சிறுவயதில் க்ரிக்கெட் விளையாடிய அனுபவம் பற்றி..!

மதுரை எஸ்.எஸ்.காலனியில், பார்த்தசாரதி தெரு மற்றும் சத்சங்கம் பிள்ளையார் கோயில் உள்ள வீதிகளில் (தெருப்பெயர் நினைவில்லை – சத்சங்கம் வீதி/சாலை என்றே கூட இருக்கலாம்), எண்ணற்ற நாட்கள், மண்டையைப் பிளக்கும் வெயிலில், சில பால்ய சினேகிதர்கள் சேர்ந்து, திரிந்து க்ரிக்கெட் (மட்டுமல்ல) விளையாடியிருக்கிறோம்.

பெரும்பாலும் ரப்பர் பந்து; சிறுபாலும் டென்னிஸ் பந்துதான். பேட் யாரோ வைத்திருந்தார்கள். ஸ்டம்ப் ஏதேனும் குச்சிகள்தான் – மண் குவித்து, அல்லது இரண்டு செங்கல் வைத்து நிற்க வைப்போம். நேரம் போவதே தெரியாமல், அயராமல், தீவிரமாக ஆடுவோம். அக்கேஷனல் வாகனங்கள் (பெரும்பாலும் சைக்கிள், சில ச்சேட்டக் ஸ்கூட்டர்கள்) எங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிச் செல்லும்!

Quoraவில் இப்பதிவு ~ https://qr.ae/pGQ17K

சத்சங்கம் வீதியிலேயே இருந்த பாலசந்தர் வீட்டில் (மாடி வீடு – அப்பா வங்கி ஊழியரோ!) தாகசாந்திக்கு தண்ணீர் குடித்திருக்கிறோம். குருமூர்த்திதான் ஜிகிரி தோஸ்த். சீதாராமன், சேச்சா, வாசன் போன்றோர் அவ்வப்போது வந்து போவார்கள். சத்யா, பத்து (பத்மநாபன்), அவனுடைய தம்பி ஸ்ரீபதி போன்ற பிற நண்பர்கள் தெரு விளையாட்டுக்கெல்லாம் வந்ததாக நினைவில்லை. விஜி, ஆண்டாள், பத்மினி, ஆர்த்தி போன்ற மகளிர் அணியினர் எங்களோடு விளையாட மாட்டார்கள்.

எல்லோரும் ‘ஸ்ரீ வித்யாலயம்‘ ஸ்டூடண்ட்ஸ் (அதற்கு முன்பு கொஞ்ச காலம் ‘பால குருகுலம்‘ பள்ளியிலும் படித்தேன்). ஹெச்.எம். ரங்கநாயகி மிஸ் மிடுக்காக இருப்பார். பின்னாளில் சூக்ஷ்மபுரீஸ்வரன் ஜீ – சமஸ்கிருத ஆசிரியர் – ஹெச்.எம் ஆனார் என்று கேள்வி. பள்ளி இன்னமும் எங்களது பால்ய கால நினைவுகளைப் பாதுகாத்தபடி, அதே இடத்தில் இருக்கின்றது.

எஸ்.எஸ்.காலனியிலேயே, வேறொரு பகுதியில் (பிராமண கல்யாண மஹால் அருகில் என்று ஞாபகம்) வசித்த ஹரி, நாராயணன் போன்றோர், எங்கள் ஏரியாவில் விளையாட வந்ததில்லை. அவர்களது பேட்டையில் விளையாடுவார்களோ என்னவோ. அவர்களது உறவினரான விஜயலக்ஷ்மி என்கிற விஜியை (கிளாஸ்மேட்களில் மிக வசீகரமானவள் – என் முதல் கன்றுக்குட்டி காதலாக இருக்கலாமோ என்னவோ… ரொம்ப சின்ன பையன்ணே அப்பல்லாம் 😂) பார்க்கிற ஆர்வத்தில், அந்த ஏரியாவுக்குள் ஒருசில முறை போய் வந்திருக்கிறேன். நாராயணன் வீட்டில் இருந்த ரோஜா செடி இன்னமும் ஃபிரஷ்ஷாக நினைவிருக்கிறது.

பிராமண கல்யாண மஹாலில்தான் பின்னர் என் திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்கள் யாரும் அங்கிருந்ததாகத் தெரியவில்லை. மண்டபம் தற்போது சிறப்பாக உருமாறி விட்டாலும் (பார்க்க படம்), ஏரியா பெரிதாக மாறவில்லை. இரண்டு தெருக்களுக்கு இடையில் ஒரு மிகக் குறுகலான சந்தில் இருந்த பிரபல பிள்ளையார் கோயிலும், அதை அடைவதற்கான – இரு தெருக்களையும் இணைக்கும் – சின்ன இரும்புக் கதவும் இன்னமும் இருக்கின்றன. வெள்ளி விழாவெல்லாம் கொண்டாடிவிட்ட மகிழ்வில், சரித்திரப் புகழ்பெற்ற (அட, எங்க வாழ்க்கை சரித்திரம்ணே/க்கா!) திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் உள்ளே போய் பார்க்கலாமா என்றபோது, தற்போதைய மேனேஜர் 0.5% ஆர்வம் கூட இல்லாமல், போனால் போகிறதென்று அனுமதித்தார்!

மதுரையில் ஒருமுறை பெருவெள்ளம் வந்து (சித்திரை திருவிழாவின் போது, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அணை திறந்து விடுவதால் ஓடும் சுமாரான பிரவாகம் தவிர்த்து, வைகையில் பெரும்பாலும் கோவண அகலத்துக்குத்தான் தண்ணீர் ஓடும் என்பதால், ஊருக்குள் வெள்ளம் வந்தது பேரதிசயம் – பல பூமர்களுக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கும்) எஸ்.எஸ்.காலனியிலெல்லாம் வெள்ளம் வந்தபோது, அரை டிராயர் நனையும் அளவிற்கு இருந்த வெள்ள நீரில், தண்ணீர் பாம்புகளுடன் சேர்ந்து (யாரோ பெரியவர் எங்கள் அருகில் வெள்ள நீரில் நீந்திய பாம்பைக் காட்டி, ‘தண்ணிப் பாம்புதான் தம்பிகளா.. கடிக்காது.. தைரியமா போங்க’ என்று ஊக்கமளித்தார்) இந்த நண்பர்கள் குழு, அட்வென்ச்சர் வாக்கெல்லாம் போயிருக்கிறோம்.

பார்த்தசாரதி தெருவிலிருந்து வீடு மாறி (அந்த வீடும், அது இருக்கும் சந்தும், ஆச்சரியகரமாக இன்னமும் அப்படியே காலம் உறைந்து போன மாதிரி இருக்கின்றன – பார்க்க பு.ப), சுப்பிரமணிய பிள்ளை வீதி (இந்த வீடு இடித்துக் கட்டப்பட்டு விட்டது என்றாலும், அருகிலுள்ள ஸ்டோர், அஃதாவது தற்கால ‘ரோ ஹௌஸ்,’ இன்னமும் அப்படியே இருக்கிறது – இங்குதான் ஷண்முகம் மிஸ் என்கிற பிரபல ஹிந்தி டீச்சர் அப்போது வசித்தார்), சத்சங்கம் பின்னாலுள்ள ஜவஹர் வீதி (இங்கு எதிரில் இருந்த ஸ்டோர் வீடுகளில் ஒன்றில் ஆண்டாள் என்கிற நண்பி வசித்தாள்… காம்ப்பவுண்ட் சுவரில் ஏறி நடக்கும் வித்தியாசமான பெண்… அங்கு வசித்தபோது ஒருமுறை பெரிய புயல் வந்ததுஇரு வீடுகளும் இன்னமும் மாறாமல் இருப்பது (பார்க்க பு.ப) காலத்தால் அழியாத மதுரையின் எண்ணற்ற ஆச்சரியங்களில் ஒன்று) போன்ற இடங்களில் வசித்த காலத்தில், விளையாட்டு பற்றிய ஞாபகங்கள் ஏனோ மழுப்பப் பட்டுவிட்டன.

உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்கு திண்டுக்கல் சென்று, லெஜண்டரி எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் படித்த காலத்தில் (இங்குதான் எனது தமிழ் பேச்சு, எழுத்து போட்டிகள் பங்கேற்பிற்கும், பொதுவாகவே புதியன அறியும் தாகத்திற்கும் விதை போடப்பட்டது – நன்றி தமிழ் ஐயா பெரியசாமி மற்றும் ஹிஸ்டரி ஆசிரியர் அல்ஃபோன்ஸ்), 7-ஸ்டோன்ஸ், கோ-கோ, கபடி என்று வேறு விளையாட்டுகள். கபடியில் ஜித்தனான எனக்கு, பள்ளி நண்பர்கள் இட்ட பெயர் ‘ஊசி பாசி.’

அங்கு வருடந்தோறும் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி மிகப் பிரபலம். மதுரா கோட்ஸ், தூத்துக்குடி போர்ட் டிரஸ்ட் அணிகள், ஐ.பி.எல் காலத்திற்கு முந்தைய சூப்பர் ஸ்டார்ஸ் டீம்கள். வார இறுதி விடுமுறை நாட்களில், சைக்கிளில் தனியே பள்ளிக்குச் சென்று, கூடைப்பந்து போட்டிகளை ரசித்திருக்கிறேன்.

அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தபோது, அஃபீஷியலாக மாவட்ட அளவிலான தடகள போட்டி செலக்ஷனில், அப்போதைய சேம்பியனான குமரனை விட 100 மீட்டர் ஓட்டத்தில் வேகமாக ஓடித் தேர்வானேன். அதை வீட்டில் சென்று சொல்லி மகிழ்வதற்கு முன்பே, ப்பீ.ட்டீ மாஸ்டர் லாங் ஜம்ப் டிரையலுக்கு போக வைக்க, எந்தவிதமான பிரிப்பரேஷனோ, வழிகாட்டுதலோ இல்லாமல் ஓடி, தாவி, லேண்டிங் ஆகும்போது எடக்குமுடக்காக ஏதோ தவறாகி, இடது கால் முட்டி பெயர்ந்து விட்டது. அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று, கட்டுப் போட்டு, வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

ரிப்பேரான (ஆக்கப்பட்ட!) காலை சரி செய்ய, மதுரையில் ஒன்று, திண்டுக்கல்லில் ஒன்று என்று இரண்டு மேஜர் சர்ஜரி. ரெக்கவரிக்கு சில மாதங்கள் ஆனதால், பத்தாம் வகுப்பை டிஸ்கன்ட்டினியூ பண்ணி, அடுத்த வருடம் தொடர வேண்டியதாகி விட்டது (இச்சமயத்தில் ஓவியம் மற்றும் கவிதை எழுதும் திறன் பாலிஷ் போடப்பட்டது; சில மாதங்கள் இறை நம்பிக்கை இழந்துமிருந்தேன்!). அத்தோடு, இப்பிறவியில் என்னுடைய சர்வதேச (அட் லீஸ்ட் தேசிய!) சாத்தியங்கள் இருந்த விளையாட்டு அத்தியாயம் முடிந்து போக, நீரஜ் சோப்ரா 21ம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் வெற்றி வாகை சூடும் வரை, தடகள ஒலிம்பிக் தங்கத்திற்காக பாரதம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது, எவ்விதத்திலும் என்னுடைய தவறில்லை என்று பாரதவாசிகளுக்கு இவ்விடம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்!

பத்தாம் வகுப்பை மட்டும் ராமநாதபுரத்தில் (சையது அம்மாள் மேநிலைப் பள்ளியும், அதன் ஆசிரியர்களும் வந்தனத்திற்குரியவர்கள் – இடைவிடாமல், புதிய மாணவனான என்னை ஊக்குவித்து, மாநில ரேங்க் வாங்க வைத்து அசத்தினார்கள்) படித்து விட்டு, அதன்பின்னர் மறுபடி மதுரைக்கு வந்து, நேரு நகர் வாசியாகியானபின், அடியேன் படிப்பு, எழுத்து, பிழைப்பு என்று தடம் மாறி விட்டேன்.

மேனிலைப்பள்ளி படிப்பு முடித்த டிவிஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில (+ வகுப்பு) ஆசிரியரான கிரிஜா மிஸ்ஸும் (படத்திலுள்ளவர்), தமிழ் ஆசிரியை கமலம் அம்மாவும் (இவர் தீபம் நா பார்த்தசாரதியின் கேள்வி-பதில் தொகுப்பெல்லாம் வெளியிட்டிருக்கிறார்; என்னைத் தமிழில் தொடர்ந்து எழுதத் தூண்டியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்) என்னுடைய இரு மொழி ஆர்வத்தையும் ஊக்குவித்து வளர்த்த பெரியோர்கள். அக்காலத்தில் விளையாட்டெல்லாம், எப்போதாவது வீட்டு மாடியிலோ, வாசலிலோ, என் தம்பிகளுடன் ஆடிய பேட்மிண்ட்டன் மட்டும்தான்.

மெப்கோவில் பொறியியல் பட்டப் படிப்பின்போது, ஒரே ஒரு முறை, ஹாஸ்டல் நண்பர்களுடன் சேர்ந்து க்ரிக்கெட் விளையாடியதாக ஞாபகம். ப்பேஸ் பௌளரான நான் அதிவேகமாகப் பந்து வீசி, முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க, பேட்ஸ்மேன் ‘ஏ, நான் இன்னும் ரெடியே ஆகலை.. அதுக்குள்ள பால் போட்டா எப்படி.!‘ என்று அழுகுணி ஆட்டம் ஆட, எனக்கு வந்த கடுப்பில், அதற்குப் பின்னர் நான் க்ரிக்கெட் ஆடியதாக நினைவில்லை!

எனது மற்றும் எனக்கு அடுத்த தலைமுறையினரில், பாரதத்தின் அதிபிரபல அன்அஃபீஷியல் தேசிய விளையாட்டான க்ரிக்கெட் பிடிக்காதவர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு. ’83 உலகக் கோப்பை பற்றி செய்தித் தாள்களில் படித்தும், ரேடியோவில் கேட்டும்தான் தெரியும். அப்போது தொலைக்காட்சியெல்லாம் கிடையாது. தோனி என்கிற ‘கேப்டன் கூல்‘ தலைமையில், இந்த நூற்றாண்டில் மறுபடியும் உலகக் கோப்பையை வென்றபோது, தொலைக்காட்சியை ஆஃப் செய்ததே இல்லை. பெருமிதத்தில் ச்செஸ்ட் சில அங்குலங்கள் எக்ஸ்டிராவாக விரிந்தது. டெண்டுல்கரை தோளில் தூக்கிக் கொண்டு இளம் வீரர்கள் மைதானத்தில் ஊர்வலம் வந்தபோது, கண்ணில் நீர் வழிந்தது சத்தியம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் அடியேன் சிஎஸ்கே மற்றும் தோனியின் டை ஹார்ட் ஃபேன். சிங்கம் உறுமும் மஞ்சள் டீ சர்ட் அணிந்து, பிள்ளையுடன் சேப்பாக்கம் போய் ச்சியர் பண்ணியிருக்கிறேன். அமெரிக்க கிளையண்ட்டுகளைக் கூட்டிச் சென்று, ‘திஸ் கேம் இஸ் பேஸ்பால்’ஸ் கிராண்ட்பா,‘ என்று கதைவிட்டு அசத்தியிருக்கிறேன்.

‘எம்எஸ்டி’ என்பதை மரியாதைக்குரிய இனிஷியலாகவும், ‘தோனி.. தோனி.. தோனி..’ என்பதை கிட்டத்தட்ட மந்திர உச்சாடனம் அளவிற்கும் மாற்றிய, மஹேந்த்ர சிங் தோனிதான் பாரதத்தின் தற்கால மித்தாலஜிக்கல் ஹீரோ ஈக்குவலண்ட். பல தசாப்தங்களாக ஸ்ட்ரிக்ட் ஹிந்தி எதிர்ப்பு டயட்டில் உள்ள மற(ர!)த்தமிழர்களை, ‘விசில் போடு’ம் விசிறிகளாக மாற்றிக்காட்டிய இந்திக்காரர் இந்த இந்திரஜால தல. 

இணையற்ற விளையாட்டுத் திறன், இயல்பான தலைமைப் பதவி வகிக்கும் லாவகம், அன்பிலீவபிள் கெரியர் டிராஜக்ட்டரி எல்லாம் தாண்டி, மகத்தான ஒரு மனிதனாக, ‘தல போல வருமா!’ என்று எண்ணற்றோரை வியக்க வைக்கும் இந்த ஜென் மாஸ்டர் போன்ற சாதனையாளரின் வழிகாட்டியாக ஏதேனும் ஹிமாலயன் யோகி இருந்தால் ஆச்சரியமில்லை!

எனிவே, கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளைக் கூட அடியேன் பார்ப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இண்டியா மற்றும் கூகிள் நியூஸில் அவ்வப்போது மற்ற செய்திகளோடு சேர்த்து, க்ரிக்கெட் நியூஸ் படிப்பதோடு சரி. மூன்று முறை சென்னை மாரத்தானில், என்னுடைய குருநாதரின் கிராமிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம், 10 கிமீ போட்டியில் பங்கேற்றிருக்கிறேன் (வேக நடைதான் – நம்மால்தான் ஓட முடியாதே!). வெறுமனே பங்கேற்றதற்கே மெடல் கொடுத்து ஊக்குவித்தார்கள்!

எஸ்.எஸ்.காலனி க்ரிக்கெட் நண்பர்களில் பத்துவும், அவனது தம்பி ஸ்ரீபதியும், இளவயதிலேயே காலமாகி விட்டனர் என்று கேள்விப்பட்டு, வருந்தினேன். சீதாராமன் அந்த ஏரியாவிலேயே டைலர் கடை வைத்திருந்தார்; இப்போது எங்கிருக்கிறாரோ! சத்யா கிடார் வாசித்துக் கொண்டு ஏதோ மியூசிக் ட்ரூப்பில் இருந்ததாகக் கேள்வி.

விஎம்எஸ் வாசன் பிரபல கேட்டரர் ஆகிவிட்டார் என்றார்கள். சமீபத்தில் எங்கள் குடும்ப விழா ஒன்றிற்கு அவர்தான் சாப்பாடு சப்ளை என்று தெரிந்து, ரொம்ப ஆர்வமாக சத்சங்கத்தில் காத்திருந்து, அவனை(ரை!) சந்தித்தேன். தமிழ்ப் படங்களில் வரும் லாங் லாஸ்ட் நண்பர்கள் சீன் மாதிரி இல்லாமல், ஓரிரு நிமிடங்கள் சுருக்கமாகப் பேசிவிட்டு, படக்கென்று காணாமல் போய்விட்டார். மஸ்ட் பீ எ பிஸி பிசினஸ்மேன். ஹ்ம்ம்ம்… என் நீண்ட வெண்தாடியைப் பார்த்து இன்ட்டிமிடேட் ஆகி ‘எதற்கு வம்பு’ என்று கழன்று கொண்டாரா, இல்லை இது முற்றிலும் வேறு வாசனா என்று இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கிறது.

பாலசந்தர், குருமூர்த்தி, நாராயணன், ஹரி, விஜி, ஆண்டாள் போன்ற எஞ்சிய நண்பர்கள் என்ன ஆனார்கள், எங்கு உள்ளார்கள் என்று தெரியாது. யாரேனும் கோராவில் இருந்தால், இவ்விடையைப் படித்தால், கமெண்ட் போட்டால், ‘ஏ, எப்டி இருக்க மாப்ள/ம்மா.. இப்ப என்ன பண்ணிட்டிருக்க..‘ என்று நட்பு தூசி தட்டப்படலாம்!

எபிலாக்: என்னுடைய ஸ்போர்ட்ஸ் கேரியர் ‘கால்’குறையாக நின்றுபோனதாலோ என்னவோ, என்னுடைய பிள்ளையை ஒரு ஸ்போர்ட்ஸ்பெர்ஸனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, மிஸ்டர் & மிசஸ் ஸ்வாமி இருவருமாக இணைந்து அதை சாதித்தே விட்டோம். அவர் உண்மையாகவே ஒரு சர்வதேச விளையாட்டு வீரர். ஆனால், அது பற்றி வேறு ஒரு தருணத்தில்…

கு: மதுரை ஸ்பெஷல், பால்ய கால மலரும் நினைவுகளை, வாசக அன்புள்ளங்களுடன் பகிர வாய்ப்பளித்த வினாவிற்கு நன்றி.🙏  ச்சாவ்!👋🏼

பி.கு: என்னுடைய இல்லத்தரசி, அவருடைய பள்ளிக்கால தோழர்/ழிகளுடன் இன்னமும் தொடர்பிலிருக்கிறார். மதுரை டிவிஎஸ் சுந்தரம் மேனிலைப்பள்ளி மாணாக்கர்களான அவர்கள் அனைவரும், தினசரி வாட்ஸாப் அளவலாவல்கள், பிறந்த/திருமண நாள் வாழ்த்துக்கள், வருடாந்திர கெட் டுகெதர் (கரோனா காலத்திற்கு முன் வரை), வீடுகளுக்கு விஸிட் அடித்து சந்தித்தல், பிள்ளைகளின் திருமண விழாக்களில் பங்கெடுத்தல் என்று, தங்களது குழந்தை/இளமைப்பருவ நினைவுகளின் தணல் அணைந்து விடாதவாறு பாதுகாத்து வருகிறார்கள். பேச்செல்லாம் இன்னமும் ‘வாடா.. போடி..’ ரகம் (ஒரு சிலருக்கு ஏற்கனவே பேரக் குழந்தைகள்!).

அடியேன் இதற்கு நேர் எதிர். என்னுடைய எழுத்தை (வாட்ஸாப் பகிர்வு வழியே) வாசிக்கும் ஓரிரு கல்லூரி நண்பர்கள் தவிர்த்து, வேறு எவருடனும் தொடர்பு ஏதுமில்லை. பள்ளி/கல்லூரி வாட்ஸாப் க்ரூப்பிலோ, வேறு எந்த சமூக ஊடகக் குழுக்களிலோ நானில்லை. அதுபற்றிய வருத்தமும் ஏதுமில்லை. டிஃபரண்ட் ஃபோக்ஸ்.. டிஃபரண்ட் ஸ்ட்ரோக்ஸ்.. என்கிற மாதிரி, ஹோமோ சேப்பியன்கள் என்ற உயிரினத்தில்தான் எத்தனை வகை ஆச்சரியங்கள்! 🤓

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பெற்ற வெற்றிகளில் பெருமை தரும் வெற்றி எது!

எது வெற்றி என்பது நாம் வாழும் காலம், சூழல், நிலை, தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வெற்றி, தோல்வி என்பதை பைனரியாகவோ (இருமை), எதிர்மறையாகவோ பார்ப்பது மிகவும் மேம்போக்கான கண்ணோட்டம். இப்பதிவைப் பொறுமையாகப் படிப்போரில் சிலரேனும் இறுதியில், ‘ஹ்ம்ம்ம், தட் வாஸ் இண்டீட் அன் இன்ட்டரஸ்ட்டிங் இன்ஸைட்,’ என்று ஆமோதிக்கலாம்!

மிக இளம் வயதில், அதாவது பால பருவத்தில், போட்டிகளில் (பேச்சு, ஓவியம், இசை, விளையாட்டு, இத்யாதி…) ஏதாவது ஒரு பரிசு கிடைத்தாலே மிகப்பெரிய வெற்றி பெற்றதாகத் தோன்றும். அவ்வாறுதான் பெற்றோரும், மற்றோரும் கூறி நம்மை ஊக்கப்படுத்துவர்.

வளர வளர, நம்மைப்போன்றோ, நம்மை விடச் சிறப்பாகவோ, திறன் மற்றும் திறமை உடையோர் உலகில் பலர் உளர் என்பது தெரியவர, போட்டியிட்டு முதற்பரிசு [அ] தரவரிசையில் முதலிடம் பெறுவதே வெற்றி என்று தோன்றும். ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்‘ என்பதெல்லாம் இடம், பொருள், ஏவல், செல்வம், செல்வாக்கு போன்ற பலவற்றைச் சார்ந்தது என்பது இந்நிலையில்தான் புரியத் துவங்கும்.

இது அடியேன் வாழ்விலும் எல்லோரையும் போலத்தான் இருந்தது. பள்ளியிலும், கல்லாரியிலும் பல போட்டிகள்.. பல பரிசுகள்.. பாராட்டுக்கள்.. ஜஸ்ட் மிஸ்டு ரக தோல்விகளும்தான்…

பள்ளிப்பருவத்தில் தீவிரமான விளையாட்டு ஆர்வம் கொண்டவனாக, பல விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தடகள விளையாட்டு தொடர்பான ஒரு விபத்தில், இடது கால் செயலிழந்து விட்டது. காலாண்டுத் தேர்வு எழுதும் சமயத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை. லிட்டரலாகப் படுத்த படுக்கை. இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து, நான் மீண்டும் எழுந்து நடப்பதற்குப் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஐவருள் மூத்த பிள்ளைக்கு இப்படி ஆனதில், என் பெற்றோர் பதறிப் போயினர் (‘பிள்ளை மீண்டும் நடப்பானா.. மாட்டானா.? முருகா.. தாயே மீனாக்ஷி.. எப்படியாவது மறுபடி நடக்க வைத்து விடுங்கள்..!’).

கல்வி, கலை, விளையாட்டு என்று பல துறைகளில் ஆர்வமும், திறமையும் உள்ள ஒரு இளைஞ/ஞிக்கு, இம்மாதிரியான  எதிர்பாராத, அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு மிகப்பெரிய பின்னடைவாக  அமைந்து விடக்கூடும். இறையருளால், இச்சமயத்தில் என்னை நோக விடாமல், ஊக்குவித்தோரே அதிகம். குறிப்பாக என் குடும்பத்தினர் மற்றும் உறவினர் சிலர். மெல்ல எழுந்து, நடந்து, மீண்டும் கல்வியைத் தொடரத் தயாரானபோது, அரசு அலுவலரான என் தந்தை வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர்  செய்யப்பட, அதுவரை நடந்தவற்றை அவ்வூரிலேயே விட்டுவிட்டு நகர்ந்தேன்.

அடுத்த ஆண்டு, வேறு ஊரில், புதிய பள்ளியில், அதுவரை அறியாத சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், பத்தாம் வகுப்பை மீண்டும் படித்தபோது, எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் போல், இதுவரை என் வாழ்நாளில் யாரையும் சந்திக்கவில்லை எனலாம். நடந்தால் போதும் என்ற நிலையில் (சைக்கிளும் ஓட்டத் துவங்கிவிட்டேன் மறுபடியும் – குடிநீரைக் குடத்தில் பிடித்து, எடுத்து வரவேண்டிய ஊர் என்பதால் நோ ச்சாய்ஸ்), விளையாட்டுக்கு முற்றும் போட்டுவிட்டு (பாரத மாதா தனக்கு அம்மாதிரி ஒரு ஒலிம்பிக் லெவல் ஓட்டப்பந்தய வீர மகன் இருப்பதை அறிந்ததாகத் தகவலில்லை), படிப்பில் முழு கவனமும் திரும்ப, வகுப்பெடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் என்னை “நீ கண்டிப்பாக மாநில அளவில் ரேங்க் எடுப்பாய்,” என்று நேரடியாகக் கூறி ஊக்கப்படுத்தி, அவ்வருடம் மாநிலத் தரவரிசை (state rank) பட்டியலில் இடம்பெறச் செய்தே விட்டனர். இப்பிறவியில் அது நிச்சயம் ஒரு மைல்கல் எனினும், அதுவும் கடந்து போனது.

பிளஸ் ட்டூவில் அதே அளவு பெர்ஃபார்ம் பண்ண முடியாமல் போக (மேல்நிலைப்பள்ளி காலத்தில் பொதுவாகவே மாணவர்/விகளுக்கு கவனச்சிதறலுக்கான வாய்ப்புகள் அதிகம் – இது தற்காலத்தில் சமூக ஊடகங்கள் + செயலிகள் தயவில் ரொம்பவே ஆம்ப்ளிஃபை ஆகிவிட்டது), சென்னை, கோவை பெருநகர்க் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல், சிவகாசி அருகிலுள்ள கல்லூரியில்தான் பொறியியல் படிக்க வேண்டிதாகிவிட்டது (நோ ரெக்ரெட்ஸ் தோ – மிகத் தரமான கல்லூரிதான்).

பின்னர் கல்லூரிக் காலத்தில், விகடனில் முதல் சிறுகதை வெளிவந்தது ஒரு மகத்தான மைல்கல். ஒருபக்கக் கதைதான் என்றாலும், கதையின் முடிவை மட்டும் ஆசிரியர் மாற்றிவிட்டாலும், பதிப்பில் வெளிவந்தது வந்ததுதானே. ஏதோ சன்மானம் கூட மணி ஆர்டரில் வந்ததென்று ஞாபகம். அதே காலத்தில் ஆதர்ச எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்தித்து அளவளாவும் வாய்ப்பும் கிட்டியது. என் போன்ற கத்துக்குட்டி எழுத்தாளருக்கு இதுவே புக்கர் பரிசு பெற்றதற்கு ஈடு!

https://tinyurl.com/QV-SujathaDarshan

ஆனால், அதன்பின்னர் எழுத்துலகில் பரிமளிக்க என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவோர் யாருமின்றி, ஏதாவது நோட்டுப் புத்தகம் [அ] பேப்பர்களில் தார்மீகக் கோபம், காதல், இத்யாதியைப் பற்றிக் கவிதைகள் அவ்வப்போது எழுதியதோடு எமது எழுத்துப்பணி ப்பாஸ் ஆகிவிட, தமிழ் கூறும் நல்லுலகம் அடுத்த தலைமுறை சுஜாதாவை (ஆஹா, என்ன ஒரு நெனப்பு அண்ணனுக்கு!) இழந்தது.

அடுத்த படித்து முடித்து, பட்டம் வாங்கி (பொறியியல் பட்டப் படிப்பில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கியதும் நடந்தது – ஆனால் அப்போது நான் வருந்தியதென்னவோ, ‘பெஸ்ட் ஒளட்கோயிங்க் ஸ்டூடெண்ட்’ பட்டத்தைத் தவற விட்டதைப் பற்றித்தான்), வேலை தேடி, சொந்த ஊரிலேயே முதல் வேலை வாய்ப்பைப் பெற்று (படிப்பினால் அல்ல, பேச்சுத் திறமையால்!), உழைத்து, திருமணம் புரிந்து, வேறு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று, சென்னைக்கு ஜாகை மாற்றி, பிள்ளை பெற்று, வெளிநாட்டுக்குப் போய் வாழ்ந்து திரும்ப வந்து, கார் வாங்கி, வீடு வாங்கி, ஈ.எம்.ஐ கட்டி, மேலும் உழைத்து, பதவி உயர்வுகள் பெற்று, மேலும் இன்க்கம் டாக்ஸ் கட்டி… இவ்வாறு ஒரு சாதாரண நகர்வாழ் மதியமராகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இடையிடையே, பல தளங்களில், களங்களில் ஏதேதோ போட்டிகள்.. என்னென்னவோ சவால்கள்.. எத்தனையோ சாதனைகள்.. வெற்றிகள். அதையெல்லாம் லாங் லிஸ்ட் போட்டால் அபத்தமாக இருக்கும்.

இவையெல்லாம் ஒரு நிலையில் அலுத்துப்போய், 45லேயே (ஒரிஜினல் திட்டம் 50ல் – இதை என்னுடைய நிதி ஆலோசகர் இப்போதும் நினைவு கூர்ந்து குறிப்பிடுவார்) பிழைப்புத் தளத்திற்கு ச்சாவ் சொல்லி, விருப்ப ஓய்வு பெற்று விலகிவிட்டேன். திட்டமிட்ட ஓய்வு பெரிய அளவில் தடுமாற்றமின்றி ஓடிக்கொண்டிருக்கிறது – இதுவரையில். பெரும் சொத்தோ, பின்புலமோ இல்லாமல், சுய உழைப்பால் வாழ்வில் உயர்ந்த ஒரு சாமான்யனுக்கு, 9-x ஓய்வற்ற பிழைத்தலிலிருந்து, நாற்பதுகளில் ஈட்டிய இத்தகைய விடுதலை பெரும் வெற்றியே என்பதைக் கூறத் தேவையில்லை. https://bit.ly/3zxClfe

பிள்ளை/கள் பிறந்து, ஆரம்ப கால “அப்படியே எ/உன்ன உரிச்சு வெச்ச மாதிரி இருக்காப்ல இல்ல” (உண்மையில் பிறந்த குழந்தைகள் எல்லோரும், உலக அளவில் ஒரே மாதிரிதான் இருப்பார்கள் – நிறம் மற்றும் முடி மட்டும் வேண்டுமானால் வேறுபடலாம்) கொஞ்சல்; ‘ஓஎம்ஜி’ கொண்டாட்டம்; நாக்ட்டர்னல் நாலு மாதக் குழந்தையால் தூக்கம் கெட்டு தாவு தீர்ந்து போய் நடக்கும் சண்டை; “ஏன், நீங்க டயப்பரை மாத்தினா தேஞ்சு போயிருவீங்களோ..” சச்சரவு எல்லாம் நடந்து முடிந்தபிறகு, குழந்தை/கள் ஏதேனும் பயிலத்துவங்கும் நிலையை அடைந்தவுடன், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதிலிருந்து, நமது குழந்தையின் வாழ்க்கை, அவரது வெற்றி என்று கவனம் தானாகவே திரும்பிவிடும். பெரும்பாலான பெற்றோர்களது நிலை இதுவே – குறிப்பாக பாரம்பரிய கலாச்சாரத்தில் வளர்ந்த பாரத தேசத்தவருள் (பொதுவாக மேலை நாடுகளில் தனிமனித / தன்னுடைய வெற்றிதான் இறுதிவரை முக்கியம் – பெரும்பாலானோருக்கு).

எனவே, இதுபற்றி வள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டீவீட்டி விட்டார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.‘ (குறள் #69)

பிள்ளையை/களைப் பெற்ற தாயைப் பொறுத்த அளவில், தன்னுடைய குழந்தை (இருபாலரும்தான்) சான்றோன் (திறன் மிகுந்தவன்/ள்) எனப் பிறரால் அங்கீகரிக்கப்படுவதுதான் மிகப்பெரிய வெற்றி. இவ்வினாவிற்கு ஏற்கனவே விடையளித்த பலர் (தாய், தகப்பன் இருவரும்) இதைக் குறிப்பிட்டிருப்பதே, வள்ளுவர் வாய்மொழிக்குச் சான்று.

எனில் தந்தை எதனை வெற்றியாகக் கருதுவார்? அதற்கும் வள்ளுவரே விடையளிக்கிறார் – ஆனால் ஒரு சின்ன ட்விஸ்ட்டோடு. முதலில் தந்தை பிள்ளைக்கு என்ன செய்யவேண்டும் என்று ‘கடமை’ பற்றிக் குறிப்பிடுகிறார். பிள்ளையை/களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாலும் தாய்தான் என்பதால், அவருக்குத் தனியாக கடமை எதுவும் குறிப்பிடப்படவில்லை போலும்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.‘ (குறள் #67)

தன் பிள்ளையை (இங்கு பிள்ளை என்று குறிப்பிடுவது பொதுவாக குழந்தையை என்றே கொள்க; பையன், பெண் என்ற பாகுபாடு அர்த்தமற்றது – குறிப்பாகத் தற்காலத்தில்) அறிவுடையோர் (திறனுடையோர் என்றும் கொள்ளலாம்) உள்ள அவையில், முதன்மையானவராக ஆக்குவது தந்தையின் கடமை என்கிறார்.

ஆக, எந்தவொரு தந்தைக்கும், தன்னுடைய குழந்தையை(களை)த் தன்னைவிடச் சிறப்பான நிலைக்கு உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் – கல்வி, கலை, விளையாட்டு போன்று எத்துறையாக இருந்தாலும் – செய்வதுதான் தலையாய கடமை என்கிறார் வள்ளுவர்.

சரி, கடமை புரிகின்றது. ஆனால், ‘தந்தை மகற்காற்றும் கடமை‘ என்று கூறாமல், ‘நன்றி‘ என ஏன் கூறுகிறார்? இதற்கான விடையை அறிய, அதே அதிகாரத்தில் சற்று முன்பாக இருக்கும் குறளுக்குப் போக வேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.‘ (குறள் #61)

வாழ்வில் அறியவேண்டியவற்றை அறியக்கூடிய நன்மக்களைப் பெறுவதை விட வேறு பெரிய பேறு ஏதுமில்லை (பெற்றோருக்கு).

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.‘ (குறள் #62)

(சமூகத்தில் / உலகில்)பழி ஏதும் ஏற்படாத வகையில் வாழக்கூடிய நற்பண்புகளை உடைய பிள்ளைகளைப் பெற்ற தாய்/தந்தையரை, ஏழு பிறப்பிலும் தீமை அண்டாது.

ஆக, நல்லறிவும், நற்பண்பும் கொண்ட பிள்ளைகளைப் பெறுவதே பெற்றோருக்குப் பெரிய பயன்தான் என்கிறார் வள்ளுவர். அத்தகைய பிள்ளைப்பேறானது, பரஸ்பர நிதியில் (mutual fund) சேமித்த செல்வம்போல் தழைத்து வளர்ந்து, (இறுதிக்காலம் போன்ற) தக்க சமயத்தில் பெற்றோருக்குக் கைகொடுக்கும் என்பது திண்ணம். 

சரி, இவ்வாறு பிள்ளைகளைச் சிறப்பாக, சான்றோராக, அவையத்தில் முந்தியிருப்பச் செய்வதால் பெற்றோருக்கு வேறு பலன் ஏதேனும் கிட்டுமா?

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.‘ (குறள் #68)

நம்முடைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக, திறன் மிக்கவர்களாக ஆவதால், நமக்கு  மட்டும் நன்மை / பெருமை இல்லையாம். அத்தகையோரின் உயர்வு, உலகிற்கும், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் இனிமை (பயன்) தருவதாம். இதைவிடப் பெரிய வெற்றி என்ன வேண்டும் பெற்றோருக்கு!

பை தி வே, அம்மாதிரி பிள்ளைகளின் வெற்றியை, உயர்வை முதன்மைப்படுத்திச் செயல்படும் தந்தைகளுக்கு (அட, தாய்மாருக்கும்தாங்க) அப்பிள்ளைகள் செய்யக்கூடிய கைம்மாறு என்னவாக இருக்கும் என்பதைக் கூறிவிட்டுத்தான், வள்ளுவர் ‘மக்கட்பேறு’ (பிள்ளை / குழந்தைப்பேறு) என்ற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ (குறள் #70)

‘இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் (குழந்தையை) பெற, இவரது தந்தை (+ தாய் – goes without saying) என்ன தவம் செய்தாரோ,’ என்று காண்போரை வியக்க வைப்பதுதான், நல்லறிவும், நற்பண்பும் உடையவனா/ளாகத் தன்னை வளர்த்த பெற்றோருக்கு அக்குழந்தை செய்யும் உதவியாம் (கடமை / கைம்மாறு).

அடியேனும், எனது வாழ்க்கைத் துணைவியும், எங்களது ஒரே பிள்ளையை, வள்ளுவர் வாய்மொழிப்படியே வளர்த்து ஆளாக்கியுள்ளோம் என்று உறுதியாக நம்புகிறோம். திருவருளும், குருவருளும் இதற்கு வழிகாட்டின என்பது எமது நம்பிக்கை. அவரது குறிக்கோளை எட்டி, வாழ்வில் பல வெற்றிகளை அவர் அடைவார் என்பது சர்வ நிச்சயம். அதற்கான கைம்மாறு எதுவும் அவர் செய்யத் தேவையில்லை என்கிற தெளிவு எங்களுக்கு இருந்தாலும் (இதை அவரிடமே நேரடியாகக் கூறியும் விட்டேன்!), செய்யத் தயங்கவோ, தவறவோ மாட்டார் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமுமில்லை.https://qr.ae/pGZipe

இவ்வகையில் ஏற்கனவே செயல்பட்ட/படும் பெற்றோருக்கு நமது வந்தனங்கள். இனி அவ்வாறு செயல்பட விழைவோருக்கு நம் வாழ்த்துக்கள்!

கு: 90களில் கைவிட்ட எழுத்துத் திறனை, ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், வலைப்பதிவு (blog) எழுதுவதன் மூலம் மறுபடி ஆக்சிஜன் கொடுத்து உயிர்ப்பித்தேன். நூற்றுக்கணக்கான பதிவுகளுக்குப் பின்னர், கடந்த சில  ஆண்டுகளாகத்தான், என்னுடைய எழுத்தை விரும்பி வரவேற்றுப் பாராட்டும் நல்வாசகர்களைக் கோராவில் கண்டுகொண்டேன். களிப்புற்றேன். தற்போது ‘வெற்றி’ பெறும் நோக்கமெல்லாம் ஏதுமில்லை என்பதால், தெரிந்த + அறிந்ததை எழுதுதிப் பகிர்வதே ஆனந்தம் அளிக்கின்றது. அதுவே போதுமானது.

பி.கு: ஆன்மீகத் தளத்தில் உலவத் துவங்கி, குருவருட் கருணை மழையில் நனைந்த பின்னர், வெற்றி/தோல்வி ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்பது தெளிவாகிவிட, போட்டி, பொறாமை, கர்வம், பெருமிதம் போன்றவற்றுக்கு விடைகொடுத்து அனுப்பியாகிவிட்டது. ஆகவே, இவ்விடைக்குப் பெருத்த ஆதரவு கிட்டினாலும், வெறும் நாலைந்து பேர் மட்டுமே ஆதரவு வாக்கைச் சொடுக்கினாலும், நாம் இரண்டையும் சமமாகவே  பாவிப்போம்; இயல்பாகவே ஏற்றுக்கொள்வோம்!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

பிள்ளைகளைப் பற்றிப் பெற்றோர் காணும் கனவு!

உங்கள் பிள்ளைகளைப் பற்றி என்ன கனவு காண்கிறீர்கள்?” என்ற வினாவிற்கு ஸ்வாமி அளித்த Quoraவிடை ~ https://qr.ae/pGZipe

முதலில் ‘பிள்ளைகள்.’ நான் குழந்தையாக இருந்த காலத்திலேயே பல பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் விண்ட்டேஜ் வஸ்துவாகத் துவங்கிவிட்டன. என் பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள். ஒற்றை வருவாயில் எப்படியோ சமாளித்து எங்களைப் படிக்க வைத்து, ‘இனி உழைத்துப் பிழைப்பது மகனே உன் சமர்த்து‘ என்று பை சொல்லி சிற்றூரிலிருந்து பெருநகரத்திற்கு எங்களை ஒவ்வொருவராக அனுப்பி விட்டனர். அவர்களுக்கு எமது வந்தனங்கள்.

எங்கள் தலைமுறையில் பலருக்கு இரண்டு குழந்தைகள். அதுவே எக்கனாமிக்கல் மற்றும் காம்ப்பெட்டிட்டிவ் கண்ணோட்டத்தில் அபத்தமாகத்தான் தோன்றுகிறது. இந்தத் தலைமுறையில் ஏதோ வேண்டுதல் மாதிரி இரண்டு பெற்றுக்கொள்வோரை
எந்த தைரியத்துலங்க ரெண்டு பிள்ளை பெத்துக்கறீங்க.. ப்ரீ-ஸ்கூல் அட்மிஷன் + ஃபீஸ் கட்டவே பேங்க் லோன் போட வேண்டியிருக்குமே – கார், ஹோம் லோன் ஈ.எம்.ஐ போக.. அதுக்கப்புறம் அவுங்க மினிமம் இன்னும் 15-16 வருஷம் படிச்சாகணும்.. அப்புறம் வேலைல செட்டில் ஆகிற வரைக்கும் உள்ள செலவு.. கல்யாணம்..‘ என்று கேட்கத் தோன்றுகிறது.
ஃபேமிலி கார்பன் ஃபுட்ப்ரிண்ட் டாக்ஸ்‘ என்று ஏதாவது புதிய வரி விதித்தால்தான் ஒன்றோடு நிறுத்துவார்கள் போலிருக்கிறது!

எனக்கு ஒரே பிள்ளை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அடியேன் திட்டமிட்டதே அவ்வளவுதான். ‘ஒருவேளை ட்வின்ஸ் பிறந்தால்!‘ என்ற ஆர்வத்தில், ஆண்-ஆண் மற்றும் பெண்-ஆண் காம்பினேஷனுக்குப் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருத்தோம். அதற்குத் தேவை ஏற்படவில்லை.

ஒன்றுக்குமேல் பெற்றுக் கொண்டு, பெற்ற அனைவரையும் ஆவரேஜ் ஆக வளர்க்க விரும்பாது, ஒன்றே ஒன்று பெற்று, அதை நன்றே வளர்க்க விரும்பினோம் – நிஜமாகவே (இதெல்லாம் சினிமா மாதிரி வெறும் டயலாக் இல்லைங்க.. அத்தனையும் புனிதநூல் மேல் சத்தியம் செய்யக்கூடிய உண்மை). பின்னர் அவருக்கு உடன்பிறவா சகோதரிகளாக நான்கு கால்களும், ஒரு வாலும் கொண்ட இருவர் பின்னர் குடும்பத்தின் அங்கத்தினராகினர் (அவரேதான் ஏதோ பொம்மை வாங்குகிற மாதிரி ஒரு ‘வெட்’டிடமிருந்து தூக்கிக் கொண்டு வந்து விட்டார் – வளர்ப்பதென்னமோ நாங்கதானே.. இன்றுவரை). இதுவே இன்றைய பொருளாதாரச் சூழலில் பெரிய குடும்பம்தான் – குறிப்பாக அடியேனைப் போன்ற மத்யமர்களுக்கு!

பெற்ற ஒற்றைப் பிள்ளையைப் பொறுத்தவரை எனக்கு ஒரே கனவுதான் இருந்தது – அவரை ரன்-ஆஃப்-த-மில் ரக ‘படி-வேலை பார்-கல்யாணம் செய்‘ டிரைடு & ட்டெஸ்டட் மாடலில் வளர்க்கக் கூடாது என்பதுதான் அக்கனவு.
பிராக்ட்டிகலாக இதை முயல – குறிப்பாக இந்த தேசத்தில் – ரொம்பவே தில் வேண்டும். கொஞ்சம் டிஸ்ப்போஸபிள் வருவாயும் வேண்டும். நல்ல வேளையாக, யாரிடமும் கையேந்தத் தேவையின்றி, இறையருளால் என்னிடம் இரண்டுமே இருந்தது.

படம்: பல்லாண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிலி – மேலைநாட்டில் சிலகாலம் ஐ.ட்டி பிழைப்பு நடத்திய காலத்தில் (இடம் – மின்னஸோட்டா மாகாணத்தின் புகழ்பெற்ற நார்த் ஷோரில், ஒரு ஏரிக்கரை)!

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இம்மாதிரி முடிவெடுத்து, வித்தியாசமான கனவை நனவாக்க முயன்ற எங்களை நெருங்கிய சுற்றத்தார் கூட
இவிங்களுக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… புள்ளய ஒழுங்கா படிக்க வைக்காம, வெளையாட வெக்கப் போறாய்ங்களாமில்ல…‘ என்றுதான், முதல் அலையில் கோவிட்-19 தொற்றுநோயைத் தேடிப் பெற்ற பேஷண்ட் மாதிரி எங்களை துச்சமாகப் பார்த்தார்கள்.

சமூகத்தின் அங்கமாக வாழும் கட்டாயத்தில் இருப்போருக்கு இந்த மாதிரியான திங்க்-ஆப்போஸிட் ரக முயற்சிகள் ஒரு தவம் மாதிரி. கடுமையான முயற்சிகள் வேண்டும். எதிர்பார்த்த ரிஸல்ட் வருவதற்கு ரொம்ப காலம் ஆகும். ஏகப்பட்ட இடித்துரைத்தல், வஞ்சப் புகழ்ச்சி, கிண்டல், ரிஜெக்ஷன் ஆகியவற்றை எதிர்கொண்டாக வேண்டும். பிழைப்புத் தளத்தில் ட்டெம்ப்ளேட் வாழ்க்கை வாழ்வோருக்கு நம்முடைய கஷ்டம் புரியாது என்பதால், பெரிய அளவில் ஸப்போர்ட்டும் கிடைக்காது. பெற்றோர்களுக்கு மட்டுமல்லாது, குழந்தைக்கும் இது பெரிய சேலஞ்ஜ்தான். இயல்பான குழந்தைப் பருவத்தின் அம்சங்கள் பலவற்றைக் கைவிட / ஒத்திப்போட வேண்டியிருக்கும்.

பல விளையாட்டுகளுக்கான பயிற்சியில் அவரைச் சேர்த்து விட்டு, ஏதாவது க்ளிக் ஆகிறதா என்று பார்த்ததில் (‘என்னப்பா எப்பப் பார்த்தாலும் ச,ரி,க,மன்னு ஒரே மாதிரி பாடச் சொல்றாங்க’ என்று இசையைக் கைவிட்டு விட்டார் ஓரிரு நாட்களிலேயே), ஒன்றே ஒன்று மட்டும் ரெஸோனேட் ஆக, சரி இதுதான் இவரது களம் என்று முடிவெடுத்து கவனம் செலுத்தத் துவங்கினோம். விரைவிலேயே அந்த விளையாட்டு நடைபெறும் இடங்களில் எல்லாம் அவரது பெயர் பலருக்குப் பரிச்சயமானது. வரிசையாகப் பரிசுகளையும் வெல்லத் துவங்கினார். எங்களது வேகமும், செலவும், உழைப்பும் அதிகரிக்கத் துவங்கியது.

ஒரு கட்டத்தில், ‘படிப்புத்தான் முக்கியம்’ என்று பிரஷர் கொடுக்கத் துவங்கியதால், பள்ளியைக் கூட மாற்றினோம் – அவர்  விளையாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று. இருந்தாலும் படிப்பும் இணை தண்டவாளம் போன்று தொடர்ந்தது. தற்காலத்தில் விளையாட்டு ஒரு வைய்யபிள் கெரியர் ஆப்ஷனாக ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டது நம் தேசத்தில் கூட. ஆனாலும், அடிப்படையான கல்வி என்பது ரொம்பவே முக்கியம். ஏனெனில் விளையாட்டு – குறிப்பாக ஃபிஸிக்கல் வகை – சாஸ்வதமான ஒன்றல்ல. அதற்கு எக்ஸ்பயரி டேட் நிச்சயமாக உண்டு.

பல வருடங்கள் வெற்றிகரமாக இருகுதிரைச் சவாரி (படிப்பு + விளையாட்டு) செய்து, ஒரு வழியாக பிள்ளையார் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து (ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் கொடுத்தார்கள் – கொஞ்சம் டார்ச்சர் பண்ணிய பிறகுதான்) பொறியியல் பட்டமும் பெற்று, விளையாட்டிலும் உலகத் தரவரிசையில் இடம் பெறும் நிலைக்கு வெகு அருகில் வந்து விட்டார் – சுமார் ஒண்ணரை வருடங்களுக்கு முன்பாக.

வாழ்க்கையில் அக்கணம் ஒரு மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட். நாங்கள் இருபது வருடக் கனவு மெய்ப்படப் போகின்றது என்ற பெருமிதத்தில் மிதந்தோம். அந்த க்ரூஷியல் நேரத்தில்தான் மனித இனத்தையே மண்டியிட வைத்த கோவிட்-19 பெருநோய்ப் பரவல் துவங்கியது. (இந்த இடத்தில் பயங்கரமான டெமாலிஷன் ரக ஓசையுடன், சோகமான பி.ஜி.எம். சேர்த்துக் கொள்ளவும்).

கோவிட்-19 பண்ணிய அட்டகாசத்தில், பயணம் என்பதே சாத்தியமில்லாமல் போனது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணத்திற்கு வாய்ப்பே இல்லை. அச்சமயத்தில் உலகத் தரத்திலான போட்டிகள் எதுவும், எங்கும் நிகழவில்லை. உலக அளவில் ஓப்பன் ரக போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறாமல், தரவரிசையில் உயரவும், டாப் லெவல் டைட்டிலைப் பெறவும் வாய்ப்பில்லை. பிள்ளை அவர்கள் உச்சத்தைத் தொடத் தயார் நிலையில் இருந்தாலும் (இதற்காக விலை உயர்ந்த ஹை.எண்ட் லேப்டாப்பை, கடைகள் அவ்வளவாகத் திறக்காத நிலையில், ஊரெல்லாம் தேடி அலைந்து வாங்கியது மற்றொரு பரபர நிஜக் கதை), எதுவுமே செய்ய இயலாத வகையில் எங்களது திட்டங்களெல்லாம் அப்படியே ‘டே ஆஃப்ட்டர் ட்டுமாரோ’ டிசாஸ்டர் பட ஸீன் போல ஃப்ரீஸ் ஆகி நின்றன.

ஏதோ வந்தோமா, போனோமா என்றில்லாமல் இந்த சாமர்த்திய வைரஸ் விதவிதமாக ம்யூட்டேட் ஆகிப் பரவிக்கொண்டிருக்க, தடுப்பூசி அதிவேகத்தில் உருவாக்கப்பட்டாலும் கூட உலக ஜனத்தொகை அனைத்திற்கும் அதைப் போடுவதில் உள்ள பிராக்ட்டிக்கல் பிரச்சினைகளாலும், இந்த நிலைமை மாறுவதற்கு வருடக்கணக்கில் ஆகிவிடும் என்று தெரிய வந்தபோது, தன் எதிர்காலத்தைப் பற்றித் தெளிவான ஒரு முடிவைப் எம் பிள்ளை எடுத்தார். ‘நான் விளையாட்டில் மேலும் சிறப்பாக உயரும் திட்டத்தை எல்லாம் அப்படியே ப்பாஸ் பண்ணிவிட்டு, பட்ட மேற்படிப்புக்கான முயற்சியில் இறங்கப் போகிறேன்‘ என்றார்.

இருபதாண்டுக் கனவு எங்கள் கண்முன்னே குழந்தைப் பருவத்தில் ரயிலிலும், காரிலும் ஊர் ஊராக தேசமெங்கும் சென்று விளையாடியதில் துவங்கி, வளர்ந்தபின்னர் உலகெங்கும் பறந்து செய்து விளையாடிய காலம் வரை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு ஆகி ஓடி, ‘என்னண்ணே, இப்படி லாஸ்ட் மைல் மட்டும்தான் பாக்கி இருக்கறப்ப, ஆர் யூ ரியலி கோயிங் ட்டு டிராப் த பால் நௌ,‘ என்று ஏளனமாய்க் கேள்வி கேட்டது. அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் பண்ணாமல், சூழ்நிலைக்கேற்ற வகையில் ரெஸ்பான்ஸ் மட்டும் தர வைத்தது குருவருளே என்பது திண்ணம்.

இங்க பாருப்பா, உன்னை வித்தியாசமான வகையில் வளர்க்க நாங்கள் ஆசைப்பட்டது உண்மை. எப்படியோ எங்கள் ஆசையும், உன்னுடைய ஆர்வமும் ஒத்துப் போக, இரு துறைகளிலுமே நீ சிறப்பாக உயர்ந்தது பெரிய விஷயம். இனி உன் வாழ்க்கையில் என்ன செய்வது என்பது முற்றிலும் உன்னுடைய முடிவே. யூ ஆர் அன் அடல்ட் நௌ. நீ சம்பாதித்து எங்களுக்கு சோறு போட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. என்னுடையது பிளாண்ட் ரிட்டயர்மண்ட்தான் என்பதால், எத்தனை காலம் ஆனாலும் நம் மூவருக்கும் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, ப்ரீபெய்டு ரீசார்ஜ், பிராட்பேண்ட் மற்றும் ஸ்கூட்டர்+பைக்+காருக்கு பெட்ரோல், இன்ஷ்யூரன்ஸ் ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உன் முயற்சி திருவினையாக எங்களால் இயன்ற உதவியை நாங்கள் நிச்சயமாகச் செய்வோம். பட் ஜஸ்ட் க்கீப் இன் மைண்ட் தட் மை ஃபைனான்ஷியல் ரிசோர்சஸ் ஆர் செர்ட்டன்லி னாட் அன்லிமிட்டட்‘ என்று கூறி, அவர் விருப்பப்படியே அடுத்த இன்னிங்ஸை ஆட அனுமதித்து விட்டோம்.

படிக்கும் வயதில் பல நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் எங்காவது ட்டோர்னமெண்ட் ஆடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, வெளியே அதிகம் செல்ல முடியாத இப்போது, படிப்பின் மீது அதீத ஆர்வம் வந்து, மேற்படிப்புக்கான முயற்சிகள் அத்தனையையும் அவரே தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார். விரைவில் விரும்பிய இடத்தில், விரும்பிய பட்ட மேற்படிப்பைச் செவ்வனே மேற்கொண்டு, அதன்மூலம் சீரும் சிறப்புமாக வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவார் என்பதில் ஐயமில்லை. விளையாட்டின் மூலம் இடைவிடாமல் கூர் செய்யப்பட்ட திறன்களும், இள வயதிலேயே உலகம் சுற்றி வந்ததன் மூலம் கிட்டிய அனுபவமும், வாழ்வில் வெற்றிபெற அவருக்குக் கைகொடுக்கும் என்பது வெள்ளிடை மலை. குருவருளும், திருவருளும் அதற்குத் துணை நிற்கும்!

குழந்தை பெற்று வளர்ப்பது என்பது 21 வருட புராஜக்ட். அதற்குத் தேவையான கமிட்மெண்ட், டெடிகேஷன், ஆர்வம், ஊக்கம் இதெல்லாம் இல்லையென்றால், பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் சும்மா இரு. ஏற்கனவே பூமியில் மக்கட்தொகை ரொம்ப அதிகம் மற்றும் ரிசோர்சஸ் கம்மி என்பதால், மற்றுமொரு குழந்தையால் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பது நல்லதுதான்.
ஒருவேளை உனக்குக் குழந்தை பிறந்து விட்டால் அல்லது ஏற்கனவே பிறந்திருந்தால் , தயவுசெய்து உன்னைப் போன்ற மற்றொரு முட்டாளை மறுபடியும் உருவாக்க முயலாதே. ஒரு செடியானது இயல்பாக வளர்வதற்கு தேவையானவற்றை மட்டும் நீ ஒரு தோட்டக்காரனைப் போல செய்தால் போதும். உரிய காலத்தில் அதுவாகவே வளர்ந்து, இயல்பாகவே பூத்துக் குலுங்கும்,’
என்று பிள்ளை வளர்ப்பு பற்றி என் குருநாதர் கூறுவதுண்டு. அது முற்றிலும் உண்மை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாக அறிந்துள்ளோம்.

நம்முடைய நிறைவேறாத கனவுகளை நனவாக்க, நம்முடைய குழந்தைகளைக் கருவியாகப் பயன்படுத்துவது என்பது முறையல்ல. தொழிலதிபர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள், நடிகர்கள், அரசியல்வியாதிகள் போன்றோர் லெகஸி என்ற ஃபஸாடுக்குப் பின்னர் ஒளிந்துள்ள சொத்துப் பாதுகாப்புக்காகத் தங்களது பிள்ளைகளைத் தங்களது துறையிலேயே கொண்டுவர பகீரதப் பிரயத்தனம் செய்வது நகைப்பிற்குரியது மட்டுமல்ல; கண்டனத்திற்குமுரியது. இதில் மருத்துவர்களைத் தவிர்த்து, மற்றோரால் உலகிற்குப் பெரிதாக பிரயோசனம் எதுவும் இருக்கப் போவதில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதா என்ன!

குழந்தைகளுக்கென்று இருக்கும் கனவுகள், ஆர்வங்கள், திறன்கள், அவை சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றை அவர்களுடன் சேர்ந்து ரிவியூ பண்ணி, இயன்ற உதவிகளை அளித்து, இலக்கை அடைய உதவுவதே பெற்றோரின் கடமை. ஈன்றபொழுதிற் பெரிதுவப்பதென்பது, எந்தத் துறையில் குழந்தை சிறப்பான நிலையை எட்டினாலும் பெற்றோரால் முடியும். ‘நான் கண்ட கனவை என் பிள்ளை/பெண் நனவாக்கும் போதுதான் பெருமிதம் கொள்வேன்,’ என்கிற மாதிரி பெற்றோரை, மார்ஸில் காலனி அமைக்கச் செல்லும் மஸ்க் அல்லது பேஸோசின் முதல் விண்கலத்தில், எப்படியாவது இலவச டிக்கெட் கொடுத்து பேக் பண்ணி மொத்தமாக அனுப்பி விட வேண்டும்.

மிகப்பெரும் செல்வந்தரான முகேஷ் அம்பானி கூட, தன் பிள்ளைகளை (அவரது தந்தை திருபாய் அம்பானி ஃபிரம்-த-ஸ்க்ராட்ச் உருவாக்கிய) பெட்ரோலியத் தொழில் தாண்டி, ஆன்லைன் ரீட்டெய்ல், டெலிக்காம் போன்ற டிஜிட்டல் யுக பிசினஸ்களைச் செய்ய ஊக்குவிப்பதோடல்லாமல், உடனிருந்து கைடு வேறு பண்ணுகிறார். அவரைப்போல நம்மால் கோடிக்கணக்கில் பிள்ளைகளின் கனவை நனவாக்கச் செலவிட முடியாவிட்டாலும், நம்மைவிட உயர்ந்த நிலையை நமது குழந்தை/கள் அடைய அவர்களை ஊக்குவிப்பதும், வழிகாட்டுவதும் நம்மால் இயன்றதே. ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், சரியான வழிகாட்டியிடம் அவர்களை இணைத்து விட்டு, நாம் ஒரு பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த வாழ்நாளில் நாம் கற்ற+பெற்ற நம்முடைய வாழ்க்கை அனுபவம், நமது அவர்களுடைய ஆர்வத்துடன் இணைந்து மற்றும் இசைந்து செயல்பட்டால், ஒவ்வொரு குழந்தையுமே வாழ்வில் மலர்ந்து, நறுமணம் பரப்பக் கூடும். இதற்குத் தேவை தெளிவான திட்டமிடல் மற்றும் உறுதியான செயலாக்கம்தானே அன்றி, கனவு காணுதல் அல்ல!

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Website Powered by WordPress.com.

Up ↑