தினம் ஒரு பதிகம் ~ ஞான மணிமாலை ~ அரிது… அரிது..!

தினம் ஒரு பதிகம் ~ ஞான மணிமாலை 

அரிது… அரிது..! 

அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது அதனினும் 

அரிதரிது நோய்முடமே துமிலாப்பிறப்பு மேலும் 

அரிதரிது ஊணுடைவீ டெலாமிருத்தல் பின்னும் 

அரிதரிது நூலறிவுபே ரளிக்கும்பணி யதனினும் 

அரிதரிது நேசமனையும் நல்மகவும் இன்னும் 

அரிதரிது போதுமெனும் பொன்மனமே மேலும் 

அரிதரிது நானாரெனுந் தேடல்வினா வதனினும் 

அரிதரிது ஆறறிவிருள தகற்றுங்குரு இன்னும் 

அரிதரிது போய்வருவினை விடவிழைதல் மேலும்

அரிதரிது தான்மறந்தே யிறையடிபணித லதனினும்

அரிதரிது பேரருளால் மெய்யறிதல் பின்னும் 

அரிதரிது ஜீவன்முக்தனா யிருந்தடங்கல்! 


பதிக விளக்கம்

மனிதராகப் பிறவி எடுத்தல் (உயிரினங்களுள்) மிக அரிதானது.

அதைவிட அரிது நோய், முடம் போன்ற பாதிப்புகள் அற்ற மனிதப் பிறப்பு.

அதைவிட அரிது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு என்று எல்லாமே ஒருவர் பிறக்கும் போதே பெற்றிருத்தல்.

அதைவிட அரிது முறையான கல்வி மற்றும் கேள்வி மூலமாகப் பெற்ற அறிவு, புகழ் அளிக்கக்கூடிய பணி [அ] தொழில் ஆகியவை அமைதல்.

அதைவிட அரிது மாறா அன்பு கொண்ட வாழ்க்கைத் துணை(வி/வன்) மற்றும் நற்குணங்கள் கொண்ட மக்கட்பேறு ஆகியவை அமைவது.

அதைவிட அரிது ‘இது போதுமானது’ என்று பொருள், புகழ், செல்வாக்கு போன்ற புற வாழ்வின் அம்சங்களைப் பொறுத்தவரை ஏற்படும் மனத் திருப்தி (‘போதுமெனும் மனமே பொன்செய்யும் மருந்து‘ என்ற முதுமொழி குறிப்பது இதையே).

அதைவிட அரிது ‘நான் யார்?‘ என்ற உயிர்மெய் தேடலின் தொடக்கமான ஆத்ம விசாரத்திற்கான வினா எழுவது.

அதைவிட அரிது காரண அறிவால் அறிந்ததாகக் கருதும் அனைத்தும் அர்த்தமற்றவை என்றுணர்த்தி, அறியாமை இருளை அகற்றும் அருட்பேரொளியான குரு அமைவது.

அதைவிட அரிது பிறப்பு-பிழைப்பு-இறப்பு எனும் சூழலில் சிக்கி, மீண்டும் மீண்டும் உயிரானது போய்வரும் நாடகத்திற்குக் காரணமான கர்மவினையை முற்றிலுமாக விட்டொழிக்க ஏற்படும் விருப்பம் மற்றும் ஆர்வம் ஆகியவை.

அதைவிட அரிது ‘நான் இன்னார்’ என்ற சமூக அடையாளத்தை விடுத்து, படைப்பின் மூலமாகிய இறைவனிடத்தில் படைப்பாகிய உயிர், ‘யாமறியோம் பராபரமே’ என்று முழுமையாகச் சரணடைவது.

அதைவிட அரிது இறை மற்றும் குருவின் அளப்பரிய பேரருளால், இப்பிறவியிலேயே படைப்பு, படைத்தவன், வாழ்வு போன்றவை பற்றிய உயிர்மெய்யை, நேரடி அனுபவமாக அறிதல், அதாவது ஞானோதயம் அடைதல்.

அதைவிட அரிது, மெய்ஞானம் அறிந்த பின்னர், ஜீவன்முக்தராக வாழ்ந்து, பின்னர் இறுதியாக வீடுபேறு எனும் முக்தியை அடைதல் (படைப்பானது படைப்பின் மூலத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றிவிடுதல்).

குறிப்பு: ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது…’ என்பது தமிழ்க் கடவுள் என்று போற்றித் தொழப்படும் முருகப்பெருமானின் வினாவிற்கு ஒளவையாரின் பதிலாக அமைந்த அற்புதமான தமிழ்ப் பாடலின் துவக்க வரி. அதுவே இப்பதிகத்தின் முதலடியாகவும் அமைந்துள்ளது.

Hymn explanation

Being born as a human (among all kinds of creatures) is quite rare.

Even more rare is not being inflicted by an illness or disability, during birth.

Even more rare is having basic necessities of livelihood such as food, clothing and dwelling, while being born.

Even more rare is receiving knowledge through formal education and learning, and fame through a profession.

Even more rare is being blessed with a loving life-companion (wife/husband) and virtuous child(ren).

Even more rare is feeling ‘this is enough‘ w.r.t wealth, fame, power, etc., i.e. contentment with the possessions one has.

Even more rare is the rise of the question ‘who am I?,’ signalling the beginning of the self-enquiry and spiritual quest to know the reality.

Even more rare is the happening of a Guru (Realised Master) who dispels the ignorance of whatever is known through the intellect and shines the light of Grace on Truth.

Even more rare is the longing to be liberated from the birth-survival-death lifecycle spiral, by getting ridden of one’s karma (accumulated actions of all the lifetimes, so far), once and for all.

Even more rare is to let go of the ego / individual identity that’s imposed and enforced by the society and unconditional surrender to the source of creation, admitting ‘I don’t know.

Even more rare is to realise the Truth about Creator, creation, existence, et al., through direct perception of reality, aka attaining enlightenment / self-realisation, in this lifetime itself.

Even more rare is to continue living as a Jeevanmukta (realised being / Master) and attaining mukti (ultimate liberation from the repetitive birth-death lifecycle), i.e. creation merging with the creator and becoming a part of the eternal stillness.

Note: “Aridhu Aridhu Maanidaraaip Piraththal Aridhu…” is the beginning of the verse sung by Avvayaar, as response to a question by Lord Murugan, who is celebrated and worshipped as the Lord of the Tamil people. That itself is set as the beginning of this pathigam as well.

~ஸ்வாமி | @prakashswamy

இன்றைய தரிசனம் ~ வாழ்க்கை எனும் தொடர் வாகனப் பயணம்!

ஒரு கார் இருக்கின்றது. பளபளவென்ற அல்லாய் வீல் அணிந்த நான்கு சக்கரங்கள், 3M பாலிஷ் போட்டு ஒளிரும் மேனி, 1500 CC BS-VI எஞ்சின், ஒற்றை விரலால் திருப்பக்கூடிய பவர் ஸ்டியரிங், 7″ டச் ஸ்க்ரீன் கொண்ட ஆண்டிராய்டு மியூஸிக் சிஸ்டம், ஃபா லெதர் கவர்ந்த அட்ஜஸ்டபிள் சீட்… என்று பல அம்சங்களுடன், ஓட்டுபவர் தன் வாழ்க்கைத் துணையை விட ஒரு மடங்கு அதிகமாகவே நேசிக்கும் அளவு சிறந்த கார் என்று வைத்துக்கொள்வோம். 

இவ்வளவு அருமையான காரை ஓட்டிச் செல்லும் ஆசாமி நீங்கள்தான் என்றும் வைத்துக்கொள்வோம். தினசரி ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும்  போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகர சாலையோ, அல்லது கட்டணம் செலுத்தி அதிவேகமாகச் செல்லும் நான்கு வழி விரைவு நெடுஞ்சாலையோ, காரும் அதன் ஓட்டுனரும் எப்போதும் செய்வது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதுதான். எந்தக் காரை, எந்த ஊரில், எவர் வைத்திருந்தாலும், இதில் மாற்றம் எதுவுமில்லை. 

இப்படிக் காரை ஓட்டிச் செல்லும் போது, ஏதேனும் பழுது ஏற்படுவதாலோ, எரிபொருள் தீர்வதனாலோ, விபத்தாலோ, போக்குவரத்துத் தடையாலோ அதன் பயணம் நின்று போகலாம். குறிப்பிட்ட பிரச்சினை நிவர்த்தி செய்யப்பட்டவுடன் பயணம் மறுபடி தொடரும். இதில் சில சமயங்களில் கார் மாறலாம்; ஓட்டுநர் கூட மாறலாம்; ஆனால் பயணத்தில் மாறுதல் எதுவும் இருப்பதில்லை. எப்போதுமே, பயணமானது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத்தான்.

நீங்கள் ரசித்து வாங்கி, விரும்பி ஓட்டும் அந்தக் கார் இருக்கிறதே, அதுதான் உங்களுடைய வாழ்க்கை. அதன் நான்கு சக்கரங்கள் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பவை. இதில் முதல் மூன்றைப் பற்றியும்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று மூன்று பகுதிகளாக 1330 குறட்பாக்களை எழுதினார். நாலாவதாகிய முக்திக்கு வழிகாட்டும் மெய்ஞானம் பற்றி அவர் உட்படப் பலர் பல நூல்களை வழங்கியுள்ளனர். நான்கு சக்கரமும் ஒருங்கிணைந்து சுழன்றால்தான் வாழ்க்கைப்பயணம் எனும் காரோட்டம் நிகழும். ஆக, நல்வாழ்க்கைக்கு – குறிப்பாக இல்வாழ்க்கைக்கு – இந்த நான்கு அம்சங்களுமே முக்கியம்தான்.

நீங்கள்தான் உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஓட்டுநர் என்பதைத் தனியே கூறத் தேவையில்லை. வாழ்க்கைக் காரில் உங்களுடைய நேற்றைய பயணம் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு – ரத்த அழுத்தத்தை எகிற வைக்கும் போக்குவரத்து நெரிசலில். இன்றைய பயணம் உறவினர் இல்ல விழாவில் பங்குபெற – ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக உள்ள புறநகருக்கு – பள்ளம் மேடுகள் நிறைந்த ஒற்றைச் சாலையில். நாளைய பயணம் குலதெய்வக் கோயிலுக்கு – கட்டணம் செலுத்திப் பறக்கும் நெடுஞ்சாலையில். இப்படிப் பயணத்தில் மாறுதல்கள் இருந்தாலும், காரும், ஓட்டுநரும் மாறுவதில்லை. அதாவது, பல பிறவிகளில் பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்று மீண்டும் மீண்டும் நிகழும் வாழ்க்கையும், அதை வாழ்பவரும் மாறுவதில்லை. என்ன, போன பிறவியில் BMWவை சுமாராக ஒட்டியிருக்கலாம். இப்பிறவியில் மாருதி Swiftடை திறம்பட ஒட்டிக்கொண்டிருக்கலாம். அவ்வளவுதான் வித்தியாசம்.

உங்களுடைய முதற்பிறவியிலிருந்து, எத்தனையாவது என்று தெரியாத இப்பிறவி வரை நீங்கள் இப்படித்தான் வாழ்க்கை என்ற காரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சில பிறவிகளில் திறமையாக ஓட்டி, முழுமையாக வாழ்நாளை வாழ்ந்து பயணத்தை நிறைவு செய்கிறீர்கள். சிலவற்றில் விபத்தினாலோ, வாகனப் பழுதாலோ விரைவாகப் பயணம் முடிந்து விடுகின்றது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு போய்வருகையில், நீங்கள் இன்ன மாதிரி ஓட்டுநர் என்ற புதிய அடையாளம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. அது வெறும் அடையாளம்தான். அடையாளம் என்பது நீங்கள் அல்ல. ஆனால் இது உங்களுக்குப் புரிவதில்லை.

எனவே வெவ்வேறு அடையாளங்களுடன் வாழ்க்கைப் பயணம் ஒரேமாதிரி, மறுபடி மறுபடி மாற்றங்கள் இருப்பது போன்ற தோற்றத்துடன் அதேமாதிரி தொடர்கின்றது. இதுதான் வாழ்க்கை என்று பெரும்பாலான மனிதர்கள் நம்பும் பிழைப்பு [அ] பிழைத்தல். மனிதர் தவிர்த்த, அவர்களை விட அறிவு குறைவாகவே உள்ளதாக எண்ணப்படும் பிராணிகள் போன்ற உயிரினங்களிலிருந்து, இத்தகைய உயிர்வாழ்தல் எனும் பிழைத்தல் ஒன்று பெரிதாக வேறுபட்டதாகத் தெரியவில்லை.

இந்தப் பிறவியில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட இடத்திலுள்ள இல்லத்தில், குறிப்பிட்ட பெற்றோருக்கு மக/னா/ளாகப் பிறந்து, குறிப்பிட்ட பெயரிடப்பட்டு, குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் கற்றுக் குறிப்பிட்ட கல்வித் தகுதியைப் பெற்று, குறிப்பிட்ட பணி/தொழிலைப் புரிந்து, பொருளீட்டி, குறிப்பிட்ட வாழ்க்கைத் துணையை மணந்து, குறிப்பிட்ட பிள்ளையை/களைப் பெற்று, குறிப்பிடத்தக்க அளவு செல்வம் ஈட்டி, சமூக அங்கீகாரம் பெற்று இதுவரை வாழ்ந்து வருகிறீர்கள். இவையெல்லாமே உங்களுக்கு அளிக்கப்பட்ட அடையாளங்களே.

நான் இன்னார்‘ என்று இந்தமாதிரி ஒவ்வொரு பயணத்தின்போதும் உங்களது அடையாளத்தை வெவ்வேறாக நினைக்கிறீர்களே, அதுதான் ஆணவம். காரும், பயணிக்கும் பாதையும், பயணம் செய்து அடையக்கூடிய இடமும் ஒவ்வொரு முறையும் புதியதாக உள்ளதாக நம்புகிறீர்களே, அதுதான் மாயை. செய்த பயணத்தையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பதற்குக் காரணமான காரோட்டல் போன்ற செயல்கள் இருக்கின்றனவே, அவற்றால் விளைவது கன்மம் எனும் கர்மவினை. மும்மலங்கள் எனப்படும் இவை மூன்றும்தான், இந்தத் தொடரும் பயணத்தின் நோக்கம் மற்றும் பயன் என்ன… எங்கு செல்வதற்காக இப்பயணம்… எப்படி இந்தப் பயணத்தை நிறைவு செய்வது என்று தெரியாமல் உங்களை இந்தச் சுழற்சியிலிருந்து விடுபடாமல் பிடித்து வைத்திருக்கின்றன. 

இப்படியே போய்க்கொண்டிருக்கும் பயணத்தின்போது ஒருநாள் எதிர்பாராமல் ‘அகிலமாதேவி உடனுறை ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் 5 கி.மீ‘  என்ற அறிவிப்புப் பலகை உங்கள் கண்ணில் படுகின்றது. ‘என்னடா இது, இந்த வழியாக எத்தனையோ முறை காரில் போயிருக்கிறேனே… இதுவரை இந்தக் கோயில் ஸைன்போர்டைப் பார்த்ததே இல்லையே…‘ என்று ஆச்சரியத்துடன், சாலையோரக் ‘கும்பகோணம் டிகிரி காப்பி‘ கடைமுன் காரை நிறுத்தி, பித்தளை டபரா தம்ளரில் சூடான காஃபியை ஆற்றி அருந்தியபடி, கடைக்காரரிடம் அந்தக் கோயிலைப் பற்றி உறுத்தாமல் விசாரிக்கிறீர்கள். அவர் உடனே சார்ஜர் சொருகப்பட்ட செல்ஃபோன் போல ஒளிபெற்று, “ரொம்ப பழமையான கோயில் சார்… வேண்டின வரம் தரும் அம்பாள்னு அங்க போயிட்டு வர்ற எல்லாரும் சத்தியம் பண்றாங்க சார்… இங்கேயிருந்து மூணு கிலோமீட்டர் போனப்புறம், சர்வீஸ் ரோடுல போயி, இடது பக்கமா திரும்பினீங்கன்னா, ரெண்டு கிலோமீட்டர்ல வந்திரும் சார்… கண்டிப்பா போயி தரிசனம் பண்ணுங்க.” என்று உற்சாக டானிக் அளிக்க, உடனே காரில் ஏறி, ‘ஓகே கூகிள்‘ என்று அத்திருக்கோயிலுக்குச் செல்லும் வழியை மேப்பில் காட்டுமாறு நீங்கள் கேட்க, அங்கு செல்ல வழிகாட்டப்படுகிறீர்கள். 

சிறியதொரு மலையடிவாரத்தில், மரங்கள் சூழ்ந்த, தாமரை மற்றும் அல்லி மலர்கள் மலர்ந்து மிதப்பது போலத் தோன்றும் தெள்ளிய நீர் நிறைந்த குளத்தின் கரையில், அழகான வடிவமைப்புடன், நன்கு பராமரிக்கப்படுவதாகத் தோற்றமளிக்கும், தொன்மையான திருக்கோயில் முன்பு உங்கள் காரை நிறுத்தி விட்டு இறங்குகிறீர்கள். இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத திருக்கோயில். திருக்குளத்தில் கை கால்கள், முகம் கழுவித் தலையில் சிறிது நீரைத் தெளித்துக் கொண்டு, பின்அங்கிருந்த கடையில் மலர்கள், அர்ச்சனைப் பொருட்களை வாங்குகையில், “சாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்திட்டு நல்லா வேண்டிக்குங்க சார்… கேட்ட வரம் உடனே சாத்தியமா கிடைக்கும் சார்… நீங்கதான் இன்னிக்கு சாயங்காலம் முதல்ல பூ வாங்கறீங்க…” என்ற பூ விற்பவரின் பதஞ்சலி ஹெர்பல் பேஸ்ட் பளிச் சிரிப்பிலும், மார்க்கெட்டிங் ஜாலத்திலும் மயங்கி, இரண்டு மாலைகளையும் வாங்கி வாங்கிக் கொண்டு திருக்கோயிலின் உள்ளே செல்கிறீர்கள்.

அம்மை அகிலமாதேவியின் சன்னதியில் அர்ச்சகரிடம் மலர்மாலையையும், அர்ச்சனைப் பொருட்களையும் அளித்துவிட்டு அவளது திருவுருவை நோக்குகின்றீர்கள். ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம்…’ என்று துவங்கி பக்திப்பெருவெள்ளத்தில் கரைந்து அபிராமி பட்டர் பாடிய அற்புதமான அபிராமி அந்தாதியிலுள்ள அன்னையைப் போன்று சிந்தூராருண விக்ரஹமாக அன்னை செவ்வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு ஜ்வலிக்கிறாள். காண்போர் கவலையை உடன் நீக்கும் கருணைபொங்கும் விழிகள். ‘இவள் அழகிற்கு ஈடென்று எவருமுண்டோ இப்புவியில்!’ என்று பக்தர் வியக்கும் வடிவுடைய அந்த அகிலாண்டேஸ்வரியை, கர்ப்பூர ஜோதியின் ஒளியில் கண்டு வணங்கி, உங்கள் உள்ளத்தில் எழும் வேண்டுதல்களை அவள்முன் சமர்ப்பிக்கிறீர்கள். ‘உனக்கு என்ன வேண்டுமென்று அன்னை எனக்குத் தெரியாதா குழந்தாய்?‘ என்று கேட்பதுபோல் உலகாளும் ஜெகன்மாதாவாகிய அம்மை குறுநகை புரிகிறாள். உங்களுக்குள் இனம்புரியாத ஒரு நிம்மதி பரவுகின்றது. குருக்கள் பிரசாதத்தை அளித்து, ‘வரப்பிரசாதியான அம்பாள்… கேட்ட வரம் கொடுப்பவள் என்று அவளைப் போற்றாத பக்தர்கள் கிடையாது… பிரத்யட்ச தெய்வம்… நீங்க வேண்டியதெல்லாம் அவளருளால் நிச்சயம் கிடைக்கும்…‘ என்றவுடன் அகமகிழ்ந்து அவருக்கு தட்சிணை அளித்துவிட்டு ஆனந்தீஸ்வரரை தரிசிக்கச் செல்கிறீர்கள். 

பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் ஐயன், ஆனந்தீஸ்வரராக எழுந்தருளியிருக்கும் கருவறை முன்பு நிற்கிறீர்கள். அருணாச்சலேஸ்வரரைப் போன்று அற்புதமான அலங்காரம். ஆனாலும் அசைவற்ற நிர்விகல்ப சமாதியில் நிலைத்தாற்போன்ற லிங்கத் திருமேனி. மலர்மாலையையும், அர்ச்சனைத் தட்டையும் அர்ச்சகரிடம் அளித்துவிட்டு எந்தை ஈசனை நோக்குகிறீர்கள். சுற்றுப்புற சப்தமெல்லாம் அடங்கி ஆழ்ந்த அமைதி உங்களைச் சூழ்கிறது. எண்ணங்கள் அற்றுப் போன ஒன்றுமற்ற தன்மையை உணர்கிறீர்கள். அது வெறுமையாக இல்லாமல் முழுமையாக இருப்பதுபோல் உங்களுக்குத் தோன்றுகின்றது. கர்ப்பூர ஆரத்தி ஒளி அவரைச் சுற்றி இல்லாமல், அவருள்ளிருந்து எழுவது போலத் தெரிகின்றது. எதையும் கேட்கத் தோன்றாமல் அந்த ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி‘யைப் பணிகின்றீர்கள். பிரசாதத்தை அளித்த குருக்கள் ‘ஸ்வாமி மனசு வைத்தால்தான் தரிசனம் கிடைக்கும் இங்கே வரும் பக்தர்களுக்கு… ஆனால் ஒரு தடவை வந்துவிட்டால், பிறகு வேறு எந்தக் கோயிலுக்கும் போகவே தோன்றாது… அப்படி ஒரு ஈர்ப்பு ஈஸ்வரனிடம்,’ என்றபோதுதான், இன்றுவரை இந்தக் கோயிலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை என்பது நினைவிற்கு வருகிறது. அவருக்கு தட்சிணை அளித்துவிட்டு, துவஜஸ்தம்பத்தின் முன்பு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, பிரதட்சணம் செய்ய வெளிப் பிரகாரத்திற்குச் செல்கிறீர்கள். 

தூய்மையான பிரகாரத்தின் ஒரு மூலையில் ஸ்தல விருட்சம். காற்றில் மெல்ல அசையும் பசுமையான இலைகள். கிளைகளில் அமர்ந்து மனிதர்களின் மடமையை எண்ணி அங்கலாய்க்கும் பறவைகளின் கீச்சொலி. அந்த அழகான ஸ்தல விருட்சத்தின் அருகே ஒரு மேடை. அதில் பண்டாரம் போன்ற தோற்றத்தில், காவியும், ருத்திராட்ச மாலையும் அணிந்த ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரருகே சில பக்தர்கள். இன்னமும் நரைக்காத சடைமுடியும், நீண்ட தாடியும் உள்ள அந்தச் சிவனடியாரின் திருநீறு பூசிய திருமுகத்தில் மென்மையான ஒரு ஒளி. அவர் உங்களைப் பார்க்கிறார். கோதண்டத்திலிருந்து விடுபட்ட ராமபாணம் போன்று அப்பார்வை உங்களைத் துளைத்து ஊடுறுவுவதை உணர்கிறீர்கள். உங்களை அறியாமல் கண்களில் கண்ணீர் மடைதிறந்த வெள்ளம்போல வழிவது ஆச்சரியமாக இருந்தாலும், கவலை ஏதுமில்லாமல் அவரருகே சென்று வணங்குகிறீர்கள்.

என்ன, வழி தொலைந்து வந்தீங்களா… இல்ல வழி தெரிஞ்சு வந்தீங்களா…‘ என்று கேட்டுவிட்டு உரத்த சிரிப்பை உதிர்க்கிறார்.
அவர் யாரென்று உங்களுக்கு நிச்சயம் தெரியாது. அவரை இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்பது சர்வநிச்சயமாக உங்கள் சிந்தையில் தெரிகின்றது. ‘அவரைப் போய் வணங்கு‘ என்று உங்களிடம் யாரும் தெரிவிக்கவில்லை. என்றாலும், அவரிடம் நீங்கள் ஈர்க்கப்படுவதை உணர்கிறீர்கள். எந்த முயற்சியும் இல்லாமல், உங்களது அடையாள முகமூடி கழன்றுபோய், யுத்தகளத்தில் நிராயுதபாணியாக நிற்கும் வீரனைப் போல அவர்முன் உணர்கிறீர்கள். இடம், பொருள், சூழல், சுற்றியுள்ளோர் என்று எதுபற்றியும் கவலைப்படாமல் அவர்முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறீர்கள். ஏற்கனவே அங்கிருக்கும் பக்தர்களில் ஒருவராக, ‘நான் இன்னார்‘ என்ற தனித்த அடையாளம் தொலைத்துத் தரையில் அமர்கிறீர்கள். 

வழி தெரியாமல் திரிந்தேன் இதுவரை… ஆனால் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டேன் இன்று,’ என்பதை நீங்கள் வாயைத்திறந்து சொல்லாமலே அவர் அறிந்துகொண்டு விட்டார் என்று புரிகின்றது. காலம் என்பது அர்த்தமற்ற ஒரு கான்செப்ட்டாகத் தோன்ற, நீங்கள் அவரையே நோக்கியவாறு, விளக்கவியலாத பேரமைதியின் இருப்பில் அடங்குகிறீர்கள். அங்கு வார்த்தைப் பரிமாற்றம் ஏதுமில்லை. அந்தப் பேரமைதியில் வாழ்க்கை பற்றிய உங்களுடைய கேள்விகள், பதிலே தேவைப்படாமல் கரைந்து போவது தெளிவாகத் தெரிகின்றது.

பிரகாரத்திலிருக்கும் அடியாரும், கர்ப்பகிரஹத்தில் உறையும் ஆனந்தீஸ்வரரும் வேறல்ல, ஒன்றே என்று உங்களுக்குத் தோன்றுகிறது. அந்த அலாதியான அமைதியின் இடையில் அகிலமாதேவியின் சிரிப்பு உங்களுக்குள்ளே கேட்கிறது. கண்ணீர் வெள்ளம் தொடர்ந்து பொங்கி வழிகின்றது. இருப்பதையே இதுவரை அறியாத ஒரு திருக்கோயிலின் பிரகாரத்தில், யாரென்றே தெரியாத சிலர்முன், பூமித் தாயின் மடியில் அமர்ந்து கதறி அழுவதில் உங்களுக்கு வெட்கமேதும் இல்லாததை நீங்களே ஒரு மௌன சாட்சியாக ஆச்சரியமாகப் பார்க்கிறீர்கள்.

அந்தப் பண்டாரம் முன்பு உங்களுக்கு நிகழ்ந்தது நேரடியான அனுபவம். அதை யாரிடம் விளக்கமுடியாது. ஏனெனில் அது காரண அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. அவர்தான் குரு எனப்படுபவர். உங்களையும், என்னையும் போன்றவர்களின் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கத்தை அறிந்தவர். அது எங்கே, எவ்வாறு முடியும் என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டவர். அகிலமாதேவி என்ற படைப்பின் ஆதார சக்தியையும், ஆனந்தீஸ்வரர் என்ற முக்தியளிக்கும் பரம்பொருளையும் திருக்கோயிலினுள் தொழுது பணியும் தேவையின்றித் தன்னுள்ளேயே தரிசிக்கும் பூசலார் போன்ற மெய்ஞானி. அத்தகைய ஒரு குருவின் அருட்பார்வை நம்போன்ற சாதாரணர்களின் மீது படுவதற்கே பல பிறவிகள் தேவைப்படலாம். ஆனால் அவ்வாறு அருட்பார்வை நம்மைத் துளைத்து நிராயுதபாணியாக நிற்க வைக்கும்போது, ‘இவர்தான் என்னுடைய குரு‘ என்று யாரும் சொல்லாமலே நமக்குள்ளே தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும்.

தினம் ஒரு பதிகம் ~ ஞான மணிமாலை

வாகனமும் ஓட்டுனரும் மாறிவரும் வாழ்வினிலே

போகுமிடம் ஏதுமில்லை, போய்த்தொழவும் யாருமில்லை.

மோகமுடன் நானெனது சேர்த்தப்பொருள் சேய்துணையும்  

சோகமுடன் பாடைதனில் தூக்குகையில் ஏதுவரும்.

பாகமிடும் கூரறிவால் காண்பவையோ கையளவே

பாகுபடும் பார்வைவிடப் பாரிலெதும் பேதமில்லை.

வேகுமுடல் மேயுமனம் கூடியநான் போனவுடன் 

சாகும்பிணி போகவழி ஞானகுரு வால்தெரியும். 

பாகமெனத் தேவியுடன் மோனகுரு ஈசனவன்

மேவும்திருக் கோவிலது காயமென வேபுரியும்.

தாகமுடன் மோனவழி போயவனின் தாள்பணிய

மேகமென நோய்விலகி ஞானவொளி தானெழுமே.

கார், ஓட்டுநர், சாலை போன்றவை ஒவ்வொரு பிறவியிலும் மாறுபவை. அவற்றின் மீது பற்றுக் கொள்வது மடமை. காரோட்டிச் செல்லும் பயணம் பெரும்பாலும் ஒரேமாதிரியானதுதான் – எப்பிறவியிலும். அதுவே வாழ்க்கை என்று எண்ணுவது அறியாமை. பயணத்தின்போது, ‘அகிலமாதேவி உடனுறை ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் 5 கி.மீ‘ என்பது போன்ற வழிப்பலகைகள், அங்கு செல்ல வழிகாட்டிய காப்பிக் கடைக்காரர் போன்றவை இறையருள் நமக்கு அவ்வப்போது அளிக்கும் வழிகாட்டுதல். பிழைப்பு என்ற பயணப் பாதையிலேயே நம் கவனம் தங்கிவிடுவதால் நாம் இத்தகைய வழிகாட்டுதல்களைத் தவறவிட்டு விடுகின்றோம். இது பிரபஞ்ச நடனமாகிய வாழ்வு பற்றிய உண்மையை அறிவியவியலாமல் தடுக்கும் கவனமின்மை.

ஒருவராகத் திருக்கோயிலைச் சென்றடைந்த போதும், அங்கு அருள்பலிக்கும் அம்மை மற்றும் அப்பனிடம் ‘என் செயலாவது யாதுமில்லை, அனைத்தும் நிகழ்வது தங்களது பேரருளாலேயே‘ என்று அகந்தை விடுத்துச் சரணாகதி அடைவோர் மிகச்சிலரே. அவ்வாறின்றி, வெறுமனே மற்றோரு திருக்கோயில் தரிசனம் என்று அந்த திசை திருப்பாலின் முக்கியத்துவத்தையும், பயனையும் உணராமல், தரிசனம் முடித்துத் திரும்புவோர், கார்ப் பயணத்தை மறுபடியும் தொடரவேண்டியதுதான்.

திருக்கோயிலை அடைந்து அங்கு உறையும் இறையின் சந்நிதியில் சரணாகதி அடைந்தோருள்ளும், வெகு சிலர் மீதுதான் கோயில் பிரகாரத்திலிருந்த பண்டாரம் போன்ற மெய்ஞ்ஞானியின் அருட்பார்வை விழும். அந்நிகழ்வு முற்பிறவிகளில் செய்த நற்கருமங்களின் பயன். அது நிகழும் தவிர்க்க முடியாத கணத்தில் ‘அன்னவர்க்கே சரண் நாங்களே‘ என்று முழுமையாக குருவிடம் சரணாகதி அடைந்து விடவேண்டும். அவ்வாறு சரண்புகுந்து குருவருளைப் பெற்றோருக்கு, கார்ப் பயணம் எனும் தொடர்நாடகம் பற்றிய தெளிவு கிட்டும். அதன்பின்னர், கார்ப் பயணம் தொடர்ந்தாலும், அவ்வப்போது ‘திசை திருப்பல்‘ குருவின் மூலமே நிகழும் – அவரவர் கர்மவினைக்கேற்றவாறு. இறுதியில், ‘போகுமிடம் ஏதுமில்லை, போய்த்தோழவும் யாருமில்லை‘ என்று தெளிந்து, ‘அஹம் பிரம்மாஸ்மி‘ என்று தன்னுள்ளேயே அம்மையப்பனின் தரிசனம் கிட்டும்.

படைப்பின் மூலமாகிய பரம்பொருள் படைப்பாகிய தன்னுள்ளும், தன்னைப்போன்ற படைப்பிலுள்ள அனைத்திலும், உயிர்சக்தியாக ஒளிரும் உண்மையை நேரடி அனுபவமாக அறிவதே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம். அவ்வாறு உயிர்மெய் அறிந்து, படைப்பாகிய தானும், படைப்பின் மூலமாகிய இறையும் தனிப்பட்ட இரண்டல்ல, ஒன்றே என்று கரைந்து ஒன்றிவிடுவதே முக்தி எனும் வீடுபேறு. இப்பேரானந்தப் பெருநிலைதான் மனிதராகப் பிறவி எடுத்த நமது வாழ்க்கை எனும், பல பிறவிகளாக நீளும் நெடும் பயணத்தின் இறுதி இலக்கு [அ] சேருமிடம்.

இன்றுமுதல், உங்களது பிழைப்பு எனும் தினசரி கார் பயணத்தின்போது, கார்களையும், ஓட்டுநர்களையும், சாலைகளையும் மட்டுமே கவனியாமல், ‘அகிலமாதேவி உடனுறை ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் செல்லும் வழி‘ போன்ற திசைதிருப்பல்களை கவனமாகத் தேடுங்கள். சென்று பழகிய பாதையிலேயே போய்க்கொண்டிருக்கும் முடியாப் பயணம் முற்றுப் பெற வேண்டுமானால், அது அருளின் திசைதிருப்பலால் மட்டுமே நிகழும் என்பது திண்ணம். முக்தி எனும் சேருமிடம் சேரத் திருவருளும், அங்கு கொண்டுபோய்ச் சேர்க்கக் குருவருளும் கிட்ட, அத்தகைய திசைதிருப்பல் உங்களுடைய இந்தப் பயணத்தின்போதே, விரைவிலேயே நிகழ்வதற்கு, அகிலமாதேவி உடனுறை ஆனந்தீஸ்வரரின் மலர்ப்பதங்களைப் பணிந்து நான் உளமாற வேண்டுகிறேன்.

Be Joyful & Spread the Cheer 🙂

~ஸ்வாமி | @prakashswamy

உயிர்மெய் (தமிழ் பதிவுகள்) | SwamyQuote | Swamystery | QuorAnswers by Swamy | Quoraவிடை by ஸ்வாமி | BeenThere, SeenThatSwamystery on Telegram

பிராணனும், இறைவனும்!

உயிர்வாழ்தலுக்கு ஆதாரமான பிராணனை நாம் நேரடியாகக் கண்டறிந்ததில்லை. எனினும் இயல்பாகவே உள்ளே சென்று, வெளியே வரும் சுவாசம் மூலமாக, மறைமுகமாக அதுபற்றி உணர்ந்து, படைப்பிலுள்ள பல்லாயிரக்கணக்கான உயிர்களின் இயக்கத்திற்குப் பிராணனின் இன்றியமையாமை பற்றி நன்றாகவே அறிந்துள்ளோம்.

அதுபோலவே, படைப்பிற்கு ஆதாரமான இறைவன் அல்லது படைப்பின் மூலத்தையும் நாம் நேரில் கண்டறிந்ததில்லை. எனினும், பிரம்மாண்டமான பிரபஞ்ச நிகழ்வான வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அதன் எல்லையற்ற, எங்கும் நிறைந்த தன்மையை மறைமுகமாக உணர்வதன் மூலமாக, படைப்பின் இயக்கத்திற்கு ஆதாரமான அச்சக்தியின் இன்றியமையாமை பற்றியும் நம்முள்ளேயே நேரடியாக உணர்ந்தறிய முடியும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 111

அருட்குறள் ~ ஞானப்பால் 111

தெரிதலிற் தொடங்கிப் புரிதலைக் கடந்துள்

அறிதலில் அறிவதுயிர் மெய்.


குறள் விளக்கம்

புலன்கள் மூலமாக உணரக்கூடியவற்றைக் காரண அறிவால் பகுத்தறிதலின்றி, அப்படியே நினைவில் பதிந்து கொள்வது என்பது, தெரிதல் எனும் தொடக்க நிலை. தான் கண்டு, கேட்டவற்றைப் பிறருடன் பகிர்வது என்பது பெரும்பாலும் இந்நிலையிலேயே நிகழ்கின்றது. நம்பிக்கை சார்ந்த மத போதனைகள் போன்றவையும் இந்நிலையில் நிகழ்பவையே. மனனம் செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெறும் ஏட்டுக்கல்வியும் கூட இந்த அடிப்படை நிலையில்தான் சிக்கியுள்ளது. 


புலன்கள் மூலமாக உணரக்கூடியவற்றைக் காரண அறிவால் பகுத்தறிந்து, அவை பற்றி அனுபவரீதியாகவோ, ஆழ்ந்த சிந்தனை மூலமாகவோ தெளிவு பெற முயல்வது புரிதல் என்ற இடைநிலை. பொருள்சார்ந்த வாழ்க்கைத் தளத்தில் அறிஞர் என்று கருதப்படுவோர் இவ்வகையினரே. தொன்மையான மற்றும் புனிதமாகக் கருதப்படும் நூல்களை ஆய்ந்து அவற்றுக்கு விளக்கம் அளிப்பது என்பது இந்நிலையில் உள்ளோராலேயே பெரும்பாலும் செய்யப்படுகின்றது. 


புலன்கள் மற்றும் காரண அறிவின் வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கடந்து, ஒருவர் தன்னுள் நேரடி தரிசனமாக, அனுபவப்பூர்வமாக உணர்வது என்பதே அறிதல் எனும் இறுதி நிலை. உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் இத்தகைய அறிதலே. அதனால்தான் அதனைப் பிறருக்கு விளக்குவது எளிதானதல்ல. ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பது அறிவின் புரிதலைக் கடந்த, தன்னைத் தானே அறிதலின் பெருவியப்பின் வெளிப்பாடே. 


KuRaL explanation

Simply registering or storing the information gathered via the sense organs in one’s brain is the elementary stage of knowing. There’s limited or no intellectual comprehension happening at this stage. Most social media sharing happens at this superficial level. The sermons by preachers of organised belief systems too belong to this level. All kinds of theoretical / rote education too are most certainly stuck at this rudimentary level. 


Striving to comprehend the information gathered via the sensory perception, either through experience or deep thought, in order to gain clarity, is the intermediate stage of knowing. Those who are acknowledged as experts in the survival plane of existence (the physical realm) typically belong to this category. All the insightful literature interpreting and explaining ancient scriptures and holy texts belong to this level of comprehension. 


Realising through direct perception of Truth / Reality, as an intensely inward looking experience, that’s beyond the realm of comprehension through sensory perception and the intellect, is the final stage of knowing. Self-realisation, aka enlightenment is certainly such a kind of knowing. That’s why it’s not easy to explain to others. ‘Those who have seen, can’t explain; Those who explain, haven’t really seen,’ is nothing but an expression of amazement, of such an inner knowing, of one’s own self!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 110

அருட்குறள் – ஞானப்பால் 110

மறந்ததை யறிந்திடா மனம்விடுங் கணந்தனிலறிந்திடு வதாமுயிர் மெய். 

குறள் விளக்கம்

நான் இன்னார்‘ என்ற சமூக அடையாளங்களைக் கடந்து, ‘நான் யார்‘ என்ற உண்மையைக் காரண அறிவால் கண்டறிய இயலாது. காரண அறிவின் ஊற்றுக்கண்ணாகிய மனத்தை அடக்கும் திறன் கைவரப்பெறுவது மிக அரிது. எனவே, மனத்தை அதன்போக்கில் விட்டுவிடுவதே எளிய வழியாகும். 

அவ்வாறு ‘நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,’ என்ற தெளிவுடன், உடல் மற்றும் மனத்தின் பிடிப்பிலிருந்து ஒரு ஆன்மீக சாதகர் விடுபடும் அதே கணத்தில், தன்னுள்ளேயே உயிர்சக்தியாக ஒளிரும் இறைசக்தியை அவரால் உணர முடியும். இந்நிலையில், படைப்பு (உயிர்களாகிய நாம்) வேறு, படைத்தவன் (படைப்பின் மூலமான இறைைவன் [அ] சக்தி) வேறு என்ற காரண அறிவின் அறியாமையால் விளையும் இருமை நிலை அகன்றுவிடும். இவ்வாறு ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மம்) என்று தன்னை அறிதலே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும்.

KuRaL explanation

It’s not easily possible for the limited intellect to let go of the ‘I’, which is made of many social identities, and realise the Truth about ‘Who am I!’ it’s also practically impossible for most humans to control or conquer the mind, from which is the origin of the intellect. The relatively easier way is to let the mind simply go about its business, i.e. not hinder or block the ceaseless flow of thoughts in any manner. 

When a seeker on the spiritual path gains the clarity of ‘I’m not the body, I’m not even the mind,‘ and distances oneself from both, in that very moment s/he can realise the divine within, glowing as the life energy. In this state of realisation, the duality of creation (beings like us) and creator (God or source of all creation) being different, which is caused by the ignorance of the limited intellect, will vanish. Realising the Truth of ‘Aham BrahmAsmi’ (I’m Brahman) thus is known as self-realisation or enlightenment.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் – ஞானப்பால் 109

அருட்குறள் ~ ஞானப்பால் 109

மும்மலமும் முழுவதுமாய் விலகிடநா னற்றிடவுள் நிர்மலமாய் நிற்பதுவே சிவம்.

குறள் விளக்கம் 

ஆணவம், கன்மம் எனும் கர்மவினை, மாயை ஆகிய மூன்று மலங்களும் முழுவதுமாக விலகியபின், நான் என்ற தனிப்பட்ட அடையாளம் அழிந்துபோகும். அக்கணத்தில், தன்னுள்ளேயே, எந்தவிதமான மலங்களோ, குறைபாடுகளோ இன்றி, எது எப்போதும் நிலைத்திருக்கின்றதோ, அந்தப் படைப்பின் மூலத்தினுடைய தரிசனம் கிட்டும். அதுவே சிவம் என்பதை அப்போது அனுபவப்பூர்வமாக அறியலாம். 

ஆணவம் என்பது ‘நான் இன்னார்’ என்ற, பல்வேறு சமூக அடையாளங்களால் ஏற்படும் அகந்தையைக் குறிக்கும். இது முழுவதுமாக நம் மனத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. தான் தனிப்பட்ட ஒரு படைப்பு என்று நம்மை எண்ணவைக்கும் ஆணவத்தை விட்டொழித்தால்தான் உயிர்மெய் அறிவதென்பது சாத்தியமாகும்.

கன்மம் [அ] கர்மா எனப்படும் கர்மவினை என்பது பல பிறவிகளில் ஒரு உயிரானது புரிந்த பல்வேறு செயல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. தான் செய்த செயல்களின் விளைவுகளை [அ] பலன்களை அவ்வுயிரானது அனுபவித்தாக வேண்டும். அவ்வாறு தன்னுடைய செயல்களின் பலன்களை ஒரு உயிரானது அனுபவிப்பதற்காகவே அது பல பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது. 

கர்மவினையானது பிராரப்தம், சஞ்சிதம், ஆகமியம், க்ரியமான [அ] புருஷார்த்த என்று பலவகைப்படும்.

இதில் பிராரப்தம் என்பது இப்பிறவியில் நாம் அனுபவித்தே ஆகவேண்டிய கர்மா. இதிலிருந்து மெய்ஞானிகளுக்குக் கூட விதிவிலக்கு கிடையாது. 

சஞ்சிதம் என்ற ஒட்டுமொத்தக் கர்ம மூட்டையை, ஞானோதயம் அடைந்த ஒரு குருவால், கர்ம சம்யமா போன்ற யோக வழிமுறைகள் மூலமாக முற்றிலுமாக நீக்கிவிட முடியும். 

ஆகமியம் – அதாவது, இனிமேல் செயல்படவிருக்கும் – கர்மாவைக் கையாள்வதும், க்ரியமான – அதாவது, புதிதாக உருவாக்கப்படும் – கர்மாவைத் தவிர்ப்பதும், யோக சாதனை மூலம் நிலையற்ற மனத்தின் ஓட்டத்தைக் கையாளும் பயிற்சிகளைப் பெற்று, விழிப்புணர்வோடு வாழ்வதன்மூலம் ஒரு சாதகருக்குச் சாத்தியமாகும். 

மாயை என்பது ஐம்புலன்களால் அறியப்படும் பொருள்தன்மை சார்ந்த புற உலகிலுள்ள யாவற்றையும், ஆறாவது புலனாகிய கற்றறிவால் பகுத்தறிந்து, மெய்யென்று நம்புதல். பகுத்தறிவானது கடந்தகால நிகழ்வுகள் மற்றும் தகவல்களைச் சார்ந்து, எதிர்காலம் பற்றிய பதிவுகளை ஏற்படுத்தவல்லது. நிகழ்காலத்தில், ‘இந்தக் கணம் தவிர்க்க முடியாதது‘ என்ற புரிதலோடு உயிர்மெய் அறிய விழைவோர், இப்புலன்கள் மூலமாக நிகழும் குறைபாடுடைய அறிதலைக் கடந்து உள்நோக்கிச் செல்லப் பழக வேண்டும். 

குருவருளால் ஒரு ஆன்மீக சாதகர் இம்மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுபட, யோக சாதனை போன்ற தொன்மையான வழிமுறைகளைக் கையாண்டு, இடைவிடாது முயற்சிப்பதன் மூலம், சவமாகும் ஜீவாத்மாவினுள்ளே உயிராக ஒளிரும் சிவமாகிய பரமாத்மாவின் தரிசனம் கிட்டும். இதுவே உயிர்மெய் அறிந்த மெய்ஞான நிலை ஆகும். இவ்வாறு ஞானோதயம் அடைகையில், தான் என்ற படைப்பு வேறு, சிவம் என்ற படைப்பின் மூலம் வேறு என்ற இருமை மறைந்து, படைப்பானது படைத்தவனுடன் இணைந்து ஒன்றிவிடும். 

உடலுள் உயிர் நிலைத்திருக்கையிலேயே இப்பேரானந்த நிலையை அடைந்தோர் ஜீவன்முக்தர்கள் என்று போற்றி வழிபடப்படுவர். உடலை அத்தகையோரின் உயிரானது இறுதியாக உதிர்த்து, பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று, படைப்பின் மூலத்துடன் ஒன்றிக் கரைந்துவிடும் நிலையே முக்தி எனப்படும் வீடுபேறு ஆகும். இதனை அடைவதே மனிதராகப் பிறவியெடுத்த உயிரின் நோக்கம். இதுவே மனிதர்களின் பிறவிப்பயன்.

ஞானோதயம் மற்றும் முக்தியை அடைவதற்கான ஆன்மீகப் பாதைகளே கர்மம் எனும் செயல், பக்தி எனும் முழுமையான சரணாகதி, ஞானம் எனும் மெய்யறிவு மற்றும் க்ரியா [அ] கிரியை எனும் உயிர்சக்தி ஆளுமை ஆகிய நான்கு யோக வழிமுறைகள். இவற்றை ஒரு குறிப்பிட்ட சாதகரின் கர்மவினைப் பதிவு, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், உணர்வுகளைக் கையாளும் திறன் மற்றும் வாழும் தன்மை ஆகியவற்றைச் சார்ந்து, குருவானவர் சரியான விகிதத்தில் வழங்கி வழிகாட்டுவார்.

மெய்ஞானம் மற்றும் முக்தி ஆகிய உயர்நிலைகள் எவ்வகையான மனிதருக்கும் சாத்தியமே – அருளின் வழிகாட்டுதலுடன்,  கவனத்தை ஒருமுகப்படுத்தி, முழுமையான ஈடுபாட்டுடன், பலன்களின் மீது பற்றெதுவுமின்றி, இடைவிடாது முயற்சித்தால், பயணம் முற்றுப்பெறும்வரை!

~ஸ்வாமி | @PrakashSwamy

KuRaL explanation

When the three malams (impurities), viz. Ego, Karma and Maya are eradicated, the individual identity will be demolished. In that very moment, the being will have darshan of the source of creation that glows within, devoid of any impurities or imperfections. Then one will realise that source of creation as Shiva, experientially. 

Ego is the individual identity, created by the various identifications that the society imposes on a being. This is entirely the mind’s creation. Only when a being gets rid of the ego, which makes one believe in one’s individual identity, knowing / realising the Truth is possible.

Karma is the collection of actions that a being has performed in many lifetimes. The being has to experience the outcome of all such actions. The being takes many births in order to experience the fruits / results of its own actions.

There a many types of karma such as Prarabdha, Sanchita, Agamiya and Kriyamana or Purushartha.

Prarabdha is the karma that one must experience in this lifetime itself. Even realised beings aren’t exempted from experiencing Prarabdha karma.

Sanchita is the entire volume of accumulated actions of a being, over many lifetimes. This can be eradicated by a Realised Master (Guru) through yogic processes such as Karma Samyama.

Ably facing Agamiya, i.e. karma that is going to get activated in future, and completely avoiding Kriyamana or Purushartha, i.e. fresh karma that is going to be created by the being, is possible through diligent sadhana (spiritual practices) that helps one handle the uncontrollable mind effectively, and living in awareness.

Maya is believing the unreal, i.e. anything in the physical, external world, that is sensed through the five sense organs and comprehended through the sixth – the intellect, as real. The intellect is limited in nature as it uses the past events and information to project impressions about the future.

Seekers who know that ‘this moment is inevitable’ and live in the present, in order to experience ‘Life, the way it is,’ i.e., reality, will do well to go past the limited sense and intellect-based knowing and learn to turn inward.

When a seeker learns and performs ancient yogic practices diligently, with Guru’s (Realised Master) Grace, s/he will gain the darshan of Shiva, the Paramatma, glowing as the life source within the Shava (corpse-to-be), the Jeevatma. This is the state of self-realisation, aka enlightenment.

When a being attains self-realisation, the duality of thinking / believing creation (individual being) and creator (source of creation) as two distinct or different entities will vanish and the being will attain yoga (union) with the divine.
Beings who attain the union with the divine while still remaining alive in a physical form (body) are revered and celebrated as Jeevanmuktas. When a Jeevanmukta, aka Realised Being / Master chooses to drop the body for good and the Jeevatma merges with Paramatma for good, it is liberated from the repetitive birth-survival-death lifecycle and attains Mukti, the ultimate or conclusive liberation. 

Attaining Mukti is the purpose of being born as a human being. The spiritual paths to attain mukti are Karma yoga – the path of attainment through action, Bakthi yoga – the path of total surrender, Gnana yoga – the path of pure wisdom / knowing and Kriya yoga – the path of attainment through mastery of life energy. A Guru (Realised Master) offers the right mix of Sadhana, with all the four types in a certain proportion, which is determined by the Master based on the seeker’s karma, level of acceptance, ability to handle emotions, way of living, etc.

Enlightenment and Mukti are a possibility for any and all human beings, provided the being is receptive to the guidance of Grace, remains singularly focused, performs actions with absolute involvement, remains completely detached from outcomes and sustains the spiritual pursuit diligently, continuously, until the journey concludes.

~Swamy | @PrakashSwamy

யோகி!

யோகா என்றால் இணைதல் அல்லது ஒன்றுதல். படைப்பாகிய உயிர், படைத்தவன் எனப்படும் படைப்பின் மூலத்துடன் இணைவது அல்லது ஒன்றிவிடுவதே யோகா.
.
யோகத்தில் இருத்தல், அதாவது, இருமை நிலையைக் கடந்து, ஒருமை அடைந்து, அந்நிலையில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாதகரின் நோக்கமாக இருக்குமெனில், புறத்தே வெளிப்படுத்தும் தனது குணநலன் [அ] குணாதிசயங்கள் மற்றும் அகத்தே ஒளித்து வைத்திருக்கும் தனிப்பட்ட மனிதனின் தன்மை ஆகிய இருவேறு நிலைகளை ஒருமைப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்க முதற்படியாகும். ஏனெனில், இவை இரண்டும் பெரும்பாலான மனிதர்களுக்குச் சீரின்றி அமைந்துள்ளது.
.
வெளிப்படையான குணநலன் என்பது வேறொருவரின் நகைப்புக்குரிய பிரதியைப் போன்ற முகமூடியாகவும், உள்ளே ஒளிந்திருக்கும் தன்மை ஒருபோதும் உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையாகவும் இருக்கையில், எத்தனை விதமான யோக சாதனைகளைப் பயின்றாலும், அவை பற்றி விலாவாரியாகப் பேசினாலும், அல்லது பயிற்சியே செய்தாலும் கூட, அத்தகைய மனிதர் போகியாகவோ, ரோகியாகவோதான் இருக்கமுடியுமே தவிர, யோகியாக ஆவதென்பது சாத்தியமில்லை – இப்பிறவி முடிவதற்குள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 108

அருட்குறள் ~ ஞானப்பால் 108

 

பொருள்காணும் புலனைந்தும் இருள்சூழும் பகுத்தறிவும்

அருள்நாடும் வழியன்று காண்.

.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~~

படைப்பிலுள்ள அனைத்தையும் பற்றி மனிதர்கள் அறிவது தங்களது ஐம்புலன்கள் மற்றும் காரண அறிவின் மூலமாக. ஐம்புலன்களும் பொருட்தன்மை உடையவற்றை மட்டுமே உணரும் திறனுடையவை. அவற்றின் மூலம் உணரும் எதையும், ஏற்கனவே அறிந்தவற்றுடன் ஒப்பிட்டுப், பகுத்தறியும் காரண அறிவோ, அறியாமை எனும் இருளால் சூழப்பட்டது. 

.

உயிர்மெய் அறிந்து, முக்தி எனும் வீடுபேற்றை அடைவதற்கு குரு மற்றும் இறை அருள் தேவையாகும். அருளானது பொருட்தன்மை உள்ளதன்று. அதைப் பகுத்தறிவதும் சாத்தியமில்லை. எனவே, ஐம்புலன்களும், காரண அறிவும் அருளை நாடுவதற்கான வழியன்று என்ற உண்மையை ஆன்மீக சாதகர்கள் அறிவது இன்றியமையாதது ஆகும். 

.

AK108

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Humans know everything in existence through the five senses and intellect. The perception / experience of the five senses, viz. visual, aural, olfactory, taste and touch are confined to the physical realm. The limited intellect, which comprehends anything sensed via the five senses, by comparing the input with something already known, is encompassed by the darkness of ignorance.

.

The Grace of Guru and Divine is essential for self-realisation and attaining mukti (the ultimate liberation from the repetitive birth-death lifecycle). Grace isn’t physical in nature. It’s also practically impossible to comprehend Grace. Therefore, the five senses and the intellect aren’t the way to seek Grace. It’s important for seekers on the spiritual path to realise this truth.

~ஸ்வாமி | @PrakashSwamy

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 107

அருட்குறள் ~ ஞானப்பால் 107

காண்பதெலாங் காணாது காணாப்பே ரொளிகான
மாண்புடையோன் நாமமொரு வழி.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~
மனிதர்களின் புரிதல் என்பது ஐம்புலன்களின் வழி உணர்வதை, காரண அறிவைக் கொண்டு புரிந்து கொள்வதே. காரண அறிவானது ஏற்கனவே அறியப்பட்டவற்றின் ஒட்டுமொத்த சேமிப்பே அன்றி வேறில்லை. கண்களால் நாம் கண்டறியும் எல்லாவகையான பொருட்கள் மற்றும் உயிர்கள் பற்றிய நம் புரிதல் அனைத்தும் இவ்வகையானதே.

.
எனவே, கண்களால் கண்டறிய முடியாத, புறத்திலுள்ள பருப்பொருளாக இல்லாத, உயிரினுள்ளே சலனமற்று ஒளிரக் கூடிய இறைவனை [அ] இறை சக்தியை ஒருவர் கண்டுணர வேண்டுமென்றால், அதற்கென்று ஞானோதயம் அடைந்த பெரியோர் வழங்கியுள்ள ஆன்மீக சாதனை என்னும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இறைவனின் திருநாமத்தை ஜெபம் செய்வது என்பது (நாம ஜெபம்), உயிர்மெய் அறிந்து உய்வதற்கான அத்தகைய ஒரு வழியாகும்.
.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~
Anything that humans comprehend in existence, is nothing but an analysis and conclusion of whatever is observed / experienced through the five sense organs, through their limited intellect. Intellect is nothing but a data dump of whatever is already known. So whatever we perceive via the visual sense organ, aka eyes, too belongs to this category of comprehension only.
.

So, in order to perceive the divine or the energy that’s the source of creation, which remains still and glows as the light within every being in creation, which isn’t a physical entity to be comprehended through our visual perception, one must perform the sadhana (spiritual practices) offered by the Realised Masters (Guru), who have actually been there and done/seen that. Doing Japa (nhAma japam), i.e. chanting the sacred name of the divine, is one such sadhana to attain self-realisation and gain mukti (ultimate liberation from the repetitive birth-death lifecycle).

.

~ஸ்வாமி | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑