மௌனம்! ~ ஒரு க-விதை

மௌனம் ~ ஒரு க-விதை!

.

கல்வி, கேள்வி, விவாதம், வினா-விடை

வாழ்நாள் முழுவதும்

இடைவிடாது பேசி சேர்த்து,

ஓயாது சப்தத்துடன் செலவழித்த,

சொற்களின் பெரும் குவியல்கள்…

எட்டுத் திசையிலும்…

மேலும், கீழும்…

.

வாழ்வு முடியும் கணத்தில்,

கனத்த மௌனத்தின் இருப்பில்,

தேவையற்ற,

பயனற்ற,

அர்த்தமற்ற

குப்பைக் குவியலாகவே

தோன்றுகின்றன…

அத்தனை சொற்களும்!

.

கடைசி மூச்சு வெளியேறும் கணம்…

கங்கைச் சொம்பை எடுத்து வா..

விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லு..

மேலும் சப்தங்கள்..

வெற்று ஓசைகள்…

.

சப்தத்தின் இடையில்தான்

மௌனம் மறைந்திருக்கின்றது.

சப்தமேதுமின்றி…

மௌனத்தின் இருப்பில்தான்

மெய் நிறைந்திருக்கின்றது!

நிறைகுடமாய்…

நீர்தளும்பாமல்…

.

ரத்தமும், மலமும் பூசி

மௌனமான இருட்டறையிலிருந்து

சத்தமான குளிரறைக்குள் இழுக்கப்பட்ட

முதல் அலறல் கணத்திலிருந்து,

இடம், வலம்..

ஈடா, பிங்களா..

சக்தி, சிவம்..

என்னுள்ளேயே இதுவரை

சுற்றி சுற்றி வந்த பிராணன்,

சொல்லாது போனது என்னைவிட்டு…

மௌனமாய்த்தான்!

.

கண் வழியா உயிர் போச்சு பார்த்தாயோ!

கேள்விகள்.. பதில்கள்..

அடடே, ஆஞ்னா வழியாவா.. என்ன பாக்கியம்!

ஆச்சரியங்கள்.. பெருமிதங்கள்..

.

பேசி.. பேசி.. பேசி.. பேசி..

சிதறிக்கிடக்கும் சொற்குவியலிடையே

அர்த்தம் தேடும் அகழ்வாராய்ச்சி

எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு வீடும் கீழடிதானோ!

.

உடலுக்கு உபவாசம் விரதம்.

மனதுக்கு உபவாசம் மௌனம்.

விரதமிருந்ததில்லை பெரிதாக,

இருந்தவரையில்.

இனி இருக்க வேண்டியதுமில்லை!

.

மனம் மட்டும்

சுற்றிச் சுற்றி வந்தது அறையை…

மௌனமாய்…

சுதந்திரமாய்…

யார் கண்ணிலும் படாமல்.

.

எங்கே போயின எண்ணங்கள்!

அலையலையாய் வருமே,

அடங்காமல்…

எத்தனை முயற்சி..

எவ்வளவு பயிற்சி..

மனத்தை அடக்குகிறேன் என்ற பேரில்!

அறியாமைக் கூத்து.

.

அறையின் மையத்தில் நான்.

கிடந்த திருக்கோலம்.

நாராயண.. நாராயண..

மஞ்சள் மாலை சார்த்தப்பட்டு,

மௌனமாய்…

வாயில் ஒரு கீற்றுப் புன்னகையுடன்,

வெறும் உடலாக நான்.

அடையாளம் அற்றுப் போன,

அதை வெறித்துப் பார்த்தபடியும் நான்!

.

அம்மையே.. அப்பா.. ஒப்பிலா மணியே…

எங்கே உம் கணங்கள்?

எப்போது கயிலாய வருகை!

நந்தி மத்தளம் வாசிப்பாரா?

தேவாரமும் தெரியாது..

திருவாசகமும் தெரியாது..

எனக்கெங்கே கயிலாய வாசம்!

கண்ணில் நீர் வரச் சிரித்தேன்…

மௌனமாய்!

.

ஐஸ் பாக்ஸுக்கு சொல்லியாச்சா..?

வாத்தியார்கிட்ட யார் பேசினது..?

பாடிய எப்போ எடுக்கறாங்களாம்..?

புள்ள வரணுமே.. நாளைக்குத்தான் இருக்கும்.!

அம்பது காஃபி சொல்லிடுங்க.. வேணுமே எல்லாருக்கும்..

.

மௌனத்தின் சன்னிதானத்தில்

சொற்களால் பூஜிக்கும்

காரண அறிவின்

கற்ற மடமை!

.

பேசிக்கொண்டே இருந்தார்கள்.

என்னுடைய பயோகிரஃபியை..

வெற்றிகளை.. தோல்விகளை..

கபடமோ, பொய்யோ அற்ற

சுத்தமான சரிதம்!

போனவர் போயிட்டார்..

தப்பா எதுவும் பேச வேண்டாமே..

வினோத சமூக விதிகள்!

எல்லாம் அபத்தம்…

எல்லாமே அவசியம்…

.

சுற்றிச் சுற்றிச் சுழன்றன வாசகங்கள்.

சிதறிக் கிடந்தன சொற்கள்.

கொத்துக் கொத்தாய் எழுத்துக்கள்..

உயிர்.. மெய்.. உயிர்மெய்.!

.

முதலில் மௌனமாக இருந்தோம்.

அடுத்து சப்தம் செய்தோம்.

பிறகு சொற்கள் கோர்த்தோம்.

பின்னர் மொழி கற்பித்தோம்.

எங்கும், எதிலும்

சப்தம் மட்டுமே எஞ்ச,

மறுபடி நாடுகிறோம்…

மௌனத்தை!

.

இருந்தவரை கஷ்டப்பட்டு

முயன்ற மௌனம்

மரணத்தில் மட்டும் இலவசமாய்.

யாரிடம் பகிர்வது?

எப்படிக் கொடுப்பது!

.

வாழ்வின் விடைகள்

படைப்பின் விரிவெங்கிலும்

இறைந்து கிடக்கின்றன.

அறிய விழையும் வினாக்களுக்காக

அவை, அசைவற்றுக் காத்திருக்கின்றன.

காலம் கடந்தும்…

மௌனமாய்..!

.

முடிவற்ற அலைகளின் ஆர்ப்பரிப்பில்

அமிழ்ந்து, புரண்டு

ஆயுட்காலத்தை வீணடிப்பதேன்?

மறுபடி.. மறுபடி..

அசைவற்ற பெருங்கடல்,

காலமெல்லாம் காத்திருக்கையில்…

இவ்விடத்திலேயே

மௌனமாய்!

.

இவர்கள் யாரும் அறியார்…

நானும் அறியவில்லை, இதுவரையில்!

ஏன் கற்பிப்பதில்லை

இதையெல்லாம் யாரும்?

ஏட்டுச் சுரைக்காய்!

.

மடமை கடும் விஷம்

மௌனம் திறன்வாய்ந்த மருந்து.

எப்படி சொல்வேன் இனி?

யாரிடம்?

சொன்னாலும் என்ன பயன்?

கேட்டாலும் என்ன பயன்!

.

ஓரமாய் நின்றவரைப் பார்த்தேன்.

அறியாத முகம்.. தெரியாத பெயர்..

விரிசடை முடி… ஓ!

திசைகளை அணிந்த திகம்பரனோ?

சிரித்தார்… சப்தமின்றி.

.

ஆட்டம் முடிந்தது. வா போகலாம்.’

நடந்தேன் அவருடன்.

போயிட்டு வரேன்..

யாரிடம் சொல்கிறேன்?

எவர் கேட்பார்?

நன்றி.. நன்றி.. நன்றி..

யார் கேட்டாலும், கேட்காவிட்டாலும்.

.

நடந்தோம்…

கான்க்ரீட் காடுகளைக் கடந்து,

கரிய நெடுஞ்சாலை கடந்து,

காணி நிலங்கள் கடந்து,

நதிக்கரை நோக்கி.

அவரோடு கூடவே வந்தது

பசுவா… ரிஷபமா!

.

தண்டபாணியின் கோவணமாய் நதி.

பரந்த பெருவெளியாய் வெண்மணல்.

கரையெங்கும் மரங்கள்.

அடர்ந்த மரங்களின் இடையில்

அமைதியாய் அமர்கையில்,

அவையும் நானும் அளவளாவும் தேவை இல்லாததால்…

அர்த்தமற்ற மொழியின் பிடியிலிருந்து

மௌனமாக விடுபட்டேன்!

இதுவா இறுதி விடுதலை?

.

ஆழ்ந்த மௌனத்தின் சன்னிதியில்…

ஆனந்த அமுதை விழிகள் பருகும்

அமைதிச் சாறை செவிகள் அருந்தும்

அருளின் ஒலியை நாசிகள் உண்ணும்

அன்பின் வருடலில் விரல்கள் உறங்கும்

அசையும் தேவையற்று நாவும் அடங்கும்.

.

இந்திரியங்களின் தொழில் மாறி

எல்லாம் தலைகீழ்.

இப்படித்தானா போனபிறகு?

உரக்கச் சிரித்தேன்…

சப்தமே இல்லை!

.

சொற்கள் உதிரி மலர்கள்.

கவிதை மலர்களின் கொத்து.

உரைநடை கதம்பச் சரம்.

பாடல் மலர் அலங்காரம்.

பதிகம் தொடுத்த மாலை.

அர்த்தம் சொல்லின் மணம்.

மௌனம் அர்ப்பணிப்பின் வரம்.

.

வரம் பெற்றுவிட்டேன்

ஒருவழியாக…

ஒரே வழிதானோ!

கேட்கலாமென்று திரும்பினேன்…

எங்கே போனார்?

மெலிதாக ஒரு பிழம்பின் ஒளி மட்டும்…

அருட்பெருஞ்சோதி.. அருட்பெருஞ்சோதி.!

.

மெய்யான மௌனம்…

எதையும், எவரிடமும்

வாய்திறந்து சொல்லாதிருப்பது அல்ல.

எவரிடமும், எதுவும்

சொல்லவேண்டிய தேவையற்றிருப்பது!

.

இனி சொல்லத் தேவையே இல்லை.

எதையும், எவரிடமும்.

விடுதலை.. விடுதலை..

.

வான், நிலவு, நதி, மரம், பசு, நாய், பறவை, பூச்சி…

இயற்கையின் ஒளி-ஒலிக்காட்சி.

மணலில் கிடந்தோம் விண்பார்த்து…

நானற்ற இதுவும்…

என்னுள்ளேயே இருந்த அதுவும்..!

.

காலம், இடம், தினம், மனம்

ஏதுமின்றித் தனியாய்…

இரண்டின்றி ஒன்றாய்…

மௌனமாய்!

.

~ஸ்வாமி | ‘@PrakashSwamy

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑