசிரியர் முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார்.

.

.

என்னடா இது புதுசா இருக்கே (புத்தகம் ரொம்ப காலமாகவே இருந்திருக்கின்றது – 34ம் பதிப்பு – நமக்குத்தான் இன்றுவரை கண்ணில் படவில்லை) என்று அந்த ஷெல்ஃபை மறுபடி நோக்கினால், நரசிம்மர் விதவிதமான போஸில் பல புத்தகங்களின் அட்டையில் சிரித்தார். அன்போடு கூடை எடுத்துக் கொடுத்து, என்னை சஃபாரி அணியாத கறும்பூனைக் கமாண்டோ மாதிரி நிழலாகத் தொடர்ந்து வந்த கடை அலுவலரிடம் “ஏண்ணா, குறையொன்றுமில்லை மொத்தம் எத்தனை பாகம்?” என்றேன். பும்ராவின் யார்க்கரை எதிர்பார்க்காத பேட்ஸ்மேன் போல ஒருகணம் விழித்தவர், சட்டென்று விற்பனைக் கமிஷன் ஞாபகம் வந்த சேல்ஸ்மேன் போலச் செயலில் இறங்கினார். தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, இரண்டு அடுக்கு புத்தகங்களை எடுத்துப் பரப்பி, ஆரம்பப் பள்ளி மாணவப் பருவத்தை நினைவூட்டும் விதமாக ஒண்ணு, ரெண்டு என்று எண்ணிக் கடைசியில் “எட்டு பாகம் சார் மொத்தம்” என்று வெற்றிப் புன்னகை புரிந்தார். நான் முதல் பாகத்தை மட்டும் அவரிடமிருந்து கவர்ந்துகொண்டு பில் போடப் போய்விட்டேன் (இன்னொரு பத்து நிமிடம் இருந்திருந்தால் எட்டையும் நிச்சயம் வாங்கியிருப்பேன் – அறிவுத் தாக ஜுரத்தின் வலி[மை] ஆயிரம் புத்தகமாவது வாங்கியவர்களுக்குத்தான் தெரியும்)!

.

முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார் மிகப் பிரபலமான பிரவசனம் (ஆன்மீகச் சொற்பொழிவு) செய்த வைணவப் பெரியவர். அவரது நடை கிருபானந்த வாரியாருடைய பேச்சைப் போல வசீகரமாக இருக்கின்றது. வேதத்தில் ஆரம்பித்து, காயத்ரியை போகிறபோக்கில் மென்ஷன் பண்ணிவிட்டு, நரசிம்ம அவதாரத்தின் அறிவியல் பிண்ணனியை விளக்கி, சஹஸ்ரநாமம் எவ்வளவு உயர்ந்தது என்று ஒண்ணரைப் பக்கத்திலே சொல்லும் அவரது திறம், ‘குறையொன்றுமில்லை‘யின் பக்கங்களில் பிரகாசித்து, ‘சுஜாதாவின் வசீகர எழுத்தில் ஆன்மீகப் புத்தகம் ஏதாவது கிடைக்காதோ‘ என்ற என்போன்ற பாமர ரசிகனின் ஏக்கத்தைத் தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாகச் சொல்வது மிகையாகாது. சனாதன தர்மம் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு, முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியாரின் ‘குறையொன்றுமில்லை’ ஒரு வசீகரக் களஞ்சியம்!

.

இதோ “குறையொன்றுமில்லை ~ பாகம் 1 ~ முக்கூர் லக்ஷ்மிநரசிம்ஹாச்சாரியார்” ப்ரிவியூ…
~~~~~~~~~~

விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே நரசிம்ஹ அவதாரம் பற்றி விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நரசிம்ஹ அவதாரம் பற்றி அதர்வ வேதம் விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறது.
.
பிரஹலாதனுக்கும் ஹிரண்யகசிபுவுக்கும் நடந்த விவாதத்தை விவரித்துக் காட்டும் அதர்வ வேதம், நரசிம்ம அவதாரத்தை மின்சக்தி என்கிறது! பிரஹலாதன் அஸ்தி (உண்டு) என்று சொல்கிறான்; ஹிரண்ய கசிபு நேதி (இல்லை) என்கிறான்.

.

அஸ்தி என்ற பாஸிடிவ் தத்துவமும் நேதி என்ற நெகடிவ்வும் மோதிக் கொண்டதாலே ஒளியும் ஒலியும் ஏற்பட்டதாம். ஒளிமயமாய் நரசிம்மன் தோன்றினானாம். அவனுடைய அட்டகாசம் ஏழு உலகங்களையும் தாண்டிப் போய், பிரும்மா அமர்ந்திருந்த தாமரையை ஒரு அடி அடித்ததாம்! பிரும்மாவைக் கீழே தள்ளியதாம்!
.
பிரும்மாவை மட்டும் ஏன் தள்ள வேண்டும்..? ‘இருக்கிறவனுக்கெல்லாம் வரத்தைக் கொடுத்துவிட்டு, நீ மட்டும் ஜப மாலையை உருட்டிக் கொண்டு மனைவியின் (சரஸ்வதி) வீணா கானத்தைக் கேட்டிண்டிருக்கியே..?’ என்றுதான் பிரும்மாவை வீழ்த்தியதாம்!

.

ஜெர்மன் அறிஞர் மாக்ஸ் முல்லர் கூட நரசிம்ம அவதாரத்தை An Electrical Phenomenon என்றுதான் விவரிக்கிறார்.

.

நரசிம்மனின் தேஜஸ் எங்கே இருக்கு என்று கேட்டால், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருக்கு!
.
ஒளியாய் இருக்கக் கூடியவன் நரசிம்மன் ஆனதாலே அந்த அவதாரத்தின் பெருமையும் சஹஸ்ரநாம தொடக்கத்திலே இடம் பெற்றிருக்கிறது.

~~~~~~~~~~

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #3

அருட்குறள் ~ ஞானப்பால் #3

~~~~~~~~~~

வேதங்கூறி விரதமிருந்து தேடித்தலந் தொழுதுமுள்ளே
நாதங்கேளார் நான்விடா தார்.
விளக்கம்
~~~~~~~~~
வேதம் முதலிய மந்திரங்களை முறையாக ஓதி, பலவிதமான விரதங்களிருந்து, பற்பல திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனைத் தொழுதாலும்கூட, நான் என்ற – உடல் மற்றும் மனத்தின் கூட்டணி உருவாக்கிய அடையாளமாகிய – ஆணவத்தை ஒருவர் முற்றிலுமாக விட்டு ஒழிக்காதவரையில், ஓம் எனும் பிரணவ நாதத்தை* அவர்கள் தம்முள்ளே கேட்டுணர வாய்ப்பில்லை.

*அநஹத நாதம் எனும் இந்த ஒலியற்ற ஒலி, படைப்பிலுள்ள அனைத்து உயிர்களுக்குள்ளும் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இதனை அனுபவபூர்வமாக உணர்ந்த பெரியோர், படைத்தவனது ஓம்கார அதிர்வுடன் ஒத்திசைவு கண்டு பேரானந்தத்தில் திளைப்பர்.
~ஸ்வாமி | @PrakashSwamy
Explanation
~~~~~~~~
Even though one may diligently chant mantras such as the Vedas regularly, undertake austerities such as viratham and worship the divine by visiting many holy spaces, one won’t still experience the primordial sound of AUM* (praNava) within oneself, as long as one doesn’t let go of the ego (individual identity crafted by the coalition of body and mind).
*The Anahata nhaada or soundless sound is actively reverberating within all living beings in existence. Those who have experienced this are in sync with the reverberation of the Creator and attain the eternal state of bliss.
~Swamy | @PrakashSwamy

Website Powered by WordPress.com.

Up ↑