பெற்ற வெற்றிகளில் பெருமை தரும் வெற்றி எது!

எது வெற்றி என்பது நாம் வாழும் காலம், சூழல், நிலை, தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வெற்றி, தோல்வி என்பதை பைனரியாகவோ (இருமை), எதிர்மறையாகவோ பார்ப்பது மிகவும் மேம்போக்கான கண்ணோட்டம். இப்பதிவைப் பொறுமையாகப் படிப்போரில் சிலரேனும் இறுதியில், ‘ஹ்ம்ம்ம், தட் வாஸ் இண்டீட் அன் இன்ட்டரஸ்ட்டிங் இன்ஸைட்,’ என்று ஆமோதிக்கலாம்!

மிக இளம் வயதில், அதாவது பால பருவத்தில், போட்டிகளில் (பேச்சு, ஓவியம், இசை, விளையாட்டு, இத்யாதி…) ஏதாவது ஒரு பரிசு கிடைத்தாலே மிகப்பெரிய வெற்றி பெற்றதாகத் தோன்றும். அவ்வாறுதான் பெற்றோரும், மற்றோரும் கூறி நம்மை ஊக்கப்படுத்துவர்.

வளர வளர, நம்மைப்போன்றோ, நம்மை விடச் சிறப்பாகவோ, திறன் மற்றும் திறமை உடையோர் உலகில் பலர் உளர் என்பது தெரியவர, போட்டியிட்டு முதற்பரிசு [அ] தரவரிசையில் முதலிடம் பெறுவதே வெற்றி என்று தோன்றும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்பதெல்லாம் இடம், பொருள், ஏவல், செல்வம், செல்வாக்கு போன்ற பலவற்றைச் சார்ந்தது என்பது இந்நிலையில்தான் புரியத் துவங்கும்.

இது அடியேன் வாழ்விலும் எல்லோரையும் போலத்தான் இருந்தது. பள்ளியிலும், கல்லாரியிலும் பல போட்டிகள்.. பல பரிசுகள்.. பாராட்டுக்கள்.. ஜஸ்ட் மிஸ்டு ரக தோல்விகளும்தான்…

பள்ளிப்பருவத்தில் தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டவனாக, பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தடகள விளையாட்டு தொடர்பான ஒரு விபத்தில், இடது கால் செயலிழந்து விட்டது. காலாண்டுத் தேர்வு எழுதும் சமயத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. லிட்டரலாகப் படுத்த படுக்கை. இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து, நான் மீண்டும் எழுந்து நடப்பதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஐவருள் மூத்த பிள்ளைக்கு இப்படி ஆனதில், என் பெற்றோர் பதறிப் போயினர் (‘பிள்ளை மீண்டும் நடப்பானா.. மாட்டானா.? முருகா.. தாயே மீனாக்ஷி.. எப்படியாவது மறுபடி நடக்க வைத்து விடுங்கள்..!’).

கல்வி, கலை, விளையாட்டு என்று பல துறைகளில் ஆர்வமும், திறமையும் உள்ள ஒரு இளைஞ/ஞிக்கு, இம்மாதிரியான  எதிர்பாராத, அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு மிகப்பெரிய பின்னடைவாக  அமைந்து விடக்கூடும். இறையருளால், இச்சமயத்தில் என்னை நோக விடாமல், ஊக்குவித்தோரே அதிகம். குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சிலர். மெல்ல எழுந்து, நடந்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயாரானபோது, அரசு அலுவலரான என் தந்தை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர்  செய்யப்பட, அதுவரை நடந்தவற்றை அவ்வூரிலேயே விட்டுவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த ஆண்டு, வேறு ஊரில், புதிய பள்ளியில், அதுவரை அறியாத சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பை மீண்டும் படித்தபோது, எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் போல், இதுவரை என் வாழ்நாளில் யாரையும் சந்திக்கவில்லை எனலாம். நடந்தால் போதும் என்ற நிலையில் (சைக்கிளும் ஓட்டத் துவங்கிவிட்டேன் மறுபடியும் – குடிநீரைக் குடத்தில் பிடித்து, எடுத்து வரவேண்டிய ஊர் என்பதால் நோ ச்சாய்ஸ்), விளையாட்டுக்கு முற்றும் போட்டுவிட்டு (பாரத மாதா தனக்கு அம்மாதிரி ஒரு ஒலிம்பிக் லெவல் ஓட்டப்பந்தய வீர மகன் இருப்பதை அறிந்ததாகத் தகவலில்லை), படிப்பில் முழு கவனமும் திரும்ப, வகுப்பெடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் என்னை “நீ கண்டிப்பாக மாநில அளவில் ரேங்க் எடுப்பாய்,” என்று நேரடியாகக் கூறி ஊக்கப்படுத்தி, அவ்வருடம் மாநிலத் தரவரிசை (state rank) பட்டியலில் இடம்பெறச் செய்தே விட்டனர். இப்பிறவியில் அது நிச்சயம் ஒரு மைல்கல் எனினும், அதுவும் கடந்து போனது.

பிளஸ் ட்டூவில் அதே அளவு பெர்ஃபார்ம் பண்ண முடியாமல் போக (மேல்நிலைப்பள்ளி காலத்தில் பொதுவாகவே மாணவர்/விகளுக்கு கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் – இது தற்காலத்தில் சமூக ஊடகங்கள் + செயலிகள் தயவில் ரொம்பவே ஆம்ப்ளிஃபை ஆகிவிட்டது), சென்னை, கோவை பெருநகர்க் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில்தான் பொறியியல் படிக்க வேண்டிதாகிவிட்டது (நோ ரெக்ரெட்ஸ் தோ – மிகத் தரமான கல்லூரிதான்).

பின்னர் கல்லூரிக் காலத்தில், விகடனில் முதல் சிறுகதை வெளிவந்தது ஒரு மகத்தான மைல்கல். ஒருபக்கக் கதைதான் என்றாலும், கதையின் முடிவை மட்டும் ஆசிரியர் மாற்றிவிட்டாலும், பதிப்பில் வெளிவந்தது வந்ததுதானே. ஏதோ சன்மானம் கூட மணி ஆர்டரில் வந்ததென்று ஞாபகம். அதே காலத்தில் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் கிட்டியது. என் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளருக்கு இதுவே புக்கர் பரிசு பெற்றதற்கு ஈடு!

https://tinyurl.com/QV-SujathaDarshan

ஆனால், அதன்பின்னர் எழுத்துலகில் பரிமளிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவோர் யாருமின்றி, ஏதாவது நோட்டுப் புத்தகம் [அ] பேப்பர்களில் தார்மீகக் கோபம், காதல், இத்யாதியைப் பற்றிக் கவிதைகள் அவ்வப்போது எழுதியதோடு எமது எழுத்துப்பணி ப்பாஸ் ஆகிவிட, தமிழ் கூறும் நல்லுலகம் அடுத்த தலைமுறை சுஜாதாவை (ஆஹா, என்ன ஒரு நெனப்பு அண்ணனுக்கு!) இழந்தது.

அடுத்த படித்து முடித்து, பட்டம் வாங்கி (பொறியியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியதும் நடந்தது – ஆனால் அப்போது நான் வருந்தியதென்னவோ, ‘பெஸ்ட் ஒளட்கோயிங்க் ஸ்டூடெண்ட்’ பட்டத்தைத் தவற விட்டதைப் பற்றித்தான்), வேலை தேடி, சொந்த ஊரிலேயே முதல் வேலை வாய்ப்பைப் பெற்று (படிப்பினால் அல்ல, பேச்சுத் திறமையால்!), உழைத்து, திருமணம் புரிந்து, வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று, சென்னைக்கு ஜாகை மாற்றி, பிள்ளை பெற்று, வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து திரும்ப வந்து, கார் வாங்கி, வீடு வாங்கி, ஈ.எம்.ஐ கட்டி, மேலும் உழைத்து, பதவி உயர்வுகள் பெற்று, மேலும் இன்க்கம் டாக்ஸ் கட்டி… இவ்வாறு ஒரு சாதாரண நகர்வாழ் மதியமராகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இடையிடையே, பல தளங்களில், களங்களில் ஏதேதோ போட்டிகள்.. என்னென்னவோ சவால்கள்.. எத்தனையோ சாதனைகள்.. வெற்றிகள். அதையெல்லாம் லாங் லிஸ்ட் போட்டால் அபத்தமாக இருக்கும்.

இவையெல்லாம் ஒரு நிலையில் அலுத்துப்போய், 45லேயே (ஒரிஜினல் திட்டம் 50ல் – இதை என்னுடைய நிதி ஆலோசகர் இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிடுவார்) பிழைப்புத் தளத்திற்கு ச்சாவ் சொல்லி, விருப்ப ஓய்வு பெற்று விலகிவிட்டேன். திட்டமிட்ட ஓய்வு பெரிய அளவில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது – இதுவரையில். பெரும் சொத்தோ, பின்புலமோ இல்லாமல், சுய உழைப்பால் வாழ்வில் உயர்ந்த ஒரு சாமான்யனுக்கு, 9-x ஓய்வற்ற பிழைத்தலிலிருந்து, நாற்பதுகளில் ஈட்டிய இத்தகைய விடுதலை பெரும் வெற்றியே என்பதைக் கூறத் தேவையில்லை. https://bit.ly/3zxClfe

பிள்ளை/கள் பிறந்து, ஆரம்ப கால “அப்படியே எ/உன்ன உரிச்சு வெச்ச மாதிரி இருக்காப்ல இல்ல” (உண்மையில் பிறந்த குழந்தைகள் எல்லோரும், உலக அளவில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் – நிறம் மற்றும் முடி மட்டும் வேண்டுமானால் வேறுபடலாம்) கொஞ்சல்; ‘ஓஎம்ஜி’ கொண்டாட்டம்; நாக்ட்டர்னல் நாலு மாதக் குழந்தையால் தூக்கம் கெட்டு தாவு தீர்ந்து போய் நடக்கும் சண்டை; “ஏன், நீங்க டயப்பரை மாத்தினா தேஞ்சு போயிருவீங்களோ..” சச்சரவு எல்லாம் நடந்து முடிந்தபிறகு, குழந்தை/கள் ஏதேனும் பயிலத்துவங்கும் நிலையை அடைந்தவுடன், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதிலிருந்து, நமது குழந்தையின் வாழ்க்கை, அவரது வெற்றி என்று கவனம் தானாகவே திரும்பிவிடும். பெரும்பாலான பெற்றோர்களது நிலை இதுவே – குறிப்பாக பாரம்பரிய கலாச்சாரத்தில் வளர்ந்த பாரத தேசத்தவருள் (பொதுவாக மேலை நாடுகளில் தனிமனித / தன்னுடைய வெற்றிதான் இறுதிவரை முக்கியம் – பெரும்பாலானோருக்கு).

எனவே, இதுபற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டீவீட்டி விட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.‘ (குறள் #69)

பிள்ளையை/களைப் பெற்ற தாயைப் பொறுத்த அளவில், தன்னுடைய குழந்தை (இருபாலரும்தான்) சான்றோன் (திறன் மிகுந்தவன்/ள்) எனப் பிறரால் அங்கீகரிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வெற்றி. இவ்வினாவிற்கு ஏற்கனவே விடையளித்த பலர் (தாய், தகப்பன் இருவரும்) இதைக் குறிப்பிட்டிருப்பதே, வள்ளுவர் வாய்மொழிக்குச் சான்று.

எனில் தந்தை எதனை வெற்றியாகக் கருதுவார்? அதற்கும் வள்ளுவரே விடையளிக்கிறார் – ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு. முதலில் தந்தை பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்று ‘கடமை’ பற்றிக் குறிப்பிடுகிறார். பிள்ளையை/களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் தாய்தான் என்பதால், அவருக்குத் தனியாக கடமை எதுவும் குறிப்பிடப்படவில்லை போலும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.‘ (குறள் #67)

தன் பிள்ளையை (இங்கு பிள்ளை என்று குறிப்பிடுவது பொதுவாக குழந்தையை என்றே கொள்க; பையன், பெண் என்ற பாகுபாடு அர்த்தமற்றது – குறிப்பாகத் தற்காலத்தில்) அறிவுடையோர் (திறனுடையோர் என்றும் கொள்ளலாம்) உள்ள அவையில், முதன்மையானவராக ஆக்குவது தந்தையின் கடமை என்கிறார்.

ஆக, எந்தவொரு தந்தைக்கும், தன்னுடைய குழந்தையை(களை)த் தன்னைவிடச் சிறப்பான நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் – கல்வி, கலை, விளையாட்டு போன்று எத்துறையாக இருந்தாலும் – செய்வதுதான் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

சரி, கடமை புரிகின்றது. ஆனால், ‘தந்தை மகற்காற்றும் கடமை‘ என்று கூறாமல், ‘நன்றி‘ என ஏன் கூறுகிறார்? இதற்கான விடையை அறிய, அதே அதிகாரத்தில் சற்று முன்பாக இருக்கும் குறளுக்குப் போக வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.‘ (குறள் #61)

வாழ்வில் அறியவேண்டியவற்றை அறியக்கூடிய நன்மக்களைப் பெறுவதை விட வேறு பெரிய பேறு ஏதுமில்லை (பெற்றோருக்கு).

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.‘ (குறள் #62)

(சமூகத்தில் / உலகில்)பழி ஏதும் ஏற்படாத வகையில் வாழக்கூடிய நற்பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெற்ற தாய்/தந்தையரை, ஏழு பிறப்பிலும் தீமை அண்டாது.

ஆக, நல்லறிவும், நற்பண்பும் கொண்ட பிள்ளைகளைப் பெறுவதே பெற்றோருக்குப் பெரிய பயன்தான் என்கிறார் வள்ளுவர். அத்தகைய பிள்ளைப்பேறானது, பரஸ்பர நிதியில் (mutual fund) சேமித்த செல்வம்போல் தழைத்து வளர்ந்து, (இறுதிக்காலம் போன்ற) தக்க சமயத்தில் பெற்றோருக்குக் கைகொடுக்கும் என்பது திண்ணம். 

சரி, இவ்வாறு பிள்ளைகளைச் சிறப்பாக, சான்றோராக, அவையத்தில் முந்தியிருப்பச் செய்வதால் பெற்றோருக்கு வேறு பலன் ஏதேனும் கிட்டுமா?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.‘ (குறள் #68)

நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக, திறன் மிக்கவர்களாக ஆவதால், நமக்கு  மட்டும் நன்மை / பெருமை இல்லையாம். அத்தகையோரின் உயர்வு, உலகிற்கும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் இனிமை (பயன்) தருவதாம். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும் பெற்றோருக்கு!

பை தி வே, அம்மாதிரி பிள்ளைகளின் வெற்றியை, உயர்வை முதன்மைப்படுத்திச் செயல்படும் தந்தைகளுக்கு (அட, தாய்மாருக்கும்தாங்க) அப்பிள்ளைகள் செய்யக்கூடிய கைம்மாறு என்னவாக இருக்கும் என்பதைக் கூறிவிட்டுத்தான், வள்ளுவர் ‘மக்கட்பேறு’ (பிள்ளை / குழந்தைப்பேறு) என்ற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ (குறள் #70)

‘இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் (குழந்தையை) பெற, இவரது தந்தை (+ தாய் – goes without saying) என்ன தவம் செய்தாரோ,’ என்று காண்போரை வியக்க வைப்பதுதான், நல்லறிவும், நற்பண்பும் உடையவனா/ளாகத் தன்னை வளர்த்த பெற்றோருக்கு அக்குழந்தை செய்யும் உதவியாம் (கடமை / கைம்மாறு).

அடியேனும், எனது வாழ்க்கைத் துணைவியும், எங்களது ஒரே பிள்ளையை, வள்ளுவர் வாய்மொழிப்படியே வளர்த்து ஆளாக்கியுள்ளோம் என்று உறுதியாக நம்புகிறோம். திருவருளும், குருவருளும் இதற்கு வழிகாட்டின என்பது எமது நம்பிக்கை. அவரது குறிக்கோளை எட்டி, வாழ்வில் பல வெற்றிகளை அவர் அடைவார் என்பது சர்வ நிச்சயம். அதற்கான கைம்மாறு எதுவும் அவர் செய்யத் தேவையில்லை என்கிற தெளிவு எங்களுக்கு இருந்தாலும் (இதை அவரிடமே நேரடியாகக் கூறியும் விட்டேன்!), செய்யத் தயங்கவோ, தவறவோ மாட்டார் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.https://qr.ae/pGZipe

இவ்வகையில் ஏற்கனவே செயல்பட்ட/படும் பெற்றோருக்கு நமது வந்தனங்கள். இனி அவ்வாறு செயல்பட விழைவோருக்கு நம் வாழ்த்துக்கள்!

கு: 90களில் கைவிட்ட எழுத்துத் திறனை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலைப்பதிவு (blog) எழுதுவதன் மூலம் மறுபடி ஆக்சிஜன் கொடுத்து உயிர்ப்பித்தேன். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னர், கடந்த சில  ஆண்டுகளாகத்தான், என்னுடைய எழுத்தை விரும்பி வரவேற்றுப் பாராட்டும் நல்வாசகர்களைக் கோராவில் கண்டுகொண்டேன். களிப்புற்றேன். தற்போது ‘வெற்றி’ பெறும் நோக்கமெல்லாம் ஏதுமில்லை என்பதால், தெரிந்த + அறிந்ததை எழுதுதிப் பகிர்வதே ஆனந்தம் அளிக்கின்றது. அதுவே போதுமானது.

பி.கு: ஆன்மீகத் தளத்தில் உலவத் துவங்கி, குருவருட் கருணை மழையில் நனைந்த பின்னர், வெற்றி/தோல்வி ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பது தெளிவாகிவிட, போட்டி, பொறாமை, கர்வம், பெருமிதம் போன்றவற்றுக்கு விடைகொடுத்து அனுப்பியாகிவிட்டது. ஆகவே, இவ்விடைக்குப் பெருத்த ஆதரவு கிட்டினாலும், வெறும் நாலைந்து பேர் மட்டுமே ஆதரவு வாக்கைச் சொடுக்கினாலும், நாம் இரண்டையும் சமமாகவே  பாவிப்போம்; இயல்பாகவே ஏற்றுக்கொள்வோம்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑