காசி யாத்திரை செல்பவர்கள், எதையாவது ஒன்றை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும் என்பது ஏன்?

“காசி யாத்திரை செல்பவர்கள், எதையாவது ஒன்றை அங்கேயே விட்டுவிட்டு வர வேண்டும் என்பது ஏன்?”

https://qr.ae/pst3Dy

தொணதொணவென்று காதைக் குடையும் ஹார்ன் ஒலிபரப்பு இடையறாது நிகழ்ந்த பரபரப்பான அந்த சாலையில், பஸ் ஸ்டாப்பை ஒட்டியிருந்த  சாலையோரத்து அரச மரத்தடியில், இருந்த கோலத்தில் சுமார் மூன்றடிக்கு, அருகம்புல் மாலையணிந்து, அந்தப் பிள்ளையார் தேமே என்று வீற்றிருந்தார். காலடியில் தக்குணூன்டு மூஞ்சூறு. 

“ஏன் பாட்டி, இத்துனூண்டு எலி போய் இவ்ளோ பெரிய புள்ளையாரை எப்படித் தூக்கிண்டு போக முடியும்?’ என்று இரண்டடி உயரம் இருந்தபோதே லாஜிக்கல் வினா எழுப்பி, 

“அடேய் துர்வாசா.. அர்த்த ராத்திரியில நீ பொறந்தப்பவே நெனச்சேன் இந்தப் புள்ளை என்னவெல்லாம் பாடு படுத்தப் போறதோன்னு.. இப்படியெல்லாம் எடக்கு முடக்கா எதையாவது கேட்டுண்டே இருந்தா, அப்புறம் உம்மாச்சி கண்ணைக் குத்திடும்.. ஒழுங்கா மரியாதையா தோப்புக்கரணம் போட்டு, தலையில குட்டிண்டு, மன்னிப்பு கேளு அவர்கிட்ட..” என்று துவக்கப் பள்ளிக் காலத்தில் நான் பாட்டியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்துக்கும் முன்பாகவே, அவரும், மூஞ்சூரும் அங்கேயேதான் இருக்கின்றனர். 

அரசமரத்தடி பிள்ளையார் என்ற பொதுப்பெயரால்தான் அவரை எல்லோரும் அழைப்பார்கள். சதுர்த்தி திதியன்று கொஞ்சம் ஸெலிப்ரிட்டி மாதிரி பக்த கோடிகள் புடைசூழ இருப்பார். ஹெல்மெட் அணியாத மெஜாரிட்டி ஸ்கூட்டர்/பைக் ஓட்டுனர்களின் ஸ்லாலோம் திறமையை பரீட்சித்துப் பார்க்கும் விதமாக, அன்று நிறைய சிதர் காய்கள் படார்.. படார்.. என்று சாலையில் உடைபடும். அந்தப் பேட்டை ப்ளாட்ஃபார்ம் வாசிகள் சிலர் கோணியுடன் உடைந்த தேங்காய் சில்லுகளை சேகரிக்க ஆர்வமாகக் காத்திருப்பார்கள். 

விநாயகர் சதுர்த்தியின் போது லௌட் ஸ்பீக்கரில் ‘விநாயகனே.. வினை தீர்ப்பவனே..’ என்று ட்ரேட்மார்க் கணீர் குரலில் சீர்காழி கோவிந்தராஜன் அதிகாலையில் பாடி நம்மை எழுப்ப, குலை தள்ளிய வாழை மரம், தோரணங்கள், நான்கு கால பூஜை, பக்தர்களுக்கு இலவச பிரசாதம் என்று அரசமரத்தடி அதகளப்படும். டிராஃபிக் போலீஸார் சிலர் கூட அன்று அவ்விடத்தில் தென்படுவர் – நெற்றியில் பூசிய திருநீறுடன். 

விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் நாட்களில், அவரைச் சுற்றி திடீரென்று மேடையில் ஏகப்பட்ட களிமண் பிள்ளையார்கள் உதித்திருப்பார்கள். ஓரிரு தினங்களில் அவர்களெல்லாம் அரச மரத்திற்குப் பின்னால் அடுக்கப்பட்டு, மழையில் கரைந்து காணாமல் போவார்கள். 

கடவுள்களில் மிக எளிமையாக எவர் வேண்டுமானாலும் அணுகக் கூடியவர்களான பிள்ளையார், அனுமார் இருவரையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால், தினமும் பள்ளிக்குப் போகும்போது அவருக்கு ஒரு அவசர குட்டு + வந்தனம் வைத்து விட்டுத்தான் போவேன். பரீட்சை சமயத்தில் பக்தி கொஞ்சம் ஆம்ப்ளிஃபை ஆகி, தோப்புக்கரணம், மரத்தைச் சுற்றி பிரதட்சணம், நெற்றியில் அர்ச்சகர் பூசும் திருநீறு ஆகியவையும் சேர்ந்து கொள்ளும். 

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பெருநரகத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து, அவரை இன்று பார்த்தபோது, பழைய ஞாபகங்கள் ரீவைண்ட் ஆக, இயல்பாகக் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டு விட்டு, அரச மரத்தை இப்போது சுற்றலாமா.. கூடாதா.. என்று யோசித்தபோது, அவர்களை கவனித்தேன். 

பெருநரகங்களின் அபத்தப் பரபரப்பின்றி, தினசரி வாழ்க்கை ஸ்லோ மோஷனில் நடக்கும் சிற்றூர்களில், ரிட்டயர்மெண்ட்டுக்குப் பிறகு ஸெட்டில் ஆகிவிடும் பாக்கியவான்களின் சர்வே ஸாம்ப்பிள் மாதிரி, பிள்ளையார் கோயில் அருகாமை பஸ் ஸ்டாப் பெஞ்ச்சில் அந்த மூவரும் அமர்ந்திருந்தனர். இருவர் கையில் ஆவி பறக்கும் ஃல்ட்டர் காஃபி. மூன்றாமவரின் காஃபி ஆர்வத்திற்கு அனேகமாக அவரது டயபடீஷியன் [அ] டயட்டீஷியன் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். கையிலிருந்த ஹாட் & கோல்ட் பாட்டிலில் இருந்து சுடுநீர் மட்டும் ஸிப்பிக் கொண்டார். 

பஸ் ஸ்டாப்பின் பின்புறமிருந்த ‘மீனாட்சி காபி நிலையம்’ அந்த ஏரியாவில் பிரபலம். முப்பது வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் வாக்கிங் போகும் அப்பா, அங்கேயும் ஒரு காஃபி அருந்திவிட்டு வந்து, “ஏற்கனவே செகண்ட் டோஸ் காஃபி அந்தக் கடையில உள்ள போயிருக்குமே.. அடுத்த டோஸ் டிஃபன் சாப்பிட்டதுக்கு அப்புறமாத்தான்..” என்று அம்மாவிடம் செல்லமாக வாங்கிக் கட்டிக் கொள்வார். 

“ஏண்டா ரமேஷ், நம்ம அலமு இஸ் நோ மோர் தெரியுமோ?”

“ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்.. அப்ப என்னோட பேத்தி புண்யஜனனத்துக்காக பாம்பே போயிருந்தேன்.. ஸோ நேர்ல வர முடியலை..”

“மத்தியானம் சாப்பிட்டுட்டு, ஏதோ புஸ்தகத்தை புரட்டிண்டு, ஈஸி சேர்ல உக்கார்ந்திருந்தாளாம்.. அப்படியே பட்டுன்னு போய்ட்டாளாம்.. வ்வாட் எ வே ட்டு கோ.. உண்மையிலேயே புண்ணியவதிப்பா அவ..”

easy to edit vector illustration of Indian family wishing Diwali on Hindu festival of India Sale promotion advertisement background

அவர்களின் சம்பாஷணையில் ஃபீச்சர் ஆன அலமு என்கிற பெண்மணி என் அம்மா. நான்கு குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, திருமணம் செய்வித்து, பேரன்/பேத்திகள் பார்த்து, பிள்ளைகள்+பெண் சேர்ந்து நடத்திய ஷஷ்டி அப்த பூர்த்தி.. பீம ரத சாந்தி.. எல்லாம் சிறப்பாக அனுபவித்து விட்டு, 

“என்னால யாருக்கும் எந்த தொந்திரவு வந்துடக் கூடாதுடி மீனாக்ஷி.. ஆஸ்பத்திரி.. அட்மிஷன்.. ஐஸீயூ.. மாதிரியெல்லாம் எந்த கண்றாவியும் இல்லாம, பட்டுன்னு சுமங்கலியா போயிடணும்.. அந்த ஒரு வரத்தை மட்டும் எனக்கு குடுத்துடும்மா..” என்று அவளது ஆதர்ச தெய்வமான மதுரை மீனாக்ஷியிடம் தினமும் வேண்டிக் கொண்டு, பட்டென்று ஒரு சாதாரண தினத்தின் மத்தியானம், எழுபத்தோரு வயதில் போயே விட்டாள். அவளது மாசிகம் + ஸோதகும்பத்திற்குத்தான் ஊருக்கு வந்திருக்கிறேன்.

“போன வருஷம் காசிக்கு அவங்களோடதான் நானும், என் வைஃபும் போயிருந்தோம். அங்க எல்லா ஏற்படும் சாரே பண்ணிட்டார். அருமையான யாத்ரா அது.. ப்ச்ச்ச்..”

“ஏண்டா, காசிக்குப் போனா அங்க ஃபேவரிட் ஐட்டம் எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்களே.. நீ என்னத்தை விட்டுட்டு வந்த.?”

“நான் புடலங்காயை விட்டேன்.. என் பொண்டாட்டி சீத்தாப்பழத்தை விட்டுட்டா..”

“ஏண்டா.. புடலங்காயா உன்னோட ஃபேவரிட்? உருளைக்கிழங்குன்னு இல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்.! எந்த ஊருக்குப் போனாலும் சிப்ஸை விட மாட்டியே நீ..” என்று வழுக்கைத் தலையர் சிரித்தார். உடனிருந்த இருவரும் சற்று சிக்கனமாக சிரித்தனர்.

தினசரி வாக்கிங் + மீ கா நி ஃபில்ட்டர் காஃபி ரிச்சுவல் முடிந்து அவர்கள் கிளம்புகையில், டை அடித்து சொதப்பாத வெள்ளை முடியைப் படிய வாரியிருந்தவர் என்னை கவனித்து,

“ஏம்ப்பா, நீ சுந்தரேசன் சாரோட எல்டர் ஸன் தினேஷ்தானே..” என்றார்.

“ஆமாம் சார். நமஸ்காரம்.”

“என்னப்பா இது.. உங்க அம்மா இன்னும் கொஞ்சம் காலம் இருந்து, சதாபிஷேகத்தையும் பண்ணிண்ட அப்புறமா போயிருக்கப்படாதோ.. என்ன அவசரம்னு இப்படி படக்குன்னு போய்ட்டா.. ஐம் வெரி சாரி ஃபர் யுவர் லாஸ்ப்பா..”

“அந்த மாதிரி படக்குன்னு போறதெல்லாம் பெரிய பிளெஸ்ஸிங்ப்பா.. உங்க அம்மா குடுத்து வெச்சவன்னு சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான்..”

“பை தி வே, அப்பா எப்படி இருக்கார்.. ஹொவ் இஸ் ஹீ கோப்பிங்.. இங்கதான் இருக்காரா.. மார்னிங் வாக் எல்லாம் இப்போ வர்றதில்லையோ.?

“ஆமாம் சார்.. அவருக்கு ஹைதராபாத் லைஃப் ஸெட் ஆகலைன்னு, இங்கயே திரும்ப வந்துட்டார். அதனால நான் மாசாமாசம் காரியத்துக்கு வந்துட்டுப் போறேன்.. பை ப்பாஸ் சர்ஜரிக்கு அப்புறமா அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்கு உள்ளயேதான் வாக் போறார்.. மறுபடியும் வெளியில பிரிஸ்க் வாக்கிங் பண்ண ஆரம்பிக்கல சார்..”

“ஓ, ஐ ஸீ..  நாங்க காசிக்குப் போனப்ப, அவங்க ரெண்டு பேரும்தான் மொத்த யாத்ராவையும் ப்ளான் பண்ணி மேனேஜ் பண்ணினாங்கப்பா.. ஸச் எ லவ்லி கப்பிள்..”

“அவரை விசாரிச்சதா சொல்லுப்பா.. ஹீ நோஸ் ஆல் ஆஃப் அஸ் வெரி வெல்.. அப்புறமா ஒரு நாள் வீட்டுக்கு வந்து அவரைப் பாக்கறோம்..”

“ஷ்யூர் சார்..”

“ப்ளீஸ் ட்டேக் குட் கேர் ஆஃப் ஹிம்.. அம்மா இல்லாம எப்படித்தான் தனியா மேனேஜ் பண்றாரோ.. இங்க யாரு அவரை பாத்துக்கறா.?”

“என்னோட சிஸ்டர் இங்க பக்கத்துலதான் சார் பை ப்பாஸ் ரோட்ல ஒரு அப்பார்ட்மெண்ட்ல இருக்கா. ஷீ விஸிட்ஸ் ஹிம் அல்மோஸ்ட் டெய்லி.. அவரும் வீக் எண்ட்ல அவளோட வீட்டுக்குப் போயிடறார்..”

“ஓ.. தட்ஸ் குட் ட்டு நோ.. நாங்க வர்றோம்ப்பா.. வீ டோண்ட் வாண்ட் ட்டு க்கீப் யூ வெயிட்டிங்.. ப்ளீஸ் ட்டேக் கேர்.. பை..” 

அண்ணாமலையின் பாத யாத்திரை போன்ற அன்றைய தலைப்புச் செய்திகளை அலசியபடி, இளஞ்சூடான காலை வெயிலில் கரைந்து அவர்கள் தங்களது இல்லங்களை நோக்கிக் காணாமற் போயினர்.

காலை டிஃபனுக்கு சட்னி அரைக்க அத்தியாவசியமான சாமான்களையும், ஒரு பாக்கெட் எக்ஸ்டரா பாலையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய நான், அவர்களது விசாரிப்பை அப்பாவிடம் பகிர்ந்து கொண்ட பின்,

“ஏம்ப்பா, காசி யாத்திரை போறவங்க, அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு ஐட்டத்தை அங்கேயே விட்டுவிட்டு வரணுமாமே.. நீயும் அம்மாவும் போனப்போ எதை விட்டுட்டு வந்தீங்க?”

“ஆமாம்ப்பா.. நான் மரவள்ளிக் கிழங்கை விட்டுட்டேன்.. அம்மா வெண்டைக்காயை விட்டுட்டா..”

அவை அவர்களது ஃபேவரிட் காய்கள்தான் என்பது எனக்குத் தெரியும். ஸோ, ச்சீட்டிங் ஏதும் செய்யவில்லை. வெரி ட்டிப்பிக்கல் ஆஃப் தெம். பொய், புரட்டு, கோள் சொல்வது மாதிரியான சாமான்ய மனிதர்களின் சாமர்த்தியங்கள் ஏதும் அறியாமல், இருப்பதைக் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்த ஆதர்ச தம்பதிகள் என் பெற்றோர். 

“அது சரிப்பா.. வாட் இஸ் த லாஜிக் பிஹைண்ட் திஸ் திங்னு உனக்குத் தெரியுமோ?”

“அது ஏதோ ஒரு ஸ்பிரிச்சுவல் பிராஸஸ்ப்பா.. அங்க போகிற எல்லாரும் அதை ஃபாலோ பண்றோமே தவிர, ஏன்.. எதுக்குன்னு.. யாரும் பொதுவா ஆராய்ச்சி பண்றதில்லை.. உங்க அம்மாவைக் கேட்டா அதுக்கும் ஏதாவது விளக்கம் கொடுப்பா..” என்றவரை, அம்மா பற்றிய நினைவுகளை ஆசை போடட்டும் என்று தனியே விட்டு, ந்யூஸ்பேப்பரை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன்.

மொ மாடியில் பக்கத்துக்கு ஃப்ளாட் ஷங்கரநாராயணன் மாமா துணி உலர்த்திக் கொண்டிருந்தார். அப்பா, அம்மாவின் நீண்ட கால நெய்பர் + ஆப்த நண்பரான அவர், கிட்டத்தட்ட எங்களுடைய குடும்ப உறுப்பினர் மாதிரி. சங்கர மாமா என்றுதான் அவரை நாங்கள் கூப்பிடுவோம். அம்மாவின் அபர கர்மாவின் போது, கூடவே இருந்து அப்பாவுக்கும் எங்களுக்கும் உதவியவர். என்னைப் பார்த்து,

“என்னடா ரகு.. அப்பா என்ன பண்ணிண்டிருக்கார்.. அண்ட் ஹௌ ஆர் யூ டூயிங்? எப்போ வந்தே நீ.?” 

ஒரே கேள்வியில் பல துணைக் கேள்விகளைக் கோர்த்துக் கேட்பது சங்கர மாமாவின் பாணி. கேள்வியின் நாயகனாக இருந்து, எக்கச்சக்க இன்ஃபர்மேஷனை சேகரித்து வைத்திருப்பார். ச்சாட் ஜீப்பீட்டீ மாதிரி ஏஐ துணையின்றி, தன்னம்பிக்கையுடன் என்ஐ (நேச்சுரல் இன்ட்டலிஜென்ஸ்) பயன்படுத்துகிற அரிதான சிலருள் ஒருவர். 

“நேத்திக்கு வந்தேன் மாமா.. நாளைக்குத்தான் அம்மாவுக்கு மாசிகம், ஸோதகும்பம். நாளைக்கு நைட்டே ரிட்டர்ன்.. அப்பா ஸீம்ஸ் ட்டு பீ டூயிங் ஃபைன்.. அதான் நீங்க, ரமா எல்லாம் பக்கத்துலதானே இருக்கீங்க.. அதனாலதான் நாங்கள்லாம் அங்க நிம்மதியா இருக்கோம்..”

மாமா துணி உலர்த்தலைத் தொடர்ந்தார். மொ மாடியில் தொட்டியில் இருந்த செடிகள், உலா வரும் புறாக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது சங்கர மாமாதான். பிற உயிர்களுக்கு உதவுவது என்பது அவரது நேச்சுரல் வே ஆஃப் லிவிங் போலிருக்கிறது. 

“நாளைக்கு வரேன் நான். கோபி வாத்தியார் எத்தனை மணிக்கு வர்றேன்னு சொல்லியிருக்கார்?”

“பத்தரை மணிக்கு மாமா..” 

சங்கர மாமா பல்துறை வித்தகர். எந்த இடத்தில், யாரிடமும், எதைப் பற்றி வேண்டுமானாலும் விலாவாரியாகப் பேசக்கூடிய திறமை உள்ளவர். அஸோசியேஷன் மீட்டிங்கில் பை லாவை மேற்கோள் காட்டி பஞ்சாயத்து பிரச்சினையைத் தீர்ப்பதிலிருந்து, அக்கம்பக்க உற்றார், உறவினர், நண்பர்கள் பலருக்கும், எல்லா விதமான குழப்பங்களுக்கும், ‘யாமிருக்க பயமேன்’ என்று உடனடி நிவாரணம்  அளிப்பவர் மாமாதான் என்பது என் நினைவுக்கு வர, காசிக்குப் போகின்ற யாத்திரீகர்கள் எதையாவது விட்டுவிட்டு வருகின்ற மேட்டரை அவரிடமே கேட்டுவிட முடிவு செய்தேன். கேட்டேன்.

சங்கர மாமா அட்டகாசமாக சிரித்தார். அவர் போட்ட தானியத்தைக் கொதிக்கொண்டிருந்த புறாக்கள் சற்றே திடுக்கிட்டு, பிறகு ‘அட நம்மாளுதான் சிரிக்கறாரா..’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, கொத்தலைத் தொடர்ந்தன. நான் மையமாக முழித்தேன்.

“காசிக்குப் போறவா விட்டுட்டு வர வேண்டியது தன்னை. அதாவது ‘நான் இன்னார்’ என்ற தனிப்பட்ட அடையாளத்திற்கு ஆதாரமான அகந்தை / ஆணவத்தை. பேஸிக்கலி அங்க யாத்திரை போறவா ஈகோவை விட்டுட்டு வந்தால், அவங்களுக்குள்ள உருப்படியா ஏதாவது ச்சேஞ்ஜ் நடக்க வாய்ப்பிருக்கு. இட்ஸ் கொயட் இம்ப்பார்ட்டண்ட் ஃபர் அவர் ஸால்வேஷன்.” 

“அப்போ இந்த காயை.. பழத்தை.. ஸ்வீட்டை.. விட்டுட்டு வர்றதெல்லாம் வெறும் ஹம்பக்கா மாமா.?”

“நோ.. நோ.. இட்ஸ் எ சிம்ப்பிள் யட் எஃபக்ட்டிவ் வே ட்டு ரிமைண்ட தி யாத்ரி அபௌட் தி இம்ப்பார்ட்டன்ஸ் ஆஃப் லெட்டிங் கோ.. காய், பழம், இல்லைன்னா உனக்கு ரொம்ப பிடிச்ச ஸோன்பப்டி மாதிரி ஸ்வீட் எதையாவது அங்கே விட்டுட்டு வர்றது, எவஞ்ச்சுவலி, ‘டாக்டர் ரகுராமன்.. பி ஹெச் டீ இன் நியூக்ளியர் ஃபிஸிக்ஸ்..’ங்கற மாதிரி ஸ்ட்ராங் பெர்ஸனல் ஐடென்ட்டிடியையும் கை விடணும்ங்கறதுக்கு ஒரு மெமரபிள் ரிமைண்டர் மாதிரி.. இட் வில் கெட் ரீ இன்ஃபோர்ஸ்ட்..” என்று என்னுடைய அடையாளத்தையே க்கோட் பண்ணி, காசி யாத்திரையில் எதையாவது கைவிடுவதற்கான காரணத்தை எளிமையாக விளக்கினார் சங்கர மாமா.

“அபியைக் கேட்டதா சொல்லுடா.. நாளைக்கு ஸெரிமோனிக்கு வேண்டியதெல்லாம் ஏற்கனவே பக்காவா அரேஞ்ச் பண்ணியிருப்பாளே.. தங்கமான பொண்ணு.. அலமு வாஸ் ஆல்வேஸ் வெரி ப்ரௌட் ஆஃப் போத் ஆஃப் யூ.. நான் நாளைக்கு வந்து அப்பாவைப் பாக்கறேன்.. ப்புவர் ச்சாப்..” என்று படியிறங்கிப் போனார். 

எதை, எதற்காக விட வேண்டும் என்பது புரியாமல், ஏற்கனவே பிடிக்காத புடலங்காய் / சீத்தாப்பழம் [அ] மருத்துவரால் தவிர்க்க வேண்டிய பட்டியலில் சேர்க்கப்பட்ட வஸ்துக்களான உருளைக்கிழங்கு / பலாப்பழம், இத்யாதியை காசியில் விட்டு விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது அபத்தம் என்பது எனக்குப் புரிந்தது.

நம்முடைய மூதாதையர்கள் விட்டுச் சென்றிருக்கும் தகவல்களோ, வழிமுறைகளோ அத்தனையும் அர்த்தமுள்ளவை. அனுபவபூர்வமாக அவர்களால் பரீட்சித்துப் பார்க்கப்பட்டு, பின்னர் செயல்முறையாக எதிர்கால தலைமுறையின் நலனுக்காக வழங்கப்பட்டவை.. என்று அம்மா அடிக்கடி சொல்வாள். தான் செய்யும் பூஜை மற்றும் விரதங்கள் எதற்காக என்று பொறுமையாக விளக்கவும் செய்வாள்.

‘அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்று இறைவனடி சேர்ந்து, இம்மை, மறுமை இல்லாத பேரானந்த நிலையான முக்தியை அடைவதற்கு, ஈகோவின் உடும்புப் பிடியைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனுபவபூர்வமாக அறிந்த நம்முடைய முன்னோர், அதை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கை செயல்பாடுகளிலேயே எம்பெட் செய்து, நமக்கு எளிமையாக வழிகாட்டி இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டபடி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டினேன். ‘காசி விஸ்வநாத் தாம்’ காரிடார் முழுப்பக்க விளம்பரம் அதில் பளிச்சிட்டது! 

எபிலாக்:

முக்தியை மட்டுமே மனிதப் பிறவியின் பிரதான குறிக்கோளாகக் கொண்ட தொன்மையான இக்கலாச்சாரத்தில், அதை அனைவரும் அடைவதற்கான வழிமுறைகளை நமது மூதாதையர் எளிமையாக வழங்கி இருக்கின்றனர். அத்தகைய வழிமுறைகளைப் பற்றிய தெளிவுடையோரின் எண்ணிக்கை தற்காலத்தில் குறுகி விட்டதால், அவை பற்றிய புரிதலின்றி, வெறும் செயல் அளவில் – காசியில் ஏதாவது காய்/பழத்தை விட்டு விடுகின்ற மாதிரி – அவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி, பிறவிப்பயனுக்கான செயல்களை நம்மில் பெரும்பாலானோர் மறந்து விட்டோம்.

பிரபல திருத்தலங்களில் முடியிறக்குவது; திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது; சபரிமலை, திருக்கயிலாயம், திருப்பதி, பழனி, கேதார்நாத் போன்ற தலங்களில் மலையேற்றம்; ராமேஸ்வரம் போன்ற தீர்த்த ஸ்தலங்களில் முழுகி எழுதல்; அன்னதானம்; பசுக்கள், நாய்கள், காக்கை போன்ற பிராணிகளுக்கு உணவளித்தல்; திருவண்ணாமலை போன்ற தலங்களில் கிரி வலம்; திருக்கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்குதல்; திருக்கோயில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் உழவாரப் பணி; வீட்டு வாயிலைத் தூய்மைப்படுத்தி அரிசி மாவினால் கோலமிடுதல்; தீபம், தூபமேற்றி, மலர்கள் சாற்றி, உலர் திராட்சை / கற்கண்டு போன்ற எளிய நிவேதனம் அர்ப்பணித்து, கற்பூர ஆரத்தி காட்டித் தொழுது வணங்கும் தினசரி இறை வழிபாடு… 

…போன்ற கலாச்சார அம்சங்கள் அனைத்துமே, ‘நான் இன்னார்’ என்கிற தனிப்பட்ட அடையாளத்தை, அஃதாவது தன்னை விடுதலுக்கு உதவும் செயல்முறைகளே. அவற்றை முறைப்படி அறிந்து, பின்பற்றி + பயன்படுத்தி, விடாது முயன்று அகந்தையை / ஈகோவைக் கைவிட்டால்தான், ‘நான் யார்’ என்ற தெளிவு கிட்டி, பிறந்திறவாப் பெருநிலை அடையும் குறிக்கோளை நோக்கி நம்மால் நகரவியலும் – இப்பிறவியிலோ.. இதற்கடுத்த வேறொரு பிறவியிலோ.! 

திருச்சிற்றம்பலம். 🙌🏼👣🪷😇🙏🏼

~ஸ்வாமி 

‘சும்மா இரு’த்தலின் சூக்ஷ்மம் என்ன!

இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இருந்தாலும் இன்னொரு முறை கதைப்போம் – இவ்விடைக்குப் பொருத்தமானது என்பதால்.
அந்த சிற்றூரில் ஒரு பழமையான திருக்கோயில்.

எல்லா இறை வடிவங்களும் (சகுண பிரம்மம்) ஒரே பரம்பொருளின் (நிர்குண பிரம்மம்) வெளிப்பாடே என்பதால், உள்ளே கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்த இறைவன்/வி யார் என்பது இங்கு முக்கியமில்லை. உங்களுக்கு விருப்பமான இஷ்ட தெய்வத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள என் அனுமதி கூடத் தேவையில்லை!

சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, அவ்வூர் இருந்த ராஜ்யத்தின் மன்னர், அக்கோயிலுக்கு மான்யம் வரும் வகையில் நிலபுலன்களை வழங்கிய கல்வெட்டு ஒரு மூலையில் சாய்ந்து கிடந்தது. இப்போதெல்லாம் அவ்வளவாக வருவாய் கிடைப்பதில்லை. ‘பரிகார ஸ்தலம்’ என்று கோயிலை மார்க்கெட்டிங் பண்ணும் திறன் அர்ச்சகருக்கோ, அதிகாரிக்கோ இல்லை. இருந்தாலும், டெடிகேட்டட் பக்தர்கள் அளித்த/க்கும் பொருள் உதவியால், பூஜைகள் எளிய முறையில் ஒழுங்காகவே நடைபெற்றன. 

அக்கோயிலில் உழவாரப் பணி முதற்கொண்டு, பலவிதமான தொண்டுகளைப் புரிந்த ஹேண்டிமேன் ரக அன்பர் ஒருவர். கடும் உழைப்பாளி. அதிகாலை முதல் அவர் செய்யும் தொண்டின் பயனாக அவருக்கு தினமும் ஒரு ‘பட்டை சாதம்’ பிரசாதமாக, திருக்கோயில் அர்ச்சகரால் வழங்கப்பட்டது.

உழைத்துக் களைத்த உடலுக்கு உரமூட்டும் வகையில் அவர் அந்த பிரசாதத்தை, உச்சிகால பூஜை நிறைவு பெற்றபின், திருக்கோயில் நுழைவாயில் அருகில் இருந்த திண்ணையில் அமர்ந்து உண்பார். பின்பு சிறிது நேரம் அங்கேயே கண்ணயர்ந்து விட்டு, மாலையில் விளக்குகளுக்கு எண்ணெய் விட்டபின்பு, வீடு திரும்புவார்.

அதே திருக்கோயிலில், தொண்டு புரியும் அன்பர் உணவுண்டு, ஓய்வெடுக்கும் திண்ணைக்கு எதிர்ப்புறம் உள்ள மற்றொரு திண்ணையில், ஒரு பண்டாரம் அமர்ந்திருப்பார். மெல்லிய உருவம். சாயம் போன காவி ஆடை. சடை முடி. நீண்ட வெண் தாடி. ஒரு தோள் பையும், திருவோடும் மட்டும்தான் அவரைத் தவிர்த்து அத்திண்ணையில் இருந்த பொருட்கள்.

தொண்டருக்குத் தெரிந்த அளவில், அந்தத் திண்ணையிலிருந்து பண்டாரம் அரை அங்குலம் அளவு கூட நகர்ந்ததில்லை. ஒருநாளும். தொண்டர் அவரைப் பார்த்து வணங்குவதுண்டு. வணங்கும்போது, விழி திறந்திருக்கும் நாட்களில், பண்டாரம் புன்னகை புரிவார். அல்லது ஆசி புரிவது மாதிரி கையைத் தூக்கிக் காட்டுவார். இல்லையென்றால் அசையாமல் விழிமூடி அமர்ந்திருப்பார். விழிமூடி அமர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் தொண்டர் பெரிதாகக் கவலை எதுவும் பட்டதில்லை.

திருவிழாவெல்லாம் இல்லாத ஒரு சாதாரண தினத்தில், அவ்வளவாக கடின உழைப்புத் தேவைப்படும் சேவை ஏதுமில்லாததால், உழைத்து நல்ல பசி எடுப்பதற்கு முன்பாகவே தொண்டருக்குப் பட்டை சாத பிரசாதம் கிட்டிவிட்டது. அர்ச்சகரை வணங்கி அதைப் பெற்றுக் கொண்டு திண்ணைக்கு வந்தார். இன்னமும் பசியெடுக்கவில்லை என்பதால், உணவை உண்பதற்கு முன்பாக சுற்றுமுற்றும் நோக்கினார். அவரது மனம் சுற்றியிருந்த எல்லாவற்றையும் நோட்டமிட்டது – முதன்முறையாக.

அப்போது அர்ச்சகர் கோபுர வாயில் வரை வந்து, எதிர்த் திண்ணையில் அமர்ந்திருந்த பண்டாரத்திடம் பிரசாதம் வழங்கியதைத் தொண்டர் பார்த்தார். ஒன்றல்ல; இரண்டு பட்டை சாதம். இன்றுவரை அவர் அதை கவனித்ததில்லை என்பதால், ‘பாவம் அவருக்கு இன்று ரொம்ப பசிக்கிறது போலும்!‘ என்று நினைத்து, தோள்குலுக்கி, பண்டாரத்திற்கு வந்தனம் தெரிவித்து விட்டு, பட்டை சாதத்தை உள்ளே தள்ளத் துவங்கினார்.

பண்டாரம் பிரசாதத்தை என்ன செய்கிறார் என்பதை ஓரக்கண்ணால் கவனித்திருந்தால் கூட, தொண்டர் கீழ்க்கண்டவை அங்கே நடைபெற்றதைப் பார்த்திருப்பார். ஆனால் அவரது கவனம் தன்னுடைய உணவில்தான் இருந்தது என்பதால் இவற்றை  கவனிக்கவில்லை.

பண்டாரம் பட்டை சாதத்தைத் திருவோட்டில் போட்டுக் கொண்டார். சிறிது நேரம் விழிமூடி அமர்ந்துவிட்டு, கரம்குவித்தார். பின் தன்னுடைய இதயத்தைத் தொட்டுக் கொண்டார்.

அடுத்து, பண்டாரம் சிறிதளவு பிரசாதத்தை எடுத்து, திண்ணையின் மூலைகளில் வைத்தார். அவற்றை எறும்புகள், பல்லிகள், எலிகள் உண்டு பசியாறும் என்று அவர் அறிவார்.

அப்போது ட்டானென்று அலாரம் வைத்தாற்போல, நான்கைந்து நாலுகால் பைரவர்கள் அவ்விடம் வந்து அவரைப் பார்த்து வாலாட்டினார்கள். பண்டாரம் மலர்ந்த முகத்துடன், பட்டை சாதத்தில் பாதியை வாயிலின் ஒருபுறமாக அங்கங்கே கவளம் கவளமாக எடுத்துப் போட, அவை அதிவிரைவாக வாலாட்டிக்கொண்டே அவ்வுணவை அவசரமாக விழுங்கின.

இத்தனையும் செய்து முடித்த பின்னரே, பண்டாரம் திருவோட்டில் எஞ்சியிருந்த பட்டை சாதத்தை மெதுவாக உண்ணத் துவங்கினார்.

அடுத்த நாளில் இருந்து, தொண்டர் உச்சிகால பூஜை முடிந்தவுடன், அர்ச்சகர் என்ன செய்கிறார் என்று நோட்டம் விடுவதையும் தன்னுடைய சேவை பட்டியலில் சேர்த்துக் கொண்டு விட்டார். தினசரி கிளாக்வொர்க் மாதிரி அர்ச்சகர் இவரிடம் ஒரு பட்டை சாதத்தை வழங்கி விட்டு, வாயில் வரை சென்று பண்டாரத்திடமும் பட்டை சாதம் வழங்குவதை கவனித்தார். இவருக்கு ஒன்று. பண்டாரத்திற்கு இரண்டு.

ஒருசில நாட்கள் இதைக் கவனித்தவுடன், தொண்டருக்குள் சில கெமிக்கல் ரியாக்ஷன்கள் நிகழ்ந்து, ஒருசில புதுமையான உணர்வுகளை உணரத் துவங்கினார். தனக்குக் கிட்டும் ஒரு பட்டை சாதத்தை அதுவரை ஆனந்தமாக உண்டவர், ‘பண்டாரத்திற்கு எதற்கு இரண்டு பட்டை சாதம்? அவர் என்னை மாதிரி வேலை எதுவும் செய்வதாகத் தெரியவில்லையே!‘ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.

முதலில் ‘எனக்கும் இரண்டு பட்டை சாதம் கொடுத்திருக்கலாமே.. ஏன் அப்படிச் செய்யவில்லை இந்த அர்ச்சகர்?‘ என்று வருத்தம் ஏற்பட்டது.

அடுத்து, ‘நான் காலையிலிருந்து இத்தனை வேலை செய்கிறேன், ஆனால் எனக்கு ஒரு பட்டை சாதம்தான். பண்டாரம் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக்கூட மாட்டார். அவருக்குப் போய் இரண்டு பட்டை சாதமா!‘ என்று பொறாமை ஏற்பட்டது.

அதற்கடுத்து, ‘தினசரி இதே கூத்தாக இருக்கிறதே.. இது என்ன நியாயம்?‘ என்று கோபம் வந்தது.

இப்படியே கொஞ்ச நாள் எதிர்மறை உணர்வுகளால் நன்கு பதப்படுத்தப்பட்ட தொண்டர், கோவிட்-19 லாக்டவுன் காரணமாக, பக்தர்கள் வருகை அருகி, தொண்டுபுரியும் தேவை குறைந்து போன தினங்களில் ஒன்றில், அர்ச்சகரை மெல்ல அணுகி, வணங்கி,

‘ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்’ என்றார்.

அதுவரையில் ஆசாமி கருமமே கண்ணாயினார் மாதிரி, அதிகம் வாய்திறவாமல், வேலைகளிலேயே கவனமாக இருந்ததைப் பார்த்து வந்த அர்ச்சகருக்கு ஒரே ஆச்சரியம்.

‘சொல்லுப்பா, என்ன சந்தேகம் உனக்கு!’

‘ஐயா, நான் பல வருடங்களாக இங்கே தொண்டு புரிந்து வருகிறேன்…’

‘ஆமாம், நிச்சயமாகச் செய்து வருகிறாய். நன்றாகவே செய்தும் வருகிறாய்.’
‘என்னுடைய தொண்டுக்கு நீங்களும் தினசரி பட்டை சாதம் பிரசாதமாக வழங்கி வருகிறீர்கள்…’

அர்ச்சகர் ‘அதெல்லாம் தெரிந்த விஷயம்தானே அப்பனே… ஏதோ சந்தேகம் என்றாயே… அதை எப்போது கேட்பதாக உத்தேசம்?‘ என்கிற மாதிரி தொண்டரைப் பார்க்க,

‘ஐயா, கடுமையாக வேலை செய்யும் எனக்கு தினமும் ஒரே ஒரு பட்டை சாதம் பிரசாதமாகக் கொடுக்கும் நீங்கள், ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கும் அந்தப் பண்டாரத்திற்கு இரண்டு பட்டை சாதம் கொடுக்கிறீர்கள்.. அது ஏன் என்பதுதான் என் சந்தேகம்’ என்று போட்டு உடைத்தார்.

அர்ச்சகர் பெரிதாக வாய்விட்டுச் சிரித்து, ‘நான் என்ன ஜோக்கா அடித்தேன்?‘ என்று விழித்த தொண்டரை நோக்கி,

‘அட, இதுதானா உன் சந்தேகம். அதை நான் உனக்கு சொல்லிப் புரிய வைப்பதை விட, நீயாகவே அறிய ஒரு வழி இருக்கிறது தெரியுமோ!’ என்றார்.

இதைக் கேட்ட தொண்டர் குஷியாகி, ‘அப்படியா.. நானே தெரிந்து கொள்ளலாமா.. ரொம்ப நல்லதாகப் போயிற்று ஐயா. தயவுசெய்து எப்படி என்று சொல்லுங்கள்,’ என்றார்.

‘நாளைக் காலை, கோயிலுக்கு வந்தவுடன், எந்த வேலையையும் ஆரம்பிப்பதற்கு முன்பாக என்னை வந்து பார், சொல்கிறேன்.’

‘அப்படியே செய்கிறேன் ஐயா.. மிக்க நன்றி..’ என்று தொண்டர் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டுக் கிளம்பினார்.

தன்னைக் குடைந்து பாடாய்ப் படுத்திய கேள்விக்கு நாளை தானே பதிலைக் கண்டுபிடிக்கப் போவதை எண்ணி அவருக்கு ஒரே மகிழ்ச்சி. வீட்டை அடைந்த அவரது முகத்தைப் பார்த்த அவரது தாயார்,
‘என்னப்பா, இன்று அற்புதமான தரிசனமோ கோயிலில். இவ்வளவு மகிழ்ச்சியாக உன்னை நான் பார்த்ததே இல்லையே!’ என்று அதிசயித்தார்.

அன்று இரவு தொண்டரால் அயர்ந்து தூங்கவே முடியவில்லை. மறுநாள் அறியப்போகும் ரகசியம் பற்றியே அவரது மனம் என்னென்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தது. பொழுது விடிவதற்கு முன்பாகவே எழுந்து, குளித்து, திருக்கோயிலை நோக்கி ஓடினார் – தாயார் தினசரி அளிக்கும் சூடான கஞ்சியைக் கூட மறந்துவிட்டு!

திருக்கோயிலை அடைந்த தொண்டர், வழக்கம் போலத் துடைப்பத்தை எடுக்கப் போன கையை இறுகக் கட்டிக்கொண்டு, நேராக அர்ச்சகரைப் பார்க்கக் கருவறை நோக்கிச் சென்றார். அங்கே முந்தைய தினத்தில் சார்த்தப்பட்ட மலர்களை நீக்கி, அபிஷேகத்திற்குத் தயார் செய்து கொண்டிருந்த அர்ச்சகர் இவரை நோக்கி,

‘வா அப்பனே. இன்று நீ செய்ய வேண்டியது ஒரே ஒரு காரியம்தான். நீ வழக்கமாக சாப்பிடும் திண்ணைக்குச் சென்று, பண்டாரத்தை நோக்கியவாறு அமர்ந்து கொள்,’ என்றார்.

‘ஐயா, கோயிலைச் சுத்தம் செய்வது, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவது, நந்தவனத்திலிருந்து மலர்கள் பறித்து வருவது, சுற்றுப் பிரகார சன்னதிகளில் தீபம் ஏற்றுவது… இதெல்லாம்…’ என்று இழுக்க,

‘அதையெல்லாம் செய்ய சில தன்னார்வத் தொண்டர்கள் இன்று வந்திருக்கிறார்கள். நீ இதை மட்டும் செய் போதும்.’

‘அப்படியே ஆகட்டும் ஐயா. தாங்கள் சொன்னபடியே செய்கிறேன். எப்போது என் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்?’

‘அனேகமாக, உச்சிகால பூஜை முடிந்து, பிரசாதம் வழங்குவதற்குள்ளேயே கிடைத்து விடும். கவலைப்படாதே.’

தொண்டர் மெத்த பகிழ்ச்சியுடன், அங்கு கூடியிருந்த தன்னார்வத் தொண்டர்களை நோக்கி ஒரு பொதுவான கும்பிடு போட்டுவிட்டு, திண்ணையை நோக்கி ஓடினார்.

திண்ணையில் ஏறி அமர்ந்த தொண்டருக்கு, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எதிர்த் திண்ணையில் இருந்த பண்டாரத்தை நோக்கினார். பண்டாரம் பத்மாசனத்தில், விழிமூடி அமர்ந்திருந்தார். தொண்டர் அதே மாதிரி அமர்ந்து பார்த்தார். ஐந்தாறு நிமிடங்களுக்கு மேல் அவரால் உட்கார முடியவில்லை.

அடடே, வாயிலைத் தாண்டி உட்பிரகாரத்திற்குச் செல்லும் வழியெல்லாம் காய்ந்த சருகுகள் கிடக்கின்றனவே. இந்த புதுத் தொண்டர்கள் இங்கெல்லாம் வந்து சுத்தம் பண்ணுவார்களா என்று தெரியவில்லையே!‘ என்று கவலைப்பட்டார்.

திண்ணையில் உட்கார்ந்தவாறே கழுத்தை நீட்டி, தலையைத் திருப்பி, பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் எல்லாம் விளக்கு எரிகின்றதா என்று நோட்டம் விட்டார். கால்களைக் கீழே தொங்க விட்டார். மறுபடி எதிரே உள்ள பண்டாரத்தைப் பார்த்தார். அவர் இன்னமும் அதே பாஸ்ச்சரில்தான் இருந்தார்.

அப்படி இப்படி என்று அரை மணி நேரம் வரை ஒட்டியபின் தொண்டருக்கு இருப்புக் கொள்ளவில்லை. அர்ச்சகர் எங்காவது தெரிகிறாரா என்று பார்த்தார். கருவறையில் இருந்தால் அர்ச்சகர் ஃபோனை எடுக்க மாட்டார் என்பதால் கூப்பிடவும் முடியவில்லை. ‘என்னடா செய்வது.. சந்தேகத்திற்கு விளக்கம் அறிவது இவ்வளவு கஷ்டமான காரியம் என்று தெரியாமல் போனதே..!‘ என்ற தவிப்பிலேயே இன்னொரு அரை மணி கழிந்தது.

தொண்டர் நவரசங்களையும் வெளிப்படுத்தும் அனுபவங்களில் திளைத்திருந்த நேரத்தில், எதிர்ப்புறம் பண்டாரத்தின் நிலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவர்பாட்டுக்கு சிலை மாதிரி அசையாமல் உட்கார்ந்திருந்தார்.

அதிகபட்சமாக ஒருமணி நேரத்திற்குமேல் தொண்டரால் திண்ணையில்  உட்கார்ந்திருக்க முடியவில்லை. இறங்கி நேராகக் கருவறையை நோக்கி ஓடினார். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, ஆராதனை முடித்து, அங்கு கூடியிருந்த சில பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த அர்ச்சகர் இவரைப் பார்த்தார்.

‘என்னப்பா, அதற்குள் வந்துவிட்டாய்.. உட்காரச் சொல்லி ஒரு மணி நேரம்தான் ஆகியிருக்கிறது. பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விடை கிடைத்துவிட்டதா உன் சந்தேகத்திற்கு?’

‘அதில்லை ஐயா.. விடையெல்லாம் கிடைக்கவில்லை.. என்னால் வேலை எதுவும் செய்யாமல் அங்கே சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. அதுதான் ஓடி வந்து விட்டேன். பேசாமல் நீங்களே என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து விடுங்கள்.’

‘ஓ, அப்படியா. சரி, நீ அங்கே உட்கார்ந்திருந்த போது பண்டாரம் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை கவனித்தாயா?’

‘ஆமாம் ஐயா, கவனித்தேன். அவர் காலை மடக்கி, கண்ணை மூடி உட்கார்ந்திருந்தார். ஒரு மணி நேரமாக அசையவே இல்லை.’

‘ஓஹோ.. சரி, நீ என்ன செய்தாய்?’

‘நானும் அவரைப் போலவே உட்கார்ந்து பார்த்தேன். பத்து நிமிடத்துக்கு மேல் என்னால் முடியவில்லை. அப்புறம் சருகுகளை யாரும் சுத்தம் செய்வார்களோ இல்லையோ என்று யோசித்தேன். பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் விளக்குக்கு யாராவது எண்ணெய் விட்டார்களா இல்லையா என்றும் கவலைப்பட்டேன்…’

‘அதாவது, நீ வழக்கமாகச் செய்யும் வேலைகளை இன்று செய்ய வேண்டியதில்லை என்று சொல்லியும் கூட, உன் மனதிற்குள் அவற்றையெல்லாம் செய்திருக்கிறாய்.. அப்படித்தானே?’

தொண்டருக்கு, ‘ஓ, வேலை செய்யமலே செய்திருக்கிறேனா!‘ என்று வியப்பாக இருந்தது. அர்ச்சகரைப் பார்த்து மையமாகச் சிரித்து வைத்தார். 

‘அதுசரி, பண்டாரம் இதுமாதிரி ஏதும் செய்தாரா?’

‘இல்லை ஐயா, அவர் அசையவே இல்லை. நான் காலையிலேயே திண்ணையில் உட்கார்ந்ததைக் கூட அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.’

‘அப்படியா.. அப்படியென்றால் அவர் ஒன்றும் செய்யாமல் ‘சும்மா இரு’ந்தார் என்கிறாயா?’

‘ம்ம்ம்.. அப்படிதான் தோன்றுது ஐயா. தினமும் கூட அவர் அப்படிதான் இருப்பார்.’

‘ஆனால் உன்னால் இன்று ஒரு நாள், ஒரு மணிநேரம் கூட அவரை மாதிரி இருக்க முடியவில்லை அல்லவா?’

‘அய்யய்யோ, என்னாலெல்லாம் நிச்சயமா அந்த மாதிரி சும்மா இருக்க முடியவே முடியாது ஐயா. ஏதாவது வேலை செய்யாவிட்டால் நீங்கள் தரும் பிரசாதம் கூட செரிக்காது எனக்கு.’ 

‘அதனால்தானப்பா அவருக்கு இரண்டு பட்டை சாதம் பிரசாதம்.’ என்றார் அர்ச்சகர்.

இதைக்கேட்ட தொண்டர் திகைத்துப்போய் நின்றார். ‘சும்மா இரு’ப்பது என்பது செயல் புரிவதை விட மிகக் கடினமானது என்பதைப் புரிந்து கொண்டார்.

‘அது மட்டுமல்ல அப்பனே. அவர் தினமும் சாப்பிடும் மொத்த உணவே அந்த இரண்டு பட்டை சாதம் பிரசாதம் மட்டும்தான் தெரியுமா!’

பும்ராவின் யார்க்கரை எதிர்பார்க்காத கத்துக்குட்டி பேட்ஸ்மன் போல, தொண்டருக்கு இப்போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. பேசாமல் அர்ச்சகரை வணங்கி விட்டு, வழக்கம்போலத் தன் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டார்.

அன்று மதியம் அவர் பட்டை சாதம்  சாப்பிட்டபோது, பண்டாரத்தை வழக்கத்தை விட அதிக மரியாதையுடன் பார்த்து வணங்கினார்.

மாரல் ஆஃப் த ஸ்டோரி:

‘சும்மா இரு’ப்பது என்பது, வேலை எதுவும் செய்யாமல்,

சோம்பேறித்தனமாக, வெட்டியாய்ப் பொழுது போக்குவது பற்றியதல்ல. இன்ஃபாக்ட், சும்மா இருப்பது என்பது உடல் பற்றியதே அல்ல – பண்டாரத்தைப் போல ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தாலும்.

உண்மையில் அது மனம் பற்றியது. சொல்லப் போனால், அதையும் கடந்த ஆத்மாவைப் பற்றியது.

எப்போதும் ஏதாவது குருட்டு யோசனை பண்ணிக்கொண்டு இருப்பது மனத்தின் இயல்பு. செயல் என்பது சிந்தனையின் வெளிப்பாடே. செயல் புரியும் கருவிதான் உடல். சிந்தனை புரிவது மனம். மனத்தை அசைவின்றி, அஃதாவது செயலின்றி / சிந்தனையின்றி வைத்திருப்பதுதான் ‘சும்மா இரு’த்தல்.

அப்படியே சிந்தனைகள் அலைபோன்று எழுந்தாலும், அவற்றின் பின்னே ஓடாமல், அவற்றால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், செய்யும் காரியத்தில் கவனம் சிதறாமல் இருப்பது ‘சும்மா இருத்தல்.

உருப்படியான செயல் புரியத் தேவையான நேரங்களில் மட்டும், மனத்தின் செயல்பாட்டை, அஃதாவது சிந்தனை உருவாக்கத்தை, ஒரு கருவி போலத் திறம்படப் பயன்படுத்தி விட்டு, இன்ன பிற காலத்தில், அதைக் கண்டுகொள்ளாமல், சஹஜ சமாதி நிலையில் இருப்பது ‘சும்மா இரு’த்தல்.

‘சும்மா இரு’ப்பதற்கு வாழும் உதாரணமாக இருந்தோர் ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, லாஹிரி மஹாஸாய, காஞ்சி பரமாச்சாரியார், தேவி மாயம்மா போன்ற ஜீவன்முக்தர்கள்.

‘சும்மா இரு’ப்பதற்குத் தலைசிறந்த உதாரண புருஷர் சிவபெருமான். மஹாவிஷ்ணுவும் கூடத்தான்! முன்னவர் பத்மாசனத்தில், விழிமூடி, சமாதியில் இருப்பார். பின்னவர் கிடந்த திருக்கோலத்தில், விழிமூடி, (அனந்த)சயனத்தில் இருப்பார்.

ஆனால் ஆக்ஷன் என்று வந்துவிட்டால், முன்னவர் செய்வது தாண்டவம் + திருவிளையாடல்கள். பின்னவர் பல்வேறு அவதாரங்களில் லீலைகள். இரண்டுமே முழுவீச்சில்தான் நடக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

பண்டாரத்திற்கு இரண்டு பட்டை சாதம் தினசரி பிரசாதமாகக் கிடைத்ததற்குக் காரணம், ‘நான் உடல் அல்ல; நான் மனமும் அல்ல‘ என்ற மெய்யறிந்து, சதா சிவனைப் போல அவரால் எப்போதும் ‘சும்மா இரு’க்க முடிந்ததே.

‘அஹம் பிரம்மாஸ்மி’, ‘தத் த்வம் அஸி’ போன்ற உபநிடத மஹாவாக்கியங்களின் பேருண்மையை அறிந்து, ‘சிவனேன்னு இரு’க்க முடிந்ததால்தான் பண்டாரத்திற்கு அந்த மரியாதை.

தொன்மையான இக்கலாச்சாரத்தில், நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ஆராயப்படாமல், எல்லா மெய்ஞானியர் / ஜீவன்முக்தர்களுக்கும் இம்மாதிரி மரியாதை சாமான்ய மனிதர்களால் கூட வழங்கப்பட்டது.

அத்தகையோர் ‘தெய்வம் மனுஷ்ய ரூபேன‘ என்று, மனித வடிவில் உள்ள இறைவனாகவே போற்றிக் கொண்டாடப்பட்டார்கள். அவர்கள் உடலை உதிர்த்த பின்னர், அவர்கள் அடங்கிய இடமானது, ‘ஜீவ சமாதி‘ என்று ஒரு திருக்கோயிலைப் போலவே நிர்மாணிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, தொழப்பட்டது.

இக்கதையில் ‘சும்மா இரு’ந்த பண்டாரம் போன்றோரால் செயல் புரிய முடியாது என்றில்லை. தேவைப்பட்டால் அவரால் தொண்டரை விடச் சிறப்பாகவே வேலை செய்ய முடியும்.

ஆனால் சூழ்நிலையில் அதற்கான தேவை இல்லாதபோது, எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதனாலும் பாதிக்கப் படாமல், அவரால் ‘சும்மா இரு’க்க முடியும். எத்தனை காலம் வேண்டுமானாலும்… பட்டை சாத பிரசாதம் என்றேனும் கிடைக்காவிட்டால் கூட..! 

~ஸ்வாமி | ‘@PrakashSwamy   

~~~~~~~~~~~~~

‘சும்மா இரு’த்தலின் சூக்ஷ்மம் என்ன? ~ ‘பண்டாரமும் பட்டை சாதமும்’ கதையின் மூலம் கிட்டும் விளக்கம்! Quoraவிடை – https://qr.ae/pGxwS0

பெற்ற வெற்றிகளில் பெருமை தரும் வெற்றி எது!

எது வெற்றி என்பது நாம் வாழும் காலம், சூழல், நிலை, தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வெற்றி, தோல்வி என்பதை பைனரியாகவோ (இருமை), எதிர்மறையாகவோ பார்ப்பது மிகவும் மேம்போக்கான கண்ணோட்டம். இப்பதிவைப் பொறுமையாகப் படிப்போரில் சிலரேனும் இறுதியில், ‘ஹ்ம்ம்ம், தட் வாஸ் இண்டீட் அன் இன்ட்டரஸ்ட்டிங் இன்ஸைட்,’ என்று ஆமோதிக்கலாம்!

மிக இளம் வயதில், அதாவது பால பருவத்தில், போட்டிகளில் (பேச்சு, ஓவியம், இசை, விளையாட்டு, இத்யாதி…) ஏதாவது ஒரு பரிசு கிடைத்தாலே மிகப்பெரிய வெற்றி பெற்றதாகத் தோன்றும். அவ்வாறுதான் பெற்றோரும், மற்றோரும் கூறி நம்மை ஊக்கப்படுத்துவர்.

வளர வளர, நம்மைப்போன்றோ, நம்மை விடச் சிறப்பாகவோ, திறன் மற்றும் திறமை உடையோர் உலகில் பலர் உளர் என்பது தெரியவர, போட்டியிட்டு முதற்பரிசு [அ] தரவரிசையில் முதலிடம் பெறுவதே வெற்றி என்று தோன்றும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்பதெல்லாம் இடம், பொருள், ஏவல், செல்வம், செல்வாக்கு போன்ற பலவற்றைச் சார்ந்தது என்பது இந்நிலையில்தான் புரியத் துவங்கும்.

இது அடியேன் வாழ்விலும் எல்லோரையும் போலத்தான் இருந்தது. பள்ளியிலும், கல்லாரியிலும் பல போட்டிகள்.. பல பரிசுகள்.. பாராட்டுக்கள்.. ஜஸ்ட் மிஸ்டு ரக தோல்விகளும்தான்…

பள்ளிப்பருவத்தில் தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டவனாக, பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தடகள விளையாட்டு தொடர்பான ஒரு விபத்தில், இடது கால் செயலிழந்து விட்டது. காலாண்டுத் தேர்வு எழுதும் சமயத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. லிட்டரலாகப் படுத்த படுக்கை. இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து, நான் மீண்டும் எழுந்து நடப்பதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஐவருள் மூத்த பிள்ளைக்கு இப்படி ஆனதில், என் பெற்றோர் பதறிப் போயினர் (‘பிள்ளை மீண்டும் நடப்பானா.. மாட்டானா.? முருகா.. தாயே மீனாக்ஷி.. எப்படியாவது மறுபடி நடக்க வைத்து விடுங்கள்..!’).

கல்வி, கலை, விளையாட்டு என்று பல துறைகளில் ஆர்வமும், திறமையும் உள்ள ஒரு இளைஞ/ஞிக்கு, இம்மாதிரியான  எதிர்பாராத, அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு மிகப்பெரிய பின்னடைவாக  அமைந்து விடக்கூடும். இறையருளால், இச்சமயத்தில் என்னை நோக விடாமல், ஊக்குவித்தோரே அதிகம். குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சிலர். மெல்ல எழுந்து, நடந்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயாரானபோது, அரசு அலுவலரான என் தந்தை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர்  செய்யப்பட, அதுவரை நடந்தவற்றை அவ்வூரிலேயே விட்டுவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த ஆண்டு, வேறு ஊரில், புதிய பள்ளியில், அதுவரை அறியாத சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பை மீண்டும் படித்தபோது, எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் போல், இதுவரை என் வாழ்நாளில் யாரையும் சந்திக்கவில்லை எனலாம். நடந்தால் போதும் என்ற நிலையில் (சைக்கிளும் ஓட்டத் துவங்கிவிட்டேன் மறுபடியும் – குடிநீரைக் குடத்தில் பிடித்து, எடுத்து வரவேண்டிய ஊர் என்பதால் நோ ச்சாய்ஸ்), விளையாட்டுக்கு முற்றும் போட்டுவிட்டு (பாரத மாதா தனக்கு அம்மாதிரி ஒரு ஒலிம்பிக் லெவல் ஓட்டப்பந்தய வீர மகன் இருப்பதை அறிந்ததாகத் தகவலில்லை), படிப்பில் முழு கவனமும் திரும்ப, வகுப்பெடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் என்னை “நீ கண்டிப்பாக மாநில அளவில் ரேங்க் எடுப்பாய்,” என்று நேரடியாகக் கூறி ஊக்கப்படுத்தி, அவ்வருடம் மாநிலத் தரவரிசை (state rank) பட்டியலில் இடம்பெறச் செய்தே விட்டனர். இப்பிறவியில் அது நிச்சயம் ஒரு மைல்கல் எனினும், அதுவும் கடந்து போனது.

பிளஸ் ட்டூவில் அதே அளவு பெர்ஃபார்ம் பண்ண முடியாமல் போக (மேல்நிலைப்பள்ளி காலத்தில் பொதுவாகவே மாணவர்/விகளுக்கு கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் – இது தற்காலத்தில் சமூக ஊடகங்கள் + செயலிகள் தயவில் ரொம்பவே ஆம்ப்ளிஃபை ஆகிவிட்டது), சென்னை, கோவை பெருநகர்க் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில்தான் பொறியியல் படிக்க வேண்டிதாகிவிட்டது (நோ ரெக்ரெட்ஸ் தோ – மிகத் தரமான கல்லூரிதான்).

பின்னர் கல்லூரிக் காலத்தில், விகடனில் முதல் சிறுகதை வெளிவந்தது ஒரு மகத்தான மைல்கல். ஒருபக்கக் கதைதான் என்றாலும், கதையின் முடிவை மட்டும் ஆசிரியர் மாற்றிவிட்டாலும், பதிப்பில் வெளிவந்தது வந்ததுதானே. ஏதோ சன்மானம் கூட மணி ஆர்டரில் வந்ததென்று ஞாபகம். அதே காலத்தில் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் கிட்டியது. என் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளருக்கு இதுவே புக்கர் பரிசு பெற்றதற்கு ஈடு!

https://tinyurl.com/QV-SujathaDarshan

ஆனால், அதன்பின்னர் எழுத்துலகில் பரிமளிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவோர் யாருமின்றி, ஏதாவது நோட்டுப் புத்தகம் [அ] பேப்பர்களில் தார்மீகக் கோபம், காதல், இத்யாதியைப் பற்றிக் கவிதைகள் அவ்வப்போது எழுதியதோடு எமது எழுத்துப்பணி ப்பாஸ் ஆகிவிட, தமிழ் கூறும் நல்லுலகம் அடுத்த தலைமுறை சுஜாதாவை (ஆஹா, என்ன ஒரு நெனப்பு அண்ணனுக்கு!) இழந்தது.

அடுத்த படித்து முடித்து, பட்டம் வாங்கி (பொறியியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியதும் நடந்தது – ஆனால் அப்போது நான் வருந்தியதென்னவோ, ‘பெஸ்ட் ஒளட்கோயிங்க் ஸ்டூடெண்ட்’ பட்டத்தைத் தவற விட்டதைப் பற்றித்தான்), வேலை தேடி, சொந்த ஊரிலேயே முதல் வேலை வாய்ப்பைப் பெற்று (படிப்பினால் அல்ல, பேச்சுத் திறமையால்!), உழைத்து, திருமணம் புரிந்து, வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று, சென்னைக்கு ஜாகை மாற்றி, பிள்ளை பெற்று, வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து திரும்ப வந்து, கார் வாங்கி, வீடு வாங்கி, ஈ.எம்.ஐ கட்டி, மேலும் உழைத்து, பதவி உயர்வுகள் பெற்று, மேலும் இன்க்கம் டாக்ஸ் கட்டி… இவ்வாறு ஒரு சாதாரண நகர்வாழ் மதியமராகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இடையிடையே, பல தளங்களில், களங்களில் ஏதேதோ போட்டிகள்.. என்னென்னவோ சவால்கள்.. எத்தனையோ சாதனைகள்.. வெற்றிகள். அதையெல்லாம் லாங் லிஸ்ட் போட்டால் அபத்தமாக இருக்கும்.

இவையெல்லாம் ஒரு நிலையில் அலுத்துப்போய், 45லேயே (ஒரிஜினல் திட்டம் 50ல் – இதை என்னுடைய நிதி ஆலோசகர் இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிடுவார்) பிழைப்புத் தளத்திற்கு ச்சாவ் சொல்லி, விருப்ப ஓய்வு பெற்று விலகிவிட்டேன். திட்டமிட்ட ஓய்வு பெரிய அளவில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது – இதுவரையில். பெரும் சொத்தோ, பின்புலமோ இல்லாமல், சுய உழைப்பால் வாழ்வில் உயர்ந்த ஒரு சாமான்யனுக்கு, 9-x ஓய்வற்ற பிழைத்தலிலிருந்து, நாற்பதுகளில் ஈட்டிய இத்தகைய விடுதலை பெரும் வெற்றியே என்பதைக் கூறத் தேவையில்லை. https://bit.ly/3zxClfe

பிள்ளை/கள் பிறந்து, ஆரம்ப கால “அப்படியே எ/உன்ன உரிச்சு வெச்ச மாதிரி இருக்காப்ல இல்ல” (உண்மையில் பிறந்த குழந்தைகள் எல்லோரும், உலக அளவில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் – நிறம் மற்றும் முடி மட்டும் வேண்டுமானால் வேறுபடலாம்) கொஞ்சல்; ‘ஓஎம்ஜி’ கொண்டாட்டம்; நாக்ட்டர்னல் நாலு மாதக் குழந்தையால் தூக்கம் கெட்டு தாவு தீர்ந்து போய் நடக்கும் சண்டை; “ஏன், நீங்க டயப்பரை மாத்தினா தேஞ்சு போயிருவீங்களோ..” சச்சரவு எல்லாம் நடந்து முடிந்தபிறகு, குழந்தை/கள் ஏதேனும் பயிலத்துவங்கும் நிலையை அடைந்தவுடன், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதிலிருந்து, நமது குழந்தையின் வாழ்க்கை, அவரது வெற்றி என்று கவனம் தானாகவே திரும்பிவிடும். பெரும்பாலான பெற்றோர்களது நிலை இதுவே – குறிப்பாக பாரம்பரிய கலாச்சாரத்தில் வளர்ந்த பாரத தேசத்தவருள் (பொதுவாக மேலை நாடுகளில் தனிமனித / தன்னுடைய வெற்றிதான் இறுதிவரை முக்கியம் – பெரும்பாலானோருக்கு).

எனவே, இதுபற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டீவீட்டி விட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.‘ (குறள் #69)

பிள்ளையை/களைப் பெற்ற தாயைப் பொறுத்த அளவில், தன்னுடைய குழந்தை (இருபாலரும்தான்) சான்றோன் (திறன் மிகுந்தவன்/ள்) எனப் பிறரால் அங்கீகரிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வெற்றி. இவ்வினாவிற்கு ஏற்கனவே விடையளித்த பலர் (தாய், தகப்பன் இருவரும்) இதைக் குறிப்பிட்டிருப்பதே, வள்ளுவர் வாய்மொழிக்குச் சான்று.

எனில் தந்தை எதனை வெற்றியாகக் கருதுவார்? அதற்கும் வள்ளுவரே விடையளிக்கிறார் – ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு. முதலில் தந்தை பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்று ‘கடமை’ பற்றிக் குறிப்பிடுகிறார். பிள்ளையை/களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் தாய்தான் என்பதால், அவருக்குத் தனியாக கடமை எதுவும் குறிப்பிடப்படவில்லை போலும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.‘ (குறள் #67)

தன் பிள்ளையை (இங்கு பிள்ளை என்று குறிப்பிடுவது பொதுவாக குழந்தையை என்றே கொள்க; பையன், பெண் என்ற பாகுபாடு அர்த்தமற்றது – குறிப்பாகத் தற்காலத்தில்) அறிவுடையோர் (திறனுடையோர் என்றும் கொள்ளலாம்) உள்ள அவையில், முதன்மையானவராக ஆக்குவது தந்தையின் கடமை என்கிறார்.

ஆக, எந்தவொரு தந்தைக்கும், தன்னுடைய குழந்தையை(களை)த் தன்னைவிடச் சிறப்பான நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் – கல்வி, கலை, விளையாட்டு போன்று எத்துறையாக இருந்தாலும் – செய்வதுதான் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

சரி, கடமை புரிகின்றது. ஆனால், ‘தந்தை மகற்காற்றும் கடமை‘ என்று கூறாமல், ‘நன்றி‘ என ஏன் கூறுகிறார்? இதற்கான விடையை அறிய, அதே அதிகாரத்தில் சற்று முன்பாக இருக்கும் குறளுக்குப் போக வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.‘ (குறள் #61)

வாழ்வில் அறியவேண்டியவற்றை அறியக்கூடிய நன்மக்களைப் பெறுவதை விட வேறு பெரிய பேறு ஏதுமில்லை (பெற்றோருக்கு).

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.‘ (குறள் #62)

(சமூகத்தில் / உலகில்)பழி ஏதும் ஏற்படாத வகையில் வாழக்கூடிய நற்பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெற்ற தாய்/தந்தையரை, ஏழு பிறப்பிலும் தீமை அண்டாது.

ஆக, நல்லறிவும், நற்பண்பும் கொண்ட பிள்ளைகளைப் பெறுவதே பெற்றோருக்குப் பெரிய பயன்தான் என்கிறார் வள்ளுவர். அத்தகைய பிள்ளைப்பேறானது, பரஸ்பர நிதியில் (mutual fund) சேமித்த செல்வம்போல் தழைத்து வளர்ந்து, (இறுதிக்காலம் போன்ற) தக்க சமயத்தில் பெற்றோருக்குக் கைகொடுக்கும் என்பது திண்ணம். 

சரி, இவ்வாறு பிள்ளைகளைச் சிறப்பாக, சான்றோராக, அவையத்தில் முந்தியிருப்பச் செய்வதால் பெற்றோருக்கு வேறு பலன் ஏதேனும் கிட்டுமா?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.‘ (குறள் #68)

நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக, திறன் மிக்கவர்களாக ஆவதால், நமக்கு  மட்டும் நன்மை / பெருமை இல்லையாம். அத்தகையோரின் உயர்வு, உலகிற்கும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் இனிமை (பயன்) தருவதாம். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும் பெற்றோருக்கு!

பை தி வே, அம்மாதிரி பிள்ளைகளின் வெற்றியை, உயர்வை முதன்மைப்படுத்திச் செயல்படும் தந்தைகளுக்கு (அட, தாய்மாருக்கும்தாங்க) அப்பிள்ளைகள் செய்யக்கூடிய கைம்மாறு என்னவாக இருக்கும் என்பதைக் கூறிவிட்டுத்தான், வள்ளுவர் ‘மக்கட்பேறு’ (பிள்ளை / குழந்தைப்பேறு) என்ற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ (குறள் #70)

‘இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் (குழந்தையை) பெற, இவரது தந்தை (+ தாய் – goes without saying) என்ன தவம் செய்தாரோ,’ என்று காண்போரை வியக்க வைப்பதுதான், நல்லறிவும், நற்பண்பும் உடையவனா/ளாகத் தன்னை வளர்த்த பெற்றோருக்கு அக்குழந்தை செய்யும் உதவியாம் (கடமை / கைம்மாறு).

அடியேனும், எனது வாழ்க்கைத் துணைவியும், எங்களது ஒரே பிள்ளையை, வள்ளுவர் வாய்மொழிப்படியே வளர்த்து ஆளாக்கியுள்ளோம் என்று உறுதியாக நம்புகிறோம். திருவருளும், குருவருளும் இதற்கு வழிகாட்டின என்பது எமது நம்பிக்கை. அவரது குறிக்கோளை எட்டி, வாழ்வில் பல வெற்றிகளை அவர் அடைவார் என்பது சர்வ நிச்சயம். அதற்கான கைம்மாறு எதுவும் அவர் செய்யத் தேவையில்லை என்கிற தெளிவு எங்களுக்கு இருந்தாலும் (இதை அவரிடமே நேரடியாகக் கூறியும் விட்டேன்!), செய்யத் தயங்கவோ, தவறவோ மாட்டார் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.https://qr.ae/pGZipe

இவ்வகையில் ஏற்கனவே செயல்பட்ட/படும் பெற்றோருக்கு நமது வந்தனங்கள். இனி அவ்வாறு செயல்பட விழைவோருக்கு நம் வாழ்த்துக்கள்!

கு: 90களில் கைவிட்ட எழுத்துத் திறனை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலைப்பதிவு (blog) எழுதுவதன் மூலம் மறுபடி ஆக்சிஜன் கொடுத்து உயிர்ப்பித்தேன். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னர், கடந்த சில  ஆண்டுகளாகத்தான், என்னுடைய எழுத்தை விரும்பி வரவேற்றுப் பாராட்டும் நல்வாசகர்களைக் கோராவில் கண்டுகொண்டேன். களிப்புற்றேன். தற்போது ‘வெற்றி’ பெறும் நோக்கமெல்லாம் ஏதுமில்லை என்பதால், தெரிந்த + அறிந்ததை எழுதுதிப் பகிர்வதே ஆனந்தம் அளிக்கின்றது. அதுவே போதுமானது.

பி.கு: ஆன்மீகத் தளத்தில் உலவத் துவங்கி, குருவருட் கருணை மழையில் நனைந்த பின்னர், வெற்றி/தோல்வி ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பது தெளிவாகிவிட, போட்டி, பொறாமை, கர்வம், பெருமிதம் போன்றவற்றுக்கு விடைகொடுத்து அனுப்பியாகிவிட்டது. ஆகவே, இவ்விடைக்குப் பெருத்த ஆதரவு கிட்டினாலும், வெறும் நாலைந்து பேர் மட்டுமே ஆதரவு வாக்கைச் சொடுக்கினாலும், நாம் இரண்டையும் சமமாகவே  பாவிப்போம்; இயல்பாகவே ஏற்றுக்கொள்வோம்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பகவான் நரசிம்மரைப் பற்றி பலரும் அறியாத விஷயம்!

பகவான் நரசிம்மரைப் பற்றி பலரும் அறியாத விஷயம்!

Quoraவிடை ~ https://qr.ae/pGiO4S

ஸ்ரீமன் நாராயணனின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீ நரசிம்மரைப் பற்றி பக்தகோடிகள் நிச்சயம் அறிவர். அவரது பரம பக்தனான பிரகலாதனின் வாழ்க்கை புராண/இதிகாசக் கதைகளுள் மிகப் பிரபலமான ஒன்றாகும். எனினும், பிரகாலதனைக் காத்து, அவனது தகப்பனாக ஹிரண்யகசிபுவை அழிக்கும் அந்த அவதார நிகழ்வு சார்ந்த ஒரு சுவையான விஷயம் பலர் அறியாதது எனலாம்.

தன்னை எவ்வகையிலும் மதியாது, சதாசர்வகாலமும் ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தையே ஜபித்துக்கொண்டிருந்த தன் பிள்ளையைப் பார்த்து, தாளாத சினத்தின் வெம்மை வெளிப்படும்வகையில், ஹிரண்யகசிபு உறுமினான்..

எங்கேயடா இருக்கிறான் உன்னுடைய நாராயணன்? இதோ இந்தத் தூணில் இருக்கிறானா சொல்?

ஆம் தந்தையே, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் தூணிலும் உள்ளான்.. துரும்பிலும் உள்ளான்..” என்று அப்சொல்யூட் கான்ஃபிடன்ஸுடன் பிரகலாதன் பதிலளிக்க, ஹிரண்யகசிபுவின் சினம் இன்னமும் அதிகரித்தது. தனது அரண்மனையில் இருந்த எண்ணற்ற வலுவான தூண்களில் ஒன்றைப் பிளந்தே பார்த்துவிடுவது என்ற முடிவுடன் தனது மிரளவைக்கும் கதாயுதத்தை உயர்த்தினான்.

படைப்பிலுள்ள அனைத்தையும் காக்கும் பரந்தாமனான ஸ்ரீமன் நாராயணன், பிரம்மா ஹிரண்யகசிபுவிற்கு சிந்திக்காமல் அளித்த வினோத வரத்தின் தன்மைக்கேற்றவாறு, நரசிம்ம அவதாரமாகத் தோன்றவிருக்கும் கணம் நெருங்கிவிட்டது. இப்போது கதையில் ஒரு சின்ன ட்விஸ்ட்.

எம்பெருமானாகிய பரந்தாமன் ஒரு கணம் யோசித்தான்.
ஹ்ம்ம்ம்.. பாலகனாகிய பிரகலாதன் கான்ஃபிடன்ட்டாக நான் தூணுக்குள் இருப்பேன் என்று சொல்லிவிட்டான். எந்தத் தூணை அப்பன் அடித்துப் பிளப்பான் என்றெல்லாம் அந்தக் குழந்தை யோசித்திருக்க வாய்ப்பில்லை.. இந்தப் ஹிரண்யனோ பயங்கரமான கோபத்தில் இருக்கிறான்.. நேர் எதிரே இருக்கும் தூணை விட்டுவிட்டு, வேறு ஏதாவது தூணைப் பிளந்தால் என்ன பண்ணுவது? பக்த சிரோன்மணியான பிரகலாதனின் வாக்கைக் காப்பாற்றியாக வேண்டுமே.. சம்ஹாரம் வேறு நிகழ்ந்ததாக வேண்டுமே.!

இந்த சிந்தனையுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அரண்மனையைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்தார் பெருமாள். நூற்றுக்கணக்கான தூண்கள் அங்கிருப்பதைக் கண்டார். அப்பன், பிள்ளை இருவரின் லைஃப் ச்சேஞ்சிங் மொமெண்ட்டுக்கான டெசிஷனை, ஐ.ட்டீ.இண்டஸ்ட்ரி மேனேஜர்களைப் போல இழுத்தடிக்காமல், சட்டென்று எடுத்தார்.

காண்போர் அஞ்சும் நரசிம்மர் ரூபத்தில், அங்கிருந்த அத்தனை தூண்களின் உள்ளும் தயாராகக் காத்திருந்தார். ஹிரண்யன் எந்தத் தூணைப் பிளந்தாலும், அந்தக் கணத்திலேயே டிலே எதுவுமின்றித் தோன்றிவிடலாம் அல்லவா!

ஹிரண்யகசிபு ஏதோ ஒரு ரேண்டம் தூணைத் தனது கதாயுதத்தால் அடித்துப் பிளந்தான். அண்டம் நடுங்கும் ஹூங்காரம் செய்தபடி அந்தத் தூணிலிருந்து ஸ்ரீ நரசிம்ம சுவாமி வெளிப்பட்டார். அதன்பின் நடைபெற்ற வதம் இத்யாதி பற்றி பக்த பிரகலாதனின் கதை கேட்டோர் அனைவரும் அறிவர்.

ஆனால் ஸ்ரீமன் நாராயணன், நரசிம்ம ரூபத்தில் உள்ளே காத்திருந்து வெளிப்பட்டதால், அவருக்கும் தூணுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டது. அதுதான் இந்தப் புராணக் கதையின் ஆண்ட்டி கிளைமாக்ஸ் போன்ற அட்டகாச ட்விஸ்ட்.

ஹிரண்யகசிபுவின் அரண்மனையில் இருந்த அத்தனை தூண்களும், ஒரு சில கணங்களுக்காவது ஸ்ரீ நரசிம்ம சுவாமியைத் தங்களுக்குள் தாங்கியிருந்த காரணத்தால், ஒரு குழந்தையைத் தனது கர்ப்பத்தில் தாங்கிய நிலையை எய்தின. தூண் பிளந்து நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த கணமானது, அத்தூண்களுக்குப் பிரசவம் நிகழ்ந்த கணம் போன்றதே. இதனால், கோசலை, தேவகி போன்று சாக்ஷாத் பரந்தமானையே பெற்று வளர்த்த உன்னதமான தாயார்களைப் போன்று, அத்தூண்களும் ஸ்ரீமன் நாராயணன் தாயார் என்ற ஸ்தானத்தை அடைந்தன.

இந்த சுவையான தகவலைப் பகிர்ந்தவர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார் அவர்கள். வந்தனத்திற்குரிய வைணவப் பெரியவர். மட்டபல்லி நரசிம்மரின் பரம பக்தர். ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் நேரடி தரிசனம் பெற்றவர் என்பார்கள் இவ்வடியாரை. இவரது “குறையொன்றுமில்லை” நூற்தொகுப்பில் இம்மாதிரியான சுவையான தகவல்கள் பல உள்ளன. நரசிம்ம அவதாரத்தைப் பற்றியே அதர்வண வேதத்திலிருந்து ஒரு அருமையான விஞ்ஞான விளக்கமும் இதில் உள்ளது. ஹைலி ரெக்கமெண்டட்.

எனவே “நரசிம்மரின் அம்மா யார் தெரியுமோ?” என்று உங்களிடம் யாரேனும் ட்ரிக் குவெஸ்ட்டின் கேட்டால், ஞே என்று இனிமேல் விழிக்கத் தேவையில்லை. பிரகலாதன் போல கான்ஃபிடென்ட்டாக “தூண்தான் நரசிம்மரோட தாயார், இது தெரியாத உமக்கு!” என்று ஒரு அன்பிளேயபிள் யார்க்கரை பதிலுக்கு எடுத்து விடுங்கள்!

பி.கு.: “குறையொன்றுமில்லை” நூற்தொகுப்பைப் பற்றிய அடியேனது வலைப்பதிவை ஆர்வலர்கள் இந்த இணைப்பை ஒத்தி/அழுத்தி ரசிக்கலாம்.

~ஸ்வாமி | @PrakashSwamy

தவம், யோகம் ஆகிய இரண்டில் சிறந்தது எது?

தவம், யோகம் ஆகிய இரண்டில் சிறந்தது எது?

தவம் செய்து யோகத்தை அடையலாம்.

யோகத்தைத் தவமாகச் செய்யலாம்.

இரண்டிற்கும் சக்தி தேவை!

என்னண்ணே, இந்த ஸ்வாமி இப்படிக் குழப்பறாப்ல!‘ என்று தாடையையோ, தலையையோ சொறிவோருக்கு விளக்கி விடுவோம்…

தவம் என்பது முனைப்பான செயல். குறிப்பிட்ட குறிக்கோளை [அ] பயனை அடையும் பொருட்டு, ஒருமித்த கவனத்துடன் செய்யப்படும், தீவிரமான செயல்.

முற்காலத்தில் இறைவனின் அருள் வேண்டி, வரம் பெறும் நோக்கத்தில், தேவரும், அசுரரும், முனிவர்களும் செய்த தவங்கள் கடுமையாக இருந்தது இதனால்தான். அவை யாவுமே குறிப்பிட்ட பயனை வேண்டிச் செய்யப்பட்ட, சாதாரணர் கடைப்பிடிக்கவியலாத – ஒற்றைக் காலில் நின்று, நெருப்பு வளையத்தின் மையத்தில் இருந்து, நீருள் அமிழ்ந்து, உணவை அறவே ஒதுக்கி, சுற்றிப் புற்றே வளர்ந்து மறைத்தாலும் அசையாமலிருந்து… போன்ற – கடுமையான முயற்சிகள்.

என்ன தவம் செய்தனை.. யசோதா..
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க..
என்ன தவம் செய்தனை..’

என்ற அற்புதமான பாடல், தவத்தின் சாரத்தை அருமையாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

கிருஷ்ண பரமாத்மாவின் வளர்ப்புத் தாயாகிய யசோதை, பரப்பிரம்மமாகிய ஸ்ரீமன் நாராயணன் தன்னை ‘அம்மா’ என்று அழைக்கும் வரத்தை, அதாவது இறைவனே தனக்குக் குழந்தையாகக் கிட்டும் வரத்தை வேண்டி, என்ன மாதிரியான மகத்தான தவத்தைச் செய்திருக்க வேண்டும் என்று ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் வியக்கிறார். அவர் ‘என்ன யோகம் செய்தனை.. யசோதா..‘ என்று பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தை ஈசனின் வாமபாகமாகிய அகிலத்தின் அம்மை சக்தியும் கூட, பார்வதி, காமாக்ஷி, கன்யாகுமரி, கோமதி என்று பல அவதாரங்களில், இறைவனின் கரம்பிடிக்கும் குறிக்கோளுடன், கடுமையான தவங்களைச் செய்ததைப் புராணங்கள் விவரிக்கின்றன.

இதேபோல் மன்னர்களும், தேவர்களும், அசுரர்களும்.. ஏன் இறைவர்களும் கூட, குறிப்பிட்ட குறிக்கோளை அடையும் நோக்கோடு, நீண்ட காலமாகக் கடுந்தவம் செய்து, வேண்டிய வரம் பெற்ற சம்பவங்கள் இதிகாச, புராணங்களில் ஏராளமாக உள்ளன என்பதிலிருந்து, தவம் என்ற வழிமுறையானது, குறிக்கோளை நோக்கிச் செய்யப்படும் தீவிரமான செயல் என்று அறிகிறோம்.

முனிவர்கள் பலர் செய்த கடுந்தவத்திற்குத் தடங்கல் ஏற்படுத்தும் வகையில், இந்திரன் அப்சரஸ்களை அனுப்பி முனிவர்களது கவனத்தைச் சிதற வைக்க முயன்ற காதைகள் மூலம், ஒருமித்த கவனம், அல்லது எக்காரணம் கொண்டும் கவனம் சிதறாதிருத்தல் என்பது தவத்தை நிறைவு செய்ய அத்தியாவசியம் என்று அறியலாம்.

தவம் செய்வதென்பது எளிதல்ல; எல்லோர்க்கும் அவ்வாய்ப்புக் கிட்டாது என்கிறார் வள்ளுவர்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
‘ ~குறள் #262

‘தவசீலர்கள் தமக்கு வரும் துன்பத்தைப் பொறுப்பர்; பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்க மாட்டார்கள்,’ என்று குறள் #261ல் குறிப்பிடுபவர், அடுத்த குறளில் ‘அம்மாதிரி குணங்கள் உடையவர்கள்தான் தவநெறிக்கு ஏற்ற வாய்ப்பு உடையோர்; அவர்களுக்கே தவம் கைவரப்பெறும்; இன்ன பிற ஆசாமிகள் எல்லாம் தவம் செய்வது வேஸ்ட்,’ என்கிறார்.

அம்மாதிரியான உயர்ந்த செயலாகிய தவத்தைச் செய்து, ஒருவர் யோகத்தை அடையலாம்!

யோகம் என்பது உயிரானது அடையக்கூடிய உன்னதமான ஒரு நிலை.
நிர்வாணம், ஜென், கைவல்யம், சமாதி ஆகியவையும் யோகமும் வெவ்வேறல்ல என்றாலும், தற்காலத்தில் யோகம் என்ற சொல்லின் பொருள், அது ஒரு செயல்பாடு [அ] செய்முறை என்ற புரிதலுடன் நின்றுவிட்டது வருந்தத்தக்கது.

யோகத்தின் வேர்ச்சொல் யுஜ் என்பது. இதன் பல பொருட்களில் குறிப்பிடத்தக்கவை ஒன்றுதல் [அ] ஒருமை நிலையை அடைதல், மற்றும் இணைத்தல் என்பவை.

ஜீவாத்மா ஆகிய ஒரு உயிர், ‘நான் இன்னார்’ என்ற தனிப்பட்ட அடையாளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது – ஒவ்வொரு பிறவியிலும். இதன் காரணமாகிய அறியாமை இருள் விலகி, மெய்ஞானமாகிய ஒளியை அடையுங்கால், பிரபஞ்ச அளவிலான படைப்பில் ஒற்றை உயிராகிய ஜீவாத்மாவானது, பிரம்மாண்டமான படைப்பின் மூலமாகிய பரமாத்மாவுடன் இணைந்து, ஒன்றிவிடுகின்றது. இந்நிலையே வீடுபேறு எனும் முக்தி ஆகும். இந்த ஒன்றுதல் / இணைத்தலே யோகம்.

உயிர் உடலைவிட்டுப் பிரியும் முன்னரே யோக நிலையை, அதாவது ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த / மெய்யறிந்த நிலையை அடைந்து அதில் நிலைத்திருப்போரை யோகி என்றும் ஜீவன்முக்தர் என்று அழைத்துப் போற்றுகிறோம். இத்தகையோரில் சிலரே, மெய்யறிந்து முக்தி நிலை அடைய விழையும் சக மனிதர்களுக்கு வழிகாட்டும் குருவாகின்றனர். ஏனையோர் அப்பேரானந்த நிலையில் நிலைத்திருப்பதே போதும் என்று அடங்கி விடுவதுண்டு; அல்லது சஹஜ சமாதியில் நிலைத்திருப்பதைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், பிரபஞ்ச அளவிலான செயல்பாடுகளில் அமைதியாக ஈடுபட்டிருப்பதும் உண்டு.

தற்காலத்தில் பெரும்பாலும் யோகம் என்ற சொல் குறிப்பது யோகாப்பியாசம் என்கிற, ஆசனம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை [அ] செயல்முறைகளை.
ஆனால் அவற்றை யோக அப்பியாசம், அதாவது யோக நிலையை அடைவதற்கான பயிற்சிகள் / படிகள் / நிலைகள் என்றே கொள்ள வேண்டும். இதனால்தான், ஆசனமும், பிராணாயாமமும், அட்டாங்க யோகத்தின் இரு அங்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையே யோகம் என்று குறிப்பிடப்படவில்லை.

யோக நிலையை அடையும் வழிகள் பல உள்ளன. இவற்றைத் தவம் போலவே செய்து, மெய்ஞானம் மற்றும் முக்தியை அடையலாம். இவற்றில் நன்கு அறியப்பட்டவை நான்கு.

  1. உடல் சார்ந்த செயல்களைத் தவமாக மேற்கொள்ளும் கர்ம யோகம் [அ] மார்க்கம்
  2. மனம் / சிந்தை சார்ந்த மெய்யறிதலைத் தவமாக மேற்கொள்ளும் ஞான யோகம் [அ] மார்க்கம்
  3. உணர்வு சார்ந்த முழுமையான சரணாகதியைத் தவமாக மேற்கொள்ளும் பக்தி யோகம் [அ] மார்க்கம்
  4. உயிர்சக்தி சார்ந்த செயல்முறைகளைத் தவமாக மேற்கொள்ளும் க்ரியா யோகம் [அ] மார்க்கம்

இதில் எவ்வழியைப் பயன்படுத்தி மெய்ஞானம் அடைந்திருந்தாலும், குருமார்கள் ஆகிய மெய்ஞானிகள், தங்களை நாடிவரும் ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் சாதகர்களுக்கு, மேற்கண்ட மார்க்கங்களின் கலவையாக ஒரு வழிமுறையையே பெரும்பாலும் வழங்குவர். ஏனெனில், சாமானிய மனிதர்கள் உடல், மனம், உணர்வு, உயிர்சக்தி ஆகியவற்றை ஒருங்கே பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவிப்போர். அவற்றைத் தனித்தனியாகப் பயன்படுத்தும் அளவு திறமோ, தெளிவோ உடையோர் அல்ல.

இவற்றுள் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி, அக்காலத் தவச்செல்வர்கள் போல, முக்தி எனும் குறிக்கோளை அடையத் தவம் மேற்கொள்ள, இன்றைய சமூக வாழ்க்கை முறையில் வாய்ப்பில்லை என்பது வெள்ளிடை மலை. எனவேதான், இவற்றின் குறிப்பிட்ட கலவையை மெய்யறிந்து உய்வதற்கான வழிமுறையாக குருமார்கள் வழங்குகின்றனர்.

தனிப்பட்ட மனிதரது கர்மவினைத் தொகுப்பு, வாழும் நிலை மற்றும் சூழல், குணாதிசயங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, இக்கலவை முறையில் நுணுக்கமான மாற்றங்கள் இருக்கும். இந்த அளவிற்கு ஆழ்ந்த கவனிப்புடன், அளப்பரிய கருணையுடன், ஒவ்வொரு சாதகருக்கும் வழிகாட்டுவதால்தான், குருவிற்குத் தொன்மையான இக்கலாச்சாரத்தில் எக்காலத்திலும் உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஞானோதயம் மற்றும் முக்தியைக் குறிக்கோளாகக் கொண்ட ஆன்மீக சாதகர்கள், மெய்ஞானம் அடைந்த ஒரு குருவின் வழிகாட்டுதலுடன், அவர்களால் அளிக்கப்படும் வழிமுறைகளையே தவமாக மேற்கொண்டு யோக நிலையை அடையலாம் என்பது திண்ணம்.

அட அதெல்லாம் நம்ம லெவலுக்கு கொஞ்சம் ஓவராத்தான் இருக்கும் போல.. அந்த சாதனையெல்லாம் வேணுங்கறவய்ங்க செஞ்சுக்கட்டும். ஏதோ கிடைச்ச வாழ்க்கையை எப்படி செறப்பா வாழறதுன்னு தெரிஞ்சா போதும்ணே நமக்கு,‘ என்போர், தங்களது இயல்பான வாழ்க்கையில் தினசரி ஈடுபடும் செயல்களையே, தவம்போல அணுகப் பழகினால், முழுமையான கவனத்துடன் செயலில் ஈடுபட்டு, விரும்பிய குறிக்கோளை எட்டுவதற்கு வாய்ப்புகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை!

தவமெல்லாம் எல்லோருக்கும் கைவராது என்று ஈகோ பலூனில் காற்றிறக்கிய வள்ளுவரே, இங்கு நமக்கு கான்ஃபிடன்ஸ் பூஸ்ட் அளிக்கிறார்.

‘வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
‘ ~குறள் #265

அஃதாவது, தவத்தினால் வேண்டிய பயனை வேண்டியவாறே அடைய முடியுமாகையால், செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தாரும் முன்வரலாம் / முயற்சிப்பர் என்கிறார், ‘தவம்’ என்ற 27வது அதிகாரத்தில்.

இருந்தாலும், ஆளாளுக்கு ‘நாளை எமகண்டம் முடிந்த பின்னர், சூடாக ஒரு கும்பகோணம் டிகிரி காஃபி அருந்திவிட்டு, ஃபேவரிட் நெடுந்தொடரின் அடுத்த எபிஸோட் ஆரம்பிக்கும் வரை, நான் தவம் செய்யப் போகிறேன்,‘ என்று தவத்தை ஒரு பொழுதுபோக்கு மாதிரி ஆக்கிவிடக் கூடாது என்பதால், அதே அதிகாரத்தில் அதற்கு ச்செக் வைத்தும் விடுகிறார் அந்த மெய்ஞானி.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
‘ ~குறள் #270

தவத்தை மேற்கொள்வோர் யமனைக் கூட வென்றுவிடலாம் (அதாவது, பிறப்பு-இறப்பு எனும் சுழலிலிருந்து விடுபட்டு விடலாம்) என்று குறள் #269ல் கூறிவிட்டு, அடுத்த குறளிலேயே,

அம்மாதிரி உயர்ந்த தவம் எனும் சாதனையைச் செய்பவர்களின் எண்ணிக்கை உலகில் ரொம்ப கம்மி; அத்தகைய திறம் இல்லாதோர் நிறைய பேர் இருக்கின்றனர்,‘ என்று ஒரு முக்கியமான டேட்டா பாய்ண்ட் கொடுத்து, தவம் பற்றிய மேட்டரை முடித்து விட்டார்.

தவம் பற்றித் தனி அதிகாரமே அளித்த திருவள்ளுவர், யோகம் பற்றி நேரடியாகத் திருக்குறளில் எதுவும் கூறவில்லை. ஏனெனில், அறம், பொருள், இன்பம், வீடு / முக்தி எனும் நான்கில், முதல் மூன்றை மட்டுமே திருக்குறளில் விரிவாக அலசியுள்ளார் அவர். வீடு / முக்தி என்பதற்கு ‘ஞானவெட்டியான்’ என்று ஒரு தனி நூலே அவர் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது. அடியேன் இன்னமும் அதனைப் படித்து முடிக்கவில்லை (வாங்கிவிட்டேன் – ஏதோ ஒரு வருட சென்னை புத்தகத் திருவிழாவில்).

வள்ளுவரது சமகாலப் புலவராகக் கருதப்படும் தமிழ்ப் பாட்டி ஒளவையார், முழுக்க முழுக்க யோகாப்பியாசம், மெய்ஞானம் போன்றவற்றை விளக்கி ஒரு குறள் தொகுப்பு எழுதியுள்ளார். இதனைப் பொதுவாக ‘ஒளவைக் குறள்‘ என்றே அழைக்கின்றனர்.

யோக நிலை பற்றியும், அப்பேரானந்தப் பெருநிலையை அடைவதற்கான வழிமுறைகளையும் அறிய விருப்பமுள்ளோர் அந்நூலை முயற்சிக்கலாம். அதிலிருந்து தவத்தையும், யோகத்தையும் இணைக்கும் ஒரிரு குறட்பாக்களை மட்டும் எடுத்துக்காட்டி இவ்விடையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

எண்ணிலி ஊழிதவம் செய்திங்கு ஈசனை
உண்ணிலைமை பெற்றது உணர்வு.
‘ ~ ஒளவைக்குறள் #81

எண்ணிலடங்காத காலங்கள் தவம் செய்து, இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்ற உள்ளத்தின் உறுதியால், இப்பிறவியில் பெற்றதே / அடைந்ததே மெய்யுணர்வு ஆகும்.

உள்ளுணர்தல் / மெய்யுணர்வு என்ற பதத்தை ஒளவையார் பேரானந்தப் பெருநிலையான யோக / சமாதி நிலையைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அந்நிலையை அடைய, எத்தனையோ பிறவிகளாகத் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார்.

யோக நிலையான மெய்ஞான நிலையை அடைவதற்கு, தவத்தின் இன்றியமையாமையை விளக்க,

எண்ணற்கு அரிய அருந்தவத்தால் அன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.
‘ ~ஒளவைக்குறள் #83

என்கிறார். அஃதாவது, சிந்திப்பதற்கு அரிதான அருந்தவத்தால் அன்றி, இறைவனைப் பற்றிய மெய்யறிவை எவ்வாறு அறிய முடியும்!

நிறைவாக,

ஆதியோடு ஒன்றும் அறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.
‘ ~ஒளவைக்குறள் #89

முழுமுதற்பொருளான இறைவனோடு இரண்டறக் கலக்கும் அறிவை (மெய்ஞானத்தை) பெறுவதுதான், நாம் முறையாகச் செய்த தவத்தின் பயனாகும்,’ என்று தெளிவுபடுத்தி, இருமையற்ற ஒருமை நிலையாகிய யோகத்தை அடைவதற்கு, தவம் எனும் செயல்பாடு, முறைப்படி செய்யப்படுங்கால், எவ்வாறு பயன்படும் என்றுரைத்து முடித்து விடுகிறார்.

~ஸ்வாமி | @PrakashSwamy

தாய்மொழியை நன்கு அறியாத தற்காலத் தமிழர்களால் தமிழை வளர்க்கமுடியுமா!

தாய்மொழியை நன்கு அறியாத தற்காலத் தமிழர்களால் தமிழை வளர்க்கமுடியுமா!

கோராவில் கேட்கப்பட்ட இவ்வினாவில் மக்களை – உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் என்றே வைத்துக் கொள்வோம் – பற்றிய அழுத்தமான முன்முடிவு / தீர்மானம் வெளிப்படுகிறது. அதோடு, நம்பிக்கை பற்றிய சந்தேகமும் வெளிப்படுகின்றது. இரண்டையும் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.

அனேகமாக அனைத்து மொழிகளிலும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் பற்றி எண்ணற்ற கவிதைகளும், ஓவியங்களும் இருக்கும். தமிழிலும்தான். ஆனால் உண்மையில் சூரியன் என்ற மாபெரும் அக்னி + வாயுவின் கலவையான உருளை ஒருபோதும் உதிப்பதோ, மறைவதோ இல்லை. அதுபாட்டுக்கு சூரிய மண்டலத்தின் மையத்தில் எரிந்து, ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டிருக்கின்றது.

இரவும், பகலும் நமது புவியின் சுழற்சியால் நாம் உணர்பவையே அன்றி சூரியன் ஏற்படுத்துபவை அல்ல. உதயமும், அஸ்தமனமும் கூட கவிதையாகவும், ஓவியமாகவும் (தற்காலத்தில் இன்ஸ்ட்டா ஒளிப்படப் பதிவுகளாகவும்) நம்மால் உருவாக்கப்பட்டவையே.

நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட மகத்தான நிகழ்வுகளான அவற்றைக் காணும்போது, பேசும் மொழி [அ] உரைநடை என்ற கருவி அதை விவரிக்கவியலாமல் ஜகா வாங்கிவிட, விளக்கம் அதிகம் தேவைப்படாத வேறு கருவிகளைத் தேடிக் கண்டுகொண்டு, பயன்படுத்துகிறோம். அவையே கவி, ஓவியம், புகைப்படம் போன்றவை.

உதயம், அஸ்தமனம் போன்றே இறை அனுபவமும் விவரிக்கவியலாத, பிரத்தியேகமான / தனிப்பட்ட அனுபவம்தான் என்பதால், அதன் வெளிப்பாடும் பெரும்பாலும் கவி/ஓவியமாகவே இருப்பது இயல்பே. நிற்க.

உருவாக்கத்துக்கும் கண்டுபிடிப்புக்கும் வேறுபாடு தெரியாத, ஒருமை பன்மை வேறுபாடு அறியாத‘ என்ற சாடப் பெறுவோர் பலர் எனில், அவருள் உதயமும், அஸ்தமனமும் மெய்யல்ல என்று அறியாதோரும் அடக்கம் அல்லவா.
இறை அனுபவமே இல்லாமல், இறைவன்/வி உண்டு / இல்லை என்று சொல்லால் அடித்துக் கொள்வோரும் இதில் அடக்கம்தானே. 
தன்னுடைய பெயருக்குத் தமிழில் பொருள் தெரியாதோர் கூட இதில் சேர்த்திதானே. 
இப்படியே பட்டியலை நீட்டிக்கொண்டே போனால், அனேகமாக உயிரோடுள்ள மாந்தர்களின், சாரி.. தமிழர்களில், 99.67 சதவிகிதம் பேர் ‘அறியாத‘வர்கள் ஆகிவிடுவார்கள்.  

இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்பதுதான் ஒரே ஆச்சரியம்.
கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு‘ என்பது முற்றிலும் உண்மை.
அவ்வளவு ஏன், கோராவில் விடை அளிப்பவருள் கூட, ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்/ரி‘ என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை அல்லவா. எனவே, ‘தமிழை இந்த மாதிரி ஆசாமிகளா வளர்ப்பார்கள்!‘ என்று வினவுவதில், ஐயப்படுவதில் பயன் ஏதுமில்லை.

மாறாக, மொழி உயிர்ப்புடன் இருக்க நம்மால் என்ன செய்ய இயலும் என்று சிந்திப்பதும், அதைச் செயல்படுத்துவதும் பயனுள்ளதாகும். ஆனால் தற்காலத் தமிழரின் நிலை குறிப்பிடத்தக்க அளவில் மொழி வளர்ப்பு எதுவும் நிகழ நம்பிக்கை அளிக்கும் வகையில் சுரத்தாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

  • தினசரி பிழைப்பிற்குக் காலணா பிரயோசனப்படாத சினிமாக்காரர்கள்தான் உதாரண புருஷர்கள்/ஷிகள் என்று வியந்து தொழுவோர் தமிழர்…
  • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து, வாளோடு முன்தோன்றிய மூத்த குடி‘ என்று லாஜிக்கே இல்லாமல் வெற்று வசனம் பேசிக்கொண்டு திரிவோர் தமிழர்…
  • சொற்களை விட, அர்த்தமற்ற ஓசைகளை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஏதாவது மொக்கை திரை வசனத்தைக் கீறல் விழுந்த ரெக்கார்டைப் போலத் திரும்பத் திரும்பப் பிதற்றும் ஆர்.ஜேக்கள் மற்றும் காம்ப்பியர்களின் பேச்சுக்கு மயங்குவோர் தமிழர் (வாக்குக்காக வாய்க்கு வந்தபடி பே/ஏசும் அரசியல்வியாதிகளின் ஆவேசக் கூவல்களையும் இங்கு தாராளமாகச் இணைத்துக் கொள்ளலாம்)…
  • நான் ஒரிஜினல் அக்மார்க் தமிழன்; ஆகையால் கீழே விழுந்தால் எனது இரும்புத் தலை உடைய வாய்ப்பில்லை‘ என்று உறுதியுடன் இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவோர் தமிழர்…
  • ‘தளர்வுகளற்ற ஊரடங்கு’ அமல்படுத்தப்படுமுன் அளிக்கப்பட்ட இருநாட்கள் விதிவிலக்கில் பலசரக்கும், காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்க ‘சமூக இடைவெளியை’ப் புறந்தள்ளிக் கடைகளில் குவிந்ததோடு, புத்தாடையும், நகையும் வாங்கி மீம் ஆனோர் தமிழர்…
  • வட சென்னை எல்லை தாண்டியதும், வேறெங்கும் டீக்கடையில் கூட செல்லுபடியாகாத நம்முடைய ‘செம்மொழியை மட்டும்தான் காத்து ரட்சிப்போம்; பரவலாக நாடெங்கும் பயன்படும் பிற மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் மாட்டோம், கற்றுக் கொடுக்க விடவும் மாட்டோம்‘ என்ற நகைப்பிற்குரிய நிலைப்பாட்டைத் தலைமுறைகளாகக் கட்டிக் காப்போர் தமிழர்…
  • 27 பிற மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் மருத்துவர் ஆக விழைவோர் எழுத வேண்டிய பொது நுழைவுத் தேர்வை நாங்கள் மட்டும் எழுதித் தேர்ச்சி பெற மாட்டோம்.. எங்கள் மருத்துவர்கள் தமிழகத்திலேயே மருத்துவம் பயின்று, இங்கு மட்டுமே பணிபுரிந்து மடிவர்..‘ என்று கூத்தடிப்போர் தமிழர்… (இக்கூத்தில் அடுத்தது என்ன – ஐ.ஏ.எஸ்/ஐ.ப்பி.எஸ்/ஐ.எஃப்.எஸ் போன்ற பொதுத் தேர்வுகளா?)

இப்படியாக நம்முடைய தனித்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை‘ என்பதுபோல், இம்மாதிரியான தமிழர்களை வைத்துக் கொண்டுதான் தமிழை வளர்த்தாக வேண்டும். வேறு ஆப்ஷன் எதுவும் தற்போது நம் கைவசம் இல்லை. ஆனால் இதன் காரணமாக தொன்மையான இம்மொழிக்குக் குறை எதுவும் வந்துவிடாது.

ஏனெனில் பழமையான நம் மொழியின் அஸ்திவாரமாக உள்ள இலக்கிய, இலக்கணங்கள் மிக வலுவானவை. காலம் கடந்து நிலைத்திருப்பவை. நமக்குப் பின்னரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கக் கூடியவை.

மும்முறை சங்கம் வைத்துச் சீரும், சிறப்புமாக நம் தாய்மொழியை ஏற்கனவே நன்கு வளர்த்துவிட்டார்கள் மன்னர்களும், புலவர்களும், அறிஞர்களும். எனவே, ‘ஏண்ணே, இவிங்களா நம்ம மொளிய வளக்கப் போறாய்ங்க?‘ என்று தற்காலத் தமிழர்களைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையில்லை.

  • ‘மம்மி.. மாம்..’களுக்கு இடையே, ‘அம்மா’ என்றழைக்கும் குழந்தைகள் உள்ளவரை தமிழ் பிழைத்திருக்கும்
  • ‘இரைச்சல் + கூச்சல் + சொற்குதறல்’தான் பாடல்கள் என்றாகிவிட்ட திரை இசையை ஓரளவேனும் ஒதுக்கிவிட்டு, திருமுறையும், திவ்யபிரபந்தமும், திருப்புகழும் கேட்கும் / பாடும் மக்கள் உள்ளவரை தமிழ் செழித்திருக்கும்
  • உடல் மண்ணுக்கு, உயிர் xyzக்கு‘ என்ற பம்மாத்தை விடுத்து, ‘உடல் மண்ணுக்கு, எண்ணமும் செயலும் தமிழுக்கு‘ என்று முனைப்போடு சிந்தித்துச் செயல்படுவோர் உள்ளவரை தமிழ் நிலைத்திருக்கும்
  • ‘ஃபேஸ்புக்’கை முகநூலாக்கும் அபத்தத்தை விடுத்து (இம்மாதிரி மொழிப்போராளிகள் ஜெராக்ஸ், ட்விட்டர், கூகிள், அடோபி, ஃபோன்பே, பேட்டீஎம், ஓயோ, ஸோமாட்டோ, ஸ்விக்கி, ஓலா, பெப்ஸி, பீட்ஸா ஹட், டாட்டா எலக்ஸி, மஹீந்திரா & மஹீந்திரா, அமேஸான், யுண்டாய் , ஹோண்டா, டி.வி.எஸ் போன்றவற்றை ஏன் இன்னமும் ‘பெயர்க்க’ முயற்சிப்பதில்லை என்பது ஆய்வுக்குரியது), டிஜிட்டல் யுகத் தகவல் பரிமாற்றக் கருவிகளான அதுபோன்ற சமூக ஊடகங்களையும், செயலிகளையும் தமிழில் எழுதவும், பேசவும், தகவல் பகிரவும் செம்மையாகப் பயன்படுத்தும் அன்பர்கள் உள்ளவரை தமிழ் தனித்திருக்கும்.

அவ்வகையில் பார்த்தால், கோரா, கூ போன்ற தளங்கள் தமிழர்களால் உருவாக்கப்படாத போதிலும், தமிழுக்குத் தனி இடம் அளித்து கௌரவித்துள்ளது கூட, தமிழ் வளர்க்க அறிந்தோ, அறியாமலோ செய்யும் பேருதவிதான்.

ஆங்கிலத்தில் தட்டச்சுவதைத் தமிழ்ப்படுத்தித் தரும் கூகிள் இன்புட் டூல்ஸ் மற்றும் ஸ்விஃப்ட்க்கீ, ஜீபோர்ட் போன்ற அலைபேசி செயலிகளும் தமிழ் வளர்க்க உதவும் கருவிகளே.

மேலைநாட்டவரைப் போல சூட் அணிந்து கொண்டு, தமிழ்ப்பட வில்லனைப் போலத் தோற்றமளித்து, நம்மை ‘வாட் த ஃப#’ என்று ஃபேஸ்ப்பாம் பண்ண வைத்தாலும், தமிழில் செய்தி வாசிப்போர், கேட்போர் யாவரும் தமிழ் வளர்ப்போரே – அவர்களால் இயன்ற அளவில்!

படம்: தொன்மையான மொழியாகிய தமிழ் நமக்கு இன்றுவரை எவ்வளவோ செய்திருக்கின்றது… அதற்குக் கைம்மாறாக ‘தமிழன்’ என்று இறுமாந்து திரியும் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் சிந்தனை மற்றும் செயல்பட்டுக்குரியது!

இதில் மிக முக்கியமான ஒன்று, ‘அவனெ/ளெல்லாமா தமிழை வளர்க்கப் போகிறான்/ள்‘ என்று பிறரைச் சுட்டுவதை விட, மொழியைப் பேணுவதில் ‘நான் தமிழன்’ (பெண்டிருக்குத் ‘தமிழள்’லா அல்லது ‘தமிழி’யா என்று தெரியும் அளவிற்கு அடியேனுக்கு மொழி ஞானம் இல்லை) என்ற இறுமாப்புடன் உள்ள நம் ஒவ்வொருவரின் பங்கும் என்ன என்பதை உணர்வதும், செயல்படுத்துவதும்.

நீங்கள் கோராவில் வினா எழுப்புவதாலோ, நான் விடை அளிப்பதாலோ மட்டும் தமிழ் தானாகவே செழிப்படைந்து விடாது. அதைத் தாண்டி,

  • நமது குழந்தைகளுக்கு பளபள ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவிப்பதில் தவறேதுமில்லை; ஆனால், அவற்றுடன் பஞ்சதந்திரக் கதைகளும், இதிகாச/புராணங்களும் கூட வாங்கித் தந்து, வாசித்துக் காட்ட வேண்டியது நம்முடைய கடமைதான்
  • ‘ஜாக் அண்ட் ஜில்’ ரைம்ஸ் பாடும் போது கைதட்டி ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், ஆத்திசூடியும், கொன்றைவேந்தனும், குறளும், குயில் பாட்டும் கற்றுக் கொடுத்துப் பாட வைப்பதும், அவற்றின் அர்த்தத்தைப் புரிய வைப்பதும் நமது ஆர்வத்தால்தான் நிகழும்
  • சமூகத்தில் ஊரோடு ஒத்து வாழ்தலின் பொருட்டு ‘மம்மி, டாடி’ என்று கொஞ்சினாலும், இல்லத்தினுள்ளே ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்‘ என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நமது நடத்தை மூலம் காண்பித்து, ‘அம்மையப்பனாக’ நமது பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டுவதும் நமது பொறுப்புதான்
  • பில்லீ அய்லீஷ், பீ.ட்டீ.எஸ் பாடுவதுதான் இசை என்றிருக்கும் யுவர்களுக்கு, பாரம்பரிய இசையையும், இசைப் பதிகங்களையும் அறிமுகமாவது செய்வது நமது விடாமுயற்சியால்தான் நிகழும்

என் மொழி, என் மக்கள்‘ என்று இரண்டின் வளர்ச்சிக்கும் தேவையான இம்மாதிரியான ஆதாரச் செயல்களுக்குப் பொறுப்பேற்க நாம் ஒவ்வொருவரும் முன்வராத வரையில், ”ஏண்ணே, இந்த தண்டக் கருமந்திரங்களா நம்ம மொளிய வளக்கப் போறாய்ங்க?‘ என்று கோராவில் வினா எழுப்பி, தாய்மொழி ஆர்வலர்கள் சிலர் சின்ஸியராக விடையளிப்பதைப் படித்துப் பொழுது போக்க வேண்டியதுதான்!

இப்பதிவின் மூலமாகிய ‘உருவாக்கத்துக்கும் கண்டுபிடிப்புக்கும் வேறுபாடு தெரியாத, ஒருமை பன்மை வேறுபாடு அறியாத நம் மக்கள், ஊடகங்கள், தமிழை வளர்ப்பார்கள் என்று நம்புகிறீர்களா?‘ என்ற Quora வினவுக்கான விடை இங்கே. https://qr.ae/pGYPNb

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பசி வந்திடப் பத்தும் பறந்து போம்!

இன்று.. ஒன்று.. நன்று.. ~ பசி வந்திடப் பத்தும் பறந்து போம்!

தொன்மொழியான தமிழில் பழமொழிகளும், பொன்மொழிகளும் ஏராளம் என்பது நாமறிந்ததே. இவற்றில் பல தற்காலத்தில் ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது’ போல் அவுட் ஆஃப் கண்டெக்ஸ்ட் ஆகப் பல தளங்களில் மேற்கோள் காட்டப்பட்டு மரியாதை இழந்து விட்டன என்றால் மிகையில்லை. அதுபோகப் பொதுவாகவே நமக்கு மேலைநாட்டவரது மேற்கோள்களின் மீதுள்ள (அதன் மீது மட்டுமா!) மோகத்தாலும், நம்ம ஊர்ப் பொன்மொழிகளையும், அவை எப்படி இந்த டிஜிட்டல் யுகத்திலும் ரெலெவன்ட் ஆக இருக்கின்றன என்பதையும் மறந்தே விட்டோம்.

சட்டியில் இருந்தால்(தான்) அகப்பையில் வரும்” என்பது இதற்குச் சிறந்த உதாரணம். இதுபற்றி ஏற்கனவே அடியேன் பகிர்ந்துள்ளேன் (சா.கு: இதற்கும் சமையலுக்கும் / வறுமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). இம்மாதிரியான பிரபல பொன்மொழிகள், தனிப்பட்ட முறையில் மேற்கோளாகும் பொருட்டு யாரோ புலவர்கள் / அறிஞர்களால் கூறப்பட்டவை அல்ல என்பது ஆச்சரியமான விஷயம். இவற்றில் பல பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ள வரிகள்.

பொருள் வாழ்வில் மேம்போக்கான புரிதலுடன் உழன்று தவிக்கும் டிப்பிக்கல் ஹோமோ சேப்பியன்களைப் போல நாமும் மூலத்தை மறந்துவிட்டு, ஒற்றை வரிகளைக் கோட் (quote) பண்ணிப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறோம். அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் ரேண்டமாக எதையாவது எடுத்து மத்தியான நேரத்தில் அழைக்காமலே ஆஜராகிவிடும் நீளா தேவியின் ஃபேஸ்புக் ரக நட்பைத் தவிர்க்கும் பொருட்டுப் புரட்டும்போது, சில ‘ஆஹா’ கணங்கள் நிகழும். நேற்று அதுமாதிரி ஒரு கணத்தில்…

பசி வந்திடப் பத்தும் பறந்து போ(கு)ம்” என்பதும் மிகப் பிரபலமான ஒரு பழமொழி. இதைப் பார்க்கும்/கேட்கும் போதெல்லாம், ‘அந்தப் டாப்-10 விஷயங்கள் என்னவாக இருக்கும்?‘ என்ற வினா எழும். ஒருவழியாக நேற்று அதற்கு விடை கிட்டியது.

பசி வரும்போது பறந்து போகும் பத்து என்னென்ன என்று விடையளிப்பவர் ஒளவையார் (அஃகோர்ஸ், ஹூ எல்ஸ் கேன் இட் பீ – அதர் தேன் வள்ளுவர், பெர்ஹேப்ஸ்!). இவர் ஆத்திச்சூடி, விநாயகர் அகவல் போன்றவற்றை எழுதிய, முருகப்பெருமான் மூலம் ஞானம் பெற்று, விநாயகப் பெருமான் மூலம் திருக்கயிலாயம் சென்ற அதே ஒளவையாரா, இல்லை அதே பெயருடைய பிற்காலத்தவரா என்பதெல்லாம் அறிஞர்களின் ஆய்வுப் பிரச்சினை. நமக்கு முக்கியம் அவர் விளங்கியிருக்கும் அந்தப் பத்து விஷயங்கள் மட்டுமே.

படம்: நீதிநூல்கள் தொகுப்பு நூல் by ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நூல்: நல்வழி | புலவர்: ஒளவையார் | பாடல்: 26 | விளக்கம்: ந.மு. வேங்கடசாமி நாட்டார்

‘மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயற்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்!

பசி எனும் கொடுமையான நோய் ஒருவரை பீடித்தால்…

  1. மானம்
  2. குலம் (குடிப்பிறப்பு)
  3. கல்வி
  4. வண்மை (ஈகை)
  5. அறிவுடைமை
  6. தானம்
  7. தவம்
  8. உயர்ச்சி (உயர்வு)
  9. தாளாண்மை (தொழில் / பணி சார்ந்த முயற்சி)
  10. காமுறுதல் (ஆசை / பற்று வைத்தல்)

ஆகிய பத்து விஷயங்களும் பறந்து போய்விடும்!

இம்மாதிரி எல்லா நலன்களையும் கெடுப்பதாலேயே பசி என்பது கொடிய நோயாகும் என்கிறார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். இந்த அருமையான விளக்கம் இருப்பது அவர் தொகுத்த – விளக்கத்துடன் கூடிய – நூலான “நீதி நூல்கள்” என்ற தொன்நூல் தொகுப்பில்.

ஒளவையார் எழுதிய சில நூல்களுடன், வேறு சில புலவர்களின் நீதி நூல்களும் இத்தொகுப்பில் எளிமையான விளக்கங்களுடன் உள்ளன. அதிவீரராம பாண்டியன் என்ற எங்களூர் மன்னர் கூட ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சென்னைப் புத்தகச் சந்தையில் ஏதோ ஒரு வருடம் வாங்கிய புத்தகம் என்று நினைக்கிறேன்.

இவ்வருடம் பல Quoraவிடை மற்றும் ‘இன்று.. ஒன்று.. நன்று..‘ பதிவுகளுக்கு இந்நூல் நிச்சயம் பயன்படப்போகின்றது. மூன்று பேர்தான் படித்தாலும் எழுதுவதை நிறுத்துவதாக கொள்கை முடிவெல்லாம் எடுப்பதாக இல்லை. எனவே, அடியேன் பகிர்வதைப் படித்து ரசிப்பதோடு நின்றுவிடாமல், பிறருடன் பகிர்ந்தும் மகிழுங்கள்.

~ஸ்வாமி | @PrakashSwamy

முடிவில்லாத தொடக்கம் ஏதும் உண்டா!

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்,
உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது,
மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும
தோயம் என்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன்
விழுத்துணையே

...என்று ஆரம்பித்து / துவங்கி,

குழையத் தழுவிய கொன்றையந்
தார்கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்
தோளும் கருப்புவில்லும்

விழையப் பொருதிறல் வேரியம்
பாணமும் வெண்ணகையும்

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில்எப்
போதும் உதிக்கின்றனவே.

...என்று முடியும் / நிறைவுறும் ‘அபிராமி அந்தாதி‘யின் முதலும், முடிவும் ‘உதிக்கின்ற‘ என்பதை கவனித்தால், அதற்கு முதலோ – அஃதாவது தொடக்கமோ – முடிவோ இல்லாதது தெளிவாகும்.

அந்தாதி என்றால் அந்தம்+ஆதி, அஃதாவது முடிவே ஆரம்பம் / துவக்கம்.

அபிராமி அந்தாதியில் ஒரு பாட்டின் ஈற்றிலுள்ள எழுத்தோ, சொல்லோ, சீரோ, அசையோ அடுத்த பாட்டின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. அந்தாதியின் இலக்கணம் அது. இதைச் செய்யுள் அந்தாதி என்று சொல்வார்கள். இவ்வாறு அந்தாதித்து வருவதோடு, ஈற்றுச் செய்யுளின் இறுதியும் முதற்செய்யுளின் முதலும் ஒன்றாக வரவேண்டும். இதை மண்டலித்தல் என்பார்கள். வட்டமாக அமைதல் என்று பொருள். இறுதியையும் முதலையும் இணைத்தால் இந்தப் பாமாலை வட்ட மாலையாகத் தோன்றும். இந்த சந்ததியும் மண்டலித்திருக்கிறது. “உதிக்கின்றனவே” என்று இந்த நூறாவது செய்யுள் முடிகின்றது. இந்த அந்தாதியின் முதற் செய்யுள், “உதிக்கின்ற செங்கதிர்” என்று தொடங்குகிறது. இதுவே மண்டலித்தல்.

மேற்கண்ட எளிய, இனிய விளக்கம் அடியேனுடையதல்ல. சிலேடைக்குப் புகழ்பெற்ற தமிழ்ச்செம்மல் ‘வாகீச கலாநிதி’ திரு. கி.வா.ஜ அவர்களுடையது. அபிராமி அந்தாதிக்கு அவர் வழங்கியுள்ள அற்புதமான விளக்கவுரை நான்கு கைக்கடக்கமான புத்தகங்களாக வெளிவந்துள்ளது. அடியேன் அதை இன்னமும் ரசித்து முடிந்தபாடில்லை. முயன்று பாருங்கள். நிற்க.

படம்: வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களின் ‘அபிராமி அந்தாதி’ விளக்க உரை

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்த குடி‘ என்று பெருமை கொள்வது நிச்சயமாக ‘உயர்வுநவிற்சி’யே என்றாலும், நமது தாய்மொழியின் தொன்மையில் ஐயமேதுமில்லை. தமிழின் பெருமையைப் பறைசாற்றும் எண்ணற்ற நூல்களுள் அபிராமி அந்தாதியும் ஒன்று. கிட்டத்தட்ட லலிதா சஹஸ்ரநாமத்தின் தமிழ் வடிவம் என்றே கூறினால் மிகையன்று (இதைப் பாடிக்களித்த ‘அபிராமி பட்டர்’ தேவி உபாசகர் என்பதைக் கூறத் தேவையில்லை). இதன் செய்யுள் வடிவமான ‘அந்தாதி’ முடிவற்ற ஆரம்பம் [அ] முடிவில்லா தொடக்கம் உண்டு என்பதற்கு ஒரு உதாரணம்.

அப்படியே மெல்ல நகர்ந்து / உயர்ந்து ஆன்மீகத் தளத்திற்கு வந்தோமானால், படைப்பும் கூட முடிவில்லாத் தொடக்கம்தான் என்கிறார்கள் மெய்ஞானிகள். பிக் பேங் (Big Bang) எனப்படும் பெருவெடிப்பில் துவங்கியதாகக் கருதப்படும், இன்றளவும் விடைதெரியாமல் விஞ்ஞானிகளால் ஆராயப்படும் பிரபஞ்ச உருவாக்கத்தின் தொடக்கமானது ‘ருத்திரனின் ஓலம்’ எனப்படும் முடிவில்லாத தொடக்கமே, அல்லது முடிவிலிருந்து தொடரும் மற்றொரு தொடக்கமே என்று யோகக்கலாச்சாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. எனில், பிரளயம் முடிவல்ல, பெருவெடிப்பு எனும் ஓலம் தொடக்கமல்ல என்றாகிறது.

தற்போது நாம் இருக்கும், அனுபவிக்கும், உணரும், ஆராயும் பிரபஞ்சமானது 84வது படைப்பு என்றும், இந்த முடிவற்ற தொடக்கம் 112 முறை நிகழும் என்றும், அதன்பின்னர் என்ன இருக்கும் / இராது; நிகழும் / நிகழாது என்று ஞானியரும் கூட அறியார் என்று என் குருநாதர் கூறியதை சற்றே ஆழ்ந்து (உள்) நோக்கினால், பிரம்மாண்டமான பிரபஞ்ச அளவிலான படைப்பும் கூட ஒரு தொடர்ச்சியே, அல்லது முடிவில்லாத தொடக்கமே என்றும் அறியலாம். நோன் யூனிவர்ஸ் (known universe) எனப்படும், இன்னமும் விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் வடிவம் ஒரு நீள்வட்டமாக இருப்பது கூட (இது லிங்க வடிவமும் ஆகும்), முடிவில்லாத தொடக்கத்தின் குறியீடே எனலாம்!

படைப்பின் துவக்கம் மற்றும் படைக்கப்பட்ட இலக்கியம் ஆகியவற்றுக்கு இடையில் படைப்பிலுள்ள உயிர்களாகிய நாமும் இருக்கின்றோம். நமது பிறப்பும், பிழைப்பும், இறப்பும் கூட முடிவில்லாத தொடக்கமே, அல்லது தொடங்கி முடிவது போலத் தோற்றமளிக்கும் தொடர் இயக்கமே என்கின்றனர் மெய்ஞானியர். ஒவ்வொரு பிறப்பிலும் ‘நான் இன்னார்’ என்ற அடையாளத்தில் சிக்கி உழல்வதால், நம்மில் பெரும்பாலானோர் இந்த முடிவற்ற தொடக்கம் பற்றி அறிவதுமில்லை; இதிலிருந்து விடுபட முயல்வதுமில்லை.

பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்ற முடிவற்ற தொடர்ச்சியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, படைப்பிலுள்ள உயிரானது படைப்பின் மூலத்துடன் ஒன்றிக் கலந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அவ்வாய்ப்பு மனிதராகப் பிறவியெடுத்து எல்லா உயிர்களுக்கும் உள்ளதென்றும் தொன்மையான இக்கலாச்சாரத்தில் பல குருமார்கள் மெய்யறிந்த தங்களுடைய நேரடி அனுபவத்திலிருந்தே தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல், அதற்கான பல்வேறு வழிமுறைகளையும் அளித்து அருளியுள்ளனர். அவற்றைப் பயன்படுத்தி உய்வது நமது விருப்பம் மற்றும் முயற்சியைச் சார்ந்தது.

இதெல்லாம் ரொம்ப ஹை லெவலா இருக்கே ஸ்வாமி‘ என்று தோன்றலாம். ஆனால் நம் முன்னோர் இதையெல்லாம் சிந்தித்து, உணர்ந்து, அறிந்ததோடு நின்றுவிடாமல், இப்பேருண்மைகளைப் பல்வேறு விதமாக நம்முடன் பகிர்ந்துகொண்டும் உள்ளனர் என்பது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்தானே. பிரபஞ்சத்தின் முடிவற்ற தொடக்கத்தின் புரிதலுக்கும், உயிர்மெய் அறிதலுக்கும் இன்னமும் தயாராக இல்லாதோர், அபிராமி அந்தாதி போன்ற அற்புதமான, ‘முடிவில்லாத தொடக்கத்தின்’ உதாரணமாக உள்ள இலக்கியங்களின் கவிச்சுவையையாவது ரசித்துக் கொள்ளலாமே!

பி.கு: ‘அந்தாதி’ எனும் அற்புதமான செய்யுள் வடிவத்தின் பிதாமகியாகக் கருதப்படுபவர் காரைக்கால் அம்மையார். அவரது ‘அற்புதத் திருவந்தாதி‘தான் முதல் அந்தாதி செய்யுளாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றனர் அறிஞர்கள். இது தமிழ்க்குலப் பெண்டிர்தம் பெருமையை உணர்த்துவது என்றால் மிகையில்லை.

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

காவாவா எனக் கல்லும் கரையுமே!

காவாவா எனக் கல்லும் கரையுமே!

ஸ்வாமியின் டென்னில் (ரூம் என்கிற சாதாரண இடம், இந்த மாதிரி டெர்மினாலாஜி ஏதாவது பயன்படுத்தினா ‘ஓ, வாவ்… இட் மஸ்ட் பீ அன் ஆஸம் பிளேஸ்’ என்பதுபோல் தோன்றும் இன்றைய இண்ஸ்ட்டா யுகத்தில் இதுமாதிரி ஆப்ட்டிக்ஸ் இன்ஃப்ளூயன்சர்களுக்கு மட்டுமல்லாமல், எழுத்தாளர்களுக்கும் கூட அவசியமாகிவிட்டது!) நிகழும் அவ்வளவு சுவாரஸ்யமில்லாத தினப்படி செயல்பாட்டிற்கிடையில், திடீரென்று பல்லாண்டு பழமையான கேட்ஜட்களைக் குடைந்து, அவற்றுக்கு உயிரூட்டி (பெரும்பாலானவை  ச்சார்ஜ் பண்ணினால் அல்லது மின் இணைப்புக் கொடுத்தால், கோமாவிலிருந்து எழுந்த ஸ்டீவன் செகால் மாதிரி படக்கென்று முழித்து, சடக்கென்று  ஆக்ஷனில் இறங்கிவிடும்) பயன்படுத்தும் முயற்சி அவ்வப்போது நிகழும். இம்மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகளுக்கு ஏதுவான பல கேட்ஜட்கள் கைவசம் இருப்பதால் (அருமை அறியாதோருக்கு இவை வெறும் ஈ-குப்பை), வாராந்தரி ராணி மாதிரி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எதையாவது குடையலாம்.

சமீபத்தில் டென்னை வேறு ஒரு புதிய முயற்சிக்காக மாற்றி ஒழுங்குபடுத்துகையில், அரதப் பழைய ஸ்பீக்கர்கள் சில சேந்தியிலிருந்து (பரண்) இறங்கி வந்தன. பத்துப் பதினைந்து வருடகாலத்திற்கு முன்பு வாங்கியவை போலும். ஹை-ஃபை டாக்கிலிருந்து (DAC) ஆம்பிளிஃபையருக்குப் போய்ப் பின் தனக்கு வரும் துல்லிய சிக்னலை, பிரமாதமாக ஒலிபரப்பும் நவீன ஸ்பீக்கர்களுக்கு இவை கிட்டத்தட்ட தாத்தா மாதிரி எனலாம். அக்காலத்தில் அமேஸான், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மாதிரி எதுவும் கிடையாது என்பதால் ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கியிருக்கலாம். ஒன்றிரண்டு அமெரிக்காவிலிருந்து தாய்மண்ணுக்குத் திரும்பி வந்தபோது சுமந்து வந்ததாகக் கூட இருக்கலாம்!

இம்மாதிரி ஸ்பீக்கர் எல்லாம் லொக் லொக்கென்று (புழுதி படியும் நகரத்தில் வசித்தாலும், வெளிச்சம் மற்றும் காற்றுக்காக எப்போதும் ஜன்னலைத் திறந்து வைப்போருக்குத்தான் இந்தக் கஷ்டம் புரியும்) தொண்டையைச் செருமிக்கொண்டு சன்னமாகத்தான் பாடும் – நேராக லேப்டாப்பின் ஆடியோ ஜாக்கில் சொருகினால். ஆகையால் இவற்றிலிருந்து வரும் ஒலியைப் பெருக்க சில செப்பிடு வித்தைகளைச் செய்தாக வேண்டும்.  

என்னுடைய ஆஸ்தான டெல் (Dell) லேப்டாப்பில் (எளிய i5 கணினிதான் – சூப்பர் டூப்பர் மாடலெல்லாம் இல்லை – அதெல்லாம் ஜூனியர் மாதிரி டிஜிட்டல் யுவர்களுக்குத்தான்) இருந்து வரும் எவ்வித ஒலியையும்  ஒரு ஃபியோ (FiiO) டாக் ஆம்ப்பும் (DAC என்பது கம்ப்யூட்டரிலிருந்து வரும் டிஜிட்டல் ஒலியை பழைய பாணி அனலாக் சிக்னலாக மாற்றும் வஸ்து), மற்றொரு நாப்சவுண்ட் (NobSound) ஆம்ப்ளிஃபைரும் (இது ஒலியின் சக்தியைப் பெருக்கும் – சிக்னல் பூஸ்டர் மாதிரி), ஸ்டீரியோ செட்டப்பில் உள்ள ஓங்க்யோ (Onkyo) ஸ்பீக்கர்களுக்கு உயிரூட்டி (இவை ஹோம் தியேட்டருடன் வந்த ப்பேஸிவ் ஸ்பீக்கர்கள் என்பதால், ஆம்ப்ளிஃபையர் இல்லாமல் வாயே திறக்கமாட்டார்கள்) வழங்கும்.

டாக் ஆம்ப் + ஆம்ப் காம்பினேஷன் எல்லாம் இந்த நோஞ்சான் ஸ்பீக்கருக்குக் கொஞ்சம் ஓவர்க்கில்தான் என்றாலும், ஃபியூச்சர் ப்ரூஃபிங் நோக்கில், வேறு ஆடியோஃபைல் ரக ஸ்பீக்கர்கள்* கணினி மேசையை அலங்கரிக்கும்போது ரொம்பவே பயன்படும். யூடியூப் காணொளி, ஹாலிவுட் திரைப்படங்கள், இசை, சொற்பொழிவு என்று எல்லாவகையான ஒலியையும் ஸ்வாமி கேட்பது இதன் வழியேதான்.        

*ஆடியோஃபைல் (Audiophile)ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் ஆடியோ எந்த்தூசியாஸ்ட் ரக ஸ்பீக்கராவது வாங்கிவிட வேண்டும் என்ற அவா, கிட்டத்தட்ட நாலைந்து அமேஸான் சேல்களைத்தாண்டி இன்னமும் அவாவாகவே நிலைத்திருப்பது, மத்யமர் வர்க்க ரிட்டயர்டு வாழ்க்கையில் இடைவிடாது நிகழும் நீட் (தேவை) வெர்சஸ் வாண்ட் (விருப்பம்) எடைபோடலுக்குச் சான்று.

சென்ற ஆண்டு ஜுனியருடைய ஹெச்.ப்பி (HP) லேப்டாப் எவ்வித முன்னறிவிப்புமின்றி உயிரை விட்டுவிட, வேறு ஒரு உயர்தர லேப்டாப் வாங்கவேண்டிய அத்தியாவசிய நிலை ஏற்பட்டது (கோவிட் முதல் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் லேப்டாப் வாங்கச் சென்னையில் எட்டுத்திக்கும் அலைந்த காதையைத் தனிப் பதிவாகவே வெளியிடலாம் – அத்தனை இன்ட்டரஸ்ட்டிங் & இன்ட்டரிகிங் அவ்வனுபவம்). பின்னர் அவரது பழைய லேப்டாப் (வாங்கும்போது அதுவும்கூட i7 பிராசஸர் கொண்ட உயர்தரம்தான், ஆனால் ஓரிரு வருடங்களில் அவற்றுக்கு வயதாகிவிடுவது மட்டுமல்லாமல், அலைச்சல் காரணமாகவோ என்னவோ – ஜுனியர் உலகம் சுற்றிய ‘சதுரங்க விளையாட்டு வீர’ வாலிபர் – அவை கன்னாபின்னாவென்று கோ-மார்பிடிட்டி இருக்கும் கோவிட் பேஷண்ட் மாதிரி அறிதுயில் கொண்டு விடுகின்றன) சர்வீஸ் பண்ணி உயிர்பிழைக்க வைத்து, ‘இப்போது இதை வைத்துக்கொண்டு என் செய்வது?’ (குடும்பத்தினர் அனைவருக்கும் ஏற்கனவே தனித்தனி லேப்டாப் இருக்கின்றது; மேகி என்ற நூற்றாண்டு கண்ட தோத்தோ பாட்டி இதுவரை பயன்படுத்தியதில்லை; இனிமேல் தனக்கென்று ஒரு லேப்டாப் கேட்பாள் என்று தோன்றவில்லை) என்று ரூம் போடாமலேயே யோசித்துக் கொண்டிருக்கையில், அதற்கான ஐடியா யூடியூபிலேயே கிட்டியது.

அண்ணே/யக்கா, உங்க வூட்டுல ஏதாச்சும் பழைய ப்பீ.ஸீ இல்லைன்னா லேப்டாப்பு இருந்துச்சுன்னா, அதை அட்டகாசமான ஒரு மீடியா சென்ட்டரா மாத்திப்புடலாம் தெரியுமா…‘ என்று பல யூடியூப் காணொளியாளர்கள் கூவி அழைக்க, ‘அட, இது நல்ல ஐடியாவா இருக்கே… நம்மக்கிட்டதான் கணிசமான ஃபோட்டோ, வீடியோ, மியூசிக் கலெக்ஷன் இருக்கே… அதுக்கு இது வொர்க் அவுட் ஆயிடும் போல இருக்கே…‘ என்று ஆர்வக்கோளாறால் அடுத்த புராஜக்ட் ஆரம்பமாகி விட்டது.

அந்த லேப்டாப்புக்கு டப்பிங் செய்ய, பரணிலிருந்து இறங்கிய ஸ்பீக்கர்களில் ஒன்றுக்கு இரண்டு செட் ஆயத்தமாகிவிட, ஷெல்ஃபில் கும்பகர்ண வேலை பண்ணிக்கொண்டிருந்த மற்றொரு ஃபியோ ஹை-ரெஸ் ஆடியோ பிளேயர் + டாக்கில் ஒரு ஸ்ப்ளிட்டரைச் சொருகி, இரண்டு ஜோடி ஸ்பீக்கருக்கும் ஒலியைப் பகிர்ந்து அளித்து… நாலைந்து நாட்களாக விடியலில் சுனாதமான இசையை மறுபடியும் கேட்கத் தொடங்கியாகிவிட்டது.

முதன்முதலில் இந்த பூமர் கால ஸ்பீக்கர் + மில்லென்னியல் கால டாக்-ஆம்ப் காம்பினேஷனை டெஸ்ட் பண்ணும் பொருட்டு யூடியூபில் தேடிய பாடல் ‘கா வா வா…‘ தமிழ்த் தியாகையர் பாபநாசம் சிவனுடைய அற்புதமான பாடல். நம்ம மைலாப்பூர்க்காரர். மாடவீதியில் அவர் பக்தியில் உருகிப் பாடிக்கொண்டு போன காட்சியைக் காணும், கேட்கும் பாக்கியமெல்லாம் நமக்கில்லை. ஆனால் அவரது பாடல்களை ச்சார்ட் டாப்பிங் பாடகர்கள் பிரமாதமாகப் பாடுவதை யூடியூப் புண்ணியத்தில் யார் வேண்டுமானாலும் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.

‘கா.. வா.. வா..’ மதுரை மணி ஐயரின் ஸிக்னேச்சர் கச்சேரிப் பாடல். மஹாராஜபுரம் சந்தானத்தின் ‘போ.. ஷம்போ..’ போல. யூடியூபில் இருக்கும் பாடலின் (ஆடியோ மட்டும்தான் – அவர்காலத்தில் ஆளாளுக்கு செல் ஃபோனில் வீடியோவெல்லாம் எடுக்கவில்லை) பதிவுத் தரம் சுமார்தான் (பாடலின் தரம் டாப் கிளாஸ்தான் எப்போதுமே) என்பதால், வேறு யாரெல்லாம் பாடியிருக்கிறார்கள் என்று சைட் பாரில் தேடினால்… ‘யார்தான் பாடவில்லை!‘ என்று தேடலை உல்டா பண்ணும் அளவிற்கு ஏராாாளமானவர்கள் பாடியிருக்கிறார்கள். டி.எம்.கிருஷ்ணா, நெய்வேலி சந்தானகோபாலன், திருச்சூர் பிரதர்ஸ், ராமகிருஷ்ணன் மூர்த்தி, எம்.எஸ்.அம்மா, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வி., ரஞ்சனி-காயத்ரி, பாம்பே ஜெயஸ்ரீ அக்கா, ஒரு இளைய இசைக்கலைஞர்களின் கூட்டணி (சாஸ்திரீய இசையின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கின்றது) என்ற இம்ப்பிரஸிவ் வரிசையில் அபிஷேக் ரகுராமும் இருந்தார் (இருக்கிறாரா என்று அடியேன் மிகுந்த ஆர்வத்துடன் தேடினேன் என்பதே உண்மை).

அபிஷேக் ரகுராம் பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு ரகுவின் பேரன். இளம்பிராயத்தில் தாத்தாவைப் போலவே மிருதங்கம்தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் (வீட்டிலேயே சூப்பர்ஸ்டார் குரு இருந்ததால் இது நேச்சுரல்தானே). சகலகலாவல்லி தேவி சரஸ்வதி இதைப் பார்த்தாள். ‘ஹ்ம்ம்.. இந்தப் பிள்ளை மற்ற பாடகர்களுக்கு பக்கவாத்தியம் வசிப்பதைவிட முக்கியமான ஒரு வேலை பண்ண வேண்டித்தானே பூமிக்கு அனுப்பி வைத்தோம்..‘ என்று அபிஷேக்கை வாய்ப்பாட்டு பக்கமாக திசைதிருப்பி விட்டாள். டீன் ஏஜிலேயே மேடை ஏறிவிட்ட இவர் இருபதுகளிலேயே கர்நாடக இசை ஜாம்பவான்கள்/வதிகள் வரிசையில் இடம்பிடித்து விட்டார். கச்சேரிகளில் டிக்கெட் எல்லாம் இன்ஸ்டன்ட்டாக விற்றுப்போய் அரங்கத்தின் வெளியே கார் பார்க்கிங்கில் நின்று கேட்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அபிஷேக் ரகுராம் பாடுவதை அடியேன் தற்செயலாகத்தான் முதன்முதலில் கேட்டேன்.  யூடியூபில்தான். ஆசாமி பார்ப்பதற்கு சிக்கில் குருசரண், திருச்சூர் பிரதர்ஸ் மாதிரியெல்லாம் கண்கவர் உருவாக இல்லாமல், மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் ரோடில் காய்கறிக் கடையில் நம் அருகில் நின்று பேரம் பேசி வாங்குபவர் போல சாதாரண ஃபிரெண்ட்லி நெய்பர்ஹூட் பையன் மாதிரிதான் இருக்கிறார். ஆனால் வாயைத் திறந்து பாட ஆரம்பித்தால், ‘என்னடா இந்த ஆள் நம்மை மாதிரி மனுஷன்தானா, இல்லை தேவலோகத்தில் நாரதருடைய கோஷ்டியில் பாடும் யாரவது ஸ்டார் சிங்கரா!‘ என்று நம்மை வாயடைத்துப் போக வைத்து விடுகிறார்.

இந்த டேலண்ட் வெர்சஸ் ஸ்கில் பற்றி விதண்டாவாதம் பண்ணும் ஆசாமிகளிடம், ‘கண்ணை மூடிக் கொண்டு ஒரு பத்து நிமிஷம் அபிஷேக் ரகுராம் பாடுவதைக் கேளும்.. டேலண்ட் என்றால் என்னவென்று தானாகவே உமக்குப் புரிந்து விடும்,’ என்று வீண் விவாதத்திற்கு ஃபுல்ஸ்டாப் வைத்து விடலாம்.

ஆக, ஏலியன் ம்யுஸிஷியனோ (சிவபெருமானே ஏலியன்தான், ஸோ அஞ்சேல்) என்று ரசிகர்களை திகைக்க வைத்து, மெய்மறந்து மணிக்கணக்காகத் தன்னுடைய இசையைக் கேட்டுத் தாளம் போட வைக்கும் அபிஷேக் ரகுராம் ‘கா.. வா.. வா..’ வை ரொம்பவே விஸ்தாரமாகப் பாடியிருக்கிறார். இருபது நிமிஷங்களுக்கு மேல் ஒரு காணொளியும், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மற்றொரு காணொளியும் யூடியூபில் இருக்கின்றன (லிங்க் கீழே).

இந்த ஒரு மணி.. ஒண்ணரை மணி நேர விஸ்தார பாட்டெல்லாம் செம்பை, அரியக்குடி, செம்மங்குடி, ஜி.என்.பி காலத்து ரசிகர்கள்தான் கேட்டிருக்க முடியும். திருக்கோயில்களில் திருவிழாக் காலத்தில் தினமும் சாயங்காலம் லேட்டாகத்தான் கச்சேரி ஆரம்பிக்கும். நள்ளிரவைத் தாண்டிக் கூடப் போகும். அரங்கமெல்லாம் கிடையாது. பந்தல் இருந்தால் பெரிய விஷயம். இசைக்கலைஞர்களை ரொம்பக் கிட்டத்திலேயே பார்த்து, கேட்டு ரசிக்க முடியும். பின்னர் அரியக்குடி கர்நாடக இசைக் கச்சேரி மாடலை அறிமுகப்படுத்தியபின், அதை மேலும் தட்டிக்கொட்டி, தற்போது டிசம்பர் சீசனில் ஒண்ணரையிலிருந்து இரண்டு மணிநேரத்திற்குள் மொத்தக் கச்சேரியையே முடித்து விடுகிறார்கள்.     

அபிஷேக் ரகுராம் அந்த சங்கீத சாம்ராட்களின் காலத்திற்கு நம்மைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார். ராக ஆலாபனை தொடங்கி, பாடலை வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக, அக்ஷர சுத்தமாகப் பாடி, ஸ்வரப் பிரஸ்தாரமெல்லாம் பண்ணி, ‘இப்படியெல்லாம் கூட ஸ்தாயி இருக்கின்றதா!‘ என்று முகவாயை கைவைத்து யோசிக்கும் விதமாக என்னென்னவோ ஸ்தாயியிலெல்லாம் பயணித்து (குன்னக்குடிதான் இதற்கு எளிய உதாரணம்), தானே தாளவாத்திய ஞானம் உள்ள ஆசாமிதான் என்பதால் ‘தனி’க்குத் தனி மரியாதை கொடுத்து (மிருதங்கம் வாசிப்பது பெரும்பாலும் இவருடைய கஸினோ நெஃப்யூவோதான் என்பதால் எக்கச்சக்க அண்டர்ஸ்டாண்டிங் இருவருக்கும்) அவர் பாடும்போது செவிக்குணவு ஹெவியாகவே இருப்பதால், வயிற்றுக்குணவு பற்றிய சிந்தனையெல்லாம் எழுவதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மிதான். கா..வா..வா. வையும் இந்த மாதிரிதான் பாடியிருக்கிறார் என்பதால் அடியேனது மகிழ்ச்சி கரைபுரண்டோடியது என்றால் மிகையில்லை.

இப்போது மறுபடி கா..வா.வா..வுக்கு வருவோம். டைட்டிலை வைத்தே – ஒருவழியாக – பதிவையும் முடித்துவிடலாம்! பாடல்களைத் தமிழ் மொழியறிவு ஓரளவு இருக்கும் யார் வேண்டுமானாலும் சுமாராக எழுதலாம். இசைப்பாடல்களை எழுத கொஞ்சம் ராகம், தாளம் பற்றி இசைஞானம் இருந்தால் நல்லது (அடியேன் மூலம் எழுதப்பெறும் ‘தினம் ஒரு பதிகம்’ பாடல்கள் இந்த ரூலுக்குக் கட்டுப்படாத எக்ஸெப்ஷன், ஏனெனில் இசையைப் பொறுத்த அளவில் ராகம் தாளம் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாத ஞான சூன்யம் யான்). இசை நுணுக்கமெல்லாம் தெரியாத அஞ்ஞானியாக இருந்தாலும் ஆர்வக் கோளாறால் ‘வராளி’ மேஸ்குலைன் ராகமாக இருக்குமோ என்று கூகிளாரைக் கேட்டு வலையை மேய்ந்தேன். ஆச்சரியமாக இது ஃபெமினைன் ராகம்தான். ஆனால் இதன் பாவம் / ரசம் பக்தி மற்றும் சிருங்காரமாம். ‘ஆஹா, பக்திதான் மேட்டர் ஸ்வாமி..‘ என்று எல்.இ.டி பல்பு ஒருவழியாக உள்ளே எரிந்தது!

‘கா..வா..வா..’ எனக் கரைந்தழைத்தால் ‘யாமிருக்க பயமேன்’ என்று மயிலைமீதேறி பறந்தோடிவரும் எம் குடிகாக்கும் குமரமலையான் ~ குமரமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி

கா..வா..வா.. மாதிரி கானங்களை எழுதிப் பாட மொழி, இசை ஞானம் தாண்டி பக்தி என்ற விஷயமும் வேண்டும். ஏனெனில் இம்மாதிரிப் பாடல்கள் வெறும் சொற்களைக் கோர்த்த கானமாலைகள் அல்ல. கா..வா..வா..வை முறையாக உணர்ந்து பாடினாலும், மனமுருகிக் கேட்டாலும் ‘யாமிருக்க பயமேன்‘ என்று கந்தவேளே மயிலேறி வந்துவிடுவான் நம்மை ரக்ஷிக்க. மதுரை மணி ஐயரும், அபிஷேக் ரகுராமும் முருகப்பெருமானின் அருட்பெருங்கருணை மழையில் நனைந்தவர்கள் – சந்தப்பெருங்கவிக்கோ அருணகிரிநாதர், பக்திகான சிரோன்மணி பாபநாசம் சிவன் போல – என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

நான் எவ்வளவு பெரிய இசை மேதை தெரியுமா!‘ போன்ற ஆரவார அடையாளங்களைக் கழற்றி வைத்துவிட்டுக் கண்மூடிக் கா..வா..வா..வைக் கேட்டால், ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இசைப்பேரறிஞர்களுக்கே கண்ணில் ஆனந்தக் கண்ணீர் தானாக வழிந்தோடும் என்பது திண்ணம்.

அக்காலத்தில் பாபநாசம் சிவன் மயிலை மாட வீதியில், மார்கழி மாத மெல்லிய குளிர் வீசும் காலையில், வண்ணக் கோலங்களுக்கிடையில் கற்பகமே..வையும் கா..வா..வா..வையும்   பாடியவாறு வலம் வந்தபோது நேரில் கேட்ட பாக்யவான்களுக்கு அப்படிதான் இருந்திருக்கும் என்று, இக்காலத்தில் அபிஷேக் ரகுராம் பாடுவதைக் கேட்கும்போது நமக்குத் தோன்றுகிறது. நம் கண்ணில் பெருகும் கண்ணீர்தான் ‘கா..வா..வா.. எனக் கல்லும் கரையுமே‘ என்பதற்கு சாக்ஷி.

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!

கா..வா..வா.. by மதுரை மணி ஐயர் ~ https://youtu.be/-mUlvpb6438

கா..வா..வா.. by அபிஷேக் ரகுராம் ~ https://youtu.be/Rav3lHpj93wகா..வா..வா.. by

அபிஷேக் ரகுராம் (அந்தக் கால சங்கீத ஜாம்பவான்களின் இசைக் கச்சேரி போல எல்.ப்பி எடிஷன்) ~  (இந்தக் காணொளியில் கமெண்ட்ஸ்ஸை படித்தால் இவரது இசையைப் பற்றி அடியேன் சிலாகித்து எழுதியது ஏன் என்று புரியலாம்..) https://youtu.be/_fNkxlDAGyQ
https://youtu.be/Mzyre5pTeBs

~ஸ்வாமி | ‘@PrakashSwamy  

பசி, தாகம் போன்ற உணர்வுகளை உடல் உறுப்புகள் தீர்மானிக்கின்றனவா அல்லது மூளையா?

தாகம், பசி போன்ற உணர்வுகள் உடலில் எந்த இடத்தில் தொடங்குகிறது? வாய், வயிறு என விடையளித்தால், மூளையின் பங்கு என்ன? அதாவது தாகத்தை மூளையினால் வாய் உணருகிறதா? வாயினால் மூளை உணர்கிறதா? இதுபற்றி விளக்குவீர்களா?

இவ்வினா Quoraவில் கேட்கப்பட்டது. அதற்கு ஸ்வாமி அளித்த விடையை Quoraவிலேயே படித்து, ரசித்து, ஆதரவு வாக்களித்து, பகிர்வதற்கான இணைப்பு இதோ ~ https://bit.ly/3e6XGDD

நாம் தினசரி பயன்படுத்தும் அலைபேசி, கணினி போன்ற கருவிகளின் பயன்பாடு பற்றி நமக்கு (ஓரளவேனும்!) தெரியும். எங்கோ இருக்கும் யாரேனும் ஒருவருடன்  பேச; தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து அனுப்ப செல்ஃபீ எடுக்க; எத்தனை ‘நண்பர்கள்’ நமக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க; கிரெடிட் கார்டு பேமெண்ட் செய்யக் கடைசி நாள் இன்றுதான் என்பதை கூகிள் டாஸ்க் நினைவுபடுத்த, வட்டியைத் தவிர்க்க வேண்டுமே என்று அவசரமாக வங்கியை வசைபாடிக்கொண்டே ஆன்லைன் பேமெண்ட் செய்ய… என்று அலைபேசியை நாம் பயன்படுத்துகையில் அதன் ஸ்க்ரீன் (குறுந்திரை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம் – டிஸ்பிளே என்றால் ‘காட்சி’ என்கிறார் கூகிளார்…ம்ஹூம்) மற்றும் ஸ்பீக்கர் (அத்துணூண்டு ஸ்பீக்கரை ‘ஒலிபெருக்கி’ என்றால் கொஞ்சம் அபத்தமாக இருக்காதோ!) ஆகியவற்றுடன்தான் நமது செயல்பாடு இருக்கும்.

ஆனால் மேலே குறிப்பிட்ட அத்தனை செயல்களையும் செய்வது ஸ்க்ரீனும், ஸ்பீக்கருமா என்ன? திரைக்குத் தெரிந்ததெல்லாம் அதற்கு வரும் கட்டளைகளின்படி அதிலுள்ள பிக்ஸல்களுக்கு (ஒளிப்புள்ளி!), அதாவது அந்தப் ஒளிப்புள்ளிகளின் ஒளிர்வுக்கு ஆதாரமான டையோட் என்ற வஸ்துவை ஒளிர்விப்பது அல்லது அணைத்துவிடுவது, அவ்வளவுதான். அதோடு ஒளிப்புள்ளியின் நிறம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய கட்டளையையும் அது புரிந்து கொள்ளலாம். அதற்கு மேல் அதற்கு எதுவும் தெரியாது… புரியாது.

ஆக, நாம் ஒருநாளில் பலமுறை பார்த்து ரசிக்கும் அலைபேசித் திரையானது அதிகபட்சம் இரண்டு அல்லது ஒருசில கட்டளைகளைக் கேட்டுச் செயல்படும், அலைபேசி என்ற கருவியின் ஒரு பாகம் என்பதை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் (குறிப்பாக வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவை புத்தம்புதிய மாடல் அலைபேசியை – குறிப்பாக 90 / 120 Hz பளபள டிஸ்பிளே உள்ள – குலதெய்வத்திற்கு வேண்டுதலை நிறைவேற்றுவது போல வாங்கிக்கொண்டே இருப்போருக்கு). ஸ்பீக்கரின் திறனும் கிட்டத்தட்ட இதே அளவுதான் – தனக்கு வரும் மின் சிக்னலை ஒலியாக மாற்றுவது. அம்புட்டுதேன் அதோட தெறமைங்க. இவைபோக, நாம் நேரடியாகக் காணாத பல பாகங்களும் அலைபேசியின் உள்ளே இருக்கின்றன.

அலைபேசி போன்ற ஒரு ஹை-டெக் கருவியிலேயே அதன் தனிப்பட்ட பாகங்களின் ‘ஆக்டிவ் ரோல்’ என்பது ரொம்ப லிமிட்டட்தான். அவற்றைச் செவ்வனே இயங்க  வைக்கும் சூப்பர்வைசராக பிராசஸர் என்று ஒரு வஸ்து இருக்கின்றது. அலைபேசி போன்ற மொபைல் கருவிகளில் இதை எஸ்.ஓ.சி (சிஸ்டம் ஆன் எ ச்சிப்) என்பர். கிட்டத்தட்ட நமது மூளை மாதிரி எனலாம். ஆனால் அந்த சூப்பர்வைசருக்கும் சக்தி இருக்கும் அளவிற்கு, சூழ்நிலைக்கேற்றவாறு டக் டக்கென்று முடிவெடுக்கும் அளவிற்குப் பெரிய திறமையெல்லாம் கிடையாது. அதைச் செய்யும் சூத்திரதாரியாக இருப்பது ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனப்படும் மென்பொருள். அலைபேசியையோ, கணினியையோ பொறுத்தவரை இந்த மென்பொருள் வைத்ததுதான் சட்டம். அதன் கட்டளைகளைத் தாண்டி சூப்பர்வைஸரோ, பணியாளர்களோ எதுவும் செய்ய இயலாது.

எனினும், மேலதிகாரி என்பதால் பிராசஸருக்கு சில முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கும். உதாரணத்திற்கு பாட்டரியின் சக்தி மராத்தான் ஓட்டத்தின் இறுதி மைலில் நகரும் ரூக்கி ஓட்டப்பந்தய வீரர் மாதிரி சக்தியிழந்து தவித்தால், இவர் படக்கென்று பல செயல்பாடுகளை நிறுத்திவிடுவார். நிலைமை ரொம்ப மோசமானால் அலைபேசியையே ஆஃப் பண்ணிவிடவும் செய்வார். இதுவும் கூட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள கட்டளைப்படிதான் என்றாலும், க்ரிட்டிக்கல் தருணங்களில் குறிப்பிட்ட கட்டளைக்காகக் காத்திருக்கும் தேவையின்றி உடனடி முடிவெடுக்கலாம் என்று கொஞ்சம்போல சுதந்திரம் உண்டு இந்த சூப்பர்வைஸருக்கு.  

மனித உடல் என்பது அலைபேசி, கணினி போன்ற கருவிகளை விட எக்ஸ்ட்ரீம்லி காம்ப்ளிகேட்டட் + இன்ட்ரிக்கேட் ஆன ஒரு மஹா இயந்திரம். அனேகமாக பிரபஞ்ச அளவிலான படைப்பில் உள்ளதிலேயே அதீத நுணுக்கமான கருவி நமது உடலாகத்தான் இருக்கக்கூடும். ‘எதுக்குண்ணே  இந்த ஸ்வாமி அலைபேசி உதாரணத்தை நாலு பத்தி அளவுக்கு இழுத்தாப்ல?‘ என்று யோசிப்போருக்கு, அதன் பயன் இனி வரும் பத்திகளில் புரியக்கூடும் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

அலைபேசியின் டிஸ்பிளே, ஸ்பீக்கர் போன்று நமக்கு உலகத்துடன் / உலகத்தாருடன் தொடர்பு கொள்ள, செயல்புரியச் சில அங்கங்கள் உள்ளன. விழி, செவி, வாய், நாசி, கரங்கள், கால்கள் போன்று. நமது உடலின் புற இயக்கத்திற்கு உதவும் வகையில் பல அங்கங்கள் [அ] உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும் உள்ளன. மூளை, இதயம், வயிறு, குடல், நுரையீரல், சிறுநீரகம் என்று.

உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட பணிகள் உள்ளன. இதயத்திற்கு ரத்தத்தை பம்ப் பண்ணத் தெரியும், ஆனால் உணவைச் செரிமானம் பண்ணத் தெரியாது. சிறுநீரகத்திற்கு கழிவை வடிகட்டத் தெரியும், ஆனால் ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தத் தெரியாது. இதுகூட அலைபேசியின் வைப்ரேஷன் மோட்டார், கூலிங் சிஸ்டம் போன்ற உள்ளுறையும் பாகங்களைப் போலத்தான். அவை அவற்றுக்குரிய அல்லது அவற்றுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட செயல்களை மட்டும்தான் செயல்படுத்தும். ஆனால் இவை எல்லாம் சேர்ந்தோ, தனியாகவோ, சீராக இயங்கினால்தான் உடல் ஒழுங்காக வேலை செய்யும்.

மூளை என்பவர் இந்த உடல் உறுப்புகளில் கொஞ்சம் உசத்தியானவர். இவரும் இதயமும் நமது உடல் இயக்கத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த அங்கத்தினர்கள். இரண்டில் எது பணிநிறுத்தம் செய்தாலும் நேராக ஐ.சி.யூவிற்குத்தான் உடனே கொண்டு போகவேண்டும் நம்மை. இல்லையென்றால் ‘இன்னார்’ என்கிற அடையாளம் காணாமல் போய் ‘ஒடம்பை எப்பண்ணே எடுக்கறாய்ங்க!‘ என்ற நிலைக்கு வந்துவிடுவோம். கோவிட் மாதிரி பெருநோய்ப் பரவல் காலகட்டத்தில் நம்மை, அதாவது நாமாக இருந்த உடலை, முறைப்படி ஈமக்கிரியை செய்து, அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைக்க உற்றார், உறவினர்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும்!

இந்த மூளை என்கிற வஸ்து அலைபேசி/கணினியின் பிராசஸர் + மெமரி ஆகியவற்றை இணைத்தால் கிடைக்கும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரைப் போல. கிட்டத்தட்ட எஸ்.ஓ.சி++.  ஏராளமான விஷயங்களைத் தொகுத்து, பகுத்து வைத்திருக்கும் (முற்பிறவித் தகவல்கள் உட்பட என்று கர்ணபரம்பரைச் செய்தி) இந்த வஸ்துவானது, உடலின் அத்தனை பாகங்களுக்கும், சூழ்நிலைக்கேற்றவாறு கட்டளைகளை அயராது அனுப்பிக்கொண்டிருக்கும் சூப்பர்வைஸர் மாதிரி எனலாம். இதனால்தான் இவர் உடலில் உற்பத்தியாகும் சக்தியில் கணிசமான அளவை எடுத்துக்கொள்கிறார்.

மூளை என்கிற சூப்பர்வைஸரின் இயக்கத்திற்கும் ஒரு சூத்திரதாரி இருக்கிறார். அவரைத்தான் மனம் என்கிறோம். இவர் ரொம்பவே மர்மயோகி டைப். இவரால்தான் நாமே ‘நான் இன்னார்’ என்று ஒரு தனிப்பட்ட சமூக அடையாளத்தைச் சுமந்து கர்வத்துடன் வலம் வருகிறோம். இவர் இதயம், மூளை ஆகியவற்றைப் போல ஒரு ஸ்தூல வஸ்து அல்லாமல் சூக்ஷ்மமானவர் என்பதால் இவரை சாமானியமாக ஒண்ணும் பண்ண முடியாது நம்மால். இவரது கட்டுங்கடங்காத ஆட்டத்தை அடக்க ஆன்மீகத் தளத்துக்குள்ளே பிரவேசிக்க வேண்டியிருக்கும் என்பதால் அதைத் தற்போதைக்கு ஒத்தி வைத்துவிடுவோம்.இப்போது உங்களது வினாவிற்கு வருவோம் (அப்பாடி… அட் லாஸ்ட் கேள்விக்கு வந்தாருய்யா… என்று நீங்கள் இங்கு ஒரு பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்!)

நமக்குப் பசி எடுக்கிறது என்ற குறிப்பு, வயிறார் என்ற ஊழியரிடமிருந்து மூளையார் என்ற மேலதிகாரிக்குத்தான் செல்லும். ஆனால் இந்தக் கோரிக்கை ‘சூடா ஒரு செட் தோசையும், வடகறியும் அனுப்புப்பா.. கூடவே கெட்டியா காரச்சட்னியும்‘ என்ற அளவிற்கெல்லாம் குறிப்பாக இராது. எப்படி அலைபேசி என்ற கருவி இயங்க பேட்டரியில் தேக்கிவைக்கப்பட்ட மின்சக்தி தேவையோ, அதைப்போல உடல் என்ற இயந்திரம் இயங்குவதற்கும் சக்தி (எனர்ஜி) தேவை. இச்சக்தி குறையும்போதெல்லாம், ‘பசிக்குதுங்க’ என்ற பொதுவான கோரிக்கைதான்  மேலிடத்திற்குச் செல்லும். ‘தாகமா இருக்குங்க’வும் இதே ரகம்தான் – உடல் டீஹைடிரேட் ஆகும்போது இவ்வேண்டுகோள் வாய் / தொண்டைப் பணியாளரிடமிருந்து மூளை மேலாளருக்குப் போகும்.

இந்த மாதிரி ‘ரொம்ப அர்ஜென்ட் சார், உடனே ஏதாவது செஞ்சு  எங்களைக் காப்பாத்துங்க‘ ரகக் கோரிக்கைகளுக்கு  மூளை மேலதிகாரி ஒரு ஸ்டாண்டர்டு செட் ஆஃப் கட்டளைகள் வைத்திருப்பார்.

மணி என்ன காலை எட்டா… சரி, கிச்சன் பக்கமா போ‘என்று காலுக்கு ஒரு கட்டளை பறக்கும்.
தட்டை எடு.. அதில் மூணு இட்லியைப் போடு.. மிளகாய்ப் பொடியோடு எண்ணை சேர்த்துக் கொள்.. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் போடு‘ என்று கைக்குக் கட்டளை செல்லும்.
உள்ளே என்ன விழுகிறதோ அதை நன்றாக மென்று முழுங்கு‘ என்று வாய்க்கு ஒரு உத்தரவு.
முதல் இட்டிலியின் முதல் விள்ளல், வாய் வழியாக உமிழ்நீர் கலந்து ஒரு கலவையாக உள்ளே இரங்கத்துவங்கும் போது, ‘இட்லி ஜீர்ணோத்பவ‘ என்று வயிற்றுக்குக் கட்டளை வரும்.
அதற்கப்புறம்தான் வயிறு, ‘நன்றி ஐயா, நான் என் வேலையைத் துவங்குகிறேன்‘ என்று அந்த நாளின் முதல் ஜீரண ஷிஃப்ட்டைத் துவக்கும். 

இந்த மாதிரி மூளை அதிகாரி உறுப்பு ஊழியர்களுக்கு அனுப்பும் ஸ்டாண்டர்டு கட்டளைகளை ஓவர்ரைடு பண்ணுவதும் சில நேரங்களில் நடக்கும். அதைச் செய்பவர் மனம் எனும் சூத்திரதாரிதான் என்று சொல்ல வேண்டியதில்லை.

ஏம்ப்பா, இன்னிக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே. வீட்டுக்காரம்மாதான் காலையிலேயே அம்மன் கோயிலுக்குப் போயிருப்பங்களே. இட்டிலி வெச்சாங்களோ இல்லையோ தெரியாது. நீ பேசாம போற வழியில சங்கீதாவுல பொங்கல், வடை சாப்பிட்டுட்டுப் போயிடேன்…‘ என்று மனம் வேறு ஒரு பாதையைக் காட்ட, மூளை தன்னுடைய கட்டளைகளை அதற்கேற்ப மாற்றிக் கொண்டுவிடும்.
இல்லையென்றால், ‘அடே ஸூடோ பக்திமான், இன்னிக்கு ஏகாதசிங்கறதை மறந்திட்டயா… ஒருபொழுதுதானே நீ சாப்பிட வேண்டும். ஒழுங்கா ஒரு வாய் காஃபியைக் குடிச்சுட்டு வேலைக்குப் போகிற வழியைப் பார்,’ என்று அதட்டலாக விரதத்தை நினைவூட்டி, மூளை மற்றும் வயிறின் பசி சம்பந்தமான கட்டளை மற்றும் செயல்பாட்டையே ஒத்திப்போட்டுவிடும் மனம்.

நீங்கள் வினாவிலேயே குறிப்பிட்டிருப்பது போல், பசி, தாகம் போன்றவை உணர்வுகளே. ஆனால் இடம், பொருள், ஏவல் போன்றவற்றைப் பொறுத்து, அவற்றிற்கான உடலின் இயக்கம் மாறுபடும்.

உதாரணத்திற்கு ஒரு திருமணக்கூடத்தில் இருந்தால், நல்ல பசியெடுத்தாலும் கூட, முகூர்த்தம் முடிந்த பின்னர்தான் யாராக இருந்தாலும் ‘கல்யாண சமையல் சாதம்’ சாப்பிட முடியும் என்பதால், வயிறு அதுபாட்டுக்கு ‘என்னய்யா இந்த ஆளு, பசி உயிர் போகுது ஆனா உள்ளே ஒண்ணையும் தள்ள மாட்டேங்கறாப்ல‘ என்று புலம்பிக் கொண்டிருந்தாலும், மூளை பசிதீர்ப்பதற்கான ஸ்டாண்டர்டு கட்டளையை அளிக்கத் தயாராக இருந்தாலும், மனம் சர்க்கியூட் பிரேக்கர் போன்ற ஒரு கண்ட்ரோல் ஸ்விட்சை ஆஃப் செய்து வைத்திருக்கும் – குறித்த நேரம் வரும்வரை, அல்லது குறித்த நிகழ்வு நடைபெறும்வரை.

மாங்கல்யம் தந்துனானேன‘ மந்திரம் கேட்டு, கெட்டிமேளம்  முழங்கியவுடன், அந்த ஸ்விட்சை ஆன் பண்ணி, ‘பந்திக்கு முந்து‘ என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிடும். அதன் பின்னர் மூளையும், வயிறும் தங்கள் வேலையை வழக்கம்போல் செய்யத் துவங்கிவிடும். என்ன, வயிறு கொஞ்சம் முனகிக்கொண்டே ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கும் – கல்யாண சாப்பாடு வழக்கத்தைவிட ரொம்பவே ஹெவியானது என்பதால்! 

இதில் சில க்ரிட்டிக்கல் சூழ்நிலைகளில் மட்டும், மூளை ஓவர்ரைடு டைப் கட்டளைகளைக் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அனுப்பும். இது தற்காப்பிற்காக. ஏனெனில் படைப்பிலுள்ள எந்த உயிரினத்திற்கும் ‘செல்ஃப் ப்ரிசர்வேஷன்’தான் பிழைத்தலுக்கு ஆதாரமானது. மனிதர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

என்னதான் ‘ஏ, ஆறறிவு இருக்கு தெரியும்ல எங்களுக்கெல்லாம்..‘ என்று சலம்பிக்கொண்டு திரிந்தாலும், ஹோமோ சேப்பியன்களும்  பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒன்றுதான். ஆகையால், தற்காப்பு விதி என்பது நமக்கும், நம்மைப் பார்த்து ‘ஏம்ப்பா, நானும் மூணு வருஷமா வாலாட்டுறேனே உன்னைப் பார்த்து, ஒரு மூணு ரூபாய் டைகர் பிஸ்கட் கூடப் போட மாட்டேங்கற.. என்னய்யா மனுஷன் நீயெல்லாம்!‘ என்று உள்ளூரப் புலம்பிக்கொண்டே  நம்பிக்கையுடன் வாலாட்டும் தெருநாய்க்கும், அதன் மீது உட்கார்ந்திருக்கும் ஈக்கும் கூட ஒரே மாதிரிதான்.    

ஒருவர் வெய்யிலில் தலைசுற்றிக் கீழே விழப்போகும் நிலையில், அருகிலுள்ள தந்திக்கம்பம் (இப்போதெல்லாம் அதைத் தேடினாலும் கண்டுபிடிப்பது கஷ்டம்) போன்ற ‘உறுதியான ஒன்றைப் பிடித்துக் கொள் – கீழே விழாமலிருக்க‘ என்று மூளை நேராகக் கரங்களுக்குக் கட்டளை அனுப்பிவிடும். அந்நிலையில் அத்தியாவசிய தேவை அற்ற மற்ற உறுப்புகளின் இயக்கத்தை ஹைபர்னேஷன் போன்ற ஸ்லீப் மோடுக்கு மாற்றிவிடும்.

உயிருக்கு ஊறு விளையக்கூடிய அபாயகரமான நிலைகளில் மனத்தின் வேறு தளம் / நிலையான இண்ட்டியூஷன் என்பது, அதன் வழக்கமான சிந்தி-செயல்படு என்ற வழிமுறையை ஓவர்ரைடு பண்ணி, நேராக ‘செயல்படு‘ ஸ்டேஜுக்கு மூளையின் செயல்பாட்டை உசுப்பிவிடும். இது டெம்ப்பரரி புரொமோஷன் [அ] டெலிகேஷன் மாதிரி. இன்ட்டியூஷன் சார்ந்த செயல்களில் பெரும்பாலும் நேராக ஆக்ஷன்தான். அலசி ஆராய்வதெல்லாம் கிடையாது. உண்மையில் இந்த வகை இம்ப்பல்ஸிவ் செயல்பாடு மிருக இயக்க நிலைதான். நாம் ஏப் வகை பெரிய சைஸ் வானரங்களிடமிருந்து விலகிப் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு பிராணிதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றால் மிகையில்லை.
அச்சூழல் மாறியவுடன், அல்லது அபாய நிலையைக் கடந்தபின்னர், மறுபடியும் உறுப்புகள் எல்லாம் அவ்வவற்றின் செயல்பாட்டிற்கு இயல்பாகத் திரும்பிவிடும்.

உடல், மனம் ஆகிய இரண்டும் நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்புதமான கருவிகள். இவற்றை எப்படித் திறம்படப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் நம்முடைய வாழ்வின் தரத்தை, நிலையை நிர்ணயிக்கின்றது. ஏனெனில், பொருட்தளமாகிய சம்ஸாரம் மற்றும் அருட்தளமாகிய ஆன்மீகம் இரண்டிலுமே, உருப்படியாக ஏதேனும் செய்வதற்கு நம்மிடம் உள்ள கருவிகள் இவை மட்டுமே.

இதில் உடல் ஃபிஸிக்கல், அதாவது ஸ்தூலமான ஒன்று. உணவைக் கொண்டு வளரும் அதைக் கட்டுக்கோப்பாக, ஆரோக்யமாக வைத்திருக்கக் கூடிய திறன்கள் நம்மிடமே உள்ளன. என்றாலும் கூட, நம்மில் பலர் ஏராளமான உடற்கோளாறுகளுடன்தான் உலா வருகிறோம் இவ்வுலகில். நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒன்றுக்கே கூட நாம் பொறுப்பேற்காவிட்டால், பின்னர் வேறு யாரையும் அதற்காகப் பழிகூற முடியாது.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன
்உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்ற
ுஉடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே.
என்று திருமூலர் தமது திருமந்திரத்தில் (#725) உடலின் முக்கியத்துவம் பற்றித் தெளிவுபடுத்துகிறார்.
படைப்பாகிய உடல், படைப்பின் மூலமாகிய இறைவன் குடியிருக்கும் கோயில் என்பதை உணர்த்தும் சரித்திரம் பூசலார் நாயனாருடையது.

யோகத்தின் ஒரு அங்கமான யோகாசனங்கள், பிராணாயாமம், உணவுக்கட்டுப்பாடு, நடத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகள் போன்றவற்றின் மூலமே உடலை சிறப்பாகப் பேண முடியும். பேண வேண்டும். கண்டிப்பாக ஜிம்முக்குப் போய் சிக்ஸ் பேக்கை வெளிக்கொணர வேண்டும் என்றெல்லாம் கட்டாயமில்லை – ஆரோக்கியமாக இருக்க.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் பிறவியின் பயன் நோக்கி நகர முடியும். வயிற்று வலியால் துடிக்கும்போதும், கால் உளைச்சலால் தூக்கம் வராமல் புரளும்போதும், ‘நான் யார்?’ போன்ற மெய்ஞான வினாவெல்லாம் எழாது நம்முள். கவனம் உடலில்தான் இருக்கும். அதனால் கவலை ஏற்படும். துன்பத்தின் ஆருயிர்த் தோழியான துயரமும் உடனே ‘உள்ளேன் ஐயா/அம்மா‘ என்று ஆஜராகிவிடும்.

உடல் அடங்கினால்தான், அதாவது நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தால்தான், மனத்தை நோக்கி நம் கவனத்தைச் செலுத்தத் துவங்க முடியும். மனம் என்பது உடலின் இயக்கத்தையே ஆட்டுவிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. ஆனால் அது ஒரு னான்-ஃபிஸிக்கல் எண்ட்டிட்டி, அதாவது சூக்ஷமமானது என்பதால் (உடலிலும் கூட ஸ்தூலம் மற்றும் சூக்குமம் ஆகியவை உண்டு என்பதை நினைவில் கொள்க), அதுபற்றிய புரிதல் பெரும்பாலான மனிதர்களிடம் மிகக்குறைவு.

மனத்தின் இயக்கத்தை அறிந்து, அதன் உடும்புப் பிடியிலிருந்து விலகி, படைப்பிலுள்ள அனைத்தையும் ‘உள்ளது உள்ளபடி’ அறிந்துணர்வதுதான் ஆன்மீக சாதனையின் நோக்கம். அது எல்லா மனிதர்களுக்குமே சாத்தியம்தான் என்பதற்குத் தொன்மையான இக்கலாச்சாரத்தில் எக்காலத்திலும் இருந்து வந்துள்ள (இன்றும் இருக்கும்) மெய்ஞானிகளே  சான்று. ஆனால் அது கைவரப்பெறுவது நிச்சயம் எளிதான ஒன்றல்ல என்பதற்குச் சான்றும் கூட மெய்ஞ்ஞானம் அடைந்தோரின் குறைந்த எண்ணிக்கையே – அடையாத சாமானியரின் தொகையுடன் ஒப்பிடுகையில்.

சூக்குமமான மனமானது பல அடுக்குகளை [அ] தளங்களைக் கொண்டது. கௌதமர் எனும் புத்தர் மனம் பதினாறு அடுக்குகளைக் கொண்டது என்று தன்னுள் நோக்கித் தெரிவித்ததாகவும், அவற்றைப் பற்றி விரிவாக விளக்கியதாகவும் கேள்வி. இவற்றுள் உணர்வுத்தள இயக்கத்திற்கு காரணமானதை மைண்ட் (மனம்) என்றும், அறிவுத்தளத்தின், அதாவது சிந்தித்துச் செயல்படும் இயக்கத்திற்குக் காரணமானதை இண்ட்டலக்ட் (புத்தி) என்றும் சுவாமி சின்மயானந்தர் வகைப்படுத்துகிறார். உடல், மனம், புத்தி (சுருக்கமாக பி.எம்.ஐ – BMI) ஆகியவற்றின் தன்மை, இயக்கம், பயன்பாடு, எவ்வாறு அவை நம்மைக் கட்டுப்படுத்துகின்றன என்பது பற்றிய அவரது விளக்கம் அற்புதமானது. இணைப்பு இங்கே ~ https://youtu.be/BTDwZzHT8gQ

அம்பலக் கூத்தனின் ஆனந்தக் களிநடத்தை நம்முள்ளே கண்டு உய்வதற்குத் தடைக்கல்லாக இருக்கும் மனத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று திண்டாடுவதை விட, அதன் இயக்கத்தை ஒரு நதியின் பிரவாகத்தைப் போல இயல்பாக இயங்க அனுமதித்துவிட்டாலே, அதன் பிடியிலிருந்து விடுபட்டு, பயனுள்ள செயல்களுக்கு மட்டும் அதை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியும் என்று ஒரு புதிய கோணத்தில் இதை அணுக ஸ்ரீ பகவத் ஐயா அவர்கள் வழிகாட்டுகிறார். தன்னிச்சையாக இயங்கும் மனப் பிரவாகத்தைத் தன்னுள் கண்டபோதுதான் கௌதமர் எனும் புத்தர் மெய்ஞ்ஞானம் அடைந்தார் என்றும் அவர் கூறுகிறார். இவரது காணொளிகள் யூடியூபில் உள்ளன – மேலும் அறிய விழைவோருக்கு.

ஒரு குறிப்பிட்ட யோகப் பயிற்சி வகுப்பின்போது எனது குருநாதர் ‘இப்பயிற்சியை இடைவிடாது, கவனமாக, முறைப்படி செய்து வந்தால், நீ இங்கே, உனது உடல் அங்கே, மனம் அங்கே என்று மூன்றையும் உன்னால் கவனிக்க முடியும்,’ என்று கிட்டத்தட்ட ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளிலும் இம்மூன்றும் இருப்பதைப் போலக் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.

வருடங்கள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. உடல் ஓரளவு தற்போது கட்டுப்பாட்டில் இருக்கின்றது எனலாம். அதுகூடப் பெரும்பாலும் உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாகத்தானே அன்றி, யோகாப்பியாசத்தில் தேர்ந்ததால் அல்ல. அடியேன் எக்காலத்திலுமே ஃபுட்டி (foodie) வகையறாவாக இல்லாததால் இது ரொம்ப மெனக்கிடாமலே சாத்தியமானது. 
மனத்தின் இயக்கத்தை கவனிப்பதும் கூட அவ்வப்போது நிகழ்கின்றது. என்றாலும், அதன் பிடியிலிருந்து முற்றிலும் விடுபட்டு சுதந்திரமாக இயங்குவது இன்னமும் சாத்தியமாகவில்லை. உணர்வுகளின் ஆளுமை ஆக்டிவ்வாகத்தான் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட சிந்தனை மற்றும் செயல்கள் அவற்றால்தான் நிகழ்கின்றன என்ற அளவில் ஒரு விழிப்புணர்வு உள்ளது.

உடல், மனம் ஆகிய இவ்விரண்டின் கட்டுப்படும் கைவரப்பெற்றாலோ அல்லது அவற்றின் உந்துதல்களால் இயங்கத் தேவையில்லை என்ற சுதந்திரத்தை அடைந்தாலோதான், ‘நான் யார்’ என்பதை அறிந்துணரும் வகையில் என்னுள் இருக்கும் என்னை [அ] அவனை/ளை [அ] அதுவைக் காண இயலும் போலும். அதற்கு இன்னமும் எத்தனை காலம் ஆகுமோ யாமறியோம் பராபரமே!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy    

Website Powered by WordPress.com.

Up ↑