மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

முதலீடு!


உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் எதிர்வினைச் செயல்கள் உயர் ரத்த அழுத்தம், தீராத கவலை, மன அழுத்தம் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை விரும்புவோருக்குச் சிறந்த முதலீடாகும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

செய்தல்!

விரும்பிய செயலைச் செய்வது மகிழ்ச்சி தரும்.

செயலை விரும்பிச் செய்வது ஆனந்தம் தரும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அடிப்படை!

அரிசி, பருப்பு, வெல்லம், நெய் ஆகியவற்றின் கலவையான சர்க்கரைப் பொங்கல் சிறப்பாக அமைய அடிப்படைத் தேவை நீர். பொங்கலைச் சுவைக்கும் யாரும் அதைப் புலன்களால் உணராவிட்டாலும்கூட அதன் இன்றியமையாத தன்மையை மறுக்கமுடியாது.

அதுபோலவே, தியானம், யாத்திரை, வழிபாடு, தானம் போன்ற செயல்களை ஒரு சாதகர் முறையாகச் செய்துவந்தாலும், புலன்களால் உணர முடியாத தன்மையாகிய அருள் இல்லாமல், உயிர்மெய் அறிதல் நிகழாது.

~ஸ்வாமி | @PrakashSwamy

அஜீரணம்!

குழப்பக் காய்கறி, அவதூறு அவியல், பயப் பச்சடி, விவாத சாதம், சாக்கு சாம்பார், கோபக் குழம்பு, வெறுப்பு ரசம், பொறாமைப் பாயசம், அதிருப்தி அப்பளம், தவிப்புத் தயிர், உணர்ச்சி ஊறுகாய் என்று இடைவிடாது தினமும் உண்டால், உண்மை அஜீரணம் ஆகி, அறியாமை வியாதி அகலாது அயர்ச்சி தரும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #15

அருட்குறள் ~ ஞானப்பால் #15
கீர்த்திநாடிக் கிடைத்தநா ளழிப்பதர் போலடியார்
மூர்த்திதேடி மெய்யறியா தவர்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஏதோ ஒரு குறிப்பிட்ட இறை வடிவத்தைத்* தேடித் தொழும்பொருட்டு பல திருத்தலங்களுக்குச் செல்லும், உயிர்மெய் என்ற இறை பற்றிய உண்மையை அறியாத அடியார்கள், புகழ் மற்றும் பெருமையை விரும்பி, அரிதான மானிடப் பிறவியின் அளவான வாழ்நாளை வீணே அழிக்கும் மூடர்களைப் போன்றவர்களே.

*சகுண பிரம்மம் ~ குணங்களுடைய இறை வடிவம். மெய்யான இறை நிர்குண பிரம்மம் ~ குணம் மற்றும் வடிவமற்ற ~ என்று அறியப்படும், எங்கும், எதிலும் நிறைந்த ஒரு இருப்பு ஆகும்.
KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
The devotees who keep going on pilgrimages, from one holy place to another, to worship a particular form* of God, without realising the Truth about the divine, are no different from the silly humans who waste a precious lifetime chasing fame and accolade.

*SaguNa Brahmam ~ Divine form with attributes. The true Divine is an all-pervading presence, sans form or attributes, known as NirguNa Brahmam.
~Swamy | @PrakashSwamy

முதலீடு!

தினசரி பிறரைப் பற்றிப் ஏதாவது அர்த்தமற்ற கருத்துக்களைப் பேசி வீண்செலவு செய்யும் காலத்தை, தன்னைப் பற்றிய உயிர்மெய் அறிய மௌனத்தில் முதலீடு செய்தால், மெய்ஞானம் என்ற லாபத்தை ஈட்ட இந்த வாழ்நாளிலேயே யாவர்க்கும் வாய்ப்புள்ளது!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ நந்தி ஞானம்

நந்தி ஆடல்வல்லானாகிய எம்பெருமான் ஈசனின் வாகனம். கூத்தனின் ஆனந்த தாண்டவத்திற்கு ஜதி சொல்லும் பெருமை பெற்றவர். மஹாதேவனாகிய எந்தையின் லிங்கஸ்வரூபம் அமைந்துள்ள கர்பக்கிருஹத்தின் முன்பாக, எப்போதும் ஐயனை நோக்கியபடி, அசைவற்று தியானத்தில் அமர்ந்திருப்பது அவரது இயல்பு. இறைவனுக்கிறைவனாகிய தாண்டவக்கோனை தரிசிக்க வரும் பக்தர்களிடம் முதல் வணக்கம் பெறும் விநாயகரை அடுத்து வந்தனம் பெறுபவர். ‘சும்மா இரு’ என்ற ஆழ்ந்த பொருளை உள்ளடக்கிய குறு / குரு வாசகத்தின் உருவடிவாய் விளங்கினாலும், தன்னுணர்வற்று தயாபரனின் தாள் பணிந்து விளங்குவதில் தன்னிகரற்ற அனுமனைப் போன்றவர். சித்தர் இலக்கியங்களில் சிவபெருமானையே நந்தியாக உருவகிக்கும் பதிகங்களும் உண்டு.

இத்தனை பெருமைபடைத்த நந்தி என்பது, நமது தினசரிப் பிழைப்பைச் சார்ந்த வாழ்க்கையில், காளை அல்லது எருதாகும். கதிர் செழிக்க வயலை உழுவதிலிருந்து சுமை ஏற்றிய வண்டியை இழுப்பதுவரை, வாயே திறவாமல் வேலை செய்யும் கடும் உழைப்பாளி. காளை மற்றும் பசு ஆகிய உயிரினங்களின் பிதா. உழைப்பார், உண்பார், புணர்வார், மற்றபடி பெரும்பாலான நேரங்களில் ‘சும்மா இரு’ப்பார். ஈசன் வாசம் செய்யும் திருத்தலமாக அறியப்படும் திருக்கைலாய பர்வதம் அமைந்த திபெத் நிலப்பரப்பில் இவர் யாக் என்ற வடிவில் உலவுகின்றார். Quite possibly the original form of Nandhi, as that’s the only breed that exists in that altitude and weather. கிராமங்களில் இன்றும்கூட, கோவிலுக்கென்று நேர்ந்து விடப்படும் கோயில் காளை, ஏறக்குறைய வாழும் நந்தியாகவே நடத்தப்படுகின்றது.

இவரது இணையாகிய பசு, இவரை விடவும் புகழ் வாய்ந்தவர். அன்போடு குடும்ப உறுப்பினரைப்போல் பெயரிடப்பட்டு (பெரும்பாலும் லக்ஷ்மி) அழைக்கப்படுபவர். அன்னையாகத் தொழப்படுபவர். சில தேவி திருக்கோயில்களில் அம்மன் சன்னதிக்கு முன்பாக, நந்திபோல் அமர்ந்திருப்பவர். தனது உடலில் சுரக்கும் பாலை, தனது கன்றுகளுக்கு மட்டும் என்று சுயநலத்தோடு கட்டுப்படுத்தாமல், மனிதர்களுடன் பகிர்ந்து கொள்பவர். துள்ளிக் குதிக்கும் கன்றுகளின் வளர்ச்சியில் மகிழ்ந்து, மேலும் பால், கோமியம் மற்றும் சாணம் அளிப்பார். உழவு சார்ந்த மனிதர்களின் வாழ்வு மங்களகரமாக விளங்குவதில் இவரது பங்கு மிக முக்கியமானது. காமதேனு வடிவில், கோவில்களிலும் இல்லங்களிலும் தொழப்படுபவர்.

காளை மற்றும் பசு ஆகிய இவர்கள் இருவர் தவிர்த்து, இதே இனத்தில் இன்னொருவரும் இருக்கிறார். அருமையான அந்த அன்பரின் பெயர் எருமை. எருது போன்ற வலிமை உடையவர். பசுவைப் போன்றே பால் வழங்குபவர். சாலைகளில் தறிகெட்டு வாகனம் ஓட்டும் மனிதர்களைக்கூட நிதானமாகச் செல்ல வைக்கும் ‘பிரேக் இன்ஸ்பெக்டர்.’ மானிடராகப் பிறந்த பெரும்பாலோர் சந்திக்க அஞ்சி நடுங்கும் எமதர்மராஜனின் வாகனம் அவர். நிறம் மற்றும் அதீத நிதானம் தவிர்த்து, காளையாருக்கும் இவருக்கும் பெரும் வேறுபாடு எதுவும் கிடையாது. எனினும், பசு அல்லது காளை போன்ற புகழ் இவருக்கு எப்போதும் இருந்ததில்லை. அதைப் பற்றி இவர் ஒருபோதும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

பக்தி நோக்கை ஒருபுறம் வைத்துவிட்டுப் பார்த்தால், எருது, பசு, எருமை ஆகியவற்றை மனிதர்கள் தங்களுக்குப் பயன்படக்கூடிய பொருட்களுக்கான மூலப்பொருளாகவே பார்ப்பது புரியும். பசு அளிக்கும் பால், அதிலிருந்து கிடைக்கக்கூடிய தயிர், வெண்ணை, நெய் போன்ற பொருட்கள், அதன் சாணம் மற்றும் கோமியம், ஏன் அதன் உடலைக்கூட மனிதன் ஒரு பயன்படு பொருளாகவே பார்ப்பது இன்றையப் பொருளாதாரம் சார்ந்த பிழைப்பை மையமாகக் கொண்ட வாழ்க்கையின் உண்மை நிலை. எருதின் உழைப்பு, டிராக்டர் மற்றும் சுமைதாங்கி ஊர்திகளின் வளர்ச்சி மற்றும் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருளாதார நிலையைப் பொறுத்து, சிற்சில கிராமப்புறங்கள் மற்றும் சிற்றூர்கள் தவிர்த்து, நகரங்களில் பெரும்பாலும் தேவையற்றதாகி விட்டதால், அவை முற்றிலும் புதிய மாடுகளை உருவாக்கவும், மாமிசம் மற்றும் எண்ணற்ற தோல் பொருட்களுக்கான மூலப் பொருளாகவே பார்க்கப்படுகின்றன என்பது செரிமானம் செய்யக் கடினமான உணவைப் போன்ற உண்மை. எருமை பொதுவாகவே பசு மற்றும் எருதை விட ஒரு நிலை குறைவாகவே கருதப்பட்டதால், அதன் தற்போதைய நிலை பற்றிக் கூற வேண்டியதில்லை.

கருணை காணாமற்போய்விட்ட நகரங்களில் எப்படியோ தெரியாது, ஆனால் பாசம் தோய்ந்த எளிய வாழ்வு ஓரளவேனும் இன்னும் எஞ்சியிருக்கும் கிராமங்களில், பசு, காளை மற்றும் எருமை வளர்த்த / வளர்க்கும் குடும்பக்களுக்கோ அவை இன்றும் குடும்ப உறுப்பினர் போலத்தான். ஆனாலும், எதையுமே பொருளாதார நோக்கிலேயே பார்க்கும் இன்றைய போட்டி நிறைந்த உலகில், இத்தகைய வாயில்லா ஜீவன்களின் குடும்ப உறுப்பினர் நிலை என்பது ஒரு கனவாகி விட்டது மட்டுமில்லாமல், அவர்களது உயிர்வாழ்வே மிகவும் கவலைக்கிடமாகிவிட்டது. மனிதர்களுக்குப் பல வகையிலும் பயன்படுவதைத் தவிர, எக்காலத்திலும் அவர்கள் செய்த தவறு என்ன – இத்தகைய கொடுமையான ஒரு நிலையை அனுபவிப்பதற்கு? இந்தக் கேள்வியை சற்றே சிந்தித்தால், மனிதர்கள் பிற மனிதர்களையும் கூட இவ்வாறே நடத்துவது தெளிவாகும். என்ன, சமூகத்தில் உள்ள மனிதன், பிறிதொரு மனிதனை இன்னும் உணவாகப் பார்க்கத் தொடங்கவில்லை. Cannibals எனப்படும் நர மாமிசம் உண்ணும் இனத்தவர், மனித நடமாட்டம் அதிகமற்ற அடர்ந்த கானகங்களில் உள்ளதாகத் தெரிகின்றது. ஆனால், நல்ல வேளையாக அது இன்னும் பொதுப் பழக்கமாக மாறவில்லை.

மாடோ, மனிதனோ, அல்லது படைப்பிலுள்ள எந்த ஒரு உயிரோ, அதை எல்லாமே வெறும் பயன்படு பொருளாகவே நோக்கும் கீழ்நிலையிலிருந்து, எந்த உயிரையும் தன்னைப்போல் இன்னொரு உயிர் என்று மனிதன் மதித்து, அதன் வாழ்வு அதன் போக்கிலேயே தொடர்வதற்கு வழி விடுவது அல்லது ஏதேனும் உதவி செய்து கொடுப்பது என்ற நிலை இனி வெறும் பகல் கனவுதானோ என்ற எண்ணம் கவலை அளிக்கையில், எப்படியோ எல்லா உயிர்களும் ஓரளவிற்கு இன்னும் பிழைத்து வாழ்வது சற்றே நம்பிக்கை அளிக்கின்றது. மாட்டை வதைக்கும் மனிதர்களுக்கு இடையில், அதை மதிக்கும் மற்றும் அதன் மேல் அன்பு செலுத்தும் மனிதர்களும் இருக்கின்றார்கள். அதை ஒரு குடும்ப உறுப்பினராகவே இன்னும் கொண்டாடுவோரும் இருக்கின்றார்கள். அதை இன்னமும் கோவிலில் சென்று வழிபடுவோரும் இருக்கின்றார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மாபெரும் கூத்திற்கிடையில், மாடுகளும் எவ்வாறோ தங்களது தன்மையிலிருந்து மாறாமல், ஆனால் சவால்களை சமாளித்து வாழக் கற்றுக்கொண்டு விட்டன. அவை பள்ளிக்குச் சென்றதில்லை, ஆனால் ஓயாது ஒலி எழுப்பியபடி வாகனங்கள் நிற்காமல் பறக்கும் சாலைகளைக் கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டன. அவற்றின் இயல்பான உணவாகிய புல் பெரும்பாலும் காணாமல் போய்விட்டபோதும், வைக்கோல் மற்றும் வேறு உணவுப் பொருட்களை – பிஸ்கட் உட்பட – உண்டு உயிர் வாழ அவை தங்களைப் பழக்கிக் கொண்டுவிட்டன. எத்தனையோ கொடுமை புரியும் மனிதனை இன்றும் அம்மா என்றே அழைத்து, மறப்போம், மன்னிப்போம் என்ற மகத்தான கொள்கையின் சின்னமாக விளங்குகின்றன. சிவனின் முன் சும்மா அமர்ந்திருக்கும் நந்தியின் வாழும் வடிவாக, வணங்கத்தக்க உயரிய வாழ்வையே மாடுகள் இன்றைய சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றன.

ஆறறிவு பெற்ற ஆணவத்தில் படைப்பு அனைத்தையுமே தனக்குப் பயன்படும் பொருளாகப் பார்த்துப் பழகிவிட்ட, வாழ்வின் அடிப்படையான உயிர்மெய் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாத மனிதன் எனும் பிறவி, தன்னை விட ஓரறிவு குறைந்ததாகக் கருதும் மாட்டிடம் இருந்து பற்பல நற்பண்புகளைக் கற்றுக் கொள்ளலாம் என்றாலும், அவனுடைய சிற்றறிவுக்கு எட்டுமாறு சிலவற்றை மட்டும் இங்கு பட்டியலிடலாம்.

  • பிறர் உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாரோ, அல்லது உன்னை எப்படி நடத்துகிறாரோ என்றெல்லாம் வெட்டியாகக் கவலைப்படாமல், உனது இயல்பான திறனைப் பயன்படுத்தி, உனது வாழ்வை அமைத்துக்கொள்
  • வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைத் தடுக்க முடியாது; ஆகையால், மாற்றத்திற்கு ஏற்றவாறு எப்படி வாழ்வது என்று சிந்தித்து வழிமுறைகளைக் கண்டறி
  • உனது வாழ்க்கை நிலைக்குப் பிறரைக் குறை கூறாதே; உள்ளதைக் கொண்டு உருப்படியான ஒரு வாழ்வு வாழப் பழகு
  • உன்னைப் பிறர் போற்றி வழிபட்டாலும், உன்னிடம் பாலைக் காரணத்தாலும், சுமை தூக்கப் பயன்படுத்தினாலும், உழவு செய்ய உந்தினாலும், உன்னால் பிறருக்கு ஏதேனும் ஒரு பயன் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்;
  • ஒருபோதும் போற்றுதலால் பெருமிதமோ, தாழ்த்துதலால் பொறாத சினமோ கொண்டு வருத்தக் குளத்தில் வழுக்கி விழாமல், இரண்டுவிதமான நிலையையும் ஒரே மாதிரி ஏற்கும் சமாதி நிலையில், நந்திபோல் ‘சும்மா இரு’க்கப் பழகு
  • சந்திக்கும் எதையும், ‘இதுவும் கடந்து போகும்’ என்று சாலையில் சிக்னல் மாறும் கணம்போல் கருதிக் கடந்து முன் செல்
  • சாலையோரக் குட்டையில் கிடக்கும் நீயே திருக்கோயிலில் ஈசனின் சன்னிதானத்தில் வழிபடப்படுகிறாய் என்ற உன்னதமான உண்மையை உணர்
  • சாதாரண மாடாக உழைத்துப் பிழைக்கும் நீ, சாமானியன் வணங்கித் துதிக்கும், நாதன் தாள்சேர் நந்தியாகும் வித்தையைக் கற்றுக்கொள்.

ஆனந்தமாய் இரு, உற்சாகம் பரவச் செய்.

~ஸ்வாமி | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑