விடை!

விடை உடனடியாகக் கிடைத்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவரையில், கேள்விகள் சுமையாக ஆவதில்லை.

அர்த்தமுள்ள கேள்வி என்ற விதையிலிருந்து தெளிவுதரும் பதில் துளிர்விடும் வாய்ப்பு எப்போதும் உள்ளது.

அதற்காகக் காத்திருக்கும் வேளையைக் கவலையில் வீணடிப்பதை விட, பயனுள்ள ஏதோ காரியத்தில் கவனம் செலுத்தப் பயன்படுத்தலாம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

ஏமாற்றம்!

அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், ஆகுதல் என்று பல்வேறு நிலைகளில், படிப்படியாக மனிதருள் மகத்தான மாற்றம் ஏற்படுகின்றது.
அறிவுசார்ந்த தேடல் முதல் இரு நிலைகளிலேயே நின்றுவிடுவதால், பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்வில் ஏமாற்றம் ஏற்படுகின்றது.

மௌனம்!

மெய்யான மௌனம்…
எதையும் வாய்திறந்து சொல்லாதிருப்பது அல்ல.
எவரிடமும், எதுவும் சொல்லவேண்டிய தேவையற்றிருப்பது!

~ஸ்வாமி | @PrakashSwamy

வரம்!

சொற்கள் உதிரி மலர்கள்.
கவிதை மலர்களின் கொத்து.
உரைநடை கதம்பச் சரம்.
பாடல் மலர் அலங்காரம்.
பதிகம் தொடுத்த மாலை.
அர்த்தம் சொல்லின் மணம்.
மௌனம் அர்ப்பணிப்பின் வரம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அடங்கல்!

ஆழ்ந்த மௌனத்தின் சன்னிதியில்…
ஆனந்த அமுதை விழிகள் பருகும்
அமைதிச் சாறை செவிகள் அருந்தும்
அருளின் ஒலியை நாசிகள் உண்ணும்
அன்பின் வருடலில் விரல்கள் உறங்கும்
அசையும் தேவையற்று நாவும் அடங்கும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑