மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #32

அருட்குறள் ~ ஞானப்பால் #32
அலைவரும் நில்லாதாழி அடக்காது அங்குநிற்கும்
நிலைபெறக் கொல்லாதோட விடு.
விளக்கம்

~~~~~~~~~

அலைகள் ஓயாது வந்துகொண்டிருந்தாலும், அவை தோன்றும் கடலானது அவற்றைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பரபரப்பாகத் தோன்றும் அலைகள் நிலையற்றவை, ஆனால் அமைதியில் ஆழ்ந்த பெருங்கடல் நிலையாக இருக்கின்றது.
அலைகளைப் போன்ற எண்ண ஓட்டத்தை முயற்சிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவற்றின் ஓட்டத்தை* இயல்பாக நிகழவிடுவதே, உயிர்மெய் அறியத் தேவையான அசைவற்ற நிலையை அடையும் வழி.
*ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் மனத்தின் இந்த இயல்பைப் ‘பிரவாகம்’ என்கிறார். எண்ணப் பிரவாகத்தைத் தடுக்க முயல்வது மடமை. அதை விடுத்து அப்பிரவாகத்தை அதன் போக்கில் விட்டு, ஒரு பார்வையாளராகக் கவனித்து, பயனுள்ள எண்ணங்களை மட்டும் தேர்வுசெய்து செயல்படுத்த முயல்வது அறிவுடைமை.

Explanation
~~~~~~~~~~~

Even though the waves keep coming ceaselessly, the ocean from which they come doesn’t make any attempt to control or stop them. While the waves (which appear busy and active) last momentarily, the vast and deep ocean (that appears quiet and still) had been around for a really long time.

Realising the futility of trying to control or stop the perennial flow* of thoughts, and letting them flow naturally, is the way to attain the stillness that’s required for realisation of Truth.

*Sri Bhagavath ayya refers the flow of thoughts as a torrent. Trying to stop a torrent indicates one’s ignorance. The wiser ones would instead let the thoughts flow (as it’s their nature), simply observe them in a detached manner and only choose the ones that are purposeful for initiating action.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #29

அருட்குறள் ~ ஞானப்பால் #29
உண்டதுள் நிற்காத பிண்டமுள் நோக்கி
அண்டமும் கற்காம லறி.
குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

பொருள் மற்றும் புகழ் போன்ற நிலையற்றவற்றைச் சேகரிப்பதில் வாழ்நாளைச் செலவிடும் மனிதர்களின் உடலானது, அது உட்கொட்ட உணவைக்கூடத் தன்னுள் சேகரித்து வைக்க முடியாமல் கழிவாக வெளியேற்றி விடும். ஆனால், தியானத்தில் அமர்ந்து, அதே அழியக்கூடிய பிண்டத்தின் உள்ளே நோக்கும்பொழுது, எல்லையற்ற அண்டத்தைப் பற்றிய அனைத்தையும், முறையான கல்வி ஏதுமில்லாமல், முழுமையாக உணர்ந்து அறிய முடியும்.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

The body of humans, who spend precious lifetime in accumulating impermanent things such as wealth and fame, can’t even hold the food it gobbles up, and expels it as excreta. But, if one can sit still (in a meditative state) and perceive within the same perishable body, then one will know everything about the seemingly boundless vast Cosmos, without any formal learning.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #27

அருட்குறள் ~ ஞானப்பால் #27
பொருள்வேண்டின் விசைபெற்ற பொம்மைபோ லலைந்துபிழை
அருள்வேண்டின் அசைவின்றி யமர்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
பொருள் ஈட்டுவது ஒருவரது குறிக்கோளாக இருந்தால், பிறரால் விசை கொடுத்து இயக்கப்படும் பொம்மையைப் போல், அலைந்து திரிந்து பிழைப்பதே வழியாகும். ஆனால், உயிர்மெய் அறிந்து வீடுபேற்றை அடைய அருள் வேண்டினால், அசைவின்றி ஓரிடத்தில் அமர்ந்து தியானம் பழக வேண்டும்.
KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

If one desires to earn wealth, then one must be willing to run helter-skelter and survive, like a toy operated by someone else. But if one seeks to realise the Truth and attain mukti (ultimate liberation from the repetitive birth-death lifecycle), then one must learn to sit / remain still and meditate.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #17

அருட்குறள் ~ ஞானப்பால் #17
அங்குமிங்கு மலைந்துதேடி யறியாதவ ருள்ளுறங்கும்
எங்குமுயி ரெதிலுமுள்ள இறை.
குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

எங்கும் நிறைந்த, எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் தெய்வீகம், பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைத் தேடுபவர்களின் உள்ளேயும் அசையாது காத்திருக்கும், அவ்வுயிர்மெய்யை அவர்கள் அறிந்துணரும் வரை.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~
The omnipresent divine that resides within all beings, is also present within those who seek it by going to many holy places, remaining still until they realise this Truth.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #14

அருட்குறள் ~ ஞானப்பால் #14
மந்தையிலா னந்தம்தேடி மனவெளியி லலைவோர்க்கு
சிந்தையிலா நிலைகாணாக் கனா.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
பலருடன் கூட்டமாய் மகிழ்ச்சியைத் தேடி, மனம்போன போக்கில் வெளியுலகிலேயே அலையும் மனிதர்களுக்கு, சிந்தை ஒருமுகப்பட்ட, அசைவற்ற அமைதியான பேரானந்த நிலை என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட கனவாகவே இருக்கும்.
KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

For those who seek happiness by being part of a herd (of people), perennially roaming along the mind’s way in the external (material) world, the thoughtless state of bliss, attained with a still mind, will remain an unimaginable dream.

~Swamy | @PrakashSwamy

முதலீடு!

தினசரி பிறரைப் பற்றிப் ஏதாவது அர்த்தமற்ற கருத்துக்களைப் பேசி வீண்செலவு செய்யும் காலத்தை, தன்னைப் பற்றிய உயிர்மெய் அறிய மௌனத்தில் முதலீடு செய்தால், மெய்ஞானம் என்ற லாபத்தை ஈட்ட இந்த வாழ்நாளிலேயே யாவர்க்கும் வாய்ப்புள்ளது!

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ எரியாத் தழல்!

இன்றைய தரிசனம் ~ எரியாத் தழல்!
~~~~~~~~~~~~~~~~~~~
பெரும்பாலான மனிதர்களின் இல்லங்களில் தீப்பெட்டி இருக்கும். அதனுள் தீக்குச்சிகள் வரிசையாக அடக்கப்பட்டிருக்கும். அந்தத் தீக்குச்சிகளை மனிதர்கள் தங்களது தேவைக்கேற்றவாறு பலவகையில் பயன்படுத்துவர். பயன்படுத்தப்பட்ட குச்சிகளைப் பின்னர் தூர எறிந்துவிட்டு, அடுத்த குச்சியைத் தேவைக்கேற்பப் பயன்படுத்துவர். ஓரளவு சுற்றுச்சூழல் தூய்மை பற்றிய புரிதல் உள்ளோர், அவற்றை எங்காவது எறியாமல் குப்பைக்கூடையில் போட்டுவிடுவர். இது தினசரி நடைபெறும் இயல்பான நிகழ்வு.

ஸ்வாமி இல்லத்தில், தினமும் இருமுறை, வீடெங்கிலும் உள்ள தீபங்களை ஏற்றத் தீக்குச்சிகள் பயன்படுகின்றன. அருகில் முன்பு குடியிருந்த ஒருவர் தினமும் புகைபிடிக்க அதைப் பயன்படுத்தியிருக்கலாம். பின்புறம் உள்ள தோட்டத்தோடு இருக்கும் வீட்டில், அவ்வப்போது குப்பைகளை எறிக்கப் பயன்படுத்துகின்றனர். வேறு சில இல்லங்களில் அடுப்பை ஏற்றவும் அவை பயன்படுத்தப்படலாம். தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கவும் அது பயன்படும்.

பயன்பாடு எவ்வாறு இருந்தாலும், தீக்குச்சியின் ஒரே சாத்தியம் நெருப்பை உருவாக்குவது மட்டுமே. யார் அதைப் பயன்படுத்தினாலும், எவ்வகையில் பயன்படுத்தினாலும், அதன் பயன் மாறுபடுவதில்லை. தீபம், அகர்பத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகிய இறை வழிபாட்டுக்குரிய பொருட்களை ஏற்றுதல், குப்பையை எறித்தல், அடுப்பைப் பற்றவைத்தல், இருளை அகற்ற விளக்கையோ மெழுகுவர்த்தியையோ ஏற்றுதல், இஸ்திரிப் பெட்டிக்கு வெப்பமளிக்கும் கரியைப் பற்றவைத்தல், இறந்தவர் உடலைத் தகனம் செய்யக் கொள்ளி வைத்தல், காட்டையோ கட்டிடத்தையோ எறித்து அழிக்கும் பெரு நெருப்பின் முதற்பொறியாக இருத்தல், என்று எவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும், தனது பயன்பாட்டைப் பற்றித் தீக்குச்சிக்கு மகிழ்ச்சியோ, வருத்தமோ கிடையாது. யாரும் தன்னைப் பயன்படுத்தப்படாவிட்டாலும் அது கவலைப்படப் போவதில்லை. யாரேனும் ஒருவர், நெருப்பை உருவாக்கும் தேவையுள்ள ஏதாவது ஒரு செயலுக்குத் தன்னைப் பயன்படுத்தும்பொருட்டு தீக்குச்சியானது எப்போதும் காத்திருக்கும்.

மனித மனம் என்பது பிரம்மாண்டமான ஒரு தீப்பெட்டி. எண்ணிக்கையில் அடங்காத கோடிக்கணக்கான எண்ணங்களை அது தீக்குச்சிகளாய் உள்ளடக்கி வைத்துள்ளது. அதிலுள்ள எண்ணமெனும் தீக்குச்சிகள் ஒருவரது வாழ்வில் ஞானமென்னும் விளக்கின் ஒளியேற்றும் வல்லமை கொண்டவை. ஆனால் அதே எண்ணங்கள் ஒருவருடைய வாழ்வையே பெருந்தீயாய் எறித்து அழிக்கும் சக்தியையும் கொண்டவை.

ஏதாவது ஒரு செயலுக்குப் பயன்படுத்தப்படும்வரை, தீப்பெட்டியினுள்ளே இருக்கும் தீக்குச்சிகளாய் எண்ணங்கள் காத்திருக்கின்றன. எல்லா எண்ணங்களும் ஒரேமாதிரியான சக்தி வாய்ந்தவையே. ஆனால் எதற்காக, எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் பயனும், விளைவுகளும் மாறுபடுகின்றன. செயல்படுத்தப்படாத எண்ணங்களால் பயனுமில்லை, பாதிப்புமில்லை.

ஒருவரது இல்லத்திலுள்ள தீப்பெட்டியிலிருக்கின்ற தீக்குச்சிகளை எல்லாம் ஒரே சமயத்தில் கொளுத்தி ஒருபோதும் வீணடிப்பதில்லை. அதுபோலவே, ஒருவரது மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் அத்தனையையும் பயன்படுத்த முயல்வதும் பயனற்ற வீண் முயற்சியே.

ஒருவருக்கோ, பலருக்கோ, பாதிப்பின்றிப் பயனளிக்கக்கூடிய செயல்களுக்குரிய எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தினால், படைப்பிலுள்ள உயிர்களுக்கு ஆதாரமான சூரிய ஒளி, காற்று, மழைநீர் ஆகியவற்றைப் போல, எண்ணங்களும் அளப்பரிய பயனைக் கொடுக்க வாய்ப்புள்ளது. அவ்வாறின்றி, தனது சொல் மற்றும் செயல் மூலமாகத் தனக்கோ, பிறருக்கோ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஒருவர் தனது எண்ணங்களைப் பயன்படுத்தினால், அது உச்சிவெயிலின் தாளமுடியாத வெப்பம், வீசுமிடத்திலுள்ள யாவற்றையும் வீழ்த்தும் சூறாவளியின் சீற்றம், பாயும் வழியிலுள்ள எதையும் மூழ்கடிக்கும் வெள்ளத்தின் வேகம் போன்ற கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்கமுடியாது.

போற்றுதலுக்குரிய பலனையோ, சீற்றத்தால் விளையும் பாதிப்பையோ ஏற்படுத்தும் சக்தியைத் தன்னுள் அடக்கிய எண்ணங்கள் யாவும் நெருப்பை உருவாக்கக் கூடிய சக்தியுடைய, ஆனால் இன்னமும் கொளுத்தபடாத தீக்குச்சிகளே. பயனுள்ள செயலுக்காகப் பொறுமையுடன் அவற்றுள் மறைந்திருக்கும் சக்தியே எரியாத் தழல்.

மனம் என்ற தீப்பெட்டியிலுள்ள எண்ணங்கள் எனும் தீக்குச்சிகளை, வழிபாட்டுக்குரிய தீபம் மற்றும் உணவு சமைக்கும் அடுப்பு ஆகியவற்றை ஏற்றுதல் போன்ற பயனுள்ள செயல்களுக்குப் பயன்படுத்தி, வாழ்வை ஒளிமயமாக அனுபவித்து மகிழ, அருள் உங்களுக்கு வழிகாட்டட்டும். ஷம்போ.
~ஸ்வாமி | @PrakashSwamy

ஏமாற்றம்!

அறிதல், தெரிதல், புரிதல், தெளிதல், ஆகுதல் என்று பல்வேறு நிலைகளில், படிப்படியாக மனிதருள் மகத்தான மாற்றம் ஏற்படுகின்றது.
அறிவுசார்ந்த தேடல் முதல் இரு நிலைகளிலேயே நின்றுவிடுவதால், பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்வில் ஏமாற்றம் ஏற்படுகின்றது.

Website Powered by WordPress.com.

Up ↑